பார்த்தவுடனே வாசகர்களைக் கவரும் அட்டைப்படம். மனநலத் துறை நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியின் துறைத் தலைவர், டாக்டர் ஜி.ராமானுஜம்  அவர்களின் கனக்கச்சிதமான முன்னுரை.  எஸ்.வி.வி என அனைவராலும் அறியப்பட்ட நூலாசிரியர் எஸ்.வேணுகோபாலன் அவர்களின் ’போதும் என்று சொல்லும்’ அளவுக்கான என்னுரை. ’என்ன பெரிதாய் இருக்கபோகிறது?’ என்று அலட்சியமாய்க் கடந்துவிடமுடியாதபடி வாசர்களின் கைகளைப் பற்றிக்கொண்டு பகிர்ந்துகொள்ளும் சமகால ஆளுமைகளின் மரணச்செய்தி என்று அத்தனை அம்சங்களையும் கொண்ட நூல் “உதிர்ந்தும் உதிராத’

வண்ணக்கதிர், செம்மலர், தீக்கதிர்,  தி இந்து தமிழ், சினிமா எக்ஸ்பிரஸ், கணையாழி போன்ற பத்திரிக்கைகளில்  ஆளுமைகளின் மறைவுக்கு  எழுதி வெளியான அஞ்சலிக் கட்டுரைகளைத் தொகுத்து ஒரு தனி நூலாக வெளிக்கொண்டுவந்திருக்கிறார் இந்நூலின் ஆசிரியர்.

பொதுவெளியில் இவர் ஒரு வங்கி ஊழியர், தொழிற்சங்கவாதி தீவிர வாசிப்பாளர் என்று பலரால் அறியப்பட்ட போதிலும் சமீபத்தில் இவரது ”தர்பண சுந்தரி” என்ற சிறுகதைத் தொகுப்பு இவர் எழுத்தின் மைல்கல் என்றே சொல்லலாம்.

ஏராளமான ஆளுமைகளின் மறைவுச் செய்தி கேட்டறிந்த அடுத்த சிலமணி நேரத்திற்குள் அவர்களைப்பற்றிய தகவல்களையும், அவர்கள் வாழ்வில் நிகழ்ந்த சுவையான சம்பவங்களையும் தரவுகளின் அடிப்படையிலும், தன் நினைவடுக்குகளில் இருந்தும் வெளிக்கொணர்ந்து அஞ்சலிக்கட்டுரைகளாக எழுதியது மட்டுமல்லாமல் அவற்றையெல்லாம் தொகுத்து ஒரு நூலாக கொண்டுவந்து இருப்பவர்  நான் அறிந்த வரையில் இவர் ஒருவராகத்தான் இருக்க முடியும்.

ஒவ்வொரு ஆளுமைகளின் இழப்பும் ஈடுசெய்ய முடியாதவை என்பதை வெற்று ஜோடனை வார்த்தைகள் கொண்டு வழக்கமான இரங்கற்பாவாக எழுதாமல் மறைந்தவர்களின் வாழ்வில் நடந்த சுவாரஸ்யமான நிகழ்வுகளையும் கோர்வையாக்கி தந்திருக்கிறார் இந்நூலில் ஆசிரியர். அதுமட்டுமல்ல, ஒவ்வொரு அஞ்சலிக்கட்டுரைக்கும் பொருத்தமான தலைப்பைத் தந்திருக்கிறார். அதற்காகவே இந்நூலை அனைவரும் வாசிக்க வேண்டும்.

உதாரணத்திற்கு, தென்கச்சி கோ சுவாமிநாதன் அவர்களின் மறைவிற்கு “தகவல்களின் தளத்தில் தடம் அமைத்து உயர்ந்தவர்” என்றும், “ஆனந்த யாழை மீட்டிய தோழனே” என்று நா.முத்துகுமார் அவர்களின் மறைவிற்கும் ”எந்தக் கண்ணன் அழைத்தானோ….” என்று டாக்டர் எம்.பாலமுரளி கிருஷ்ணா அவர்களின் மறைவிற்கும் ”குழந்தைமை உள்ளம் உன்னத நட்பின் இலக்கணம்” என்று கிரேசி மோகன் மறைவிற்கும், ”உணர்ச்சிகரப்பாடகன் விடைபெறுகிறான் பாடல்களை நம்மிடம் விட்டு” என்று டி.எம்.சவுந்திரராஜன் அவர்களின் மறைவிற்கும், “வாடாத ரோசாப்பூ” என்று ருத்ரய்யா அவர்களின் மறைவிற்கும் எழுதிய அஞ்சலிக்கட்டுரைகளுக்கு மிகப்பொருத்தமான தலைப்பை வைத்திருக்கிறார்.

ஒரு மரணம் தரும் வேதனையை சிலர் பிறரிடம் சொல்லிச் சொல்லி ஆற்றிக்கொள்வார்கள், சிலர் மௌனமாய்க் கடந்துபோவார்கள், சிலர்மட்டும்தான் மறைந்தவர்களின் வாழ்வில் நிகழ்ந்த ஒவ்வொரு நிகழ்வையும் சுட்டிக்காட்டி சுட்டிக்காட்டி சொல்லொண்ணாத் துயரத்தில் தோய்ந்து எழுவார்கள்.  அப்படிப்பட்ட  அஞ்சலிக்கட்டுரைகளின் தொகுப்புதான் இந்த “உதிர்ந்தும் உதிராத” என்ற நூல்.

Image

24 ஆளுமைகளுக்கான அஞ்சலிக்கட்டுரைகள்  இந்நூலில் இடம்பெற்றிருக்கிறது.  ஒவ்வொரு ஆளுமைகளும் மறைந்த செய்தி கிடைத்த சிலமணி நேரங்களுக்குள் கட்டுரை எழுதியிருப்பதாக இந்நூலில் ஆசிரியர் தன் முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். அவரின் ஈரம்காயாத கண்ணீர்துளிகளின் வீரியத்தை வாசிக்கும்போதே பல இடங்களில் உணரமுடிகிறது.

ஒவ்வொரு ஆளுமைகளுடனும் தான் கொண்டிருந்த தொடர்பு அல்லது அவர்களைப்பற்றிய பொதுவெளியில் கிடைத்த தரவுகள் எல்லாமே வாசிக்கும்போது இன்னும் அவர்களைப்பற்றி அறிந்துகொள்ளவேண்டும் என்ற ஆவலை உருவாக்கிவிடுகிறது.

இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், பாடகர்கள் பி.பி.ஸ்ரீநிவாஸ், டி.எம்.சௌந்திரராஜன்,டாக்டர் எம்.பாலமுரளி கிருஷ்ணா மற்றும் பாடல் ஆசிரியர்கள் வாலி மற்றும் நா.முத்துகுமார் ஆகியோரைப்பற்றிக் குறிப்பிடும்போது இன்றளவும் அனைவரின் நினைவிலும் நீங்கா இடம்பிடித்த அவர்களின் புகழ்பெற்ற பாடல் வரிகளை கோர்வையாக்கித் தந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

”தீராத தலைவலியால் துடிதுடித்த ஒருவர் சிறப்பு மருத்துவரிடம்  போயிருக்கிறார், அவரோ இவரது மூளையையே தனியே எடுத்து அதில் என்ன ஏது என்று நீண்ட நாள் ஆய்வில் இறங்கிவிட்டார்.  இதனிடையே அதைக் கவனியாத உதவியாளர் தையல் போட்டுச் சிகிச்சை முடிந்தது என்று இவரை அனுப்பி விட்டனர்.  முப்பது ஆண்டுகள் கழித்து அந்த மனிதர் அதே மருத்துவரிடம் போய் நின்று தன்னை அடையாளம் தெரிகிறதா? என்று கேட்டிருக்கிறார்.  கேட்டுத் தெரிந்துகொண்ட மருத்துவர் அதிர்ந்துபோய், ‘ஏனப்பா, மூளையே இல்லாமல் இந்த முப்பது வருடங்களாக என்னதான் செய்துகொண்டிருந்தாய்?’ என்று வியந்து வினவியிருக்கிறார்.  அந்த மனிதர் அசராமல் சொன்னாராம், ‘வானொலியில் இன்று ஒரு தகவல் சொல்லிக்கொண்டிருந்தேன்’ என்று. இந்த எள்ளலோடு சொல்லப்பட்ட துணுக்கு யாருடையது என்பதை வாசிக்கும்போதே புரிந்திருக்கும்.  ஆம், அவர்தான் மறைந்த தென்கச்சி.கோ.சுவாமிநாதன்”.

ஓவியர் கோபுலு மறைவுக்கு பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன் பக்கவாதம் தாக்கி அவரால் வலது கையைப் பயன்படுத்த இயலாமல் போனதையும் பிறகு இடது கையால் ஓவியம் வரையத் தொடங்கியதையும் மிகநேர்த்தியாக பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

எழுத்தாளர் ஆர்.கே.நாரயண் அவர்களின் ‘மால்குடி டேஸ்’ என்ற அற்புதத் தொடருக்கு ஓவியம் மூலம் உயிரூட்டியவர் அவரது இளைய சகோதரர் ஆர்.கே.லட்சுமண் என்ற செய்தி என்னைபோன்ற பலரும் அறியாதது.

மன்னார்குடியில் கோபிசந்தா என்றறியப்பட்டு பின்னர் செட்டிநாட்டுப் பக்கம் பள்ளத்தூருக்குக் குடி பெயர்ந்து பள்ளத்தூர் பாப்பாவாகி பின்னர் மனோரமா என்று பெயரெடுத்து ஆச்சியாக அழைக்கப்பட்ட மனோரமாவுக்கு மரணம் உண்டா என்ன? என்று கேள்வியுடன் தொடங்கும் அஞ்சலிக்கட்டுரையில் மனோரமாவின் பன்முகத்திறமையை மிக அழகாகப் படம்பிடித்துக் காட்டப்பட்டிருக்கிறது.

பத்மபூஷண் விருதுபெற்ற நாட்டிய மேதை மிருணாளினி சாராபாய், நேதாஜி அவர்களது இந்திய தேசிய இராணுவத்தில் பங்கெடுத்த போராளி கேப்டன் லட்சுமியின் சகோதரிதான் என்ற அறிமுகத்துடன் அவரது கலை உலக வாழ்க்கையைப் பற்றி மிகச்சிறப்பாக பதிவுசெய்யப்பட்டுள்ளது.

திரைப்பட இயக்குநர் பாலு மகேந்திரா, கிரேசி மோகன், நடிகர் நீலு, இயக்குநர் மற்றும் நடிகர் மணிவண்ணன், கவிஞர் வையம்பட்டி முத்துசாமி, ஃப்ரண்ட்லைன் இதழின் கட்டுரையாளர் யெஸ்.வீ என்று அனைவராலும் அழைக்கப்படும் எஸ்.விஸ்வநாதன் மற்றும் நாடகாசிரியர் கிரிஷ் கர்னாட் ஆகியோரின் மறைவுக்கு எழுதப்பட்ட அஞ்சலிக்கட்டுரைகள் வாசிக்க வாசிக்க பிரம்மிப்பையூட்டக்கூடியது.

அதுமட்டுமல்ல மகாராஷ்டிர மாநில கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான கோவிந்த பன்சாரே, மற்றும் பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ் அவர்களின் மறைவு இன்றளவும் அதிர்ச்சியின் வெளிப்பாடு என்பதை அழுத்தமாக பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

இந்நூலின் பின்னிணைப்பாக “மரணத்தை முன்வைத்து” என்ற அத்தியாயத்தில்,

மரணம் என்றாலே அலற வேண்டியதில்லை.  அது யாரது இசைவையும், தயார் நிலையையும், முன்மொழிதல், வழிமொழிதல்களையும், ஏற்புரையையும் கோருவதில்லை.  அது நிகழ்கிறது.  மரணத்தின் சுவாரசிய ரகசியம், மீதம் இருபோரை வாழுங்கள் என்று அது கேட்டுக் கொள்வது. அந்தக் குரல்தான் தமக்குச் சரிவர கேட்பதில்லை.

ஒரு மரண வேளையில் எத்தனையோ முந்தைய மரணங்கள் நினைவுக்கு வருகின்றன. ஒரு விபத்தின்போது பேசப்படும் வேறு விபத்துபோல.

இறந்த மனிதரின் வங்கிக் கணக்குகளை முடித்துக் கொடுக்கும் சமூகம், அவரோடு இருந்த வம்பு வழக்குகளை முடித்துக்கொள்ள இசைவதில்லை.

போன்ற வரிகளில் இந்நூலாசிரியர் எஸ்.வி.வி மிகையில்லாமல் தன்னடக்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். அதுமட்டுமல்ல வாசகர்கள்   இந்த அஞ்சலிக்கட்டுரைகளை வாசிக்குபோதே இனம்புரியாமல் மேலெழுந்து அடங்கும் ஆச்சரியங்களும் அதிர்வுகளும் தவிர்க்கமுடியாதவை என்பதை மிக இயல்பாக உணர்த்திவிடுகிறது. மிகச்சிறந்த இந்நூல் அனைவராலும் தவறாமல் வாசிக்கப்படவேண்டிய ஒன்று.

 – விமர்சனம் வே.சங்கர் (9842580424)

நூலின் பெயர்   : உதிர்ந்தும் உதிராத

ஆசிரியர்         : எஸ்.வி.வேணுகோபாலன்

பதிப்பகம்        : பாரதி புத்தகாலயம்

பக்கம்           : 136

விலை           : ரூ.135

2 thoughts on “உதிர்ந்தும் உதிராத – எஸ்.வி.வேணுகோபாலன் | மதிப்புரை வே.சங்கர்”
  1. பல ஆளுமைகளின் மரண சாசனம். இப்படியான ஒரு தொகுப்பு தமிழில் வெளிவந்தது இல்லை. அதேபோல் இப்படி ஒரே மனிதர் இத்தனை ஆளுமைகளுக்கு அஞ்சலி கட்டுரைகள் எழுதியிருப்பாரா என்பதும் சந்தேகமே. ஒவ்வொரு கட்டுரையிலும் கண்ணீர் பிரம்மிப்பு மனசு கிடந்து தவித்தல் அடச்சே இவ்வளவு சிறந்த மனிதரை உயிரோடு இருக்கும் போது தெரிந்து கொள்ளாமல் போய்விட்டோமோ என்ற குற்ற உணர்வு எல்லாம் சேர்ந்து ஒன்றாய் எழுகிறது.

  2. ஓர் ஆளுமையின் இறுதிப் பாதையின் வழியே அவர் தன் வாழ்நாள் முழுவதும் நடந்த பாதைகளின் பரிச்சயத்தை ஏற்படுத்துகிற எஸ்.வி.வி யின் கட்டுரைத் தொகுப்பு. பரந்த அறிவு மற்றும் அனுபவம் உள்ளவர் என்பதால் அவரவரின் ஆழ அகலங்களை அனுபவ விரிவுகளை அடையாளம் காட்டுகிற அற்புதத் தொகுப்பு. ஒரு வகையில் அனைவருக்கும் மரணம் என்பது பற்றி வாழ்க்கை எடுக்கிற வகுப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *