இந்திய நாட்டில் மிகவும் பிரபலமான, உல்லாச மலைப் பகுதி சுற்றுலா தலங்களில் ஒன்று நைனிதால் (Nainital) ஆகும். உத்தரக்காண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள, அழகிய ஏரி உள்ள சிறு நகரம் நைனிதால் (Nainital). ஆங்கிலேயர் காலத்திலிருந்து, 1841 ஆம் ஆண்டு முதல் நூற்றாண்டுக்கும் மேலாக இந்த ஊர், சுற்றுலா, கல்வி நிலையங்கள் கொண்டு, சிறப்பு பெற்று வருகிறது.
அக்கால கட்டத்தில், நைனிதால் (Nainital) ஏரியின் நீர் தெளிவாகவும், தூய்மையுடன் நேரடியாக குடிக்க தகுதி கொண்டு இருந்ததாக தெரிகிறது. பின்னர் நம் நாடு, சுதந்திரம் அடைந்து, 20ஆம் நூற்றாண்டு துவக்கத்தில், பல வளர்ச்சி பணிகள், மக்கள் தொகை பெருக்கம், மாசுபாடு ஆகியவற்றால் நைனிதால் (Nainital) ஏரி, பயனற்ற நிலை அடைந்து நீரின் தரம் குறைந்தது.
திட்டமிடப்படாத, நகர் வளர்ச்சி பணிகள், சுற்றுலா, மனித செயல்பாடுகளின் தாக்கம் போன்ற காரணிகள் ஏரி நீர் மாசடைய முக்கிய பங்கு வகித்தன. எனினும் சமீபத்தில், அறிவியல் பூர்வமான செயல்பாட்டு நடவடிக்கைகளுக்கு பிறகு, இந்த ஏரி உயிர் பெற்றது.
ஆம்! வளி ஊட்டம் (AERATION) மற்றும் உயிரி கையாளுதல் மாற்று முறை (BIOMANIPULATION) என்ற இரு வெவ்வேறு முறைகள், நைனிதால் (Nainital) ஏரி மீண்டும் உயிர் பெற்றது எனில் மிகை அல்ல. ஏரி முன்னரே மிகை ஊட்ட சத்து நிலை (Eutrophication) காரணத்தால் மாசு பட்டு, கரைந்த ஆக்சிஜன், ஏரியின் ஆழப்பகுதியில் குறைவாக இருந்து வந்தது. மிகை ஊட்ட நிலை இரு வகைப்படும், இயற்கையாக நைட்ரஜன், பாஸ்பரஸ் அதிகம் ஆகி ஊட்ட சத்து மிகையாகிவிடும்.
மனித செயல்பாடுகளால் விவசாய உரம், பூச்சி மருந்து, நீர் உயிரி வளர்ப்பு போன்றவற்றாலும், கலாசார மிகை ஊட்டசத்து நிலை நீர் நிலைகளில் ஏற்படும்.
வளி ஊட்டம் (aeration) முறையில் இந்த ஏரியின் ஆழ் அடி அடுக்குகளில் ஆக்ஸிசன் செலுத்தி வளமாக்கப்பட்டது. இதனால், நீரில் ஆக்சிஜன், கரைவதால், ஒளி புகும் நிலை ஏரியில், உருவாகி, நீரின் தரம், சுவை உயர்வு பெற்றது.
கந்தகம் குறைவு செய்யும் பாக்டீரியா மூலம் அழுகிய முட்டை மணம் ஏற்படும் நிலை தவிர்க்கபட்டது. மீதேன், அம்மோனியா குறைந்த நிலையில் காற்றற்ற நிலை பாக்டீரியா எண்ணிக்கை மிகவும் குறைந்து போனது ஒரு மகிழ்ச்சி கொண்ட தகவல் ஆகும். உயிரி கையாளுதல் மாற்று முறை, (BIO MANIPULATION) என்பது வலுகட்டாயமாக, ஒரு குறிப்பிட்ட சிற்றினத்தினை சூழல் அமைப்பில் , உள்ளே புகுத்துவது அல்லது, அவற்றை வெளியேற்றுவது ஆகும்.
இதன் மூலம் அந்த இயற்கை சூழல் மாறுபாடு அடைகிறது. குறிப்பாக நீர் சூழல், ஏரி, குளங்களில் இம்முறை மேற்கொள்ளப்படுகிறது. நீர் நிலைகளில் மீன்களின் இனத் தொகைமாற்றி, மிகை ஊட்டசத்து மூலம் பாதிக்கப்பட்ட நிலையை குறைக்க இயலும். நேர்மறை, விரும்பத்தக்க நிலையினை ஏரிகளில் ஏற்படுத்தவும் இந்த முறை உதவுகிறது.
நெதர்லாந்து நாட்டில் 1987 ஆம் ஆண்டு 1.5 ஹெக்டர் பரப்புள்ள நீச்சல் குளத்தில், தேவையற்ற தாவர மிதவை உயிரிகள், மீன்கள் வலை கொண்டும், மின்சார மீன் பிடி முறையில் சேகரித்து அகற்றினர். அதனால் அங்கு 0.3 மீட்டர் ஒளி புகும் தன்மை அதிகரித்து, 2.5 மீட்டர் வரை சென்றது. மாற்று மீன்களின் குஞ்சுகள் அக்குளத்தில் விடப்பட்டு சூழல் சங்கிலி சீராக நன்முறையில் மாற்றம் பெற்று விட்டது. 1988 ஆம் ஆண்டு, தாவரங்களும் பெருகியது.
இந்த மாற்று உயிரிகையாளுதல் முறையில் ஊட்ட சத்து பொருட்களை நீர் நிலையில் குறைத்து, பாசி கட்டுப்பாடு வேண்டும். வெளி காரணி கட்டுப்பாடுகளால் நைனி தால் ஏரியில் உரிய பராமரிப்பு முறையில் வீட்டு கழிவு, வர்த்தக பகுதி, கழிவுகள் ஏரியில் விடப்படுவது தடுக்கப்பட்டது. கம்புசியா என்ற கொசுக்கள் லார்வா அழிக்கும் மீன்கள் பெருகி, அதனால் ஏரியில் மிகை ஊட்ட சத்து நிலை ஏற்பட்டது.
புன்டியாஸ் என்ற மீன் இனமும் இந்த ஏரியில் எண்ணிக்கை பெருகி, விலங்கு மிதவை உயிரிகளை அழித்துவிட்டது. கார்ப் மீன்கள் எண்ணிக்கை கட்டுப்பாடு இல்லாத நிலையில் மிக அதிகமாக பெருகி, ஏரியில் ஆழ் பகுதிக்கு சென்றிருந்த நிலையும், இந்த அழகிய நீர் பரப்பு பாழ் பட காரணம் ஆகிவிட்டது. எனினும் வெள்ளி கெண்டை (silver carp) மற்றும் வஞ்சிரம் (Mahseer)போன்ற சூழல் நட்புடைய மீன் இனங்கள் ஆகும்.
இவை விலங்கு மிதவை (zoo planktons) உயிரிகள், தாவர மிதவை (phyto planktons) இனதொகை யினை சமமாக, வைத்திருக்கும் பண்புகளை கொண்டவை. ஆனால் இந்த ஏரியின் மாசு பாடு காரணமாக, அவை முற்றிலும் அழிந்தன வஞ்சிரம் என்ற உலகம் அறிந்த வேட்டை விளையாட்டு மீன் மற்றும் வெள்ளி கெண்டை மீன்கள் செயற்கை உற்பத்தி இன பெருக்க முறையில் இங்கு அதிகரிக்கப்பட்டது.
அழிந்து போய்விடுமோ என்ற அச்சம் கொள்ள வைத்த அழகிய நைனி தால் ஏரி, மீண்டும் உயிர்ப்பிக்க ப்படும் நிலை வந்தது. இந்த நிலை ஏற்பட முழு முயற்சி செய்த பாராட்டுக்குரிய ஒரு தனி சூழல் செயற்பாட்டாளர் அஜய் சிங் என்ற கல்லூரி பேராசிரியர் ஆவார். அவர் உச்ச நீதி மன்றத்தில் சென்று வழக்கு தொடுத்து, நைனி தால் ஏரியினை காப்பாற்ற பல செயல்பாடுகள் மேற்கொண்டார்.
இதன் பிறகு அந்த மாநிலத்தில் பீம் தால் ஏரி, சரியா தால் ஏரி, ஆகியவையும் மாசுப்பட்ட நிலை மாற ஏரி மேம்பாட்டு ஆணையம், பல்வேறு நடவடிக்கைகளை துவக்கியது. குறிப்பாக, பீம்தால் ஏரியின் மையப் பகுதியில் ஒரு உணவு விடுதி அமைந்து, நீர் மாசு அங்கு பெருகியது. பின்னர் அந்த விடுதி மூடப்பட்டு, அங்கு
மக்கள் அறிவு பூர்வமாக ரசித்து மகிழும், பல்வேறு மீன்கள் உள்ள அருங்காட்சியகம் அமைந்தது.
சுற்றுலா பயணிகள் சென்று ஏரியினை கண்டு மகிழ ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள ஏரிகள் காப்பாற்றப் பட, ஒவ்வொரு சூழலியல் செயற்பாட்டாளரும் தொடர்ந்து நீதி மன்றங்களை மட்டும் அணுகி, அவற்றை மேம்பாடு செய்யும் நிலை வருமா, என்ற அச்சம், வருத்தம் மேலோங்கி
நிற்பது உண்மைதானே!!?.
சுற்றுலா தலங்களை மட்டும் நாம் அதிகம் கவனம் கொண்டிராமல்,ஒவ்வொரு மாநகர், நகர, கிராமத்து நீர் நிலைகள் அத்து மீறிய ஆக்கிரமிப்பு,குடியிருப்பு போன்ற பிரச்சனைகளை, உள்ளூர் நிர்வாகம் மிகுந்த கவனத்துடன் கண்காணித்து தீர்வுகள் காண வேண்டும்.
பொது மக்களும் உரிய நீர் நிலை பாதுகாப்பு முக்கியத்துவம் பற்றிய தொடர் விழிப்புணர்வு பெற வேண்டும். ஒரு நீர் நிலையில், உள்ள விலங்கு, தாவர மிதவை உயிரிகள், பூச்சிகள், மீன்கள், தவளை, பாம்பு, பறவைகள் அனைத்து உயிரினங்களின் இனத்தொகை சமமாக பேணப்படுவது அவசியம் ஆகும்.
அதற்குரிய அறிவியல் முறைகள் மூலம் மேற்பார்வை செய்து பராமரிப்பு செய்வதும் சம கால தேவை என்பது மறுக்க இயலாது. எனவே இதில் அரசு கவனம் செலுத்தி வளர்ச்சி திட்டங்கள் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாதிக்கப்பட்டுவரும் நீர் நிலைகளை மீட்டு எடுக்க முயற்சி செய்ய வேண்டும். நம்பிக்கை கொள்வோம்!!!🌹🌹🌹
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
நல்ல தகவல். எவ்வளவு எவ்வளவு சீர்படுத்துவதை தள்ளி போடுகிற போது மாசு மீட்புக்காலமூம், செலவினமூம் அதிகம்.