அரிய தருணங்களை முன்வைப்பவை, அரிய மனிதர்களை முன்வைப்பவை என இருபெரும் பிரிவுகளாக தமிழ்ச்சிறுகதை வரலாற்றைப் பிரித்துக்கொண்டால், செஞ்சி தமிழினியனின் சிறுகதைகள் அரிய மனிதர்களைச் சித்தரிக்கும் படைப்பாளியாக அடையாளப்படுத்தலாம். அவருடைய நெகிழ்வான கதைவடிவம் அவருக்குத் துணையாக விளங்குகிறது.
வாழும் நிலத்தைப்பற்றிய குறிப்புகளும் மனிதர்கள் பற்றிய குறிப்புகளும் தமிழினியனுடைய கதைகளெங்கும் அமைந்திருக்கின்றன. தன் மண்ணோடும் மக்களோடும் அவர் கொண்டிருக்கும் ஈடுபாடும் இறுக்கமான உறவும் அவர் கதைகளில் வெளிப்பட்டபடி இருக்கின்றன. வடிவம் பற்றிய அக்கறையைவிட மனிதர்களின் முகங்களையும் அவர்களுடைய தத்தளிக்கும் வாழ்க்கைப்பயணங்களையும் துல்லியமாக முன்வைக்கவேண்டும் என்னும் அக்கறையையே தமிழினியனுடைய கதைகள் உணர்த்துகின்றன.
தலைப்புச் சிறுகதையான ஊராகாலி தமிழ்ச்சிறுகதையுலகத்தில் தமிழினியனுடைய இடத்தை உறுதிப்படுத்தும் சிறுகதை. மாடுகள் மீது பாசம் கொண்ட ஒரு குடியானவரை இந்தக் கதையின் வழியாக அறிமுகப்படுத்துகிறார் தமிழினியன். அவருடைய மாட்டுப்பாசத்தைப் புரிந்துகொள்வதற்காக ஒரு சிறிய தகவலை போகிற போக்கில் கொடுக்கிறார் தமிழினியன். அடுத்த ஊரில் வாழ்க்கைப்பட்டு சென்ற அவர் மகள் ஒருமுறை தம் நிலத்தில் ஏரோட்டுவதற்காக தொழுவத்திலிருந்து ஒரு ஜோடி மாடுகளை ஓட்டிச் செல்கிறார். ஆனால் மூன்று மாதங்களான பிறகும் மாடுகளைத் திருப்பி அழைத்துவரவில்லை. நீண்ட காலமாக தம் மாடுகளைப் பார்க்காமல் தவித்துப்போன கவுண்டர், மாடுகளைப் பார்த்துவிட்டு வருவதற்காகவே மகள் ஊருக்குச் செல்கிறார். அங்கு மகளுடைய வயலில் மாடுகள் ஏரிழுப்பதைப் பார்க்கிறார். அவரைப் பார்த்ததும் அந்த மாடுகள் சத்தமிட்டுக் குழைகின்றன. மாடுகள் ஏரோட்டி முடிக்கட்டும் என அவர் வரப்போரத்தில் காத்திருக்கிறார். நீண்ட நேரம் ஓய்வே கொடுக்காமல் மாடுகளிடம் வேலை வாங்குவதைப் பார்த்ததும் அவர் மனம் பதைக்கிறது. உடனே மாடுகளை அவிழ்த்துக்கொண்டு அங்கிருந்து நேராக தம் ஊருக்கே ஓட்டி வந்துவிடுகிறார். அத்துடன் மகள் உறவில் பிளவு வருகிறது. ஆனால் அதைப் பொருட்படுத்தாமல் மாடுகளின் நலத்தை மட்டுமே அவர் பெரிதாக நினைக்கிறார்.
அந்த அளவுக்கு மாடுகளின் அன்பில் தோய்ந்த அவரால் தாம் புதுசாக செய்த கட்டைவண்டிக்காக வாங்கிய மாடுகளின் அன்பைப் பெற முடியாமல் போகிறது. அந்த ஜோடியில் ஒரு மாடு கட்டுப்பட மறுக்கிறது. ஒருமுறை தன்னுடைய முந்தைய சொந்தக்காரருடைய தொழுவத்துக்கு இரவோடு இரவாக ஓடிப் போய்விடுகிறது. தொழுவத்து உணவை மறுத்து அடுத்தவர் வயலில் இறங்கி மேயத் தொடங்குகிறது. பட்டியில் அடைபடுகிறது. தொடர்ந்து பாடுபட்டும் கூட அதன் நம்பிக்கையைப் பெற முடியாத துயரத்தில் சில மாதங்களிலேயே ஒரு பூம்பூம் மாட்டுக்காரனுக்கு விற்றுவிடுகிறார். அவருடைய பாசத்துக்குக் கட்டுப்படாத மாடு பூம்பூம் மாட்டுக்காரனுக்கு ஆறு மாத காலத்துக்குள் கட்டுப்பட்டு தலையாட்டிக்கொண்டு திரிவதை நம்பமுடியாமல் பார்க்கிறார் கவுண்டர்.
இக்கதைக்கு இரு கோணங்கள். ஒன்று கவுண்டரின் கோணம். மற்றொன்று மாட்டின் கோணம். அறுபது மாடுகளை தன் தொழுவத்தில் வைத்திருக்கும் ராமசாமிக் கவுண்டர் வண்டியில் பூட்டுவதற்கு வாங்கிய மாட்டை இறுதிவரைக்கும் நெருங்க முடியவில்லை. அவர் கொண்டுள்ள மாட்டுப்பாசத்துக்கு விளங்காத புதிர் அது. அது கவுண்டரின் கோணம். யாரோ ஒருவருடைய வீட்டில் அடக்கமாக வண்டியிழுத்து வாழ்ந்த மாடு ஒரு சந்தையில் விற்பனைப்பொருளாகிறது. அதன் ஆனந்த வாழ்க்கை நிலைகுலைந்த தருணம் அது. அதையே நினைத்து நினைத்து, தனக்குக் கிட்டிய உண்மையான ஆனந்தத்தைப் பொருட்படுத்தாமல் அடங்காமல் திரிந்து தன் மூர்க்கத்தால் தன் வாழ்க்கையை தானே கெடுத்துக்கொள்கிறது. இறுதியில் தனக்குப் பொருத்தமே அற்ற இடத்தில் சேர்ந்த பிறகு வாழ்வின் நெருக்கடிகள் உணர்த்திய உண்மையை உணர்ந்து பூம்பூம் மாடாக தலையாட்டித் திரிகிறது. அதன் ஒரே வாழ்க்கையில்தான் எத்தனை எத்தனை மேடுகள், பள்ளங்கள். அதுவும் புரிந்துகொள்ள முடியாத புதிர்.
ராமசாமிக்கவுண்டரைப்போலவே தமிழினியன் சித்தரிக்கும் இன்னொரு முதியவர் செத்துப்போன பூமி சிறுகதையில் வரும் பழமலைத்தாத்தா. கடந்த நூற்றாண்டின் அறுபதுகளில் ஏற்பட்ட பஞ்சகாலத்திலிருந்து தொடங்குகிறது கதை. தாத்தாவின் இளமைக்காலம் அது. குடிக்கிற தண்ணீருக்கே எட்டு மைல் நடந்துபோய் கொண்டுவந்த காலம். மோசமான உணவுத்தட்டுப்பாடு. அந்தப் பஞ்சத்திலும் பத்தாயத்தில் இருந்த விதைநெல்லை வெளியே எடுக்காமல் பட்டினியிலேயே காலத்தைக் கடத்தினார். நாலைந்து மாதங்களுக்குப் பிறகு மழை பொழிந்து ஏரி நிரம்பிய பிறகு நம்பிக்கையோடு ஏர் பூட்டினார். விதை நெல்லை உண்டு முடித்த குடும்பங்கள் அவரைத்தான் நாடி வந்தன. வந்தவர்களுக்கெல்லாம் ஒரு மரக்கால் இரண்டு மரக்கால் என விதைநெல்லை பணம் வாங்காமல் அளந்து கொடுத்தார் அவர். விளைந்த பிறகு இரு மடங்காகத் திருப்பித் தரவேண்டும் என்ற நிபந்தனைக்கு எல்லோரும் உடன்பட்டனர். அந்தச் செயல் அவர் வீட்டுக்கே விதைநெல்லுக்காரர் வீடு என்ற பெயரை சம்பாதித்துக் கொடுத்தது.
நாளடைவில் அவர் குடும்பம் வளர்ந்தது. பிள்ளைகள் நன்றாகப் படித்து சென்னை, மும்பை என்று நகரங்களுக்குச் சென்று குடியேறினர். மனைவி மறைந்தபோதும் தனிமையில் கிராமத்திலேயே தங்கிவிடுகிறார். மகன்கள் அழைத்தபோதும் அவர் கிராமத்தைவிட்டு வெளியேறவில்லை. உடல் தளர்ந்த முதுமையில் விவசாயம் செய்யாவிட்டாலும் அவர் ஈட்டிய நிலங்கள் அப்படியே இருந்தன. ஊர்க்காரர்களுக்கு விதைநெல் கொடுப்பதை அப்போதும் அவர் நிறுத்தவில்லை. எதிர்பாராத தருணத்தில் தொழிலில் உருவான சரிவை ஈடுகட்ட தன் வாழ்நாளில் சேர்த்த நிலங்களை விற்பதற்குத் தோதாக பாகம் பிரித்துக் கொடுத்துவிடுகிறார். ஒரு வாரத்திலேயே அவர் இயற்கையெய்திவிடுகிறார். காலமெல்லாம் அவர் சேமித்த விதைநெல் பரப்பிய தரையில் அவருடைய உடலைச் சுமந்தவர்களின் ஊர்வலம் நடந்தது. மண்ணுடன் மனிதர்கள் வளர்த்துக்கொள்ளும் உறவின் ஆழம் புரிதலுக்கு அப்பாற்பட்டது.
வீட்டில் புகுந்த பாம்பைப் பிடித்து உதவிய வண்டுக்கு பணம் கொடுக்கும் பழைய தலைவர் வீட்டு மருமகளும் இரண்டு சக்கர வாகனத்தில் வண்டுவையும் அவர் பிள்ளையையும் வீட்டுக்கு அழைத்துச் சென்று விட்டுவிட்டு வருமாறு சொல்லியனுப்பும் தலைவர் மனைவியும் சில்லாக்கோல்கள் சிறுகதையில் இடம்பெற்றிருக்கிறார்கள். வயல்கள் விளைந்து நிற்கும் காலத்தில் காவல் காத்துப் பாதுகாக்கும் வண்டு அறுவடை நாளில் எலிவளையில் புகைபோட்டு எலிகளையும் வளையில் அவை சேமித்த நெல்லையும் எடுத்துக்கொண்டு செல்கிறார். அதைப் பார்த்து மனம் பொறுத்துக்கொள்ள முடியாமல் தடுத்து நெல்லைக் கொட்டிவிட்டுச் செல்லுமாறு கட்டளையிடும் முதலியாரின் மனைவியை ஒண்டித் தச்ச ஒத்தக் கதவு சிறுகதையில் சித்தரிக்கிறார் தமிழினியன். கைமாறும் ஈச்சங்குச்சிகள் சிறுகதையில் சந்தையில் சோற்றுக்கடை வைத்திருக்கும் ஒருத்தி மாட்டை ஓட்டிக்கொண்டு வெகுதொலைவு செல்லும் ஒருவனுக்கு சாப்பாட்டு நேரத்தில் போகிறானே என்னும் அக்கறையில் புளிச்சகீரைக் குழம்பை ஊற்றிப் பிசைந்த சோற்றுப்பொட்டலத்தைக் கொடுத்தனுப்புகிறாள். இருபத்தைந்து மைல் தூரம் கால்நடையாகவே மாட்டை ஓட்டிக்கொண்டு வந்து கொடுத்தவனுக்கு ஊசிப்போன குழம்பை சோற்றில் ஊற்றிக் கொடுக்கிறாள் மாடு வாங்கிவந்தவரின் மனைவி. எல்லையே இல்லாத மனத்தின் விசித்திரங்களை விதவிதமான சித்திரங்களாக தம் கதைகளிடையில் தீட்டி வைத்திருக்கிறார் தமிழினியன்.
ஏரிக்கு நடுவில் உள்ள திட்டில் நள்ளிரவில் புற்றில் மருந்தைத் தூவி ஈசல்களை வெளிவரச் செய்து பிடிக்கும் கணவனும், அவனுக்கு உதவியாக விளக்கேற்றி வைத்து காற்றில் அணைந்துவிடாமல் பாதுகாக்கும் அவனுடைய இளம்மனைவியும் மறக்கமுடியாத பாத்திரங்கள். இரவெல்லாம் கண்விழித்து சேகரிக்கும் எட்டுபடி ஈசல்களை பெரிய வீட்டில் கொடுத்து எட்டுபடி நல்ல அரிசியை வாங்கிக்கொண்டு செல்லும் அந்த வாழ்க்கை இதுவரை தமிழ்க்கதை உலகம் காணாத ஒன்று.
இன்னும் சொல்லலாம். அகால நேரத்தில் குழந்தைக்கு பால் வாங்க வந்தவனுக்கு சுடவைத்த பாலைத் தனியாகவும் சர்க்கரைப்பொட்டலத்தைத் தனியாகவும் கொடுக்கிற கடைக்காரர். அதே அகால நேரத்தில் எங்கிருந்தோ யாருடைய பிடியிலிருந்தோ தப்பித்து ஓடிவந்து உயிர்பிழைப்பதற்காக கோவில் வாசலில் படுத்திருக்கும் கும்பலில் கூட்டத்தோடு கூட்டமாக படுத்திருந்துவிட்டுச் செல்லும் இளம்பெண். வாசல் பெருக்கி மளிகைப்பொருட்களை புடைத்துக் கொடுப்பவளாக இருந்தாலும் கோவிலுக்குப் போய்விட்டு வந்து கடைச்சிப்பந்திகளுக்கெல்லாம் திருநீறு பூசிவிடும் பாட்டி. அவள் உடல்நலம் குன்றி வீட்டில் படுத்திருக்கும் செய்தியைக் கேட்டு விசாரிப்பதற்காக அவள் வீட்டுக்கே செல்லும் கடைமுதலாளி. கருவுற்றிருந்த சமயத்தில் கணவனாலும் உறவினர்களாலும் கைவிடப்பட்டு பத்து பன்னிரண்டு ஆண்டுகள் தனியாக சாப்பாட்டுக்கடை வைத்துப் பிழைத்த பெண்ணிடம் புதுவீட்டில் சாப்பிட வந்த ஆள் “ஒம் புள்ள நடந்து போவரதப் பார்த்தா கணேசன் நடந்துவர மாதிரியே இருக்கு” என்று சொன்ன சொல்லைக் கேட்டு ஏதோ தனக்கு இதுவரை கிடைக்காத ஒரு சமூக அங்கீகாரம் கிடைத்ததைப்போல மகிழ்ந்துபோகும் பெண். சனிப்பிணத்துக்கு துணையாக பாடையோடு கட்டப்பட்ட கோழிக்குஞ்சை தப்பிக்கவைக்கும் இளைஞன். பேருந்து நடத்துநரிடம் கொடுத்த ரூபாய்த்தாள் காற்றில் நழுவி பறந்துவிட, அதை எடுப்பதற்கு பேருந்திலிருந்து இறங்கி நடந்து செல்லும் கிழவி. சாப்பாட்டு மூட்டையைப் பிரித்து நாலு வாய் சாப்பிட்டதும் ஒரு கை சோற்றை அள்ளி கிணற்றுக்குள் வீசி அதை முட்டி மோதிக் கொறிக்கும் ஜிலேபி கெண்டைகளை ஆனந்தத்துடன் பார்க்கும் வழிப்போக்கன். அடுக்கக வீட்டுக்குள் கட்டப்பட்ட கழிப்பறைக்குள் மலம் கழிக்க மறுக்கும் தந்தையை காரில் ஏற்றிக்கொண்டு புறநகரின் பக்கமாக வெட்டவெளியாக இருக்கும் திசையில் அழைத்துச் சென்று அவருடைய விருப்பம்போல திறந்தவெளியில் மலம் கழிக்கவைத்துவிட்டு தூய்மைப்படுத்திக்கொள்ள பாட்டில் தண்ணீரை ஊற்றும் மகன். அனைவரையும் கிஞ்சித்தும் மிகையற்ற வகையில் தம் கதைகளில் நடமாட வைத்திருக்கிறார் தமிழினியன்.
இன்று கிராமங்களில் விவசாயம் மெல்லமெல்ல குறைந்துவருகிறது. நீர்ப்பாசனத்துக்கு வழியில்லை. விளைபொருளுக்கு தகுதியான விலை இல்லை. விவசாயம் செய்து பிழைத்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக பொய்த்துவருகிறது. விவசாய நிலங்களை பெருநிறுவனங்களாலும் ஏதேதோ நாகரிகத் திட்டங்களின் பெயர்களாலும் வளைத்துக்கொள்ளப்படுகின்றன. ஏழ்மைக்கு நடுவில் இன்று வாழும் எளிய மனிதர்கள் இன்னும் மோசமான நிலைமைக்கு எதிர்காலத்தில் தள்ளப்படுவார்களோ என அச்சமாகவே இருக்கிறது. இன்றைய ஏழ்மை சூழ்ந்த கிராமத்து மனிதர்களின் தனிப்படத்தொகுப்பு போலத் தோற்றமளிக்கிறது செஞ்சினியனின் கதைத்தொகுதி. நாளைய கிராமத்து ஏழை மனிதர்களுக்கு இவர்களுடைய சித்திரம் எவ்விதமான உணர்வுகளை அளிக்கும் என்பதை வரையறுத்துச் சொல்லமுடியவில்லை.
(ஊராகாலி சிறுகதைகள், செஞ்சி தமிழினியன், விதைநெல் பதிப்பகம், எண்.1, பாரதிதாசன் தெரு, பெரியகரம், செஞ்சி. விலை. ரூ 150)


எந்தவித வார்த்தை ஒப்பனையும் இன்றி பேசுவதையும் எழுதுவதையும் தன்னியல்பாகப் பெற்றவர் திரு.பாவண்ணன் அவர்கள். பலமுறை அவரைப் பார்த்திருந்தாலும் சில முறையே அவரிடம் தனிப்பட்ட முறையில் பேசியிருக்கிறேன். குறிப்பாக திரு.பிரபஞ்சன் உடல்நலம் குன்றியிருந்த காலத்தில் அவரை மருத்துவமனையில் பார்க்க வந்திருந்தபோது மிகவும் மனம் திறந்து பேச முடிந்தது. அதே பாவண்ணன் அவர்கள் சிறிதும் பகட்டு வார்த்தைகள் இன்றி என்னிடம் நேரில் பேசியது போலவே இருந்தது இந்த விமர்சனத்தைப் படிக்கிற போது. அன்பும், மகிழ்வும்.