உயரப் பறந்த இந்தியக் குருவி சாலிம் அலி – நூல் அறிமுகம்
நூல் அறிமுகம்: உயரப் பறந்த இந்தியக் குருவி சாலிம் அலி - முனைவர் சு.பலராமன்

உயரப் பறந்த இந்தியக் குருவி சாலிம் அலி – நூல் அறிமுகம்

உயரப் பறந்த இந்தியக் குருவி சாலிம் அலி – நூல் அறிமுகம்

நூலின் தகவல்கள் : 

நூலின் பெயர்: உயரப் பறந்த இந்தியக் குருவி சாலிம் அலி
ஆசிரியர் : ஆதி வள்ளியப்பன்
பதிப்பகம் : புக் போர் சில்றேன்,பாரதி புத்தகாலயம்
விலை: ரூ 30/

உயரப் பறந்த இந்தியக் குருவி சாலிம் அலி என்னும் தலைப்பில் சூழலியலாளர் ஆதி வள்ளியப்பன் எழுதிய சிறார் நூல். இந்நூலை, புக் பார் சில்ரன் மற்றும் ஓங்கில் கூட்டம் இணைந்து 2021இல் வெளியிட்டுள்ளன. பறவையிலாளர் சாலிம் அலியின் பெருவாழ்வியலைச் சிறார்களுக்கு மிக எளிமையாக 21 பக்கங்களில் அறிமுகம் செய்துள்ளார் ஆதி வள்ளியப்பன். ஆறு குறுஅத்தியாயங்களாகப் பகுத்துள்ளார்.

இவற்றின் தொடக்கத்தில் இடம் பெற்றுள்ள ஓவியங்கள் அப்பகுதியை அடையாளப்படுத்தும் விதமாக உள்ளன. நீண்ட நெடிய பக்கங்களில் பேச வேண்டிய ஆளுமையைத் தகுந்த மற்றும் அவசியமான பதிவுகளைத் தேர்ந்தெடுத்து அளிப்பது என்பது சவாலான பணி ஆகும். பிறப்பு முதல் இறப்பு வரையிலான பதிவுகளைக் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் உரையாடிச் செல்கிறார் ஆதி வள்ளியப்பன். புனைகதை வடிவில் ஆசிரியரே கதைசொல்லியாக உள்ளார்.

அப்பா மொய்சுதின், அம்மா ஸீனத் உன்னிசாவை தம் மழலைப் பருவத்திலேயே இழந்துவிட்டார் சாலிம். ஆதலால், மாமா அமீர், தியாப்ஜி – மாமி ஹமிதா பேகம் ஆகியோர் அரவணைப்பில் தம் ஏழு சகோதர சகோதரிகளுடன் வளர்ந்துள்ளார். 1918இல் தேஹ்மினாவோடு கரம் கோர்த்துள்ளார். தங்களது குடும்பத் தொழிலான தாதுவை வெட்டி எடுப்பதில் நாட்டமில்லாமல் பறவைகளைச் தேடிச் செல்வதிலேயே அவரது கவனம் சென்றுள்ளது.

அடர்ந்த காட்டுப் பகுதிகள், மலைப் பகுதிகள், ஆற்றுப் பகுதிகள், பள்ளத்தாக்குகள் போன்ற அச்சம் நிறைந்த பகுதிகளில் பறவைகள் குறித்த தேடலில் ஈடுபட்டுள்ளார் சாலிம் அலி. மேலும் வெயில், மழை, குளிர், பனிப்பொழிவு என்பதை எல்லாம் பொருட்படுத்தாமல், கழுத்தில் கண்நோக்கி, கையில் ஏடு எழுதுகோலோடு பயணம் செய்துள்ளார். ஒன்பது வயதில் குருவிகளைச் சுடும் ’ஏர் கன்’ பிடித்துப் பின்னாளில், அந்தக் குருவிகளைப் பற்றியே எழுதுவதற்குப் பேனாவைத் தன் கையில் எடுத்துள்ளார் சாலிம் அலி. பறவையிலாளர் என்று அழைக்கப்பட்டார் என்பது இங்குக் கவனித்தக்கதாக உள்ளது. கையில் துப்பாக்கியைப் பிடித்தலுக்கும் எழுதுகோல் பிடித்தலுக்குமான இடைவெளியில் சாலிம் அலியின் பெருந்தேடல் பறவைகளைப் பற்றியதாகவே இருந்துள்ளதைக் காண முடிகிறது.

குருவிகளைச் சுடும் துப்பாக்கியைக் கொண்டு ஒரு நாள் குருவி ஒன்றைச் சுட்டுள்ளார் சாலிம். அப்போது, அதன் கழுத்துப் பகுதியில் காணப்பட்ட நிறத்தின் மீது தேடலின் ஆர்வம் தொடங்கியுள்ளது. அதன்பால், பம்பாயில் உள்ள பி.என்.எச்.எஸ் நிறுவனத்தில் காலடி எடுத்தார். பின்னாளில் அதே நிறுவனத்தின் தலைவராகவும் பணியாற்றினார் என்பதான பதிவை முதல் அத்தியாயத்திலேயே இந்நூல் முன்வைத்துள்ளது. அவரது பணிக்கு, ”ஒரு வேலையை அனுபவித்து மகிழ்ச்சியாகச் செய்ய முடிந்தால், அதன் மூலம் சிறந்த பலன்கள் உங்களுக்குக் கிடைக்கும்” என்கின்ற அவரது மேற்கோளே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தூக்கணாங் குருவி கூடு கட்டும் முறை. இக்குருவி கூடு கட்டும் முறையைத் தொழில்நுட்பம் பெரிதும் வளராத காலகட்டத்தில் அறிவியல்பூர்வமாக நுண்ணிய பார்வையில் விவரித்து கவனம் பெற்றவராகத் திகழ்ந்துள்ளார் சாலிம் அலி. ஆண் தூக்கணாங்குருவி மரத்தில் குடுவை வடிவில் கூடு கட்டும். அடிப் பகுதியில் கூட்டின் திறப்பு இருக்கும். இக்கூட்டைக் கட்டிக் கொண்டிருக்கும்போதே பெண் தூக்கணாங்குருவி பார்வையிடும். அக்கூடு சிறப்பாக இருந்தால் அக்குருவியுடன் ஜோடி சேரும். பின்பு அக்கூட்டை முழுமையாகக் கட்டி முடிக்கும். அந்தக் குருவி ஒரு கூட்டுடன் நிற்பதில்லை. 4, 5 கூடுகளைக் கட்டும். அனைத்திலும் பெண் குருவிகள் ஆய்வு செய்த பின் அந்த ஆண் குருவியோடு ஜோடி சேர்கின்றன.

மேற்கு நாடுகளிலிருந்து பறவைகள் வலசை வருகின்றன. அப்பறவைகளைக் காயப்படுத்தாத வகையில் மெல்லிய வலை மூலம் பிடித்தனர் பறவையியலாளர்கள். அவற்றின் கால்களில் அடையாள வளையங்களைப் பொருத்தி மீண்டும் பறக்கவிட்டனர். இதன் வாயிலாக அப்பறவைகள் எங்கெல்லாம் செல்கின்றன என்பதை அறிவியல் பூர்வமாக அறிந்துகொண்டனர் என்பது கவனிக்கத்தக்கது. சாலிம் அலியின் தேடலுக்கு அவரது மனைவி தேஹ்மினாவும் துணை நின்றுள்ளார். காட்டுப் பூச்சியினங்கள் சூழ கூடாரத்தில் தங்கியும் மாட்டு வண்டியில் சென்றும் உள்ளனர். பல்வேறு நாடுகளுக்குச் சென்ற சாலிம் ஆபத்துகளில் சிக்கி உயிர் தப்பியுள்ளார்.

சாலிம் அலிக்குள் எழுந்த வினாக்களே அவரது பெருந்தேடலுக்கும் தொடர் ஆராய்ச்சிக்கும் வித்தாக மாறியுள்ளது. அந்த வினாக்கள் என்னவென்றால்,

1.ஒரு பறவை குறிப்பிட்ட பழத்தை மட்டும் ஏன் உண்கிறது?

2.ஒரு பறவை உயர்ந்த மரங்களில் வாழாமல் ஆற்றங்கரையில் வாழ்கிறது?

3.ஒரு பறவை ஏன் குறிப்பிட்ட வகையில் குரல் கொடுக்கிறது?

சாலிம் அலியின் தேடலில் எழுந்த நூல் ’The Book of Indian Bird’. இது இந்திய பறவைகள் குறித்து எழுதப்பட்ட முதல் வழிகாட்டி நூல் என்னும் பெருமையைப் பெற்றுள்ளது. அது மட்டுமல்லாமல் உலக அளவில் மிகப்பெரிய கவனம் பெற்ற நூலாகவும் திகழ்கிறது. இந்த நூலை ஜவர்கலால் நேரு வாசித்துவிட்டு தன் மகள் இந்திராவிற்குப் பரிசாக அளித்தார். சாலிம் அலி தம் வாழ்க்கை வரலாற்றை ’A Fall of a Sparrow’ (தமிழில் சிட்டுக்குருவியின் வீழ்ச்சி) என்னும் தலைப்பில் எழுதியுள்ளார். இந்தியாவில் உள்ள காடுகளைப் பாதுகாப்பதில் பெரும்பங்கு வகித்துள்ளார்.
சாலிம் அலியின் 125 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ளது இந்நூல்.

காடு, பறவை இவற்றின் பின்னால் செல்வதைப் பொழுதுபோக்காகத் தொடங்கியவர் சாலிம் அலி. இந்தியாவில் சுதந்திர காலகட்டத்திற்கு முன் அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாத சூழலில் பறவைகள் குறித்த தேடலில் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். பறவைகள் குறித்த ஆய்வுகள் அதிகம் நிகழ்த்த காரணமானவராக உள்ளார்.

இயக்குனர் ஷங்கர் இயக்கி ரஜினிகாந்த், அக்சய் குமார் உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் 2.0. இத்திரைப்படத்தில் அக்சய் குமார் பட்சிராஜன் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பார். இக்கதாப்பாத்திரம் உண்மையில் பறவையியலாளர் சாலிம் அலியை மையப்படுத்தி உருவாக்கப்பட்டதாகும். நிஜ வாழ்க்கையில் காடுகளையும் பறவைகளையும் நேசித்த ஆளுமையை எதிர்மறையாகச் சித்தரித்துக் காட்டப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டுகிறார் ஆதி வள்ளியப்பன். நகர்ப்புறங்களில் சிட்டுக்குருவிகள் குறைந்ததற்கும் கைப்பேசி அலைவரிசைக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த அறிவியல் பூர்வமற்ற கதை அம்சத்தில் 2.0 உருவாக்கப்பட்டுள்ளது.

இயற்கையை நேசித்த பாதுகாத்த காப்பாளனைப் பயங்கரப் பேயாகச் சித்தரித்துள்ளதால் அவரது உண்மையான பணிகள் சிதைக்கப்பட்டுள்ளது என்று முன்னுரையில் கண்டனப் பதிவு எழுதியுள்ளார் ஆதி வள்ளியப்பன்.

 



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *