Uzhaippe Uyarvu Shortstory By Viji Ravi உழைப்பே உயர்வு சிறுகதை - விஜி ரவி

உழைப்பே உயர்வு சிறுகதை – விஜி ரவி

இந்திரபுரி நாட்டின் மன்னர் பீமசேனனுக்கு சித்தார்த்தன் என்ற மகன் இருந்தான் . அவன் ஒரு முழுச் சோம்பேறி. ஒரு இளவரசனுக்குரிய கடமைகள் எதுவும் செய்யாமல் எப்போதும் உண்பது , உறங்குவது என வீணே காலம் கழித்தான். தன் நண்பர்களுடன் வெட்டி அரட்டை அடிப்பது, வனங்களுக்கு சென்று விலங்குகளை வேட்டையாடுவது என பொறுப்பில்லாமல் சுற்றித் திரிந்தான். குதிரையேற்றம், போர்ப்பயிற்சி முதலியவற்றை தன் தந்தையின் வற்புறுத்தலின் பேரில் கற்றிருந்தாலும் அதை பயிற்சி செய்யாமல் அசட்டையாக இருந்தான்.

மன்னர் பீமசேனன் தன் மகனிடம் “சித்தார்த்தா … ஒரு நாட்டின் தலைவன் எப்பொழுதும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் . தன் மக்களை பாதுகாக்கவும் நாட்டை எதிரிகளிடமிருந்து காத்துக் கொள்ளவும் தொடர்ந்து போர் பயிற்சியில் ஈடுபட வேண்டும். நீ இப்படி வீணே காலம் கழிப்பது எனக்கு மிகவும் கவலையையும் வருத்தத்தையும் அளிக்கிறது. எனக்கும் வயதாகிக் கொண்டே போகிறது . நீ பொறுப்புள்ள ஆண்மகனாக இருந்தால் தானே நான் உனக்கு முடிசூட்ட முடியும்…?” என்றார்.

“தந்தையே நம் நாட்டைப் பாதுகாக்க ஏராளமான படைவீரர்களும், தளபதியும், சேனைகளும் இருக்கும்போது நான் ஏன் இவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டும் ….?” என்றான்.

” என்னதான் சிறந்த படையும், திறமையான வீரர்களும் இருந்தாலும் அவர்களை வழி நடத்திச் செல்ல வலிமையான , வீரமான மன்னன் வேண்டும் …’ என தந்தை கூறிய அறிவுரைகள் சித்தார்த்தனின் காதுகளில் ஏறவே இல்லை. மிகுந்த மன வருத்தத்துடன் மன்னர் அரண்மனைத் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தார். அவர் முகம் வாடி இருப்பதை கண்ட தோட்டக்காரர் சிந்தாமணி மன்னரை வணங்கி அவரது முகவாட்டத்திற்கான காரணம் கேட்டார் . மன்னரும் தன் கவலையை எடுத்துரைக்க, ” கவலைப்படாதீர்கள் மன்னவா….! நாளை இளவரசரை தோட்டத்திற்கு அழைத்து வாருங்கள். அவர் மனம் மாற ஒரு வாய்ப்பு அமையும் ..’’ என்றார்.

சிந்தாமணி ஏறக்குறைய ஐம்பது வருடங்களுக்கும் மேலாக அரண்மனைத் தோட்டத்தில் பணிபுரிந்து வருகிறார் . அதனால் அவர் மேல் மன்னருக்கு எப்போதுமே மரியாதையும் அன்பும் உண்டு. அடுத்த நாள் காலை தன் மகனை தோட்டத்திற்கு அழைத்து வந்தார் மன்னர். அவர்களை வணங்கி வரவேற்ற பெரியவர் சிந்தாமணி ஒரு தட்டில் மாம்பழங்கள் , மாதுளம் பழங்கள் , பப்பாளி ,கொய்யா போன்றவற்றை வைத்து அவர்களை சாப்பிடச் சொன்னார் . சாப்பிடுவதில் விருப்பம் உள்ள இளவரசன் “”ஆஹா…! என்ன அருமையான சுவையான மாம்பழங்கள்….கொய்யாப்பழம் கூட இனிக்கிறதே….பப்பாளியும் அருமை ….”என கூறிக்கொண்டே பழங்களை சாப்பிட்டு முடித்தான்.

அதன்பின் இளநீர் களை வெட்டி அவர்களுக்கு குடிக்கக் கொடுத்தார். “ஆஹா… இளநீர் கற்கண்டு போல் இனிக்கிறதே.. ” என்று பாராட்டினான் இளவரசன் . “இளவரசே.. இந்த இளநீரைத் தந்த மரத்தின் வயது நாற்பது….. அதோடு நீங்கள் சாப்பிட்ட அந்த மாம்பழங்களைத் தந்த மரத்தின் வயது 50. உங்கள் தந்தை சிறு குழந்தையாக இருக்கும்போது நான் நட்ட மரம் அது. முறையாக பராமரித்ததால் இன்று வரை கனிகளைத் தந்து மகிழ்கிறது அந்த மரம்..”என்றார் . “என்ன..? ஐம்பது வருடங்களாக காய்க்கிறதா…?” என வியந்தான் இளவரசன்.

“ஆமாம் இப்போது கூட சில புதிய செடிகளை நட்டுப் பராமரித்து வருகிறீர்களே… ஏன்..?ஏற்கனவே நம் தோட்டத்தில் ஏகப்பட்ட செடிகள் , மரங்கள் இருக்கின்றனவே …. இன்னும் எதற்கு புதிது புதிதாக செடிகள் மரங்களை நடுகிறீர்கள் தாத்தா…? “என்றான் இளவரசன்.

“என்னுடைய தொழில் செடி கொடிகளை நடுவது, பராமரிப்பது, நீர் விடுவது. இந்த மரங்கள் எல்லாம் என் குழந்தைகள் போல. அவற்றின்மீது உயிரையே வைத்துள்ளேன். என் மகன்கள், பேரப்பிள்ளைகள் அனைவரும் இந்த அரண்மனையிலேயே மன்னர் தயவால் நல்ல பணிகளில் உள்ளனர். என்னை வீட்டில் ஓய்வெடுக்குமாறு கூறினர். ஆனாலும் என்னுடைய கடைசி மூச்சு வரை நான் உழைக்க விரும்புகிறேன். நான் இறந்து போன பின்னாலும் நான் நட்டு வைத்த மரங்கள், செடிகள் பிறருக்கு பயன் தர வேண்டும். அதனால் தான் இந்த எண்பது வயதிலும் நான் வேலை செய்கிறேன் ..” என்றார் சிந்தாமணி .

இதைக் கேட்ட இளவரசன் ஆழமாக சிந்திக்கத் தொடங்கினான். “ஒரு 80 வயதுப் பெரியவர் நாள் முழுக்க ஓயாமல் உழைக்கிறார் . 25 வயதான நான் உழைப்பு பற்றி சிறிதும் சிந்திக்காமல் முழு சோம்பேறியாக இருக்கிறேனே.. “என்று தன்னைப்பற்றி முதல் முறையாக வருந்தினான். “தந்தையே தோட்டக்காரத் தாத்தாவினால் எனக்கு புத்தி வந்தது. உழைப்பின் அருமையை உணர்ந்து கொண்டேன். இனிமேல் நீங்கள் ஆசைப்படும்படி நான் நிறையப் போர்ப் பயிற்சிகளை பயிற்சி செய்வேன். பொறுப்புள்ள இளவரசனாக இருப்பேன் “என்றான் . மாறிய அவன் மனதைக் கண்டு மன்னரும் சிந்தாமணித் தாத்தாவும் மனம் மகிழ்ந்தனர் .

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *