காலம் துவக்கிவைத்த எல்லாக்‌ கணக்குகளையும் காலமே நினைவுகளாக மாற்றியமைத்து முடித்தும் வைக்கும்.மாற்றம் ஒன்றே மாறாத உலகில் மாற்றங்கள் உலகின் போக்கையே மாற்றிக் காட்டுகின்றன. கடந்த 50 ஆண்டுகளில் அறிவியல், பொருளாதாரம், தொழில்நுட்பம், மற்றும் பண்பாடுகளில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றங்களூம் மாற்றங்களும் மனிதர்களை மனதளவிலும் வாழ்வு நிலையிலும் பல்வேறு விதமான மாறுதல்களுக்குள் அழைத்துச் செல்கின்றன. தொழிற்புரட்சியின் விளைவாலும் கருவிகள் கண்டுபிடிப்புகளாலும் தகவல் தொடர்பின் விரைவான சேவையாலும் மனிதர்களுக்கான இணைப்பு நேரம் குறைந்துவிட்டது. ஆனால் மனங்களுக்குள் இடைவெளி அதிகரித்து விட்டது. கால மாற்றம் கொடுத்த வேக வளர்ச்சியினால் காற்றில் கரையாமல் மனதின் சேமிப்புக் கிடங்கில் பத்திரமாய் புதைந்திருக்கும் நினைவுகளை நம் மனவெளிக்குத் திறந்து காட்டியிருக்கிறார் எழுத்தாளர் வெ.இறையன்பு.

நகரங்கள் பெருகாத நாட்களின் பொழுதுகள் நகர்ந்திடும் தன்மையை பேசுகையில் பொழுது போகவில்லை என்பதை விளையாட்டிலும் அக்கம் பக்கம் வீடுகளிலும் தோட்டத்துக் கால்வாய்களிலும் தம்மை புதுப்பித்துக் கொண்டாலும் நேரத்தை கடத்த முடியாத நிலையை சுட்டிக்காட்டுகிறார். இன்றோ குடும்பத்திற்குள்ளேயே இருந்தாலும் முகங்களைப் பார்த்து மலர்ச்சியை காட்டக்கூட மணித்துளிகள் இல்லாத பொழுதைத் தேடி ஓடிக் கொண்டிருக்கிறோம் என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்.

“”நாகரீக வளர்ச்சியின் இடுக்குகள் வழியாக நழுவும் பண்பாட்டின் கடைசிக் காட்சிகள் புகையும் ஊதுபத்தியின் இறுதித் துண்டாய் ஞாபகங்களை கிளறி விடுகின்றன. கனவாக இருந்த அனைத்தும் இன்று ஏன் நிறைவேறின என்கிற சலிப்புடன் வாழ்க்கையை பிடித்து தள்ளிக் கொண்டிருக்கிறோம்” என அவர் விளம்புவதை உற்று நோக்குகையில் புறவெளியின் விரைவான வளர்ச்சியில் மனவெளியை மூடிக் கொண்டோம் என்பதை உணர முடிகிறது.

30 கட்டுரைகளின் வழியாக நமது வாழ்வு முறையில், நமது பண்பாட்டு நெறிகளில் ஏற்பட்டிருக்கும் கால மாற்றத்தையும் அதன் விளைவாக மனங்களில் உருவாகி இருக்கும் வெறுமை நிலையையும் இத்தொகுப்பு ஆழமாகப் பேசுகிறது. விருந்தினரின் வருகை எதிர்பாராமல் நிகழும் பொழுதும் அன்று நாம் எவ்வாறு மலர்ச்சியுடன் மகிழ்வுடன் அவர்களை விருந்தோம்பலில் மூழ்கடித்தோம் என்பதைக் கூறும் ஆசிரியர் இன்று தகவல் இல்லாமல் வருவோரைத் தவிர்த்து விடும் மனநிலையைப் பெற்றிருப்பதை எடுத்துக் காட்டுகிறார்.

அன்று நடிகரிடம் மட்டும் இருந்த அலைபேசி இன்று அரங்கைப் பெருக்குபவரிடமும் இருக்கிறது என்பது தகவல் புரட்சியின் மகத்தான சாதனை. மனிதர்களால் சாதிக்க முடியாத சமத்துவத்தை தகவல் புரட்சி செய்து விட்டது. ஆனால் இன்று அடுத்தவர் அலைபேசியைப் பார்ப்பதும் பயன்படுத்துவதும் குடும்பத்திலேயே அச்சத்தை ஏற்படுத்தி விடக்கூடும். நேரத்தை சேமிக்க வந்த அலைபேசி இன்று எல்லா நேரத்தையும் உறிஞ்சிக் கொள்வதை எப்படி புரிந்து கொள்வது?

“”கடிதம் என்பது சிறகு முளைத்த பந்து; இறகு முளைத்த இதயம்; அப்பாவிடம் இருந்து வந்தால் பற்று, விருப்பமானவரிடமிருந்து வந்தால் கிளுகிளுப்பு, நண்பனிடம் இருந்து வந்தால் எதிர்பார்ப்பு, அதிகாரியிடம் இருந்து வந்தால் பதற்றம்”” என கடிதத்தை குறிப்பிடும் எழுத்தாளர் இன்றைய காலகட்டத்தோடு கடிதம் பற்றிய நினைவுகளை ஒப்பிட்டுச் சொல்கிறார். தாமதமான கடிதம் வேலைவாய்ப்பை இழக்க வைத்ததை, காதலைப் பிரித்து விட்டதை, நட்பை துண்டித்து விட்டதை என ஒவ்வொருவர் வாழ்விலும் ஏதேனும் ஒரு இழப்பை ஏற்படுத்தி இருக்கக்கூடும். நிறையப் பேரின் வாழ்விற்கு ஒளியேற்றும் கடவுளாகத்தான் தபால் பெட்டிகள் தென்பட்டிருக்கும். தபால்காரர் குடும்பத்தில் ஒருவராக மாறிப் போய் இருப்பார். இன்றோ கடிதங்கள் நினைவுகளில் புதையுண்டு வாசிப்பிற்காக ஏங்குகின்றன.

கிணறு வெட்டும் அனுபவத்தை பகிர்வதை வாசிக்கையில் அரைசாண் வயிற்றுக்கு கஞ்சிக்காக அலையும் மக்களின் அவலத்தை உணர முடிகிறது. வெடிவைத்தும் கைகளாலேயே கடப்பாறையில் தோண்டியும் வருடக் கணக்கில் தோண்டப்படும் கிணறுகளுக்குள் வறுமையில் வாடும் மக்களின் வலிகள் புதைந்திருக்கின்றன.

சிறுவயதில் மிதிவண்டி கற்றுக்கொள்ள மேற்கொள்ளும் முயற்சிகளும் நடவடிக்கைகளும் இப்போது நினைத்தால் எல்லோர் மனதிலும் புன்னகை மெல்லியதாக வந்து போகும். மிதிவண்டி ஓட்டுதல் உடற்பயிற்சியின் ஒரு பரிமாணம் என்பதையும் உடல் ஆரோக்கியத்தின் நல் வழிமுறை என்பதையும் உணர்ந்த நாம் இன்று கடைகளுக்கும் கார்களில் செல்லும் நேர நெருக்கடிகளுக்குள் சிக்கி விடுகிறோம். இன்னும் சில நாள்களில் கார்களால் கடப்பதை விட கால்களால் விரைவில் கடந்து விடுவோம் என்கிற காலம் வரும் என்று நிதர்சனத்தை எழுதுகிறார் ஆசிரியர்.

திருமண வீடுகள் பற்றியும் துக்க வீடுகள் பற்றியும் டென்ட் கொட்டாய் எனப்படும் திரையரங்கில் படம் பார்த்து அனுபவம் பற்றியும் வீடுகளின் சுவற்றை நிறைத்த புகைப்படங்கள் பற்றியும் எழுதி இருக்கும் கட்டுரைகள் காலமாற்றத்தினால் நாம் தொலைத்துவிட்ட மன மகிழ்வின் தருணங்களை காட்சிப் படுத்துகின்றன.

அன்றைய கல்வி முறை, பள்ளிக்கூட அமைப்பு, பள்ளியில் சேர்வதற்காக தகுதிகள் பற்றிய அளவுகோல், பள்ளியின் மாணவர்களின் நட்பு, பள்ளியில் மாணவர்கள் பாடங்கள் பயின்ற முறை, தேர்வின் மீதான பயமும் அழுத்தமும் இல்லாத சூழல் என கல்வி தொடர்பான கட்டுரைகள் இதில் நிறைய இடம் பிடித்துள்ளன.மன மகிழ்வை உருவாக்கிடவும் ஒற்றுமையை வளர்த்திடவும் விட்டுக் கொடுத்தல், சகிப்புத்தன்மை , பொறுமை , தன்னைப் போலவே பிறரையும் மதிக்கும் பாங்கு, ஏற்றத்தாழ்வுகளை பின்பற்றாமை, எல்லோரையும் சமமாக பார்க்கும் பரந்த மனப்பான்மை போன்ற பல்வேறு அடிப்படை குணங்களை வளர்ப்பதில் அன்றைய பள்ளிக்கூடங்கள் எவ்வளவு உதவியாகவும் உறுதுணையாகவும் திகழ்ந்தன என்பதை இக்கட்டுரைகள் அசைபோட வைக்கின்றன.

நூலில் ஆங்காங்கே பண்பாட்டில் நிகழ்ந்த மாற்றங்களையும் பட்டியலிடும் ஆசிரியரின் மனதிற்குள் பெற்றோர் பிள்ளைகள் உறவு இன்று சிதைந்து போய் இருப்பதன் கவலை எட்டிப் பார்க்கிறது. இன்று நிபந்தனை முடிச்சிடப்பட்ட பாசப்பிணைப்புகளோடு உறவுகள் ஊசலாடிக் கொண்டிருக்கின்றன என்பதையும் எச்சரிக்கிறார். அன்று இரும்பாய் வைக்கும் கோரிக்கைகளுக்கும் தங்க முலாம் பூசி தந்தையிடம் தந்து சம்மதம் வாங்கித் தருபவள் தாய். அன்று எவ்வளவு திட்டினாலும் குழந்தைகள் திடமாய் இருந்தார்கள். இன்று லேசாக முகம் சுளித்தாலே தற்கொலை செய்யும் பிள்ளைகளே அதிகம் என்றும் கவலைப்படுகிறது அவரது மனம்.

வசதிகள் குறைந்த காலகட்டத்தில் வாழ்வதற்கான போராட்டங்கள் அதிகரித்து உழைப்பின் தருணங்கள் நிறைந்திருந்த அன்றைய காலத்திலும் வீடுகள் சிறிது என்றாலும் வாழ்ந்த மனிதர்களின் மனங்கள் விசாலமாய் இருந்தன. ஊரே எல்லாவற்றிற்கும் ஒன்றாய் கூடி நின்று ஒவ்வொருவரையும் முழுமையாக அறிந்தும் புரிந்தும் உதவி செய்கின்றது. எல்லா நிகழ்வுகளிலும் மக்களின் மனங்களில் இயலாமை முன்னிருக்காமல் ஏக்கங்கள் இடையூறு செய்யாமல் திருப்தியும் நிம்மதியும் நிறைந்திருந்தன. இன்றைய காலகட்டத்தில் கருவிகளும் வாகனங்களும் நேரத்தை மிச்சப்படுத்த நமக்காக உழைக்கத் தொடங்கினாலும் மனங்களுக்குள் வெறுமையும் நிம்மதியின்மையும் பெருகி விட்டன. அன்பின் ஆதிக்கம் அனைத்து சுயநலங்களையும் ஒதுக்கித் தள்ளி விட்டு எழும்பி நிற்கும் காலம்தானே பொற்காலமாக அமையும் என நமக்கு நினைவுகளின் வழியே காலத்தின் நகர்வை காட்சிப்படுத்தி இருக்கிறது இந்த நூல்.

 

நூலின் தகவல்கள் 

நூல் : காற்றில் கரையாத நினைவுகள்

ஆசிரியர் : வெ.இறையன்பு

வெளியீடு  : தமிழ் திசை

முதல் பதிப்பு  : டிசம்பர் 2018

பக்கம் : 136

விலைரூ.160

 

எழுதியவர் 

இளையவன் சிவா

கி சிவஞானம் என்ற இயற்பெயர் உடைய இவர் அரசுப் பள்ளி ஆசிரியர்.பயணங்கள் வழியே இயற்கையை ரசிப்பதில் பெரு விருப்பம் உடைய இவரது கவிதைகள் ஆனந்த விகடன் கணையாழி கொலுசு புன்னகை ஏழைதாசன் தினத்தந்தி போன்ற இதழ்களிலும் நிறைய மின்னிதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. சாகித்திய அகாதமி நிறுவனம் வெளியிட்ட ஆயிரம் ஹைக்கூ தொகுப்பு நூலில் இவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளன. மின்மினிகள்(1999) தூரிகையில் விரியும் காடு((நூலேணி பதிப்பகம் கன்னிமாரா நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்திய போட்டியில் முதல் பரிசு )(2022) தீராக் கனவை இசைக்கும் கடல் (2023)(தமிழ்நாடு கலை இலக்கிய மேடை வழங்கிய அசோகமித்ரன் படைப்பூக்க விருது) என மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.

 
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *