நெல்லை *வாசிப்பை நேசிப்போம்* புலனக் குழுவின் இரண்டாவது அகவையை முன்னிட்டு (அக்டோபர் 1) இந்நன்னாளை கொண்டாடும் விதமாக இந்நூலை (வாசித்தல் : வெ. இறையன்பு) விமர்சிக்க விழைகிறேன்.. இக்குழுவின் மூலம் நம் வாசிப்பை பக்குவப்படுத்தி, ஊக்கப்படுத்தி, ஆழப்படுத்தி, செப்பனிட்டு தொடர் வாசிப்பாளர்களாய் மாற்றிய நம் முதன்மை கல்வி அலுவலர் ஐயா அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்🙏🏻🙏🏻
இந்நூலில் எழுத்தாளர் *வெ. இறையன்பு ஐஏஎஸ்* அவர்கள், வாசிப்பின் நேசத்தை அனுபவ பூர்வமாக விளக்கி வைப்பதோடு புத்தக வாசிப்பின் தேவையும், அதன் வளத்தையும், பயன்பாட்டையும், அணு அணுவாக விரித்துக் காட்டியுள்ளார்.. பனை ஓலை தொடங்கி கணினி பதிப்பாக உருமாறிய புத்தகத்தின் பரிணாம வளர்ச்சி முதல் வாசிப்பை சுவாசமாக்கிய விதமும் வாசிப்பால் ஊக்கமடைந்த நிலைகளையும் தம் அனுபவகக்கூறுகளாய் இந்நூலை அமைத்திருப்பது சிறப்பு..
இப்புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்ததுமே எழுத்தாளர் தம் சிறுவயது நினைவுகளை அள்ளித் தூவிய விதம், நம்மையும் நம் சிறுவயதில் கதைகள் வாசித்த பழக்கத்தையும் நினைவு கூற வைத்தது.. குறிப்பாக நான் வாசித்த அம்புலி மாமா கதைகளும், அக்பர் பீர்பால், விக்ரமாதித்தன் கதைகள், Bedtime stories, fairy tales மற்றும் நானும் என் தாத்தாவும் மல்லுக்கட்டி, போட்டி போட்டு யார் முதலில் வாசிக்க போகிறோம் என்று சிறுவர் மலரை வைத்து மல்யுத்தம் செய்ததை நினைத்துப் பார்த்தால் இப்பொழுதும் என்னை மெய்சிலிர்க்க வைத்தது, தற்போதைய சூழலில் என் வாசிப்பு அனுபவத்தை ரசித்து பார்ப்பதற்கு என் தாத்தா எனதருகில் இல்லை ஆனாலும் ஒரு காலத்தில் அவர் அளித்த ஊக்கமும் கண்களில் ஒளி குறைந்தபொழுதும் வாசிப்பையே தன் சுவாசமாய் கொண்டு நேசித்த அந்த நாட்களை நினைக்கும் பொழுது அருவியாய் வந்தது விழியோரம் அவரது நினைவுகள்..
*காகிதத்தை கையில் எடுப்பவன் ஆயுதத்தை கீழே போடுவான்*
நூலுக்காக செலவழிக்கும் தொகை *முன்னேற்றத்திற்கான முதலீடு..!!*
*மகிழ்ச்சிக்கான மதிப்பீடு..!!*
*வளத்திற்கான வழிபாடு..!!*
சில புத்தகங்கள் எல்லாரும் வாங்குகிறார்களே என அலங்காரமாக வைக்க..!!
சில புத்தகங்கள் துணி வாங்குவது போல புரட்டிப் புரட்டி மூடி வைக்க..!!
சில புத்தகங்கள் முதல் அத்தியாயத்தையும், இறுதி அத்தியாயத்தையும் மட்டும் வாசிக்க..!!
சில புத்தகங்கள் முழுமையாக கரைத்துக் குடித்து தம்பட்டம் அடிக்க..!!
சில புத்தகங்கள் படித்தது போன்ற பிம்பத்தை ஏற்படுத்த..!!
சில புத்தகங்கள் கோடுகளை மட்டுமிட்டு நானும் படித்திருக்கிறேன் பாருங்கள் என்ற மெப்பனைக்கு..!!
பாக்கியம் பெற்ற
சில புத்தகங்களே ஆர்வத்துடன், அணு அணுவாக ரசித்து, ருசித்து, படித்து, மெய்சிலிர்க்க..!!

எழுத்தாளரின் நெஞ்சில் பசைப்போல் பதிந்த சில புத்தகங்களுண்டு,
அசைபோட்டு மகிழ்ந்த சில புத்தகங்களுண்டு, ஓய்வுக்காக சில,
ஆய்வுக்காக சில, சாய்வுக்காக சில, பொழுதைப் போக்க படித்த சில புத்தகங்களுண்டு, திட்டங்களை தீட்ட திரட்டிய சில பக்கங்களுண்டு இப்படியா எழுத்தாளர் தன் அனுபவத்தை வாசித்தல் புத்தகத்தில் சொல்லும் போது என்னுடைய வாசிப்பு அனுபவங்கள் பட்டாம்பூச்சிகளாய் என் மனதில் வட்டமடித்து சென்றன..
என் வாசிப்பு அனுபவத்திலிருந்து,
நம் வாசிப்பை சுவாசமாக்கிய மகான்களின் உந்துதலோடு வாசித்து அனுபவித்த சில புத்தகங்களுண்டு,
அடிக்கடி படிக்க வேண்டும் என்று புரட்டிப் புரட்டி இன்னும் விமர்சிக்க இயலாமல் இருக்கும் சில புத்தகங்களுண்டு..
படித்து தாகத்தை தீர்த்த சில புத்தங்களுண்டு,
சில வாரங்கள் தாக்கத்தை ஏற்படுத்திய புத்தகங்களும் உண்டு,
*சில புத்தகங்கள் என் புத்தியை தீட்டும் கத்தியாய் சில நல்லதோர் சிற்பமாய் என்னை செதுக்கும் சிற்பியாய், சில உடைந்த இப் பாண்டத்தை வனையும் குயவனாய், சில என் நெஞ்சினுள் ஊடுருவி கண்களில் பிரதிபலித்த சொல்லம்பாய், சில தென்றலைப் போல என் மனதை தேற்றும் மலர் இதழ்களாய்*.. இன்னும் வர்ணித்து வர்ணித்து என் வாசிப்பனுபவத்தை சொல்லிக்கொண்டே போகலாம்..
வாசிக்க வேண்டிய நூல்கள், வாசித்தே தீர வேண்டும் என்ற சில நூல்களாக சர்ச்சைக்குரிய நூல்களுக்கு அவர் அளித்திருக்கும் முக்கியத்துவம் மற்றும் வாசிப் அனுபவத்தால் கிடைக்கும் பேரானந்தத்தையும் எழுத்தாளர் விவரித்திருப்பது சிறப்பு..
*யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்* என்பதற்கிணங்க நூல்களை வாங்கி அதனை ரசித்து, ருசித்து, வாசித்து முடித்ததும் சேமித்து வைக்காது மற்றவர்களுக்காக ஈன்றளிப்பதில் கிடைக்கும் சுகத்தை தம் அனுபவத்திலிருந்து எழுத்தாளர் விளக்கும் விதம் அருமை..இப்படியாகத்தான் ஒவ்வொரு ஆண்டும் 500க்கும் மேற்பட்ட நூல்களை பள்ளிகளுக்கு ஈன்றளிப்பதாக கூறி *வாசிப்பு என்பது ஆரோக்கியமான போதை* எனவும் *அளவுக்கு மிஞ்சினால் நஞ்சு அமிர்தம் ஆகும்* போதை என்றும் குறிப்பிடுவது நாம் சிந்தனையை தூண்டி விடுகிறது..
புத்தகத்தை வாங்கியவர்கள் அதற்கு கண்ணாடி அட்டை போட்டு முகப்பு தெரியும்படி கசங்காமல் பாதுகாத்து வைப்பவர்களும், சிலர் பரணில் தூக்கிப்போட்டு எலிகளுக்கு இரவு உணவாக்குவதும், சிலர் புத்தகங்களை இன வாரியாக பிரித்து அழகாக அடுக்கி வைத்து அழகு பார்ப்பதும், வேறு சிலர் நெல்லிக்காய் மூட்டை போல் அள்ளிக் குவிக்கும் செயல்பாடும் இன்னும் பல அவரது சொந்த அனுபவங்கள் புத்தக பிரியர்களாகிய நம்முடைய சொந்த அனுபவத்தை திரையிட்டு காட்டியதுடன் நில்லாது நம் நகைச்சுவை உணவிற்கும் உரிமிட்டு செல்கிறது..
நாம் சுவாசமாய் கருதும் வாசிப்பை ஏற்படுத்தும் புத்தகங்கள் மிகப்பெரிய ஆயுதங்கள் என்ற கூற்றுக்கு எடுத்துக்காட்டாக ஒரு நாட்டின் தலைநகரை கைப்பற்றியதும் அவர்களுடைய அறிவின் அடையாளங்களாக இருக்கும் நூலகங்களை எரிப்பார்கள் மூர்க்கர்கள்.. அறிவாளிகளை சிதைப்பது அவர்களுக்கான பேரானந்தம் ஏனென்றால் அறிவை சிதைத்தால் அனைத்தையும் சிதைத்து விடலாம் என்ற நம்பிக்கை அவர்களுக்கு.. நல்ல நூல்கள் நிறைந்திருக்கும் வீடு அறிவாளிகள் அமர்ந்திருக்கும் அழகிய கலைக்கூடம் என அழகாய் வாசிப்பின் மீதான ஆர்வத்தையும் அவசியத்தையும் உரைத்து நிற்கிறது எழுத்தாளர் இறையன்புவின் எழுத்தாணி..
*வாசிப்பை நேசிப்போம்.!!*
*வாசித்ததை யோசிப்போம்.!!*
*யோசித்ததை செயல்படுத்துவோம்..!!*
நூலின் விவரங்கள்:
நூல்: “வாசித்தல்”
நூலாசிரியர்: வெ. இறையன்பு ஐஏஎஸ் (V.Iraianbu)
விலை: ரூ. 60/-
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
எழுதியவர் :
✍🏻 சுகிர்தா அ
நெல்லை..
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
