’ஜாலியன்வாலா பாக்’ (Jallianwala Bagh): இந்திய விடுதலைப் போராட்டத்தின் மிக உயர்ந்த தியாகத்தைச் சித்தரிக்கும் வி.என்.தத்தாவின் வரலாற்று நூல்.

’ஜாலியன்வாலா பாக்’ (Jallianwala Bagh) – நூல் அறிமுகம்

’ஜாலியன்வாலா பாக்’: இந்திய விடுதலைப் போராட்டத்தின் மிக உயர்ந்த தியாகத்தைச் சித்தரிக்கும் வி.என்.தத்தாவின் வரலாற்று நூல்.

– பெ.விஜயகுமார்

இந்திய விடுதலை எண்ணற்ற தியாகங்களால் உருவானது. இந்துக்கள், இஸ்லாமியர்கள், சீக்கியர்கள், கிறித்துவர்கள், பழங்குடியினர் என்று அனைத்துத் தரப்பு மக்களும் இரத்தம் சிந்திப் பெற்றது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்தியாவின் பரந்து விரிந்த எல்லைப் பரப்பில் வாழ்ந்த அனைவரும் அளப்பரிய தியாகங்களைச் செய்தோம். நூற்றாண்டு காலப் போராட்டத்தின் மூலம் இருநூற்றாண்டுகால ஆங்கிலேயர் ஆட்சியை அகற்றினோம். விடுதலைப் போராட்டத்தில் நம் மக்கள் சிந்திய குருதிக்கு அளவில்லை. ‘ஜாலியான்வாலா பாக் படுகொலை’ என்ற கொடூர நிகழ்வு ஆங்கிலேயர் நடத்திய வன்முறைக்கான உச்சகட்ட சாட்சியமாக இருந்தது. பலரும் பல வழிகளில் இந்தக் கொடூரத்தை ஆவணப்படுத்தியுள்ளனர். அமிர்தசரஸ் நகரத்தில் 1919 ஏப்ரல் பதிமூன்றாம் நாள் நடந்த அந்தச் சோகத்தை ’ஜாலியான்வாலா பாக்’  (Jallianwala Bagh – A Groundbreaking History of the 1919 Massacre by V.N. Datta) எனும் நூலில் வி.என்.தத்தா பதிவு செய்துள்ளார்.

நூலாசிரியர் வி.என்.தத்தா (1926-2020) அமிர்தசரஸில் பிறந்து வளர்ந்தவர். குருச்சேத்ரா பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறைப் பேராசிரியராகப் பணியாற்றிய அவர் கேம்பிரிட்ஜ், மாஸ்கோ, பெர்லின், லெனின்கிராடு பல்கலைகழகங்களில் வருகைதரு பேராசிரியராகவும் செயல்பட்டார். இந்திய வரலாற்று காங்கிரஸ் தலைவராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ‘Amristar Past and Present’, ‘Jalianwala Bagh’, ‘Gandhi and Bhagat Singh’, ‘Maulana Aazad’ போன்ற வரலாற்று நூல்களை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார். ’டிரிபுயூன்’ பத்திரிகையில் இவர் எழுதிய ‘Off the Shelf’’ என்ற கட்டுரைத் தொடர் மிகவும் பிரபலமானது. ’ஜாலியான்வாலா பாக்’ (Jallianwala Bagh – A Groundbreaking History of the 1919 Massacre by V.N. Datta) நூல் இந்தியிலும், பஞ்சாபிலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. நூலுக்கான அறிமுகவுரையை நூலாசிரியர் வி.என்.தத்தாவின் மகளும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வரலாற்றுத்துறைப் பேராசிரியருமான நோனிகா தத்தா எழுதியுள்ளது பெருமைக்குரியது.

’ஜாலியன்வாலா பாக்’ (Jallianwala Bagh): இந்திய விடுதலைப் போராட்டத்தின் மிக உயர்ந்த தியாகத்தைச் சித்தரிக்கும் வி.என்.தத்தாவின் வரலாற்று நூல்.

’காந்தியின் வருகை’, ’அம்ரிஸ்தர் கலகம்’, ’ஜாலியன்வாலா பாக் கொடூரம்’, ’தி ஹண்டர் விசாரணைக் குழு’, ’ஜெனரல் டையர் மீதான நடவடிக்கை’, ’ஜெனரல் டையர் குறித்து இங்கிலாந்தில் நடந்த விவாதம்’, ’டையர் ஏன் சுட்டான்’?, ’பின் விளைவுகள்’ என்று எட்டு அத்தியாயங்களில் ஜாலியன்வாலபாக் படுகொலை வரலாற்றை வி.என்.தத்தா பதிவு செய்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் இருந்து 1915ஆம் ஆண்டில் இந்தியாவிற்குத் திரும்பிய காந்தி நேரடியாக இந்திய விடுதலைப் போராட்டத்தில் குதிக்க விரும்பினார். ஆனால் கோபால கிருஷ்ண கோகலேயின் ஆலோசனையை ஏற்று இந்திய நிலைமைகளைத் தெரிந்து கொள்ள இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். மாண்டேகு-செம்ஸ்ஃபோர்டு சீர்திருத்த முன்மொழிவுகளும், ரௌலத் சட்டமும் ஒரே நேரத்தில் 1919இல் வந்தன. ரௌலத் சட்டத்தின் கொடூர ஷரத்துகள் இந்திய மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கின. ரௌலத் சட்டத்தை எதிர்த்திட தனது போராட்ட வடிவமாக சத்தியாகிரகத்தைக் காந்தியடிகள் தேர்ந்தெடுத்தார்.

பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரம் விடுதலைப் போராட்டத்தின் கொதிகலனாகப் பரிணமிருத்திருந்த நேரமது. பஞ்சாப் மாநில லெஃப்டினட் கவர்னராக இருந்த சர் மைக்கேல் ஓ’டையர் பஞ்சாபில் கடுமையான அடுக்குமுறையைக் கடைப்பிடித்து வந்தார். முதல் உலகப் போருக்கு ஆள் சேர்ப்பதற்கு முரட்டுத்தனமான நடைமுறை அப்போது கையாளப்பட்டது. ஐரோப்பிய போர்களத்தில் பங்கேற்று இந்தியா திரும்பியிருந்த போர் வீரர்கள் அதிக விரக்தியுடன் இருந்தனர். விவசாயிகளும் போர்க்கால நடவடிக்கைகளால் சொல்லொண்ணாத் துயருக்கு ஆளாகியிருந்தனர். கடுமையான வரிச் சுமையால் அவர்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். வரியைச் செலுத்திட கடன்வலையில் சிக்கிச் சிரமப்பட்டனர். அதன் காரணமாக 1913ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ’கடார்’ விடுதலை இயக்கம் பஞ்சாபில் வலுவடைந்திருந்தது.

அந்தத் துயர்மிகு சூழலில் காந்தி சத்தியாகிரகப் போராட்டத்தை அறிவித்தார். அதனை முன்னெடுத்துச் செல்வதற்கு அமிர்தசரஸில் டாக்டர் சத்யபால், டாக்டர் சைஃபுதீன் கிட்ச்சுலு போன்ற நேர்மையான தலைவர்கள் இருந்தனர். அவர்கள் இருவரும் இங்கிலாந்தில் படித்தவர்கள். ஐரோப்பிய நாடுகளில் நிலவிய சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய கோட்பாடுகளில் ஈர்க்கப்பட்டிருந்தனர். இருவரும் அமிர்தசரஸ் மக்களிடையே நாட்டு விடுதலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். நகரில் இருந்த இந்து, முஸ்லீம், சீக்கியத் தலைவர்களும் அவர்களுடன் இணைந்து செயல்பட்டனர். காந்தியின் அழைப்பை ஏற்று அமிர்தசரஸில் சத்தியாக்கிரகத்தை வெற்றியடையச் செய்ய அவர்கள் இருவரும் கூட்டங்களை நடத்தி வருவதைக் கண்ட லெஃப்டினட் கவர்னர் ஓ’டையர் பதற்றமடைந்தார். கூட்டங்களைத் தடுத்திட இருவரையும் அவர் கைது செய்தார். தலைவர்களின் கைது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பஞ்சாபில் நிலவிய மோசமான நிலைமைகளை அறிந்த காந்தி பம்பாயிலிருந்து புறப்பட்டு அங்கே வருகிறார். ஆங்கிலேய அரசு அவரையும் பாதி வழியிலேயே பல்வால் எனுமிடத்தில் கைது செய்து பம்பாய்க்கு அனுப்பி வைக்கிறது.

அமிர்தசரஸ் நகரம் முழுவதும் 1919 ஏப்ரல் 9,10 ஆகிய இரு நாட்கள் ஹர்த்தால், ஊர்வலம், கூட்டங்கள் நடந்தன. மக்கள் பெரும் திரளாகத் திரண்டு நகரின் நடுவில் ரெயில்வே லைனைக் கடந்து செல்வதற்காக அமைக்கப்பட்டிருந்த பாலத்தில் ஊர்வலமாக வந்தனர். பாலத்தின் முகப்பில் காவல்துறை ஊர்வலத்தைத் தடுத்து நிறுத்தியது. கலகம் வெடித்தது. காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டில் சிறுவர்கள் உட்பட இருபது பேர் இறந்து போயினர். காவல்துறையின் அராஜகத்தால் கோபமுற்ற மக்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். வங்கிகள், தபால், தந்தி அலுவலகங்கள் சூறையாடப்பட்டன. வங்கி அதிகாரிகள் மூவர் உட்பட ஐந்து ஆங்கிலேயர்கள் கொல்லப்பட்டனர். ஆங்கிலேய மிஷினரியைச் சேர்ந்த மிஸ்.மர்செல்லா ஷெர்வுட் என்ற பெண்மணி தாக்கப்பட்டார். அருகிலிருந்த ஒரு இந்துக் குடும்பத்தினர் அவரைக் காப்பாற்றி அடைக்கலம் கொடுத்தனர்.

’ஜாலியன்வாலா பாக்’ (Jallianwala Bagh): இந்திய விடுதலைப் போராட்டத்தின் மிக உயர்ந்த தியாகத்தைச் சித்தரிக்கும் வி.என்.தத்தாவின் வரலாற்று நூல்.

நிலைமையைச் சமாளிப்பதற்காக லெஃப்டினட் கவர்னர் ஓ’டையர் இராணுவத்தை வரவழைக்கிறார். ஜலந்தரிலிருந்து ரெஜினால்டு எட்வர்டு ஹேரி டையர் என்ற ஜெனரல் வந்து சேருகிறான். அவனது வருகை பேரழிவில் முடியப் போவதை அப்போது யாரும் அறிந்திருக்கவில்லை.

ஜலந்தர் நகரிலிருந்து 1919 ஏப்ரல் 11ஆம் நாள் இரவு வந்து சேரும் ஜெனரல் டையர் இந்தியாவிலேயே பிறந்து வளர்ந்த ஆங்கிலேயன். அவனுடைய தாத்தா கிழக்கிந்தியக் கம்பெனியின் அதிகாரியாக இந்தியாவிற்கு வந்தவர். அவனுடைய தந்தை இந்தியாவில் மதுபானங்கள் தயாரிக்கும் ஆலையை நிறுவி தொழிலதிபராக வலம் வந்தவர். அந்தக் குடும்பத்தின் மூன்றாம் தலைமுறையைச் சேர்ந்த ஜெனரல் டையர் இயல்பிலேயே முரட்டுக் குணமுடையவனாக இருந்தான். சிம்லாவில் பள்ளிப்படிப்பையும், அயர்லாந்தில் கல்லூரிப் படிப்பையும் முடித்துவிட்டு இராணுவத்தில் அதிகாரியாகச் சேர்ந்தான். கல் மனங்கொண்ட ராணுவ அதிகாரியான ஜெனரல் டையர் நீச்சல், குதிரைச் சவாரி, துப்பாக்கியால் சுடுதல், செஸ் ஆகியவற்றில் ஆழ்ந்த விருப்பம் கொண்டிருந்தான். உருது, பஞ்சாபி, ஹிந்துஸ்தானி, பஸ்து, பெர்சியன் ஆகிய மொழிகளை அறிந்திருந்தான். தனக்குத் துணையாக கேப்டன் பிரிக்ஸ் என்பவரை அவன் ஜலந்தரிலிருந்து அழைத்து வந்திருந்தான்.

அமிர்தசரஸ் வந்து சேர்ந்ததும் காவல்துறை அதிகாரி முகம்மது அஸ்ரஃப் கான், சிவில் அதிகாரி மைல்ஸ் இர்விங் இருவரையும் கலந்தாலோசிக்கிறான். ஏப்ரல் ஒன்பது, பத்தாம் நாட்களில் கலகம் செய்தவர்களின் பட்டியலைப் பெறுகிறான். ஜாலியான்வாலா பாக் (Jallianwala Bagh – A Groundbreaking History of the 1919 Massacre by V.N. Datta) மைதானத்தில் ஏப்ரல் 13ஆம் நாள் மாலை நான்கு மணிக்கு கூட்டம் நடைபெற இருப்பதையும், கூட்டத்துக்கான ஏற்பாட்டை ஹன்ஸ்ராஜ் என்பவன் செய்வதையும் அறிந்து கொள்கிறான். ஹன்ஸ்ராஜின் பின்னணி என்ன என்பது படுகொலை நடந்த பிறகு தெரியவருகிறது. அடுத்த நாள் நடக்கவிருக்கும் கூட்டத்துக்கு 1919 ஏப்ரல் 12ஆம் நாள் காலையில் தடைவிதித்து அறிவிக்கிறான். கூட்டத்துக்கான தகவலும், கூட்டத்தைத் தடைசெய்த தகவலும் நகரை ஒருசேரச் சுற்றி வந்தன. மக்களிடையே குழப்பம் நிலவியது. கூட்டத்துக்கான தடை உத்தரவு பெரும்பான்மை மக்களைச் சென்றடையவில்லை. 1919 ஏப்ரல் 13ஆம் நாள் ’பைசாகி’ திருவிழா என்பதாலும், அமிர்தசரஸில் சந்தை நாள் என்பதாலும் கூட்டம் அலைமோதியது.

அமிர்தசரஸ் நகரின் நடுவில் அமைந்திருந்த ஜாலியான்வாலா பாக் என்ற தனியாருக்குச் சொந்தமான மிகப் பெரிய மைதானம் குழந்தைகள் விளையாடவும், சந்தை நடக்கவும், தேவைப்படும் நேரங்களில் கூட்டங்கள் நடத்தவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. ’பாக்’ என்றழைக்கப்பட்டாலும் அதுவொரு தோட்டமல்ல. அந்த மைதானத்தின் நடுவே மூன்று மரங்களும், ஒரு பெரிய கிணறும் இருந்தன. சுற்றுச் சுவருடன் கூடிய மைதானத்தின் நுழைவாயில் மிகக் குறுகலாக அமைக்கப்பட்டிருந்தது. அந்த வாயிலைத் தவிர வேறு வழிகள் ஏதுமில்லாமல் அந்த மைதானம் முழுவதுமாக அடைக்கப்பட்டிருந்தது. வாயிலின் அருகில் சற்று உயரமாக இருந்த பகுதி கூட்ட மேடையாகப் பயன்படுத்தப்பட்டது. அந்த நுழைவு வாயிலைத்தவிர, அங்கிருந்த சுற்றுச் சுவரில் சில சிறு இடைவெளிகள் மட்டுமே இருந்தன.

அன்றையதினம் மூன்று மணியிலிருந்து மக்கள் ஜாலியான்வாலா பாக்கில் குழுமத் தொடங்கினர். நான்கு மணியளவில் கூட்டம் பல்லாயிரமாகப் பெருகியது. மைதானம் நிறைந்தது. சிறுவர்கள் அங்கே விளையாடிக் கொண்டிருந்தனர். சத்யபால், கிட்சுலு போன்ற பெருந்தலைவர்கள் சிறையிலடைக்கப்பட்டிருந்ததால், சில சிறிய தலைவர்களைக் கொண்டு அந்தக் கூட்டத்தை ஹன்ஸ்ராஜ் தொடங்கினான். ஐந்து மணியளவில் மைதானத்தைச் சுற்றி ஒரு விமானம் வட்டமிட்டுப் பறந்தது. மக்கள் பயந்து கலையத் துவங்கினர். ஹன்ஸ்ராஜ் கூட்டத்தை நோக்கி, ‘’யாரும் பயப்பட வேண்டாம்; காவல்துறை தாக்குதல் நடத்தாது” என்று தைரியம் கொடுத்ததும் கூட்டம் தொடர்ந்தது.

சரியாக ஐந்து மணிக்கு ஜெனரல் டையர் ஜாலியான்வாலா பாக் (Jallianwala Bagh – A Groundbreaking History of the 1919 Massacre by V.N. Datta) நுழைவு வாயில் முன் தன்னுடைய சிறிய படையைக் கொண்டு வந்து நிறுத்தினான். அவனுடன் கர்னல் மார்கன், கேப்டன் பிரிக்ஸ் மற்றும் இரண்டு காவல்துறை அதிகாரிகள் இருந்தனர். அவர்களுக்குப் பின்னால் துப்பாக்கிகள் ஏந்திய ஐம்பது இந்திய சிப்பாய்களும், கத்திகளை ஏந்திய நாற்பது கூர்க்காக்களும் வந்தடைந்தனர். மெஷின் துப்பாக்கிகளைச் சுமந்து கொண்டு இரண்டு இராணுவ வண்டிகள் கொண்டு வந்து நிறுத்தப்பட்டன. அங்கிருந்த சிறிய வாசலுக்குள் நுழைய முடியாமல் மைதானத்திற்கு வெளியிலேயே அந்த வண்டிகள் நிறுத்தப்பட்டன. ஜெனரல் டையர் வருவதற்கு முன்னதாக, அங்கே கூடியிருந்த மக்களிடையே எட்டு பேர் பேசி முடித்திருந்தனர். ஆங்கிலேய அரசு ரௌலத் சட்டத்தை உடனே விலக்கிட வேண்டும் என்றும், 1919 ஏப்ரல் பத்தாம் நாள் அமிர்தசரஸில் நடந்த துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

எச்சரிக்கை எதுவும் கொடுக்காமல் நிராயுதபாணிகளாக நின்றிருந்த கூட்டத்தினர் மீது சுடச் சொல்லி ஜெனரல் டையர் ஆணையிட்டான். சிப்பாய்கள் சுடத் தொடங்கியதும் கூட்டம் சிதறி ஓடியது. வெளியே தப்பித்துச் செல்ல வழியின்றி பொறிக்குள் அகப்பட்ட எலிகள் போல் சிலர் கீழே படுத்துக் கொண்டனர். சிலர் அங்கிருந்த கிணற்றுக்குள் குதித்தனர். மேலும் சிலர் மைதானத்தின் சுற்றுச்சுவரில் இருந்த சிறு இடைவெளிகளுக்குள் நுழைந்து தப்பிக்க முயன்றனர். தப்பிக்க முயலும் மக்களைச் சுடச் சொல்லி சிப்பாய்களுக்கு டையர் ஆணையிட்டான். தப்பிக்க முயன்றவர்கள் துப்பாக்கிச் சூட்டிற்கு இரையாகி ஒருவர் மேல் மற்றவர் விழுந்து மடிந்தனர். சிறிது நேரத்தில் இரத்த ஆறு அங்கே பெருக்கெடுத்து ஓடியது. தங்களிடமிருந்த 1,650 தோட்டாக்கள் தீரும் வரை படைவீரர்கள் சுட்டுக் குவித்தனர். கொலைவெறி அடங்கியதும் ஜெனரல் டையர் தன் படையுடன் அங்கிருந்து வெளியேறினான்.

இரவு எட்டு மணியிலிருந்து மறுநாள் காலை வரையிலும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. ஊரே வெறிச்சோடிப் போனது. நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். குற்றுயிருடன் சிலர் அங்கேயே கிடந்தனர். அவர்களைக் காப்பாற்ற யாராலும் அங்கே வர முடியவில்லை. தங்கள் கணவர்களுடைய உடலை எடுத்துச் செல்வதற்காக அத்தர் கௌர், இரத்தினா தேவி என்ற இரண்டு பெண்கள் மட்டும் அங்கே வந்தனர். கீழே விழுந்து கிடந்த சிலர், காப்பாற்றச் சொல்லி அவர்களிடம் கதறினர். சிலர் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டனர். அந்தப் பெண்களால் எவரொருவரையும் காப்பாற்ற முடியவில்லை. இறந்தவர் எண்ணிக்கை இருநூறு என்று ஜெனரல் டையர் பொய் சொன்னான். பின்னால் நடந்த விசாரணையில் இறந்தவர் எண்ணிக்கை எழுநூறுக்கும் மேல் இருக்கும் எனத் தெரிய வந்தது.

அன்று நடந்த அந்தக் கொடூர கொலைவெறித் தாக்குதலை என்னென்று விவரிப்பது? ஆங்கிலத்தில் ’massacre or pogrom’ என்றழைக்கின்றனர். அமிர்தசரஸ் மக்களின் துயரம் அத்துடன் தீரவில்லை. அந்தக் கொலை வெறி நிகழ்வுக்குப் பின்னர் இராணுவச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. விதவிதமான அடக்குமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டன. ஆங்கிலேயர் வாழும் தெருக்களில் நடந்து செல்ல தடை விதிக்கப்பட்டது. ‘Crawling Act’ என்ற வினோதமான சட்டம் போடப்பட்டு, மக்கள் தவழ்ந்து செல்லுமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர். அங்கிருந்த தெருக்களைக் கடந்து சென்றவர்களின் சோகம் சொல்லித் தீராது. தலையைச் சற்றே உயர்த்தினாலும் காவல்துறையினர் பூட்ஸ் கால் கொண்டு மிதித்தனர். காரணங்கள் ஏதுமின்றி பலரையும் கைது செய்தனர். பொதுவெளியில் சாlட்டையால் அடித்து சித்திரவதை செய்தனர். நடுத்தெருவில் கூண்டுகள் கட்டி அதற்குள் மிருகங்களைப் போல மக்களை அடைத்து வைத்தனர்.

ஜாலியன்வாலா பாக் கொலைவெறித் தாக்குதல் செய்தி நாடெங்கிலும் பரவிய போது, காந்தியடிகளின் சத்தியாக்கிரகம் உத்வேகம் பெற்றது. ஆங்கிலேயர் மத்தியிலும் சலசலப்புகள் தோன்றின. அந்த நிகழ்வு குறித்து விசாரிப்பதற்கான குழுவை அமைத்திட வேண்டும் என்று மாண்டேகு பிரபு வலியுறுத்தினார். இந்தியத் தலைவர்கள் சிலரை ஏராளமான ஆங்கிலேய அதிகாரிகளுடன் இணைத்துக் கொண்டு விசாரணைக் குழு நியமிக்கப்பட்டது. ’தி ஹண்டர் குழு’ என்றழைக்கப்பட்ட அந்தக் குழுவின் மீது நம்பிக்கை கொள்ளாத காங்கிரஸ் கட்சி தனியே ஒரு விசாரணைக் குழுவை நியமித்தது.

’ஜாலியன்வாலா பாக்’ (Jallianwala Bagh): இந்திய விடுதலைப் போராட்டத்தின் மிக உயர்ந்த தியாகத்தைச் சித்தரிக்கும் வி.என்.தத்தாவின் வரலாற்று நூல்.

ஹண்டர் குழு விசாரணையின் போது குழுவிலிருந்த இந்தியர்கள் எழுப்பிய கேள்விகளை ஜெனரல் டையர் உதாசீனப்படுத்தினான். ஆங்கிலேய உறுப்பினர்களின் கேள்விகளுக்கு மட்டும் ஒழுங்காகப் பதிலளித்தான். தனது செயலை இறுதிவரையிலும் அவன் நியாயப்படுத்திக் கொண்டான். துப்பாக்கியால் சுட்டிருக்காவிட்டால், அவர்கள் திரும்பித் தாக்கியிருப்பார்கள் என்று மீண்டும் மீண்டும் பொய்யான பதிலைக் கூறினான். ”மைதானத்தின் நுழைவு வாயில் அகலமாக இருந்திருந்தால், இராணுவ வண்டிகளை உள்ளே எடுத்துச் சென்று இயந்திரத் துப்பாக்கிகளைப் பயன்படுத்தியிருப்பீர்களா?” என்று கேட்ட ஒரு காங்கிரஸ் உறுப்பினருக்குப் பதில் அளிக்கையில் ‘’ஆம்; நிச்சயம் இயந்திரத் துப்பாக்கிகளைப் பயன்படுத்தியிருப்பேன்’” என்று ஈவிரக்கமின்றி பதிலளிக்க அவன் தயங்கவில்லை. அவனது பதில்களில் இனவெறி தடையின்றி வெளிப்பட்டது. தி ஹண்டர் குழுவால் ஏகமனதாக முடிவுக்கு வர முடியவில்லை. குழுவில் இருந்த ஆங்கிலேயர்கள் தனியாக ஓர் அறிக்கையையும், இந்தியர்கள் தனியாக ஓர் அறிக்கையையும் சமர்ப்பிக்க நேர்ந்தது. காங்கிரஸ் கட்சியால் அமைக்கப்பட்ட குழுவின் முடிவுகளுக்கும், தி ஹண்டர் குழு அளித்த முடிவுகளுக்கும் இடையே மிகப் பெரிய அளவில் வேறுபாடுகள் இருந்தன. இறப்பின் எண்ணிக்கையே வேறுபட்டது. இறந்தவர்கள் ஆயிரம் பேர் இருக்கும் என்று காங்கிரஸ் விசாரணை அறிக்கையில் இருந்தது. ஹண்டர் குழுவோ இறந்தவர்கள் நானூறு பேர் என்றது.

காங்கிரஸ் அமைத்த குழு ஜாலியன்வாலா பாக் படுகொலையில் ஹன்ஸ்ராஜின் பங்கு குறித்த உண்மையைக் கண்டறிந்தது. அவன் விடுதலை வீரன் கிடையாது என்பதையும், பிரிட்டிஷ் அரசின் ஒற்றனாக இருந்து, போராட்ட வீரர்களைக் காட்டிக் கொடுத்த துரோகி என்பதையும் அந்த அறிக்கை வெளிச்சம் போட்டுக் காட்டியது. ஜெனரல் டையர் வரும் வரையிலும் கூட்டத்தை ஒருங்கிணைத்து நடத்திக் கொண்டிருந்த அவன், ஜெனரல் டையர் மைதானத்துக்கு வந்ததும் யாருக்கும் தெரியாமல் அவ்விடத்திலிருந்து தப்பி ஓடிப்போன கயவன் என்ற செய்தியை காங்கிரஸ் குழுவின் அறிக்கை உலகமறியச் செய்தது.

இறுதியில் ஆங்கிலேய அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனைகள் நடத்தி ஜெனரல் டையரை இராணுவத்திலிருந்து விடுவிப்பது என்று முடிவெடுத்தனர். அந்த முடிவை ஆங்கிலேயர்கள் கடுமையாக விமர்சித்தனர். ஜெனரல் டையருக்கு அவர்கள் முழு ஆதரவளித்தனர். ஆங்கிலேயப் பெண்கள் ஜெனரல் டையரை வரிந்து கட்டிக் கொண்டு ஆதரித்தனர். டையரின் குடும்பத்துக்கான நலநிதியைத் திரட்டிக் கொடுத்தனர். இங்கிலாந்துப் பத்திரிகைகள் ஜெனரல் டையரின் இனவெறிச் செயலை பல வழிகளிலும் ஆதரித்து எழுதின. ஒருவித மூளை நரம்பு நோயால் (Arteriosclerosis) பாதிக்கப்பட்டிருந்ததால், ஜெனரல் டையரால் நிதானமாக முடிவுகளை எடுக்க முடியவில்லை என்றெல்லாம் சொல்லி, டையரின் இனவெறிக்கு முட்டுக்கொடுக்க முயன்றன. இங்கிலாந்து திரும்பிய ஜெனரல் டையர் 1927இல் தனது 63ஆவது வயதில் மரணத்தைத் தழுவினான்.

ஜாலியான்வாலா பாக் படுகொலை (Jallianwala Bagh – A Groundbreaking History of the 1919 Massacre by V.N. Datta) இந்திய அரசியலில் மிகப் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியது. பஞ்சாப் மக்கள் மத்தியில் ஆங்கிலேயர்கள் மீதான வெறுப்பு மேலோங்கியது. லெஃப்டினட் கவர்னர் சர் மைக்கேல் ஓ’டையரின் மீதான வெறுப்பு அந்தப் படுகொலையை அருகில் நின்று பார்த்த உத்தம் சிங் என்ற சிறுவனின் மனதில் நீறுபூத்த நெருப்பாக இருந்தது. இருபத்தொரு ஆண்டுகள் கடந்து 1940இல் லண்டன் சென்ற உத்தம்சிங் ’இந்தியா ஹவுஸில்’ நடந்த கூட்டத்தில் லெஃப்டினட் கவர்னர் ஓ’டையரைத் துப்பாக்கியால் சுட்டு பலிக்குப் பலி வாங்கினான். தனக்கு அளிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை அவன் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டான்.
படுகொலையைக் கண்டித்த ரவீந்திரநாத் தாகூர் பிரிட்டிஷ் அரசு அளித்திருந்த ‘சர்’ பட்டத்தைத் துறப்பதாக அறிவித்தார். பிரிட்டிஷ் அரசிடம் பெற்றிருந்த ’கெய்ஸர்-இ-ஹிந்து மெடலை’யும், தென் ஆப்பிரிக்காவில் பெற்றிருந்த ’ஜூலு போர் மெடலை’யும் மகாத்மா காந்தி திருப்பிக் கொடுத்தார். ஜாலியன்வாலா பாக் படுகொலையைக் கண்டித்து 1920 ஏப்ரல் 30இல் ’அம்ரிதா பஜார் பத்திரிகை’க்கு லெனின் கடிதம் எழுதினார். ஆனால் பிரிட்டிஷ் அரசு அந்தக் கடிதத்தை வெளியிடவிடாது தடுத்தது. அந்தக் கொடுமையைச் சித்தரித்து கவிக்குயில் சரோஜினி நாயுடு, உருது கவிஞர் முகம்மது இக்பால், ரஷ்யக் கவிஞர் நிக்கொலாய் டிக்கானோவ் ஆகியோர் கவிதை இயற்றியுள்ளனர்.

இரண்டாம் உலகப் போர் முடியும்வரை தென் அமெரிக்கா, ஆசியா, ஆப்பிரிக்கா கண்டங்களில் இருந்த நாடுகளை எல்லாம் காலனிகளாக்கி, அதன் இயற்கை வளங்களைக் கொள்ளை அடித்தும், அம்மக்களின் உழைப்பைச் சுரண்டியும் ஐரோப்பிய நாடுகள் வளர்ந்தன. அதிலும் குறிப்பாக சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யமாக உலகம் முழுவதும் பிரிட்டன் சாம்ராஜ்யம் வியாபித்திருந்தது. தன்னுடைய ஆட்சியை நிலைநிறுத்திக் கொள்ள அது எந்தவொரு எல்லைக்கும் சென்றது. அதன் ஒரு அடையாளமே ஜாலியன்வாலா பாக் படுகொலை. பிரிட்டிஷ் அரசு அனைத்து காலனிகளிலும் இத்தகு கொடூரங்களை நிகழ்த்திக் காட்டியுள்ளது. வரலாற்றாளர் வி.என்.தத்தா தனது ’ஜாலியான்வாலா பாக்’ (Jallianwala Bagh – A Groundbreaking History of the 1919 Massacre by V.N. Datta) எனும் வரலாற்று நூல் மூலம் ஆங்கிலேயர்களால் இந்தியர்கள் அனுபவித்த கொடுமைகளை உலகுக்கு வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளார். இந்நூல் நேர்மையுடனும், தக்க ஆதாரங்களுடனும் எழுதப்பட்ட ஆவணமாகப் போற்றப்படுகிறது.

கட்டுரையாளர்:

பெ.விஜயகுமார்,
ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியர்.
மதுரை- 18. செல்; 95007 40687

 

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *