ந மு தமிழ்மணி (N.M.Thamizhmani) எழுதிய வ உ சிதம்பரனார் தன் வரலாறு (V. O. Chidhambaram thanvaralaru) - நூல் அறிமுகம் - https://bookday.in/

வ உ சிதம்பரனார் தன் வரலாறு (V. O. Chidhambaram thanvaralaru) – நூல் அறிமுகம்

வ உ சிதம்பரனார் தன் வரலாறு (V. O. Chidhambaram thanvaralaru) – நூல் அறிமுகம்

விடுதலைப் போராட்டத்திற்காக பலமுறை சிறை சென்று வெளிவந்த வ உ சிதம்பரனார் தன் வாழ்க்கை வரலாற்றை அகவற்பாக்களால் செய்யுள் வடிவில் சுய சரிதமாக எழுதி இருக்கிறார். அதை எளிய தமிழில் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப உரைநடை வடிவில் மாற்றி அழகாக கட்டமைத்திருக்கிறார் நூலாசிரியர் தமிழ்மணி.

வழக்குரைஞர், தொழிற்சங்கத் தலைவர், விடுதலைப் போராளி, மக்கள் தலைவர், கூட்டுறவு கழக முன்னோடி, பாவலர், செயலாளர், நாவாய் நிறுவன நிறுவுநர், எழுத்தாளர்சொற்பொழிவாளர், மொழிபெயர்ப்பாளர், உரையாசிரியர், தனித்தமிழ் ஆர்வலர், இதழாசிரியர், நூலாசிரியர், மெய்யியல் அறிஞர், பதிப்பாசிரியர், கட்டுரையாளர், ஆசிரியர், சீர்திருத்தக்காரர், கலைச்சொல் ஆக்குநர்,இலக்கண வல்லுநர், புதின ஆசிரியர், இயற்கை வேளாண்மை வல்லுநர். என் பன்முகத்தன்மையில் சிறந்து விளங்கிய சிதம்பரம் அவர்களது தன் வரலாற்று நூல் இது.

செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்து நாட்டின் விடுதலைக்காக தனது சொத்துக்கள் அனைத்தையும் துறந்து ஏழை பங்காளர்களுக்கு தோழனாக மாறி இறுதி வரை விடுதலையைக் காண ஏங்கித் தவித்து சுதந்திரத் காற்றை சுவாசிக்காமலே மரணம் அடைந்த தியாகி வ உ சிதம்பரம் அவர்கள். இந்த நூலில் முதல் பகுதியில் அவரது வாழ்க்கை வரலாறும் எவ்வாறு தேச விடுதலைக்காக போராட்ட குணத்தை பெற்றார் என்பதையும் போராடுவதற்கான சூழலையும் அமைத்துக் கொண்டதையும் தெரிவிக்கிறார். இரண்டாம் பகுதியில் சிறைச்சாலையில் தாம் பட்ட அனுபவங்கள் வேதனைகள் சிறை அதிகாரிகளின் சிறுமைத்தனம் சிறைக்குள் அவரைக் கொலை செய்வதற்கு நடந்த நிகழ்வுகள் பற்றிய விவரிப்புகள் மாடுகள் செய்ய வேண்டிய வேலையை மனிதர்களை வைத்து செய்த கொடுமை சிறையில் இருந்து வெளி வருகையில் உடல் நிலை பாதிக்கப்பட்டு தோற்றமே உருமாறிப்போன பரிதாபம் என அனைத்தையும் எழுதிச் செல்கிறார்.

ஒரு குடிமகன் தன் நாட்டின் மீது வைத்திருக்கும் பற்று எப்படி இருக்க வேண்டும் என்பதை தனது முதல் அத்தியாயத்திலேயே குறிப்பிடும் சிதம்பரம் அவர்கள் நாட்டுச் சிறப்பை அழகாக வர்ணிக்கிறார். “” மழை நீர் வளமும் ஊற்று நீர் வளமும் கிடைக்கின்றன. நகர்கள் திட்டமிட்டு அமைக்கப்பட்டுள்ளன. அழகிய காடுகள் உள்ளன. சிறப்புக்குரிய பொருட்களும் பெருமைக்குரிய பலவும் உள்ளன. நல்ல விளைச்சலை தரக்கூடிய வயல்கள் உள்ளன. குற்றமற்ற வழிகளில் பொருள் திரட்டிய செல்வங்களும் அறிவில் சிறந்தோர் பலரும் பற்றுகளை துறந்தோர் பலரும் இங்கு வாழ்கின்றனர். வறுமை போன்ற சுமைகள் வரும்போது அவற்றை தாங்கிக் கொள்வதோடு அரசுக்குரிய வரியை எளிதில் கட்டும் மக்கள் இங்கு வாழ்கின்றனர் பாதுகாப்பு நன்மை கல்வி ஆகியனவும் இங்கு நிறைந்துள்ளன””

சிறுவயதில் அவருக்கு கற்றுக்கொடுத்த ஆங்கில ஆசிரியர் பணி மாறுதலில் வெளியூர் சென்றுவிட சிதம்பரம் ஒருவருக்காக அவரது தந்தை தனது நிலத்தில் புதிய கட்டிடம் ஒன்றைக் கட்டி புதிய பள்ளியை உருவாக்கி மகனுக்காக ஆங்கில ஆசிரியர் ஒருவரை நியமிக்கிறார் என்பதை வாசிக்கும் போது கல்வியின் மீது அவர்கள் குடும்பம் கொண்டிருந்த மதிப்பும் மரியாதையும் காணக்கிடைக்கிறது..

சிறுவயதில் சட்டப்படிப்பு வரை படித்த சிதம்பரம் முழுமையாக தன்னை உணராமல் குழந்தைத்தனமாகவே விளையாட்டுச் செயல்களில் ஈடுபட அவரது தந்தை பலமுறை அவரை கண்டிக்கிறார் ஒரு சமயம் கண்மூடித்தனமாக கணக்கின்றி அவரை அடிக்கிறார் அவ்வேளையில் சிதம்பரம் துறவு மேற்கொள்ள நினைக்கிறார் தலைமுடியை மொட்டை அடித்துக் கொண்டு கோவணம் கட்டிக்கொண்டு இரண்டு நாட்களுக்குள் யாருக்கும் சொல்லாமல் மதுரையைச் சென்றடைந்து பல நாட்கள் அங்கே வாடித் திரிந்து அலைகிறார். எப்படியோ செய்தியறிந்து அவரது தந்தை அவரை வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார்.

ஒரு கட்டத்தில் தன்னை உணரும் சிதம்பரம் பாட்டன் வழியிலும் தந்தை வழியிலும் புகழ்பெற்ற வழக்குரைஞர் தொழிலில் தானும் ஈடுபட்டு ஏழைகளின் வழக்கை அருள் கொண்டு நடத்துகிறார். அவர்களிடம் பணம் வாங்காமல் எந்தவித களங்கமும் இல்லாமல் தனது தொழிலில் நேர்மையாகவும் நியாயமாகவும் நடந்து கொள்கிறார்.

ஒருவர் நமக்கு செய்த உதவியை மற்றவர்களிடம் எடுத்துச் சொல்லுதல் உயர்வு என்றும் இனிமையான ஒருவரின் குணத்தை மற்றவரிடம் சொல்வது நன்மை என்றும் முன்னோர் கூறியுள்ளனர் அதன்படி சிறந்தவளான வள்ளியம்மையின் குணத்தை இங்கே கூறுகிறேன் “‘என்னுடைய பெற்றோர் என்னுடன் பிறந்தோர் என்னுடைய நண்பர்கள் யாவரையும் தன்னுடைய உயிராக கருதி கொண்டு செய்த குற்றமில்லா மனம் கொண்டவள் திருமகளுக்கு ஒப்பானவள் திருவள்ளுவர் அருளிய திருக்குறளை முறையாக படித்து பிறர் மனதில் பதியும் வண்ணம் உரையுடன் எடுத்துக் கூறுவாள் என்னுடைய குற்றங்களை இனம் கண்டு அழிக்கும் அமைச்சரை போல் இருந்தால் உடையோ நகையோ தனக்கு வாங்கித் தருமாறு அவள் எதுவும் கேட்டதே இல்லை”” என்று தனது மனைவி பற்றி வ உ சி திறம்பட பெருமையாகக் கூறுகிறார்.

முதன் முதலாக சென்னையில் ராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரது உரையைக் கேட்டு “‘அவருடைய உரை என்னுடைய மெல்லிய உள்ளத்தில் சுதேசிய வித்தை விதைத்தது அது முதல் உள்நாட்டு கைத்தொழில்கள் வளர்ந்து வரும் நல்லறிவு செய்திகளை நான் தொடர்ந்து வாசிக்க ஆரம்பித்தேன்”” என்று விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பத்தை எடுத்துரைக்கிறார் சிதம்பரம்.

தர்ம சங்க நெசவுச்சாலை, சுதேசிய நாவாய் சங்கம், சுதேசிய பண்டகசாலை ஆகியவற்றை உருவாக்கி பெரிய துன்பங்களையும் அதனால் நிறைந்த அவலங்களையும் அருமையாக நூலில் கவலையுடன் விவரிக்கிறார் சிதம்பரம்.

சிறைச்சாலை அழைத்துச் செல்லும் வழியில் நடந்த நிகழ்வை சிதம்பரம் விவரிப்பதை வாசித்துப் பாருங்கள். எனக்கு முன்னும் பின்னுமாக பாதுகாப்புக்கு என்று உடல் வலிமை கொண்ட நான்கு காவலர் நின்று கொண்டனர். முன்பாக இரு துணை கண்காணிப்பாளர்களும் பின்புறம் ஆய்வாளரும் இருந்தனர். 12 தலைமை காவலர்கள் இடமும் வலமும் மிதிவண்டியில் வந்தனர் நான்கு கைத் துப்பாக்கிகளும் 20 சுழல் துப்பாக்கிகளும் ஏந்திய காவலர் உடன் வர வண்டிகள் நகர்ந்தன. சில தூரம் சென்றவுடன் அங்கு மக்கள் திரளாகக் கூடி நின்று என் மனம் கலங்குமாறு வரவேற்பும் வணக்கமும் செய்தனர். 12 காவலர்கள் கத்தி சொருகிய துப்பாக்கியோடும் முன்புறம் ஒரு தலைமைக் காவலர் முகத்திற்கு நேராகத் தூக்கிய வாளோடும் முன்னேற்பாடாக நின்று வணக்கம் செய்தனர்.

“”அரசுக்கு எதிராக சொற்பொழிவுகள் நிகழ்த்திய குற்றத்திற்காக 20 ஆண்டுகள் நாடு கடத்தல் தண்டனையும் நெல்லையில் ஆற்றிய சொற்பொழிவிற்காக இன்னொரு 20 ஆண்டுகள் நாடு கடத்தல் தண்டனையும் ஆக கற்றோர் மனமும் கலங்கிடும் வண்ணம் 40 ஆண்டுகள் சிறை தண்டனை எனக்கு வழங்கப்பட்டது”” அப்போது இருந்த என் மனநிலையை நான் எழுதிய செய்யுளை விவரித்துச் சொல்லும்.

“”என் மனமும் என் உடலும் என் சுகமும் என் அறமும் என் மனையும் என் மகவும் என் பொருளும் என் மதியும் குன்றிடினும் யான் குன்றேன் கூற்றுவனே வந்தாலும் வென்றிடுவேன் காலால் மிதித்து””
என்று தனது தண்டனையை விவரிக்கிறார் சிதம்பரம்.

சிறையுடையின் பெருமையை கூறுகிறார் பாருங்கள். நாமெல்லாம் அவற்றைத் தொட்டுக் கூடப் பார்ப்பது ஐயமே. “”மரத்தின் பட்டை என்று சொல்லக்கூடிய அளவில் விரைப்பாக உள்ள துணியில் கைகளும் கால்களும் இல்லாமல் தைக்கப்பட்ட உடை அதே வகை துணியில் மிகவும் சிவப்பான நிறத்தில் தலைக்கவிப்பு என்று சொல்லப்படுவதையும் கால் சட்டை ஒன்றும் மேல் சட்டை ஒன்றும் சேர்த்து ஆளுக்கு 3 தந்தனர்””

“”கோயம்புத்தூரில் இருந்த ஒளி மழுங்கிய சிறைக்குள் சென்றதும் துணைச் சிறை அதிகாரி வந்தார் பாளையங்கோட்டை சிறையின் உடைகளை வாங்கிக்கொண்டு அந்த சிறைக்கான உடைகளை வழங்கினார் மேலுடை இரண்டும் கீழ் உடை இரண்டும் தலைக்கவிப்பு ஒன்றும் கோவணம் ஒன்றும் கயிற்றுப்பாய் ஒன்றும் கம்பளி இரண்டும் வழங்கப்பட்டன. பாதுகாவலர் என்னை சணல் கிழி எந்திரத்தை சுற்றச் சொன்னான். அவ்வாறே சுற்றினேன். என் கையில் தோல் உரிந்து குருதி கசிந்தது எனக்கு கண்ணீர் பெருகியது””

“”திங்கட்கிழமை அன்று சிறை அதிகாரி என் கையில் தோல் உரிந்திருப்பதைப் பார்த்தான் உடனே அவன் எண்ணெய் ஆட்டும் செக்கினை மாட்டுக்கு பதிலாக பகல் முழுவதும் வெயிலில் நின்று தள்ளுமாறு அனுப்பினான். அவனுடைய அன்பு தான் எப்படிப்பட்டது””

கண்ணனூர் சிறைச்சாலையின் கொடுமையை பற்றி அவர் எழுதுகிறார். “”எந்த புகார் சொன்னாலும் அடி விழும். அடியும் எளிய அடி அன்று. உடலின் மேல் கம்பளி துணியை போர்த்தி விட்டு பலரா சுற்றி நின்று தடியால் அடிக்கவும் காலால் மிதிக்கவும் செய்வார்கள். கம்பளத்தை போர்த்தி உடல் பழுத்துப் போகும்படி அடிக்கும் பழக்கம் இச்சிறையில் தவிர வேறு எந்த சிறையிலும் இல்லை.””

நன்றி அறிதல் பழக்கம் சிதம்பரனாருக்கு சிறுவயதில் இருந்து தொட்டில் பழக்கம் போல் அமைந்திருந்தது என்பதை அவரது வாழ்வில் பல உதாரணங்களை சொல்ல முடியும். வ உ சி அவர்கள் சிறை மீண்டபின் தடை செய்யப்பட்டிருந்த தன் வழக்கறிஞர் சான்றிதழை திரும்பப் பெற உதவிய வழக்கு மன்ற நடுவர் வாலேசு என்பவரின் அடையாளமாக தன் மகனுக்கு வாலேசுவரன் என்று பெயரிட்டார். அடிக்கடி பொருள் உதவி செய்து வந்த ஆறுமுகம் பிள்ளையின் நினைவாக மற்றொரு மகனுக்கு ஆறுமுகம் என்று பெயரிட்டார். புரவலர் வேதியன் பிள்ளை நினைவாக தன் மகளுக்கு வேதவல்லி என்று பெயர் சூட்டினார்.

வ உ சி அவர்களின் சொற்பொழிவை கேட்டால் நாட்டில் உள்ள பிணங்களும் எழுந்து நடமாடும் என்று அவருக்கு சிறை தண்டனை வழங்கிய ஆங்கில நீதிபதியின் கூற்று அவரது சொற்பொழிவின் ஆற்றலுக்கு சிறந்த உதாரணமாக அமைகிறது.

நூலில் வ உ சி அவர்களின் சில சொற்பொழிவுகள் இடம் பெற்றுள்ளன அவையே அவரது ஆழ்ந்த தமிழ் பற்றையும் தேசப்பற்றையும் தெளிவாகவும் சிறப்பாகவும் எடுத்துரைக்கின்றன.

நமது நாடு தற்காலம் இருக்கிற ஒற்றுமையற்ற நிலையில் மத வேற்றுமைகளையோ சாதி வேற்றுமைகளையோ காண்பவர்களும் பேசுபவர்களும் நாட்டிற்கு தீங்கிழைப்பவர்களே.

மொழிப்பற்று வழி நாட்டுப்பற்று உண்டாகும் அதனால் தலைவர்கள் தமிழில் பேச வேண்டும்.

காலத்துக்கேற்ற கருத்து வளர்ச்சியினை ஏற்படுத்தும் சொற்களை உருவாக்க வேண்டியது நம் தேவை. தமிழ் பதங்கள் கிடையா என்று வேற்றுச் சொற்களை கலவாமல் தமிழிலேயே ஆக்கிக் கொள்ள வேண்டும். நாம் இவ்வாறு செய்தால்தான் நம் தமிழ் மொழிக்கும் நம் தமிழ் மக்களுக்கும் ஒரு பெரிய நன்மை செய்தவர்கள் ஆவோம்.

சுதேசியமென்பது வெறும் பொருள்களோடு நிற்பது அன்று. வாணிபத்தில் சுதேசியம் கல்வியில் சுதேசியம் ஆட்சியில் சுதேசியம் இப்படி நமது வாழ்க்கையின் எல்லா துறைகளிலும் சுதேசி மனம் வாழ வேண்டும் என்பதே எனது உள்ளக் கிடக்கை.

தன்னலம் துறந்து பொதுநலம் ஒன்றையே தனது வாழ்வாகக் கொண்டு உடல் பொருள் ஆவி அனைத்தையும் தேசத்திற்காக ஒப்படைத்து மிகப்பெரிய வழிகாட்டியாகத் திகழ்ந்த வ உ சிதம்பரம் அவர்களின் வாழ்க்கை வழிகளையும் நெறிமுறைகளையும் அறத்தின்பால் நின்று அவர் ஆற்றிய கடமையையும் அதன் பயனை அறியாமலேயே மரணம் அடைந்த நிலையையும் இந்த நூல் சிறப்பாக எடுத்துரைக்கிறது.

நூலின் தகவல்கள் : 

நூல் : வ உ சிதம்பரனார் தன் வரலாறு (V. O. Chidhambaram thanvaralaru)
ஆசிரியர் : ந மு தமிழ்மணி (N.M.Thamizhmani)
முதல் பதிப்பு : செப்டம்பர் 2022
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
பக்கம் : 160
விலை :  ரூபாய் 150
நூலைப் பெற : https://thamizhbooks.com/product/v-o-chidhambaram-thanvaralaru/

நூல் அறிமுகம் எழுதியவர் :

இளையவன் சிவா

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *