ஷார்ல் போதலேரின்
சபிக்கப்பட்ட இதயம்தான்
என்னுள் துடித்துக் கொண்டிருக்கிறது.
அவன்
மகிழ்ச்சியால்
ஆசீர்வதிக்கப்பட்டவனல்லன்.
“ஓர் அற்புத விடியலுக்கு
தேவதை ஒருத்தி ஒளியூட்ட…”
என்று தன் காதலியைப் பற்றி எழுதிய
ஷார்ல் போதலேர்
“ஒளி, தங்கம், இலவம் பஞ்சால் மட்டுமே ஆன ஒரு ஜீவன்,
பிரம்மாண்டமான சாத்தானை வீழ்த்தக் கண்டேன்”
என்றும் எழுதினான்…..
வனவிலங்குகளால் ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கை
அதிகாரப் பிசாசுகளால் சீரழிந்து
ஆண்டுக்கணக்கான பின்பு வந்திருக்கும்
வாச்சாத்தித் தீர்ப்பினை
நீதி தேவதை
வசந்தத்தின் மயிலிறகால்
வருடியிருக்கிறாள்.
ஒளி, தங்கம், இலவம் பஞ்சால் மட்டுமே ஆன
பதினெட்டு ஜீவன்கள்
பிரம்மாண்டமான சாத்தானை வீழ்த்தக் கண்டேனென்று
போதலேருடன் சேர்ந்து நடனமிடுகிறேன் நான்.
நின்றுபோன நுரையீரல்கள்
மீண்டும் வேலை செய்ய ஆரம்பித்துவிட்டன.
ஒவ்வொரு ஆதிவாசியின் இதயத்திற்குள்ளும்
வனவிலங்குகளின் குரல்கள்
எதிரொலிக்கத் தொடங்கிவிட்டன.
எல்லாம் முடிந்ததென்று
கல்லறைகளுக்குள்
எலும்புக் கூடுகளாகவே மாறிப்போன அவர்கள்
மீண்டும்
கருப்பையிலிருந்து
வெளியில் விழுந்திருக்கிறார்கள்.
சூரியனே அவிந்துபோனதென
நம்பிக்கை இழந்தவர்களுக்கு
சிவப்பு நட்சத்திரம்
ஓர் வழிகாட்டி விளக்காகவே
ஒளிரத் தொடங்கியிருக்கிறது.
ஆதிவாசிப் பெண்களின் குருதியில்
மருதாணி தடவிய
அதிகாரத்தின் பாலுறுப்புகள்
தீர்ப்பின் தீட்சண்யத்தில்
தீய்ந்து போயின.
வருடக் கணக்கில் பருவந்தப்பிய
வாச்சாத்தியில்
மீண்டும் வசந்தம் ….
உலக அதிசயமாய்
முதன் முதலாய்
சிரித்தபடி பிறக்கிறது
ஒரு சின்னக் குழந்தை!
How to post my writings in your site?