புத்தகம்: வாடிவாசல் (குறுநாவல்)
ஆசிரியர் : சி.சு.செல்லப்பா
வெளியீடு: காலச்சுவடு
விலை: 100
பக்கங்கள்: 100
ஜல்லிக்கட்டு பற்றி சி. சு. செல்லப்பா அவர்களால் 1959 ல் எழுதப்பட்ட இந்த குறுநாவல் நமதுபாரம்பரியத்தைப் பற்றி வந்த ஒரு முக்கியமான படைப்பு. இதன் முதல் பதிப்பு விலை ரூ 1.
100 பக்கங்களைக் கொண்ட இந்த குறுநாவல், வாசிக்கத் தொடங்கியதும் இடையில் நிறுத்த முடியாத அளவு நாமும் அந்த கூட்டத்தில் ஒருவனாக, பிச்சி, மருதன் மற்றும் பாட்டையா வுடன் ஜல்லிக்கட்டுக்களத்தில் இருப்பது போன்ற உணர்வைக் கொடுக்கிறது . 50 பக்கங்களுக்கு மேலாக வரும் பாட்டையாவுடனான பிச்சியின் மற்றும் மருதனின் உரையாடல்கள் நம்மை ஒவ்வோர் பாத்திரத்தின் பிரதியாகவே உணர வைக்கிறது ஆசிரியரின் எழுத்து.
செல்லப்பா அவர்கள் பயன்படுத்திய அந்த வட்டார வழக்கும் கதைக்கும் களத்திற்கும் வலு சேர்க்கிறது என்றால் அது மிகையாகாது. சி.சு.செல்லப்பா அவர்கள் ஜல்லிக்கட்டு புகைப்படம் எடுத்து பின்னர் அந்த கள நிலவரத்தையும், ஜமீன் மற்றும் நிலப்பிரபுத்துவம், சாதிகள், ஆண்மை மற்றும் வீரத்தின் மறு உருவாக இருக்கும் மனிதனும் மிருகமும் எனப் பிரிக்கமுடியாத வகையில் இதன் பாரம்பரியத்தில் பிணைந்திருந்தாலும் கூட, நம் கிராமப்புற வாழ்க்கையில் ஜல்லிக்கட்டு கலாச்சார முக்கியத்துவத்தை மிக அழகாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்.
மிருக-மனித போராட்டம் இருவருக்கும் மிருகம் போன்ற ஒரு உணர்வை காட்டிக்கொள்ளும் போது, “காளை காரி” யை அடக்கிய பிச்சி அந்த நிகழ்வினை வாசிக்கும் போது அங்கே ஜமீன்தார் எப்படி தனது இருக்கையின் நுனியில் பரப்பரப்போடு அமர்ந்து இருந்தாரோ அதைவிட பன்மடங்கு ஆவலுடன் வாசிக்கும் நாமும் இருக்கையின் முன்பகுதியில் என்றாலும் அதுவும் இந்த அற்புத எழுத்துகள் நம்முன் காணொளி போலப் படமாக காட்டிச் செல்கிறது. ஜமீன் தனது காளை தோற்றுவிட்டதால் அதனை கொடூரமாகக் கொலை செய்வதை வாசிக்கும் போது கண்களில் ஒரு ஓரம் கசிந்துகொண்டுதான் வாசிக்க முடிந்தது.
தன் தகப்பனைக் கொன்ற “காரியை” வீழ்த்த வேண்டும் என்றே வீரத்துடன் வரும் “பிச்சி” அதில் வெற்றி கொள்ள வகுக்கும் யூகங்கள் ஏராளமானதுமட்டுமல்லாமல் மதி நுட்பம் மிகுந்தது. இந்த உணர்ச்சி மிகுந்த இந்த காவியத்திற்கு மேலும் மெருகு சேர்ப்பது போல் “பெருமாள் முருகன்” அவர்களின் முன்னுரையே சொல்லிவிடுகிறது மொத்த கதையின் சாரத்தையும். அரை நூற்றாண்டிற்கு முன் எழுதப்பட்டிருந்தாலும் இந்த கதை இன்றும் வாசிப்பவர்களை இந்த இரண்டரை மணி நேரம் “வாடி வாசலில்” கைகளைக் கால்களில் கட்டிக்கொண்டு பரவசமாக வேடிக்கை பார்க்க வைக்கும் என்பது உறுதியானதே!!!
அன்புடன்,
தேவேந்திரன் ராமையன்
நானும் இதை இந்த பொங்கல் விடுமுறையில் படித்தேன். உங்கள் மதிப்புரை பொருத்தமாக இருக்கிறது.