வாலாட்டி- தேவன் ஜெயக்குமார் | Vaalatti Movie Review

இயக்கம் : தேவன் ஜெயக்குமார்
தயாரிப்பு : விஜய்பாபு
ஒளிப்பதிவு : விஷ்ணு பணிக்கர்
படத்தொகுப்பு : அயூப்கான்
இசை : வருண் சுனில்
113 நிமிடப் படம்
தமிழ் மொழி

பொதுவாகவே பெரும்பாலானோர்க்கு நாய்கள் என்றாலே ஒவ்வாமையாகத்தான் இருக்கும். எனக்கு எப்போதும் சுத்தமாக பிடிக்கவே பிடிக்காது. அது தெரு நாயோ வீட்டில் வளர்க்கப்படும் சாதி நாய்களோ பஞ்சை பராரிகளாக திரியும் தெருநாய்களோ ஏனோ பிடிப்பதில்லை. நாய்களால் விரட்டப்பட்ட அனுபவம் இருக்கிறது. இதுவரை கடிபடவில்லை. நாயிருக்கும் வீடுகளுக்கு நண்பர்களாயிருந்தாலும் உறவுகளாயிருந்தாலும் போவதில்லை. எங்கள் தெருவில் வளர்ப்பு நாய்கள் இல்லை. ஆனால் ஏராளமான தெருநாய்கள் உண்டு வீடுகளில் மிஞ்சக்கூடிய உணவுகளே அவற்றிற்கான ஆகாரம். அதற்கே அவை வரும் போதும் போகும் போதும் வாலாட்டி திரிகின்றன.

எதற்காக நாய்களைப் பற்றி இத்தனை விவரணை என்கிறீர்களா

நேற்று மதியம் OTT யில் வாலாட்டி என்கின்ற நாய்ப் படம் பார்த்தேன். உண்மையில் அசந்து போனேன். நாய்களை வைத்து இரண்டு மணி நேரம் கொஞ்சம் கூட போரடிக்காமல் ஒருவர் கதை சொல்ல முடியுமா இயக்குநரது திறமையை வியக்காமல் இருக்க முடியவில்லை. அருகருகே இருக்கும் மிகப்பெரிய செல்வந்தர் குடும்பத்தில் வளர்க்கப்படும் இரண்டு நாய்களின் காதல் வீரம் சோகம் சுபமே கதையாக எடுத்திருக்கிறார்.

வீட்டில் வளர்க்கப்படும் பணக்கார நாய்களின் அத்தனை சொகுசையும் காட்சிப்படுத்தியிருக்கிறார். பணக்காரர்கள் நாயை நாயாக பார்ப்பதில்லை வீட்டிலொரு உறவாகவே வளர்க்கிறார்கள். நாய்கள் அனுபவிக்கும் செளகரியங்கள் மனிதர்கள் நினைத்து பார்க்க முடியாது. அதே நேரத்தில் தெருநாய்களின் பரிதாபத்தையும் படமாக்கி மனிதர்கள் போல் நாய்களின் உலகத்தின் ஏற்றத்தாழ்வை காட்சிப்படுத்தி சமன் செய்திருக்கிறார். சைவ நாய்க்கும் அசைவ நாய்க்கும் ஏற்படும் காதல்.

அதன் விளைவாக சைவ பெண் நாய் கருத்தரித்தல். சைவ நாய் குடும்பத்தாரின் சாதிவெறி காரணமாக வீட்டை விட்டு வெளியேறுதல் . குடிசையில் வாழும் ஏழைப்பெண்ணொருத்தியிடம் அடைக்கலம் புகுதல். அங்கே தெருநாய்களின் சிநேகிதம். நாய் பிடிக்கும் கும்பலில் மாட்டி பரிசோதனை கூடத்தில் அடைபடுதல்.

ஆண் நாய் தன் தெருநாய் நண்பர்களுடன் கர்ப்பிணி மனைவி நாயை மீட்டு வருதல். தெருவோரத்தில் குட்டிகளை ஈன்றெடுத்தல். நாயை பிரிந்த இரண்டு வீட்டில் உள்ள நாயகனும் நாயகியும் தேடி கண்டுபிடித்து வீட்டிற்கு அழைத்து செல்லுதல். இரு குடும்பமும் அன்போடு அவற்றை ஏற்றுக் கொள்ளுதல் என்று முடிகிறது படம்.

ஒரு சில காட்சிகள் எதார்த்ததிற்கு புறம்பாக இருந்தாலும் ரசனையான கதை சொல்லலில் அவை மறந்து போகின்றன.நான் எளிமையாக சொல்லிவிட்டேன் படத்தை பிரமாதமாய் பிரம்மாண்டப்படுத்தி இருக்கிறார்கள். ரசிக்க வைக்கும் பின்னனி குரல் சிரிக்க வைக்கும் வசனங்கள் மிக அழகியலான ஒளிப்பதிவு.

தரமான பின்னனி இசை. இதமான பாடல்கள். போரடிக்காத படத்தொகுப்பு. என அற்புதம் போங்கள். மனிதர்களை நடிக்க வைக்கவே படாதபாடுபடும் திரை உலகில் நாய்களை வைத்து அசத்தியிருக்கிறார். வாய்ப்பிருப்போர் அவசியம் பாருங்கள்.

 

எழுதியவர் 

செ. தமிழ் ராஜ்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *