சந்தோஷ் குமார் (Santhosh Kumar) எழுதிய வார்த்தைகள் (Vaarthaikal) - நூல் அறிமுகம் - நாவல் (Novel) - https://bookday.in/

வார்த்தைகள் – நூல் அறிமுகம்

வார்த்தைகள் – நூல் அறிமுகம்

சந்தோஷ் குமாரின் ’வார்த்தைகள்’ – குரல் வளமிக்க பெண்மணி தனது பேசும் திறனைத் திடீரென இழந்த அவலத்தைச் சித்தரிக்கும் நாவல்

– பெ.விஜயகுமார்

கேரள சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் சந்தோஷ் குமார் எழுதிய ‘வாக்குகள்’ எனும் நாவலை ‘வார்த்தைகள்’ என்று தலைப்பிட்டு சிதம்பரம் ரவிச்சந்திரன் அழகு தமிழில் மொழிபெயர்த்துள்ளார். ஏதேனும் ஒரு மனிதத் திறனை இழந்தவர்களை மாற்றுத்திறனாளிகள் என்றழைக்கும் காலமிது. ‘ஊனம்’ என்ற சொல் வழக்கொழிந்து போயுள்ளது. பிறவியிலேயே ஏதேனும் ஒரு திறனை இழந்திருப்பது ஒருவகைத் துயர். அதனினும் துயரானது, இருந்த திறனை இடைவெளியில் இழந்து தவிப்பது. மிகச் சிறந்த குரல் வளத்தைப் பெற்றிருந்த ஒருவர் திடீரென்று தன் பேசும் திறனை இழப்பது எத்துணை துயரமாகும்! அந்தக் குரல் வளமிக்கது மட்டுமல்லாது, அதுவே அவரது வாழ்க்கைக்கான வழியுமாகும் என்றால் அதன் அதிர்ச்சியைத் தாங்குவது எப்படி?

சந்தோஷ் குமார் மலையாளத்தில் நன்கு அறியப்பட்ட எழுத்தாளர். அந்தகாரனழி எனும் நாவலுக்கும், சாவு களி எனும் சிறுகதைத் தொகுப்புக்கும் கேரள சாகித்ய அகாதமி விருதினையும், ’ஆ பிரதேசத்து உறும்புகள்’ என்ற படைப்பிற்காக கேரள பால சாகித்ய அகாதமி விருதினையும் பெற்றவர். அந்தகாரனழி நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பு ’க்ராஸ் வெர்டு’ விருது வழங்குவதற்காகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளப்பட்ட நூல்களின் பட்டியலில் இடம் பெற்றது. தேசிய காப்பீட்டு நிறுவனத்தில் முப்பதாண்டு காலம் பணியாற்றிய சந்தோஷ் குமார் இப்போது திருச்சூரில் வாழ்ந்து வருகிறார்.

திரைத்துறையில் ’டப்பிங்’ கலைஞராகப் பரிணமித்த ரோசலின் திடீரென்று ஒருநாள் பேசும் திறனை இழக்கிறார். இந்த இழப்பிலிருந்து மீண்டெழும் ரோசலினின் கதையே ’வார்த்தைகள்’ நாவல். நூறு பக்கங்களுக்குள் அடங்கும் இந்நாவலை நேர்கோட்டில் அல்லாமல் முன்னும் பின்னுமாகச் சொல்லிச் செல்கிறார் சந்தோஷ் குமார். நாவலின் நாயகி ரோசலின் மலையாளத் திரைப்பட உலகில் வெற்றிகரமாக வலம் வரும் ’டப்பிங்’ கலைஞர். இளம் வயதில் திருமணம் தோற்றுப் போக, தனித்து நின்று சாதிக்கும் வீராங்கனை.

மழை பொழியும் ஒரு மாலைப் பொழுதில் சென்னை நகரில் தன்னுடைய பணியை முடித்துவிட்டு ரோசலின் ஒரு ஹோட்டல் அறையில் ஓய்வெடுக்கிறார். திரையுலகில் ரோசலினிக்கு ஆதரவாக இருக்கும் நண்பர் அசோக் அவரைச் சந்திக்க வருகிறார். அவர்கள் இருவரும் மனம் விட்டுப் பேசி மகிழ்கிறார்கள். மாடி அறையிலிருந்து கீழிருக்கும் ஹோட்டலில் டீ குடிக்கச் செல்கிறார்கள்.

அந்த ஹோட்டலில் அப்போது அவர்களைத் தவிர ஒரே ஒரு சர்தார்ஜி மட்டும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பின்னர் சந்திப்பதால் அவர்கள் இருவரும் பல விஷயங்களைப் பேசுகிறார்கள். அங்கே அறையில் வைக்கப்பட்டிருந்த படம் இருவரின் கவனத்தையும் கவர்கிறது. அந்தப் படத்தில் ஒரு சிறுவன், சிறுமியை முத்தமிட நெருங்கிக் கொண்டிருக்கிறான். நிறைவு பெறாத முத்தத்தின் காட்சியது. ’நிறைவு பெறாத முத்தம்; நிறைவு பெற்ற முத்தத்தைக் காட்டிலும் இனிமையானது’ என்று ‘Ode to a Grecian Urn’ எனும் கவிதையில் வரும் ஆங்கிலக் கவிஞன் ஜான் கீட்ஸின் கவிதை வரியை அப்படம் நினைவுபடுத்தியிருக்கலாம். ”அசோக்! இதே போன்ற படத்தை என் மகள் நிராவின் பிறந்தநாள் பரிசாக நீங்கள் அனுப்பினீர்கள். அது எனக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவே நான் உணர்ந்தேன்” என்கிறாள்.

திரையுலகில் தனக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளை அசோக் பகிர்ந்து கொள்கிறார். அவரிடம் கழிவிரக்கம் எதுவுமில்லை. வாழ்க்கையை அதன் போக்கில் ஏற்றுக்கொள்ளும் பக்குவமும், மன தைரியமும் உள்ளவர். ஒரு காலத்தில் மலையாளத் திரையுலகில் நட்சத்திரமாக மின்னிய அவரைப் பார்க்க ஓர் இளைஞர் கூட்டம் எப்போதும் காத்திருக்கும். திரையுலகப் பிரபலம் என்பது மிகக் குறுகிய காலத்தில் முடிந்து போவதுதானே! சின்னத்திரையை நோக்கி நகரத் திட்டமிடுவதாக அவர் கூறுகிறார்.

புனேயில் வசித்து வரும் ரோசலினின் முன்னாள் கணவர் தம்பான், பிரான்சில் ஆடை வடிவமைப்பாளராக வேலை பார்க்கும் ரோசலினின் மகள் நிரா குறித்தெல்லாம் அவர்கள் பேசிக் கொள்கிறார்கள். தான் குரல் கொடுத்துக் கொண்டிருக்கும் படம் பற்றி ரோசலின் சொல்கிறார். ஃப்ரெடி என்ற டைரக்டர் எடுக்கும் படமது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவருக்குக் கிடைத்திருக்கும் வாய்ப்பு என்பதால், அது அவருக்கு மிக முக்கியமான படம் என்று சொல்கிறார். படத்தில் கதாநாயகியாக நடிப்பவர் இளம் நடிகை என்றும், முதல் படம் தோல்வியுற்றதால் இப்படத்தின் வெற்றிக்காக மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் நடிகை என்றும் நிலைமைகளை விளக்குகிறார். படத்தை முடித்துக் கொடுக்கும்வரை இதே ஹோட்டலில்தான் தங்குவேன் என்பதால் நாம் அடிக்கடி சந்திக்கலாம் என்கிறார்.

இருவருக்கும் பிடித்த ஒரு சோகப் பாடலை அசோக் பாடுகிறார். அந்தப் பாடலால் ஈர்க்கப்பட்ட ரோசலினும் மெல்லிய குரலில் அசோக்குடன் இணைந்து பாடுகிறார். திடீரென்று ரோசலின் பாடுவதை நிறுத்தி விடுகிறார். தன்னால் பாட முடியாததை அவர் உணர்கிறார். இருப்பினும் அதை அவர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இருவரும் அறைக்குத் திரும்பிச் செல்கிறார்கள். அசோக் விடை பெறுகிறார். வார்த்தைகளால் அவரை வாழ்த்தி வழியனுப்பி வைக்க ரோசலினால் இயலவில்லை. சோகப் பாடலின் தாக்கத்திலிருந்து விடுபட முடியாமல் ரோசலின் தவிப்பதாகவும், அதனால் வார்த்தைகள் வெளிவர மறுப்பதாகவும் அசோக் நினைக்கிறார். எனவே அவரும் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சென்று விடுகிறார்.

தனக்கு ஏதோ குறை ஏற்பட்டுள்ளது என்பதை அவர் சென்றதும் ரோசலின் அறிகிறார். அறையிலிருந்த டிவியைப் போட்டு செய்தி கேட்கிறார். செய்தி வாசிப்பாளரின் இனிய குரலுடன் தானும் பேச முயல்கிறார். பேச முடியவில்லை. பேசும் ஆற்றலை தான் இழந்து விட்டது அவருக்குத் தெளிவாகிறது.

செல்போன் மணி அடிக்கிறது. அசோக் பேசுகிறார். ”என்ன? அதிர்ச்சியிலிருந்து மீண்டு விட்டீர்களா?’’ எனக் கேட்கிறார். ரோசலினால் பதில் கூற முடியவில்லை. “பரவாயில்லை நீங்கள் இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை; நாளை காலையில் வருகிறேன்” என்று சொல்லி முடிக்கிறார். ரோசலின் செல்போனை அணைத்து வைக்கிறார். சோகத்தில் ஆழ்கிறார். என்ன ஆனது என்று தெரியாமல் தவிக்கிறார். இரவு முழுவதும் தூக்கமின்றிக் கழிகிறது.

காலையில் அசோக் வந்ததும் நிலைமையை அவருக்கு எழுதிக் காட்டுகிறார். அசோக் தன்னுடைய காரில் ரோசலினை டாக்டரிடம் கூட்டிச் செல்கிறார். பரிசோதனைக்குப் பின்னர் “ரோசலினுக்குக் காய்ச்சல் இருக்கிறது. ஒருவேளை அதன் காரணமாகப் பேச்சு நின்று போயிருக்கலாம். காய்ச்சல் நின்றதும் பேச்சு வந்து விடும். ஒன்றும் பயப்படுவதற்கில்லை” என்று டாக்டர் சொல்கிறார். இருவரும் அறைக்குத் திரும்புகிறார்கள். ரோசலினின் செல்போனில் யாரும் அவரை அழைக்க வேண்டாம் என்ற குறுஞ்செய்தியை அவரின் முக்கியத் தொடர்பாளர்களுக்கெல்லாம் அசோக் அனுப்புகிறார். டாக்டர் கொடுத்த மருந்துகளை எடுத்துக் கொள்ளச் சொல்லி விட்டுச் செல்கிறார்.

அறையிலிருந்த தொலைபேசியில் அழைப்பு வருகிறது. போனை எடுத்ததும் பெரிய ஆச்சரியம்! மகள் நிரா பேசுகிறாள். ‘’அம்மா! நீ எதுவும் பேச முயற்சிக்காதே. அசோக் அங்கிள் எல்லா விவரங்களையும் சொல்லி விட்டார். காய்ச்சல் விட்டதும் மீண்டும் டாக்டரிடம் செல். ஒன்றும் பயப்படாதே அம்மா! எல்லாம் சரியாப் போயிடும்” என்று சொல்லி முடிக்கிறாள். மகள் பேசியது சற்று ஆறுதல் அளிக்கிறது. மூன்று நாட்களில் காய்ச்சல் நின்று விடுகிறது. ஆனாலும் பேச்சு வரவில்லை. இருவரும் டாக்டரிடம் செல்கிறார்கள். டாக்டர் “நீங்கள் ENT டாக்டரைப் பார்ப்பதுதான் சரி”. என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.

இனியும் சென்னையில் இருப்பது நல்லதல்ல என்று ரோசலின் முடிவெடுக்கிறார். அம்மாவின் நினைவு வருகிறது, கொச்சின் சென்று வைத்தியத்தைத் தொடரலாம் என நினைக்கிறார். ரோசலின் ஸ்டுடியோவுக்கு வராததால் டைரக்டர் ஃப்ரெடி அவரது அறைக்கு வருகிறார். படத்தின் கதாநாயகி நடிகையும் அவருடன் வருகிறார். இருவரும் அக்கறையுடன் ரோசலினின் உடல்நலத்தை விசாரிக்கிறார்கள். படம் பாதி முடிந்த நிலையில் டப்பிங் கலைஞரை மாற்ற முடியாது என்ற பிரச்சனை அவர்களுக்கு… புதிதாக ஒரு கலைஞரை நியமித்தால் முதலிருந்து தொடங்க வேண்டும். எனவே ரோசலின் விரைவில் குணமடைந்து வர வாழ்த்தி விட்டுச் செல்கிறார்கள். ஏர்போர்ட்டுக்கு வந்து ரோசலினை வழியனுப்பி வைக்கிறார் அசோக்.

கொச்சினில் தாயின் பராமரிப்பில் வைத்தியத்தை ரோசலின் தொடர்கிறார். மகள் நிராவும் பிரான்சில் இருந்து பேசுகிறார். தனக்கு டெல்லியில் ஒரு ஃபேஷன் ஷோ இருப்பதால் இந்தியா வருகிறேன் என்கிறாள். ஜீவா என்ற பேச்சு சிகிச்சை நிபுணரிடம் (Speech Therapist) ரோசலின் செல்கிறார். திரைப்படத்தில் நடிக்க சென்னைக்கு வந்து தோற்றுப் போய் வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொண்டவர் ஜீவா. ரோசலினின் முன்னாள் கணவர் தம்பானையும் நன்கு அறிந்தவர். ஏற்கனவே அறிமுகம் ஆனவர்கள் என்பதால், ரோசலினும், ஜீவாவும் மிகுந்த நட்புடன் பழகுகின்றனர்.

குழந்தைப் பருவத்திலும் ஒருமுறை தன்னுடைய பேசும் திறனை இழந்து போன செய்தியை தன்னுடைய அம்மா சொல்லக் கேட்டு ரோசலின் அதிர்ச்சி அடைகிறார். ரோசலின்-தெரஸ்ஸா என்ற இரட்டைக் குழந்தைகள் தனக்குப் பிறந்ததையும், அவர்கள் இருவரும் ஒரே மாதிரியாக இருந்ததால் வெவ்வேறு வண்ணத்தில் ரிப்பன் கட்டி இருவரையும் அடையாளப்படுத்திக் கொண்டதையும் அவரது அம்மா நினைவுபடுத்திக் கொள்கிறார். ஒருமுறை குழந்தைகள் இருவரும் காய்ச்சலில் படுக்கின்றனர். தெரஸ்ஸா இறந்து போகிறாள். நோயில் இருந்து மீண்ட போதிலும், ரோசலின் பேசும் திறனை இழக்கிறாள். அவள் குணமடைய வேண்டும் என்று அன்னை வேளாங்கன்னி மாதாவை குடும்பத்தினர் வேண்டிக் கொள்கின்றனர். குடும்பத்துடன் எல்லோரும் வேளாங்கன்னி ஆலயம் செல்கின்றனர். அவள் தாத்தா வேளாங்கன்னி கடற்கரையில் ரோசலினை நிற்க வைத்து வேடிக்கை காட்டுகிறார். திடீரென்று ரோசலின் பேசும் சக்தி பெறுகிறாள். அது கடலம்மையின் மகிமை என்று ரோசலினின் தாத்தா உறுதியாக நம்புகிறார்.

ரோசலினும், அம்மாவும் தினமும் கொச்சின் கடற்கரைக்குச் செல்கிறார்கள். கடலம்மை ரோசலினைப் பேசவைத்து விடுவாள் என்று இப்போது ரோசலின் அம்மாவும் நம்புகிறார். ஆனால் ரோசலினுக்கு அதில் சிறிதளவும் நம்பிக்கை இல்லை. வேளாங்கன்னி கடற்கரைக்கும் கொச்சின் கடற்கரைக்கும் இடையில் இருந்த வேறுபாடு ரோசலினைப் பிரமிக்கச் செய்தது.

தன்னுடைய குழந்தைப் பருவத்திலேயே ரோசலின் தம்பானைச் சந்திக்கிறாள். தம்பான் இசை ஆசிரியராக ரோசலினுக்கு அறிமுகமாகிறான். அவனுடைய முரட்டுச் சுபாவம் ரோசலினுக்குப் பிடிக்கவில்லை. அவன் எந்நேரமும் சிகரெட் புகைத்துக் கொண்டு இருப்பான். சர்ச்சில் இருக்கும் பியானோவை குழந்தைகளுக்கு வாசித்துக் காட்டுவான். அவர்கள் வாழ்ந்த எடமழ ஊரைவிட்டு திரைப்படத்தில் நடிப்பதற்காக அவன் சென்னைக்குச் சென்று விடுகிறான். தான் நடிக்கும் படத்தில் கதாநாயகிக்கு டப்பிங் குரல் கொடுப்பதற்காக ரோசலினை சென்னைக்கு வரச் சொல்லி ஒரு நாள் அவன் கடிதம் எழுதுகிறான். குடும்பத்துடன் ரோசலின் சென்னைக்குச் செல்கிறார். இதுதான் ரோசிலின் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஆன கதை.

திரையுலகில் தம்பானும், ரோசலினும் வெவ்வேறு பணிகளில் ஈடுபடுகின்றனர். இருவரும் திருமணம் செய்து கொள்ள, ஆசை மகள் நிரா பிறக்கிறாள். தம்பானுக்கு நடிக்கும் வாய்ப்பு குறையத் தொடங்குகிறது. அவன் குடிப்பழக்கத்துக்கு ஆளாகிறான். அதே நேரத்தில் அசோக் நடிகராக வெற்றியுடன் வலம் வருகிறார். தம்பான் அசூயை கொள்கிறான். அசோக்கின் நல்ல உள்ளத்தை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. அசோக்-ரோசலின் நட்பின் மீது அவன் சந்தேகம் கொள்கிறான். இறுதியில் ரோசலினுக்கும், அவனுக்குகிடையே மணமுறிவு ஏற்படுகிறது. புனேவில் ஆவணப்படங்கள் எடுக்கும் பணியில் அவன் இருக்கிறான் என்ற செய்தி வருகிறது. பின்னர் அந்தத் தொடர்பு முற்றிலும் அற்றுப்போகிறது.

ஜீவாவின் பேச்சு சிகிச்சையால் ரோசலினுக்கு பெரிய மாற்றங்கள் ஏதும் நிகழவில்லை. ஆனால் அவர்கள் இருவரிடையே நட்பு தொடர்கிறது. புனேயிலிருந்து தம்பான் தன்னைக் கூப்பிட்டு ரோசலினைப் பற்றி ஒருநாள் விசாரித்ததாகவும், அவன் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் ஜீவா ரோசலினிடம் கூறுகிறாள். மறுநாள் அவன் ரோசலினையும் அழைத்துப் பேசுகிறான். ’துரோகி’ என்று ரோசலின் தாய் அவனைத் திட்டியதை ரோசலினால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அன்று செய்த தவறுக்கு இன்று ஏன் திட்டவேண்டும் என்றே அவள் நினைக்கிறாள். ஜீவா ஒரு சில நாட்கள் கழித்து, தம்பான் இறந்த செய்தியைத் தெரிவிக்கிறாள். செய்தியைக் கேட்டு ரோசலின் வருத்தமடைகிறாள். “போனில் என்ன செய்தி” என்று அம்மா கேட்டதும் ‘’தம்பான் இறந்து விட்டாராம்” என்று சொல்கிறாள். ரோசலினின் அம்மா ஆச்சரியம் மேலிட “ரோசலின்! உனக்கு பேச்சு வந்து விட்டது”! என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார். தம்பான் இறந்த அதிர்ச்சி செய்தி அவளைப் பேச வைத்து விடுகிறது. அவளது நீண்ட மௌனம் உடைகிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு அவள் வார்த்தைகளை உதிர்க்கிறாள்.

தம்பான் விட்டுச் சென்றிருக்கும் பொருட்களை எடுத்துச் செல்லவும், அவன் எழுதிய உயிலை நடைமுறைப்படுத்தவும் புனே வருமாறு கடிதம் வருகிறது. அசோக்குடன் புனேவிற்குச் செல்கிறாள் ரோசலின். தம்பான் தங்கியிருந்த அடுக்குமாடிக் கட்டிடத்தின் வாட்ச்மேன் மோதி நடந்த விவரங்கள் அனைத்தையும் கூறுகிறான். குடித்துக் குடித்து உடம்பைக் கெடுத்துக் கொண்டதை, இருதயத்தில் அவசரமாக அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டதை, ஒரு சில நாட்களில் ஈரல், சிறுநீரகம் எல்லாம் பாழடைந்ததை, அதற்குப் பிறகு அவர் இறந்து போன செய்தியை அவன் கூறுகிறான். எஞ்சியிருந்த தனது சிறு சொத்துக்களை இரண்டாகப் பிரித்து தன் மகள் நிராவுக்கு ஒரு பாதியையும், ‘காமோஷி’ என்ற அமைப்புக்கு மறு பாதியையும் தம்பான் எழுதி வைத்திருந்தான். பேச்சுத் திறனும், கேட்கும் திறனும் இல்லாவர்களைக் கவனிக்கும் ஒரு பொதுநல அமைப்பாக காமோஷி இருப்பது தெரிய வந்தது. தம்பானின் அந்த முடிவு ரோசலினின் நெஞ்சை நெகிழச் செய்கிறது. தம்பான் பத்திரப்படுத்தி வைத்திருந்த பொருட்களில் இரு குழந்தைகளின் நிறைவேறாத முத்தத்தைச் சித்தரிக்கும் அந்தப் படமும் இருந்ததை இருவரும் கவனித்தனர். அறையை விட்டு வெளியேறும் போது அசோக்கின் கைகளை ரோசலின் இறுகப் பற்றிக்கொண்டாள் என்று நாவல் முடிகிறது.

மலையாளத்தில் எழுதப்பட்ட இந்நாவலை தமிழில் மொழிபெயர்த்த சிதம்பரம் ரவிச்சந்திரன் ஒரு மாற்றுத் திறனாளி என்பது நம்மை வியக்க வைக்கிறது. இரு கண்களிலும் பார்வையை இழந்த ரவிச்சந்திரன் ஆசிரியராக இருந்து பணி ஓய்வு பெற்றவர். சிதம்பரத்தில் வாழ்கிறார். மலையாளத்திலிருந்து நிறைய சிறுகதைகள், நாவல்களை மொழிபெயர்த்துள்ளார். சேலம் தமிழ்ச் சங்கத்தின் ‘இலக்கியச் செம்மல் விருது’, திருவனந்தபுரம் ‘உள்ளூர் பரமேஸ்வரய்யர் விருது’ ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார். சுற்றுச்சூழல் குறித்த கட்டுரைகளை நிறைய பத்திரிகைகளுக்கு எழுதி வருகிறார். இன்றைய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கணினியில் வாய்மொழியாகத் தகவல்களைப் பதிவு செய்து கொள்கிறார். ‘வார்த்தைகள்’ மொழிபெயர்ப்பு நாவலைப் போன்றில்லாமல் தமிழிலே நேரடியாக எழுதப்பட்டதைப் போல இருப்பது படிப்பவரை வியக்கச் செய்கிறது. ரவிச்சந்திரனின் வெற்றியை அது பறைசாட்டுகிறது. மலையாளத்தில் எழுதப்பட்ட இந்த அரிய படைப்பை தமிழுக்குக் கொண்டு வந்து சேர்த்திருக்கும் சிதம்பரம் ரவிச்சந்திரன் பாராட்டுக்குரியவர். ’கதவு’ பதிப்பகம் நூலைப் பாங்குடன் வெளியிட்டுள்ளது.

————————————————-

நூலின் தகவல்கள் : 

நூல்; ’வார்த்தைகள்’ – நாவல்
ஆசிரியர் : சந்தோஷ் குமார்
வெளியீடு:  கதவு பதிப்பகம், அருப்புக்கோட்டை- 626161
விலை:ரூ.100/

 

நூல் அறிமுகம் எழுதியவர் : 

பெ.விஜயகுமார்
ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியர்
மதுரை. செல்; 9500740687

 

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *