நூல்: வாசிப்பு அறிந்ததும் அடைந்ததும்
ஆசிரியர்: ச சுப்பாராவ்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
முதல் பதிப்பு பிப்ரவரி 2021
பக்கங்கள்: 104
விலை: ரூ.110/-
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/vasipu-arinthathum-adainthathum-by-subbarao/

தோழர் சுப்பாராவின் இரண்டாவது நூலாக நான் வாசித்தது வாசிப்பு என்ற இந்த நூலைத்தான். இந்த நூலைப் படித்துவிட்டு, கீழே வைக்க முடியவில்லை. இரண்டு முறை வாசித்தேன். ஏனெனில் வாசிப்பு என்பதால் எல்லாருக்கும் ‘அடைந்தது’ இருக்கும். அதனால் ‘கிடைத்தது’ அனுபவித்தது இருக்கும். அது நல்லதா கெட்டதா என்று இந்நூலை வாசிப்பவர்கள் முடிவு செய்து கொள்ளட்டும். சுப்பாராவ் என்ற இலக்கிய ஆளுமைக்கு வாசிப்பு என்பது சகலத்தையும் கொடுத்தி அருக்கிறது. அதிலும் வாழ்வாதாரங்களை அதிகம் கொடுத்திருக்கிறது. அதன் மூலம் வாழ்க்கை நல்லவிதமாக அமைந்திருக்கிறது. என்னோடு ஒப்பிட்டு பார்க்கையில் அவருக்கு கிடைத்திருப்பது ஏகம். இந்த புள்ளியில் அவரைக் கண்டு பொறாமை எழுகிறது.

நூல் வாசிப்பு என்பது ஒரு நூலை படித்து அறிந்து கொள்ள, அறிவை வளர்த்துக் கொள்ள, ரசிக்க, சுவைக்க, அனுபவிக்க, இவற்றின் மூலம் இன்பமுற. நூல்களைப் படித்து அதைப்பற்றி தன்னிடமுள்ள கருத்துக்களைத் திரட்டி வைத்து நூலைப்பற்றிப் பேசி சிலாகித்து கொள்ள ஓர் இடம் இருந்தால் எவ்வளவு மகிழ்ச்சி. அதேப்போல வாசிக்க நிறைய நிறைய நூல்கள் கிடைத்தால் எப்படி இருக்கும்..!

‘ஒரு வாசகன் பிறந்தான்’ என்ற முதல் கட்டுரையில் , தனது வாசிப்புப் பழக்கம் எப்போது எங்கிருந்து எப்படி தொடங்கியது என்று கூறியிருக்கிறார். 1970களில் புகழ்பெற்றிருந்த கோகுலத்தில் ‘பிள்ளையார் பெருமை’ மற்றும் ‘கண்ணன் கனியமுது’ ஆகியவற்றின் மூலம் தனது வாசிப்பு பயணத்தைத் தொடங்கி இருக்கிறார். அவரது வாசிப்பை மேம்படுத்த வாண்டு மாமா எழுதியப் படக்கதை. மேலும் இதேப்போல தொடர் கதைகளை கல்கியிலும் விகடனிலும் படிக்கத் தொடங்கி இருக்கிறார்..

ஒரு காலக்கட்டத்தில் பெரியோர்களாக இருந்தவர்கள், குழந்தைகள் குழந்தைகளுக்கான இதழ்களைப் படித்தாலே போதும் என்றும் பெரியவர்களைப் போல. படிக்கத் தேவையில்லை என்றும் நினைத்திருக்கின்றனர். ஆனால் வாசிப்பு பழக்கத்தால் இயல்பாகவே கல்கி, விகடன் போன்ற பத்திரிக்கைகளில் உள்ள தொடர் கதைகளையும் வாசிக்கக்கூடிய தன்மை சிறுவனாக இருந்த சுப்பாராவுக்கு இருந்திருக்கிறது. இந்தக் கதைகளை இந்த இதழ்களில் படிக்கிறார் சுப்பாராவ் என்றறிந்த மாமி, ‘என்ன பெரியவா மாதிரி தொடர்கதை படிக்கிற. அதிகப் பிரசங்கித்தனம்,’ என்று அதட்ட, சிறுவயது சுப்பாராவிற்கு அழுகைப் பீறிட, இதற்கு நேர் எதிராக அவரது தாயார், ‘நீ அழாதடா கண்ணா. புரியரதோ புரியலையோ, நீ பாட்டுக்கு கைக்கு கெடச்சத படிச்சுண்டே இரு. மாமி ஒன்னும் சொல்ல மாட்டா,’ என்று ஆதரவாக கை கொடுக்கிறார். அன்று கிடைத்த அந்த அன்பும் நம்பிக்கையும் இன்று சுப்பாராவ் என்ற ஆளுமை உருவாக அடிப்படையாக அமைந்து இருக்கிறது.

மட்டில்டா என்ற நாவல் இப்படியானலொரு குழந்தையின் போராட்டத்தை மையப்படுத்தி எழுதப்பட்டது. அதில் 4 வயது குழந்தை மட்டில்டா தானாகவே படிக்கவும் எழுதவும் கற்றுக் கொண்டு, படிக்க எதுவுமே இல்லை என்பதால் வீட்டிலுள்ள நியூஸ் பேப்பர், சமையல் புத்தகம் என்று வாசிப்பாள். ஆனால் அது போதாமல் போக, அருகிலுள்ள நூலகத்திற்கு செல்வாள். அங்கே நூலகப் பெண்மணி, சிறுவர் நூல்களைக் காட்டட்டுமா என்று கேட்டபோது, பரவாயில்ல, நானே பாத்துக்கிறேன் என்று சொல்லிவிட்டு, ஆங்கில இலக்கிய உலகின் பெரும் புகழ்பெற்ற படைப்புகளை கடகடவென வாசித்து விடுகிறாள். இருக்கையில் அமர்ந்து படிக்கையில், பக்கத்தைத் திருப்புவதைத் தவிர வேறு எந்த அசைவும் அந்த குழந்தையிடம் தெரியாது. கால்கள் கூட தரையில் எட்டாது. ஆனால் அவள் வாசித்த நூல்களின் எண்ணிக்கை பெரியவர்களால் கூட சுலபமாக படித்து விட முடியாத படிக்கு இருந்தது. இதையெல்லாம் கண்டு அந்த நூலகப் பெண்மணி ஆச்சர்யித்து போவார். அதனால் மட்டில்டாவை நூலகத்தில் சேர்த்துக் கொண்டு வீட்டிற்கும் படிக்க நூல்களை இரவல் தருவார். இப்படியாக, பல பல நூல்களைப் படிக்கிறாள் மட்டில்டா. இப்போது சிறுவயது சுப்பாராவும் இப்படிதான்.



சுப்பாராவ் காமிக்ஸ் படிக்கிறான் என்ற கட்டுரையில் காமிக்ஸ் 5 வயதில் படிக்க ஆரம்பித்திருக்கிறார். இரும்புக் கை மாயாவி, ஜானி நீரோ, லாரன்ஸ், ஜூடோ டேவிட், கர்னல் ஜேக்கப், ஸ்டெல்லா போன்ற ஏகப்பட்ட காமிக்ஸ் உலகத்தின் ஹீரோக்களையெல்லாம் சிறு வயதிலேயே அறிமுகம் செய்து கொண்டிருந்திருக்கிறார். இந்த காமிக்ஸ்களின் அறிமுகம் தனக்கு கிடைக்காமல் இருந்தால் வாசகரும் எழுத்தாளருமான சுப்பாராவ் உருவாகி இருக்க மாட்டார் என்று உறுதியிட்டு கூறுகிறார்.

தனது பக்கத்து வீட்டுக்காரர் உடைய உதவியுடன், பெண்ணொருவரிடமிருந்து பொன்னியின் செல்வன் நாவலை ஒவ்வொரு பாகமாக இரவல் வாங்கி இரவல் வாங்கி படித்திருக்கிறார். தான் ஆறாவது படிக்கும் போது அந்த நூல்கள் எப்படி இருந்தன, அதை யார் இரவல் கொடுத்தது, யார் வாங்கிக் கொடுத்தது என்பது வரை எல்லாம் நினைவுடன் விவரிக்கிறார். இன்னொரு நாள் அப்பெண்ணைப் பார்த்தபோது அவர், அந்த வீட்டோடு அவரது பொன்னியின் செல்வன் நாவலும் போய்விட்டதாக கூறியுள்ளார். ஒரு வீட்டைவிட தான் சேகரித்து வைத்திருந்த நூலை அதிகம் விரும்பி இருக்கிறார் அவர். அற்புதம்.

சிறு வயது சுப்பாராவ் ‘நான் விரும்பும் நகரம்’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரைப் போட்டியில் இடம் பெற, அவரது அண்ணா கொடுத்த ஒரு யோசனை அவருக்கு உதவுகிறது. ‘எதையும் உடனே எழுத கூடாதுடா. அது பத்தி கொஞ்சம் படிக்கணும்,’ என்ற ஒரு சொன்னதை சாமர்த்தியமாக மனதில் வைத்துக் கொண்டார் சுப்பாராவ். சிம்மக்கல் நூலகத்திற்கு போய் ஒரு இடத்தில் காஞ்சி மாநகரத்தை பற்றி படித்து விட்டு அதையே தனது கட்டுரையாக எழுதி அளித்திருக்கிறார் கட்டுரைப் போட்டியில் அவருக்கு முதலிடம். பரிசாக விருதும் சான்றிதழும் கொடுக்கப்பட பள்ளியில் விழா ஏற்பாடானது. பள்ளி விழாவில் கலந்து கொள்ள அவரது வீதியிலிருந்து ஏகப்பட்ட பேரை அழைத்து வந்திருக்கிறார்கள் அவரது குடும்பத்தினர். மறுநாள், அந்த விருது சான்றிதழுடன் ஒவ்வொரு வீட்டிற்கும் அழைத்துச் சென்று, ‘பையன் நேத்து ப்ரைஸ் வாங்கினான்’ என்று காட்டி பெருமைப்பட்டு இருக்கிறார் அவரது அக்கா.

சாவி முதல் இதழில் சுஜாதாவின் நாவல் அறிமுகமாக, சுஜாதாவின் மற்ற பல நாவல்களை தொடர்கதைகள் பல பத்திரிக்கைகளில் வாசித்து வாசித்து சுஜாதாவின் தீவிர ரசிகனாக மாறி இருக்கிறார் சுப்பாராவ். அவரது எழுத்து இவருக்கு நல்ல தீனியாக இருந்திருக்கிறது. உதாரணமாக, இயல்பாக நிகழும் ஒவ்வொரு நிகழ்விற்கும் சுஜாதாவின் நாவல்களில் கதைகளில் வரும் ஏதோ ஒரு வரியை பொருத்திப் பார்த்து மகிழ்ந்து கொள்ளும் அளவிற்கு நினைவில் இருக்கும்படி அவரது கதைகளை ஊன்றி படித்திருக்கிறார் சுப்பாராவ்.

அவரது உற்ற நண்பரான கண்ணன் சுப்பராவின் 15 ஆவது பிறந்தநாளில் இருந்து நூல்களைப் பரிசளிக்க ஆரம்பித்திருக்கிறார். அப்படி, தனது நூலகத்தில் அவர் இன்றுவரை கொடுத்த நூல்களின் எண்ணிக்கை 80 இருக்கிறது என்று குறிப்பிடுகிறார். 50 ஆண்டுகளாக தொடரும் வாசிப்பு, 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் நட்பு. என்ன பேறு..!

அதையே எளிமையாக, ‘நண்பர்களைப் பெற்றிருப்பது ஆனந்தம். புத்தகம் வாங்கித்தரும் நண்பர்களை பெற்றிருப்பது பேரானந்தம்,’ என்று கூறுகிறார். உண்மைதான் என்று நினைத்துக் கொண்டு அடுத்ததுக்கு சென்று விடுவோம்..!

சிறுகதை என்ற இலக்கிய வடிவத்தின் இறுதியில் ஒரு அழுத்தமோ ஒரு வலியோ ஒரு ஆனந்தமோ என ஏதோ ஒன்றை வைத்து முடிக்கும் அம்சம் சிறுகதை உலகில் பிரசித்தம். வண்ணதாசனை அதிகம் படித்ததன் விளைவாக, கதையின் கடைசி வரியில், வார்த்தைகளில் ஒரு அழுத்தத்தை வைத்து முடிக்கும் அம்சத்தை அதிகம் விரும்புகிறார் சுப்பாராவ். அதன் மீது ஒரு தனி காதல். ஆனால் அவை கடைசி வரிகள் அல்ல, உண்மையில் வேறு ஒரு கதையின் ஆரம்ப வரிகள் என்பதை புரிந்து படிக்கும் வயது அவருக்கு வந்தபோதுதான் அவர் நல்ல வாசகன் ஆனதாக சொல்கிறார். ஓ.ஹென்றி, கை டி மாப்பசான், ஆண்டன் செக்கோவ் போன்றோரின் சிறுகதைகள் இப்படியாகவே பெரும்பாலும் அமைந்திருக்கும். சிறுகதைகள் அறிமுகமான காலத்தைவிட அது பிரசித்திப் பெற்ற காலத்தில்தான் கடைசி வரிகளில் ஒரு அழுத்தம் என்ற அம்சம் சிறுகதை வாசகர்களால் அதிகம் விரும்பப்பட்டது. அந்த வரிகள்தான் கதைகளைத் தாங்கி நின்று மீண்டும் அவர்களைப் பேச வைத்தது. அதை வண்ணதாசன் கதைகளின் மூலம் நிறுவ, வாசிப்பு மகிழனான சிறுவயது சுப்பாராவ் அகமகிழ்ந்து படித்திருக்கிறார்..



தி. ஜானகிராமன் என்ற எழுத்தாளரைப் படிக்காதவர் ஒரு நல்ல வாசகரே இல்லை என்று ஒருவர் திருத்தமாகச் சொல்ல, அப்போதிலிருந்து தி.ஜாவைப் படிக்கத் தொடங்கியிருக்கிறார். அவர் படிக்க, உடன் அவரது நண்பர் கண்ணனும் படித்துவிட, இருவருமே இணைந்து கும்பகோணத்தின் பெரும்பகுதி வீடுகளைத் தேடித்தேடி பார்த்திருக்கிறார்களாம். காரணம் மோகமுள் நாவலின் கதாப்பாத்திரங்கள் இவர்களை அவ்வளவுக்கு வசீகரித்திருந்தனர். இதுதான் அவர்கள் இருந்த வீடா.? அல்லது அதுவா.? என்று தேடல் பல இடங்களுக்கு தொடர்ந்துள்ளது. இங்கு மட்டுமா,.. பாண்டிச்சேரியிலும் சென்னையிலும்கூட தொடர்ந்திருக்கிறது.
ஷெர்லாக் ஹோல்ம்ஸ் நாவல் முதன் முதலில் வெளியானபோது, பலரும் இது உண்மையான ஒரு மனிதர் என்று எண்ணிக்கொண்டு பேக்கர் தெருவிற்கு வந்து வந்து பார்ப்பார்களாம். கதைகளில் அவ்வபோது வரும் சிறுசிறு அடையாளங்களை வைத்து இதுதான் ஹோல்ம்ஸ் இருந்த வீடு, இங்குதான் தங்கியிருந்தார் என்று வாசகர்கள் தங்களுக்குள் சொல்லிக் கொண்டனர். அந்த முகவரிக்கு ஏராளமானோர் கடிதம் அனுப்பினார்களாம். ஓர் இலக்கிய கதாப்பாத்திரத்திற்கு கிடைத்த வெற்றி, சுப்பாராவ் விசயத்தில் கதாப்பாத்திரங்களாக வெற்றி கண்டிருக்கின்றனர். அந்தளவுக்கு உள்வாங்கி அனுபவித்திருக்கின்றனர் அந்த மோகமுள் நாவலை. இதைப் பல இடங்களில் பதிவும் செய்திருக்கிறார்.

தனது வாசிப்பில் ஆதர்ச எழுத்தாளராக ஒருவரை குறிப்பிடுகிறார் என்றால் அது இர்விங் வாலஸ்தான். தனக்கு கிடைத்த ஒரு வாய்ப்பில், இர்விங் வாலிஸின் புத்தகமா, நள்ளிரவில் சுதந்திரம் எழுதிய டோமினிக் லேப்பியரா என்ற வாய்ப்புகள் இருந்தபோது, இவர் தேர்வு செய்தது இர்விங் வாலஸைத்தான். ‘செகன்ட் லேடி’ என்ற நாவல் அவரை ஆட்கொள்ள, வாலஸின் எழுத்து அவரை ஆட்டிப் படைக்கத் தொடங்கிவிட்டிருக்கிறது. அவர் வாலஸ் வெறியராக ஆகிவிட்டார். எந்தளவுக்கு என்றால், வாலஸ் இறந்தபோது இவரது நண்பர்கள் இவரைத் தேடி வந்து துக்கம் வெளிப்படுத்தியதை யாராலும் நம்ப முடியாது என்கிற அளவுக்கு வாலஸின் எழுத்து இவரை ஆட்கொண்டிருக்கிறது என்றால் பாருங்களேன்.

சோவியத் பதிப்புகள் அன்றைய நாட்களில் மிக பிரசித்தமானவையாக இருந்த நேரத்தில், சிறுவயதிலிருந்து பல சோவியத் நூல்களைப் படித்திருக்கிறார் இவர். அதில் துர்க்கனேவின் முமு கதையைப் படித்துவிட்டு முதன்முதலாக அழுததாகப் பதிவு செய்கிறார். அதன்பிறகு பெரும்பான்மையான சோவியத் நூல்களைப் படித்துவிட்டதையும் அவர் குறிப்பிடுகிறார். அவற்றில் சிறுகதை செஞ்சூரியன் செக்கோவின் வான்கா சிறுகதையே அதிகம் நம்மை ஈர்க்கக்கூடியது என்று சொல்லி சிலாகிக்கிறார். ரா. கிருஷ்ணையா மற்றும் பூ.சோமசுந்தரம் ஆகியோர் மொழிபெயர்த்த சோவியத் படைப்புகள் எல்லாமே காலத்தால் அழியாதவை. அவ்வளவு நேர்த்தியாக மொழிபெயர்க்கப்பட்டு தரமான நூல்களாக தமிழில் வந்தன. ஆனால் சோவியத் யூனியன் கலைக்கப்பட்டது தமிழுக்கு பேரிழப்புதான்.
சிறுவயது முதல் தான் படித்த நூலகங்கள், புத்தகக் கடைகள், அலுவலக நூலகங்கள் ஆகியவை பற்றி சில பத்திகளில் விளக்குகிறார். இதில் 1989 முதல் 1991வரை அவர் படித்த நூல்களில் முக்கியமானவற்றை ஓர் அட்டவனையிட்டு காட்டுகிறார். அதில் மட்டும் 42 நூல்கள், தமிழின் ஆகச்சிறந்த நாவல்களை இது உள்ளடக்கியிருப்பது ஆச்சர்யம்தான். இடையில் செக்கோவின் ஒரு நாவலை தமிழில் மொழிபெயர்க்க இவரிடம் கேட்டபோது முன்தொகைக்கு பதிலாக, தஸ்தாயெவ்ஸ்கி எழுதிய ‘அசடன்’ நாவலைப் பெற்றிருக்கிறார். ஆக, வாசிப்பது என்று வந்துவிட்டால் நூல்கள் எப்படியாயினும் வந்து சேரும் என்பது உண்மைதான்..!

சரி, வாசிப்பதை நிறையப்பேர் செய்கிறோம் தான். ஆனால் அவற்றையெல்லாம் எப்படி இவ்வளவு தூரம் ஞாபகம் வைத்திருக்க முடியும் என்று கேட்டால் அங்குதான் சுப்பாராவின் திறமை இருக்கிறது. அதாவது தனியாக ஒரு நோட்டைப்போட்டு தான் படித்த நூல்களையும் அதன் பெயர், ஆசிரியர், எந்த பதிப்பகம், எந்த ஆண்டு, படித்த தேதி, நூலகமா, புத்தகக் கடையா, எத்தனைப் பக்கங்கள் என்பதுவரை எழுதி வைத்திருக்கிறார். என்ன மனிதனய்யா..!

வெவ்வேறு தேதிகளில் வண்ண வண்ண பேனா மைகளில் ஏராளமான நூல்களின் பட்டியல் தொகுப்பு, 50 ஆண்டுகளாக தொடரும் வாசிப்பு. அதன் ஒரு பிரதியே இந்த பட்டியல். ஓராண்டிற்கு சராசரியாக 50 நூல்கள் வீதம் கணக்கு வைத்தாலும் எண்ணற்ற நூல்கள் இருக்கின்றன. இடையில் அவர் 30 ஆண்டுகளுக்கு மட்டும் கணக்கு வைக்கிறார். ஆக, 1500 நூல்கள்.ஏனெனில் அவர் படித்த ஒரு கட்டுரையில் ஒரு விசயம் இவரது வாசிப்பின் கண்ணோட்டத்தையே மாற்றி விட்டதுதான் காரணம். அது என்ன என்பதை நூலைப் படித்து அறிந்து கொள்வோம். எஅவரது வாசித்த புத்தகப் பதிவேட்டில் இன்னும் 40 பக்கங்கள் இருக்கின்றனவாம். எல்லாமே வாசிக்கப்பட்ட நூல்களின் பெயர்களால் நிரம்பிவிட்டன என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.



இன்றைய நாட்களில் பல பல நூல்கள் மின்னூல்களாக வடிவம் பெற்று பலபேருக்கு பணம் போட்டு வாங்கும் நிலையை மாற்றியிருக்கிறது. அறிவியல் வளர்ச்சியில் இப்படி ஒரு வசதி. பல்லாயிரம் மின்னூல்கள், அதற்கென பல குழுக்கள் என்று வாசிப்பு உலகம் இயங்கிக் கொண்டிருக்கின்றது.

ஆரம்பத்தில் இவருக்கு மின்னூல் வாசிப்பது சில சிரமங்களுடன் இருந்தது. ஆனால் கிண்டுல் என்ற மின்னூல் வாசிக்கும் கருவியை வாங்கியப் பின்பு இப்போது ஏராளமான நூல்களை வாசிப்பதாகப் பதிவு செய்கிறார் சுப்பாராவ். நினைத்த நூல் நினைத்த மாத்திரத்தில் கிடைத்து விடுகிறது. ஆனால் இதற்கு பணம் தேவைப்படவில்லை, இணையம் + நூலைப் படிக்க ஒரு அலைபேசியோ, கிண்டுலோ வேண்டும், அவ்வளவுதான். என்னதான் இருந்தாலும் ஒரு புத்தகத்தை நேரடியாகத் தொட்டு பார்த்து படிப்பதுதான் ஆனந்தம் என்று சிலர் சொல்வதையும், அதற்கு பதில் சொல்லும் விதமாக, அச்சு நூல்களுக்கு முன்பு பனையேடுகள் இருந்தன, அவற்றில் படித்தவர்கள் அச்சு நூல்கள் வந்தபோது பெரும்பாலும் நிராகரித்துவிட்டு, தங்களது காலத்திலேயே பின்தங்கிவிட்டனர் என்றும் குறிப்பிடுகிறார் சுப்பாராவ். அன்றைய ஏட்டுமுறையில் படித்தவர்கள், அச்சு எழுத்தை முதன்முதலில் அறிந்தபோது, ‘எழுதாத எழுத்து வந்திருக்கிறது’ என்று கூறி பரிகசித்திருக்கின்றனர். ஆனால் இன்று ஏடுகளில் படிப்பது பின்தங்கிவிட்டது, புத்தகங்களில் படிப்பது அதிகரித்துவிட்டது. அடுத்ததாக, இப்போது மின்னூலில் படிப்பது அதிகரித்து வருகிறது. ஆனால் முழுமையாக மின்னூல்களே படிக்கப்படுவதில்லை. அவை சேகரம் செய்யப்பட்டு தேவையெனில் மட்டும் படிக்கப்படுகின்றன என்று கருதுகிறேன். ஆக, தான் எதில் படிக்க வேண்டும் என்பது இனி படிப்பவர்களின் தேர்வுக்கு விட்டுவிடுவோம். காலத்திற்கேற்ற மாற்றம் அவசியம்தானே…

‘வாசிப்பவர்கள் எல்லாம் எழுத வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால் எழுதுபவர்கள் எல்லாம் வாசித்தே ஆக வேண்டும் என்பது கட்டாயம்.’ இப்படியாக ஓரிடத்தில் பதிவு செய்கிறார். இது உண்மைதான். வாசிப்பு என்பது அத்தியாவசியம்தான். இலக்கிய உலகில் நுழைபவர்களுக்கு இது மிக முக்கியமானப் பண்பாடாகும். ‘சே உருவான கதை’ என்ற நூலை மொழிபெயர்க்கும்போதே சே குவேராவைப் பற்றி அறியவேண்டி மேலும் பல பெரிய நூல்களை வாசித்து தெளிந்து கொண்டு பிறகு மொழிபெயர்த்திருக்கிறார். இது அவரது இலக்கியத்தின் மீதான தீவிர கவனத்தைக் காட்டுகிறது.

‘வாசிக்க ஆரம்பித்தது, பின்னர் வெறியாக வாசிக்க ஆரம்பித்தது.’ இந்த வரியில் வாசிப்பு என்பது முதல்படியாகவும் வாசிப்பு என்பது அன்றாட செயலாக இருப்பது இரண்டாம்படியாகவும் ஆவது நமது பாக்கியம் என்றுதான் சொல்ல வேண்டும். வாசிப்பினூடாக அடையும் ஆனந்தம், இன்பம், பரவசம், ஆச்சர்யம் போன்றவை நம்மை மேலும் வாசிப்பினூடாக ஈர்க்கிறது.

இன்னும் நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால், ‘வாசிப்பது தீர்வதே கிடையாது. வாசிப்பதற்கான வெளி நீண்டு கொண்டே போகின்றது’ என்பதுதான் உண்மை.இதை நான் சொல்லவில்லை, தனது 50 ஆண்டுகள் வாசிப்பு அனுபவத்தின் மூலம் சுப்பாராவ் நேரடியாகச் சொன்னது. இந்த சொல்லை அவர் சொன்னபோது நேராக இருந்த கேட்டேன் என்ற அடிப்படையில் இதை இங்கே பகிர்கிறேன்.



அதாவது சுப்பாராவ் சேலத்திற்கு ஒரு கூட்டத்திற்கு வந்திருந்தபோது, தனது வாசிப்பனுபவங்களைப் பற்றி பகிர்ந்து கொண்டார். இந்த சிறு நூலில் எப்படி தனது வாசிப்பு பயணம் தொடங்கியது என்பதை அவரே சொல்லச் சொல்லக் கேட்டிருக்கிறேன். இந்நூலின் சாரத்தை அன்றே சுவைத்திருக்கிறேன்.

நூலின் தலைப்பின்படி, சுப்பாராவ் வாசிப்பால் பல விசயங்களை அறிந்திருக்கிறார், அடைந்திருக்கிறார். வாழ்வாதாரமான, வேலை என்பதும் வாசிப்பினால்தான் அவருக்கு கிட்டியிருக்கிறது. வாசிப்புதான் அவரை எழுத்தாளராகவும் மொழிபெயர்ப்பாராகவும் மாற்றியிருக்கிறது. வாசிப்புதான் இலக்கிய உலகில் இவருக்கான அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது.சொல்வதற்குஏராளம்உள்ளது.

ஆனால்அவைஇந்நூலைபடிப்பதிலிருந்துவிலக்கிவிடக்கூடாதுஎன்பதால்இதுவரைப்போதும்என்றுநினைக்கிறேன்.

ஆக, ‘வாசிப்பு என்பது ஒரு முடிவற்ற பயணம். உன்னால் அதில் எத்தனை தூரம் செல்ல முடிகிறதோ செல் என்று எனக்கு அனுதினமும் சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். அந்த அத்தனை வாசிப்பு பிரியர்களுக்கும் என் வந்தனம்,’ என்று சொல்லி நூலை முடிக்கிறார் ஆசிரியர். இந்த நெடும்பயணம் என்றுமே முடியாதுதான். எனவே நம்மால் முடிந்தவரை அதில் பயணிப்போம்.

– கார்த்தி டாவின்சி.
சேலம்.



One thought on “நூல் அறிமுகம்: ச சுப்பாராவ்வின் *வாசிப்பு அறிந்ததும் அடைந்ததும்* – கார்த்தி டாவின்சி”
  1. அருமையான பதிவு கார்த்தி 👌👌👌
    ( புத்தகம் வாங்கித்தரும் நண்பர்களை பெற்றிருப்பது பேரானந்தம்,’ என்று கூறுகிறார். உண்மைதான்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *