நூல்: வாசிப்பு அறிந்ததும் அடைந்ததும்
ஆசிரியர்: ச சுப்பாராவ்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
முதல் பதிப்பு பிப்ரவரி 2021
பக்கங்கள்: 104
விலை: ரூ.110/-
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/vasipu-arinthathum-adainthathum-by-subbarao/
எழுத்தாளர் ச.சுப்பாராவ் மதுரையில் பிறந்து வளரந்து அங்கேயே வாழந்து வருபவர். இந்திய ஆயுள் காப்பீட்டு கழகத்தில் பணியாற்றி வருபவர். இவரின் முதல் கதையான ‘சந்தோஷம்’ கணையாழியில் வெளியானது. ஏராளமான சிறுகதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். ‘வனபுத்ரி’ என்ற இராமாயணத்தின் அடிப்படையிலான மறுவாசிப்பு நாவலை எழுதியுள்ளார். 29 நூல்களை மொழிபெயர்த்து எழுதியுள்ளார். இவரின் ‘வாசிப்பை நேசிப்போம்’ என்ற சிறுநூல் ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் பாட திட்டத்தில் வைக்கப்பட்டுள்ளது. புதுமைப்பித்தன் விருது,வ.சுப.மாணிக்கனார் விருது, நல்லி திசை எட்டும் விருது, பெரியார் விருது மற்றும் மொழிபெயர்ப்புக்கான விருதுகள் உட்பட பல விருதுகள் பெற்றிருக்கிறார்.
சென்னை புத்தகக் கண்காட்சிக்கு சென்று விட்டு திரும்பும்போது இரயில் பயணத்தில் இந்நூலை முழுவதுமாக வாசித்து முடித்து பிரமிப்படைந்தேன். ஒரு மனிதன் தன் வாழ்நாளில் வாசிப்பில் இப்படியெல்லாம்கூட ஈடுபட முடியுமா என இத்தொகுப்பை வாசித்ததும் பேராச்சர்யம் அடைந்தேன். தனது குழந்தைப் பருவம் முதல் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் வாசிப்பு தந்த உணர்வையும் பிரமிப்பையும் இத்தொகுப்பில் நம் தோழனாய் உடனிருந்து சொல்கிறார்.
ஒன்றாம் வகுப்பு படிக்கும்போது கல்கியிலும் விகடனிலும் வெளிவந்த தொடர்கதைகளை பற்றி மதுரம் மாமி தவறாக சொல்லும்போது அதை திருத்தி சொல்லிய விஷயத்தை முதல் கட்டுரையில் நாம் வாசிக்கும்போது நம்மை நிமிரச் செய்கிறது.
காமிக்ஸ் புத்தகங்களுடனான தன் உறவுகளை விளக்கிச் சொல்லும் எழுத்தாளர் அவைகள் மட்டும் அறிமுகமாகியிருக்காவிட்டால் எழுத்தாளர் சுப்பாராவ் உருவாகியிருக்க மாட்டான் என உறுதிபட சொல்கிறார்.
முதன்முதலாக பொன்னியின் செல்வனை ராஜேந்திரன் அண்ணன் மூலமாக சேகர் அண்ணியிடமிருந்து அதுவும் முன் பின் பாகங்களாக தான் படித்த கதையை சொல்லும்போது வயதுக்கு மீறிய அவரின் வாசிப்பு ஆர்வத்தை கண்டு நாம் வியக்கிறோம்.
எட்டாவது படிக்கும்போது கட்டுரை போட்டிக்காக மதுரை சிம்மக்கல் மைய நூலகத்தில் தான் பல நூல்களை படித்து தயாரானதை வாசிக்கும்போது அப்போதே எழுத்தாளராக அவர் உருவாகி விட்டிருக்கிறார் என்பதை நாம் புரிந்து கொள்கிறோம்.
சுஜாதா மற்றும் தி.ஜா எழுத்துகளை தான் தேடி வாசித்த அனுபவங்களை அவர் சொல்லும்போது ஒரு பரிபூரணமான வாசகன் எப்படியிருப்பான் என்பதை உண்மையாக அறிந்து கொள்கிறோம்.
எழுத்தாளரின் வாசிப்பு ஆர்வத்திற்கு உறுதுணையாக அவர் குடும்ப உறுப்பினர்களும் அவருடைய நண்பர்களும் இருந்து வருவது எப்பேற்பட்ட கொடை?….சிறுவயதில் அவரின் அம்மா ‘புரிகிறதோ இல்லையோ நீ பாட்டுக்கு கைக்கு கிடைச்சதை படிச்சுண்டே இரு’ என்கிறார். அவர் தந்தை வெளியூருக்கு போய் வரும்போதெல்லாம் புத்தகங்கள் வாங்கி வந்து தருகிறார். அண்ணன் நூலகங்களிலிருந்தும், அக்கா தன் கல்லூரி நூலகத்திலிருந்தும் புத்தகங்களை எடுத்து வந்து தருகிறார்கள். நண்பர்கள் அதுவும் கண்ணன் போன்ற நண்பன் பிறந்தநாள் உள்ளிட்ட பல விசேஷ தினங்களுக்கு மட்டுமல்லாமல் தன் பூர்வீக நிலத்தை விற்றதற்காக அந்த தினத்தின் நினைவாகவும் புத்தகங்களை பரிசாக அளித்ததை வாசிக்கும்போது தெரிகிறது எழுத்தாளர்கள் பிறப்பதில்லை உருவாக்கப்படுகிறார்கள் என.
புத்தகங்களைத் தேடி அவர் செல்லும் நூலகங்களின் பட்டியல் நீளமானது. அவற்றில் தான் வாசித்த நூல்களை அவர் தெரிவித்திருப்பது ஒவ்வொரு வாசகர்களும் குறித்து வைத்துக் கொள்ள வேண்டிய ஒன்று.
ஒரு நூலை மொழிபெயர்க்க அதோடு தொடர்புடைய பல நூல்களை அவர் வாசிப்பதை வழக்கமாக வைத்திருப்பதை நாம் வாசிக்கும்போது அவரின் தேர்ந்த மொழிபெயர்ப்புக்களுக்கான காரணத்தை அறிகிறோம்.
தொகுப்பின் துவக்கத்தில் ‘நல்ல வாசகனைத் தேடி புத்தகங்கள் தாமாக வந்து சேரும்’ என சொன்ன எழுத்தாளர் இறுதியில்அதை மறுத்து ‘புத்தகங்களை நாம்தான் தேடிப் போக வேண்டும்’ என்கிறார்.
அச்சு புத்தக வாசிப்பிலிருந்து தான் மின் புத்தக வாசிப்புக்கு மாறிய தருணங்களை சொல்லும்போது மின்புத்தகங்களின் பயன்பாடுகளை சிலாகிக்கிறார். ஈ-புக் படிக்கக் கூடாது என சொல்லும் காம்ரேட்டுக்கு எழுத்தாளர் தந்த பதிலடி ‘நச்’.
ஒரு உண்மையான தீவிர வாசகனுக்கு வாசிப்பு என்றுமே ஒரு நிறைவை தராது. அது அவனை மேலும் மேலும் வாசிப்புக்களுக்கு உந்தித் தள்ளிக் கொண்டேயிருக்கும். இதைத்தான் எழுத்தாளர் கட்டுரையின் நிறைவில் ‘எல்லாவற்றையும் பார்க்கும்போது வாசிப்பால் நான் அடைந்தது அதிகம்தான் என்று படுகிறது. ஆனால் அதில் ஒரு நிறைவை, முழுமையை அடைந்து விட்டேனா? என்றால் இல்லை என்று ஒரு நொடியும் தாமதிக்காது சட்டென்று சொல்லி விட முடியும்’ என்கிறார்.
நூற்றி நான்கு பக்கங்கள் கொண்ட சிறிய நூல் என்றாலும் வாசிப்பை பற்றிய செறிவான தகவல்களை கொண்டுள்ள இந்நூலை வாசிப்பை நேசிக்கும் ஒவ்வொரு வாசகரும் தவற விடக்கூடாது.
எழுத்தாளர் வாசித்த நூல்களையும் அவரின் வாசிப்பு வேகத்தையும் இத்தொகுப்பின் வழியே நாம் அறிந்து கொள்ளும்போது அவரின் வலைப்பூவில் கேள்வி கேட்ட ஒரு அக்காவைப்போல தற்போது நாமும் அவரை கேட்கத் தோன்றுகிறது… ‘சார் நீங்க இப்படி வாசிப்பிலேயே ஊறித் திளைத்துக் கொண்டிருக்கீங்களே…உங்களுக்கு சாப்பிட, தூங்க, குடும்பத்தினருடன் உரையாட நேரம் கிடைக்கிறதா? 😊.
Leave a Reply