வாழை (Vaazhai) – பேசப்பட்டுள்ள சமூகக் கருத்துக்களும் மனித உணர்வுகளும்
செய்தித்தாள்களில் நாம் அன்றாடம் கண்டு கடந்து போகின்ற, அதிக பட்சம் “பாவம்ல, ப்ள்ச்” என உச் கொட்டி கடந்து கொண்டிருக்கிற, வெறும் எண்ணிக்கை அளவில் அறிந்துகொள்ளும் மரணங்களை “இவர்களும் உங்களைப் போலவே ரத்தமும் சதையும், ஆசைகளும் கனவுகளும் நிறைந்திருந்த மனிதர்கள்தாம்” என்று காட்டி இத்திரைப்படத்தின்வழி நம் மனசாட்சியை உலுக்குகிறார் மாரி செல்வராஜ். எல்லா விபத்துகளும் விபத்துகள் இல்லை, காலம் காலமாக உழைக்கும் வர்க்கத்தின் உயிர்களை விபத்துகளின் பெயரில் பலி கேட்பது இங்கு இருக்கும் அதிகார வர்க்கத்தின் அகங்காரமும், பேராசையும், திமிரும், அலட்சியமும், இளக்காரமும்தான் என்று புரிந்துகொள்ள வைக்கிறார் இயக்குநர்.
சிவனைந்தனைப் போன்று இந்த நாட்டில் இலட்சக் கணக்கான சிறுவர்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அன்றாடங்காய்ச்சிகளின் பிள்ளைகளாய், சாதிய/வர்க்க வேறுபாட்டின் விளைபயனான வறுமையின் பிடியில், குழந்தை பருவத்திலேயே பெரியவர்களாக ஆக்கப்பட்டவர்கள். இவர்களுக்கு “எங்களைச் சிறுவர்களாக இருக்க விடுங்கள்” என்பதைத் தாண்டி வேறு கோரிக்கைகள் இல்லை.
சாதிய/வர்க்க கட்டமைப்பில் மேல் அடுக்கில் இருப்பவர்களின் குழந்தைகளுக்கு, மூளை வளர்ச்சிக்கு உதவும், கை-கண் ஒருங்கிணைப்பை மேம்படுத்தும், அறிவியல்/கணிதத் திறனை வளர்க்கும் வித விதமான பொம்மைகள் விளையாடக் கிடைப்பதுபோல் இக்குழந்தைகளுக்குக் கிடைப்பதில்லை. அச்சிறுவர்களின் பள்ளிகளின் உள்கட்டமைப்பில் கற்பதும் இச்சிறுவர்களின் பள்ளிகளின் உள்கட்டமைப்பில் கற்பதும் இரு வேறு துருவங்கள் போன்றது. படாடோபமான உட்கட்டமைப்பும், நிறைந்த கற்றல் வளங்களும் இல்லாத பொழுது, சிவனைந்தன்களின் பூங்கொடி டீச்சர்கள் மட்டுமே இவர்களுக்கு கல்வியின் மீது ஆர்வத்தையும், பற்றுதலையும் வரவழைத்து வழி காட்டும் கலங்கரை விளக்கமாகத் திகழ்கிறார்கள்.
விடுமுறை நாட்களில் வயிற்றுப்பசி ஆற்ற, வாழை (Vaazhai) தோட்டத்தில் காய் சுமந்து, சில நேரங்களில் கடன் சுமை அழுத்தும்போது பள்ளிக்கு விடுப்பு எடுத்து காய் சுமந்து, வெடிப்புகள் புரையோடும் பாதங்களுடன், வலி நிறைந்த கழுத்துடனும், தோள்பட்டையுடன் வீடு திரும்பும் இப்பிஞ்சுகளின் கேல்விகளுக்கு நம்மிடம் என்ன பதில் இருக்கிறது? இவ்வளவு இன்னல்களிலும், வீடு திரும்பியபின் மண்ணெண்ணெய் விளக்கின் வெளிச்சத்திலோ தெரு விளக்கின் வெளிச்சத்திலோ படித்து, தேர்ச்சி பெற்று வரும் இவர்களைக் கல்லூரிகள் உச்சி முகர்ந்து, வாரி அணைத்துக்கொள்ளத்தானே வேண்டும் என்று தோன்றுகிறதல்லவா? ஏன் அவ்வாறு நடப்பதில்லை என்ற கேள்விக்கு ஏகலைவனின் கதை பதில் சொல்லும்.
டெகாத்லான் சைக்கிளோ, ஐபேடோ, லீகோவின் கட்டுமான பொம்மைகளோ, ஹாட் வீல்சோ, விடெக்கின் எலக்ட்ரானிக் பொம்மைகளோ இவர்கள் கனவுகள் அல்ல. தினசரி தவறாமல் பள்ளிக்கூடம் செல்ல வேண்டும் என்பதும், பெரியவர்களைப்போல் வேலை செய்துகொண்டே இருக்காமல், உடல் வலியின்றி குழந்தைகளாய், சிறுவர்களாய் விளையாண்டு கொண்டே வார இறுதியைக் கடக்க வேண்டும் என்பதும், ஆண்டு விழாவில் பாட, ஆட பயிற்சி செய்ய நேரம் கிட்ட வேண்டும் என்பதுமான அடிப்படைத் தேவைகள்தான் இவர்களது உச்சபட்ச ஆசையாகவும், வேண்டுகோளாகவும் இருக்கிறது.
சேகரும் சிவனைந்தனும் தங்களுக்குள்ளான ரஜினி-கமல் சண்டையில் நம்மை ஆங்காங்கே வெகுவாகச் சிரிக்க வைக்கிறார்கள். சேகர் கயிரில் கோர்த்து அணிந்து கொள்ளும் கமல் டாலரை வைத்துகொண்டு சிவனைந்தனை வெறுப்பேற்றுவதும், பதிலுக்கு அவன் கோவமாகி இவனை தாக்குவதும், இருவரும் அடித்துக்கொண்டு பெரியவர்கள் தலையீட்டால் முட்டிக்கால் போட்டிருக்கும்போது, சிவனைந்தன் தனது அருகில் கீழே கிடந்த கமல் டாலரை எடுத்து வைத்துக்கொள்வதும், பின்னர் குளத்தில் ஒன்றாக குளித்துவிட்டு கரையில் அமர்ந்திருக்கும்போது தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டுக்கொண்டு சேகரிடம் டாலரை திரும்பி தருவதுமான காட்சி மிக எளிமையான காட்சியாக அமைந்திருந்தாலும், அது இருவருக்குமான நட்பு எப்படிப் பட்டது என்பதை விவரிக்கும் காட்சியாக அமைந்திருக்கிறது. “நம் தவறை யாரிடம் ஒப்புக்கொள்ள முடிகிறதோ, அதை பற்றிய கலந்துரையாடலுக்கு யாரிடம் இடம் இருக்கிறதோ, அந்த உறவுதான் தொடர்ந்து கொண்டே இருக்கும்” என மாரி செல்வராஜ் ஒரு பேட்டியில் கூறியிருந்த உறவுக்கான இலக்கணத்தை நாம் இக்காட்சியோடு பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம்.
நகர்புறங்களில், மேல் நடுத்தர வகுப்பு பெற்றோர்களைக் குறி வைத்து சமீப காலங்களில் புகழ்ப்பெற்றிருக்கும் “ஜென்டில் பேரண்ட்டிங்க்” வகுப்புகளெல்லாம் சென்றடையாத, இந்த போக்கிற்கெல்லாம் அந்நியப்பட்ட நிலங்களிலும் சிறுவர்கள் தான் செய்த செயலைப் பற்றி சிந்திக்கும் திறனையும், சிந்தித்துச் சரியெது தவறெது என பகுத்தாயும் திறனையும், தவறென்றால் அதனை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்கும் திறனையும், தவறை சரி செய்ய/ஈடு செய்ய செயல்புரியும் திறனையும் கொண்டவர்கள் என்றும் இக்காட்சியைப் பொருள்கொள்கிறேன்.
தங்களது உரிமைகளை உரக்கப் பேசும் குரலாய் கனியின் கதாபாத்திரம். கனிக்கும் சிவனைந்தனின் அக்கா வேம்புவிற்கும் இடையிலான காட்சிகள் அவ்வளவு அழகு. “ஆம்பளப் பிள்ளைக்கு எதுக்கு மருதாணி?” எனக் கேட்கும் ஊரில், வேம்பு கொடுத்தனுப்பிய மருதாணியை அரைத்து கையில் வைத்து சிவக்கவிட்டு, அடுத்த நாள் லாரியில் கை உயர்த்தி வேம்புவிடம் அதைக் காட்டிய தருணத்தில் ‘ஆண்மை, பெண்மை’ என்ற கற்பிதங்களின் மீது பளாரென பெரும் அடி ஒன்று வைத்தான் கனி.
சிவனைந்தன் நடன பயிற்சி முடித்துவிட்டு வரும்போது பசியாற வழியில் உள்ள ஒரு தோப்பில் வாழைப்பழத்தை பறிக்கும்போது, பசியின் தீவிரத்தால் சற்றே வேகமாக பறிக்க முயல்கையில் வாழைக்குலையைக் கொஞ்சம் சாய்த்துவிடுவான். அதைக் கண்டு கோபம் வந்திருந்தால் அம்முதியவர் உடனே தண்டித்திருக்க வேண்டும். ஆனால் அவனிடம் ஊர் பெயரைக் கேட்ட பின்னே “யார் வீட்டு பழத்தை யார் தின்பது?” என்று அவனை தாக்கி தண்டனை கொடுப்பார். அவரது தெருவிலேயே ஒரு சிறுவன் இதைச் செய்திருந்தால் அவரது எதிர்வினை இவ்வாறு இருந்திருக்காது. பசியினால் அவ்வாறு செய்துவிட்டேன் என சிவனைந்தன் கூறும்பொழுது, அவனை அணைத்துக் கொண்டு மேலும் இரு பழங்களைப் பறித்து அவனுக்கு ஊட்ட விடாமல் செய்தது சாதியைத் தவிர வேறென்னவாக இருந்துவிட முடியும்? ஒரு வாழைக்குலையின் மதிப்பு ஒரு சிறுவனின் பசியை விட முக்கியமாய்த் தெரிய காரணம் முதலாளித்துவமின்றி வேறென்னவாக இருக்க முடியும்?
குழந்தை தொழிலாளர் சட்டம் குழந்தைகளை பணி அமர்த்துவதைத் தடை விதித்திருந்தாலும், செங்கல் சூளைகளிலும், பட்டாசு தொழிற்சாலைகளிலும், வயல்வெளிகளிலும், எண்ணில் அடங்காத பல இடங்களிலும் சர்வ சாதாரண நிகழ்வாக இது தொடர்கிறது. சட்டம் உரிமைகளைக் காப்பதற்கு இருந்தாலும், சமுதாயத்தில் அது நடைமுறைக்கு உள்ளாக அடிமட்ட அளவில் மாற்றங்ககள் ஏற்படுத்தப்படும் வரை சட்டங்கள் தாளில் அச்சடிக்கப்பட்ட எழுத்துக்களாகவே இருந்துவிடும் அவலத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது.
சிவனைந்தனுக்கு எல்லாமாகவும் இருப்பது அவனின் நண்பன் சேகரும், தனது அக்கா கனியும், அநியாயங்களை எதிர்த்து கேள்வி கேட்பதில் தனது அப்பாவை ஒத்த, அவன் முன் மாதிரியாகக் கருதும் அவன் ஊரின் கனி அண்ணனும் தான். காய் சுமக்க லாரியில் ஏறிய பிறகும், தான் நடனப் பயிற்சிக்குச் செல்ல விரும்பியதால் தன்னை லாரியிலிருந்து இறக்கி அனுப்பி வைத்த இவர்கள் மூவரையும் அடுத்த நாள் சடலங்களாகக் கண்ட அந்த நெஞ்சமும் செத்திருக்குமே? அம்மாவிற்கு தெரியாமல் தன்னை அனுப்பி வைத்ததற்கு தான் கூற இருந்த நன்றியை இப்போது யாருக்குச் சொல்லுவான்? அவனது பிஞ்சு நெஞ்சு தாங்கிக்கொள்ளும் துக்கமா அது? தன் உலகமாய் இருந்த மூவரையும் இழந்துவிட்ட அவன் மனதை ஆற்றுப்படுத்த இந்தப் புவியில் உள்ள யாரால் முடியும்? துக்கம் தாளாத வேளையிலும் விடாப்பிடியாக வயிற்றைக் கிள்ளிக்கொண்டிருக்கும் பசியை ஆற்றுப்படுத்த சட்டியிலிருந்து அள்ளி தட்டில் சோற்றை வைத்து அழுதுகொண்டே ஒரு வாய் எடுத்து வைக்கும் சிறுவனின் நிலை மனதை முள்போல் தைக்கிறது.
அக்காவின் மரணத்திற்கு அழுவதா? அக்காவுடனும் கனி அண்ணனுடனும் சேர்ந்து அவர்கள் கொண்டிருத்த காதலும் புதைந்து போனதை நினைத்து அழுவதா? உயிருக்கு உயிரான நண்பன் சேகரனை நினைத்து அழுவதா? வயிற்றைக் கிள்ளும் பசிக்காக பிய்த்த ஒரு வாழைப் பழத்திற்காக தனக்கு நேர்ந்த அவமானத்தை நினைத்து அழுவதா? ஒரு வாய்ச் சோற்றை எடுத்து வாயில் வைப்பதற்குள் அம்மா அடித்த அடிகளை நினைத்து அழுவதா?
மகனைக் காய்ச் சுமக்கக் கூப்பிடவும் மனம் இல்லாமல், ஆனால் வேறு வழியும் இல்லாமல் கையறு நிலையில் இருக்கும் தாயின் மனக்குமுறல்கள் எப்போது ஆற்றுப்படும்? மகளை இழந்த துக்கமும் மகனை ஒரு வாய்ச் சோறு கூட உண்ணவிடாமல் அடித்து விட்டோமே என்ற துக்கமும் ஒரு சேர மனதை வதைத்துக் கொண்டிருக்கும் தாய்க்கு யாரால் என்ன ஆறுதல் கூற இயலும்?
ஒரு வாழைத்தாருக்கு ஒரு ரூபாய் உயர்த்தித் தர வைத்த மக்களின் மீதான அந்த முதலாளியின் காழ்ப்புணர்ச்சி அவர்களின் உயிர்களை பலி வாங்கியதை எந்தச் சட்டத்தால் தண்டிக்க முடியும்? திருத்த முடியும்? சாதிக்கு எதிராக மக்கள் ஒன்றிணையும்போதுதான் இந்த மனநிலை முற்றிலும் அழிந்து போகும்.
லட்சக்கணக்கான எளிய மனிதர்களின் கதையை, சிவனைந்தனின் வாழ்க்கை வழி நமக்கு சொல்லியிருக்கிறார் இயக்குநர். இவ்வளவு அநீதிகளையும், துன்பங்களையும், வயதிற்கும் மனதிற்கும் அப்பாற்பட்ட துக்கத்தையும் எதிர்கொண்டு கடந்து வர நிர்பந்திக்கப்பட்ட சிறுவர்களைக் கண்டால் நமக்கு இவ்வநியாயங்கள் மீதும், ஒடுக்குமுறையைத் தூக்கிப் பிடிக்கும் சமுதாயக் கட்டமைப்பின் மீதும் கோபம் வர வேண்டும். சமத்துவத்தின் அடிப்படையில் சமுதாயத்தை மறுகட்டமைப்பு செய்ய வேண்டும். சமத்துவத்தின் தேவையை உணர்த்தி, அதை நோக்கி உழைக்க மாரி செல்வராஜ் விடும் அறைகூவலாகவே காண்கிறேன் வாழையை.
எழுதியவர் :
சௌம்யா பொய்யாமொழி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
உள்ளார்ந்த கருத்துகள்!
பாராட்டுதல்கள்
அறிஞர் அண்ணா வின் செவ்வாழை
கண்ணீர் சிந்தியது அன்று!
இன்று வாழை இரத்தக் கண்ணீர் வரவழைக்கிறது..இது வெறும் மனிதாபிமானத்தால் ஆற்ற முடியாதது.