வாழும்கலை மரணமில்லா ஜேகே தத்துவங்கள் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தத்துவம் ஞானம் என்றும் தன்னை அறிந்து இன்பமுற விழைவோர்களுக்கு ஒரு பரிசுப் பதிப்பு என்றும் அட்டைப் படத்தில் கொடுக்கப்பட்டு இருக்கக்கூடிய இந்த நூல் தமிழில் மொழிபெயர்த்து நர்மதா பதிப்பகம் வெளியிட்டுள்ளது

நூலாசிரியரைப் பற்றி…

இந்த நூலை எழுதியவர் பி.எஸ் ஆர் ராவ்.  தமிழக அரசின் சிறந்த நூலாசிரியர்க்கான விருதை இருமுறை பெற்றிருக்கிறார் . தர்மபுரி மாவட்டத்தில் எளிய குடும்பத்தில் பிறந்து இராணுவத்தில் உயர் அதிகாரியாக பணிபுரிந்த இவர் 14 சுயமுன்னேற்ற நூல்களையும் 13 நாவல்களையும் 13 பொது அறிவுக் களஞ்சியங்களையும் தமிழுக்குத் தந்திருக்கிறார்

நூல் குறித்து ..

இந்த நூலில் 43 பகுதிகளாக ஜேகே வின் வாழ்க்கை வரலாறும் அவரது தத்துவங்களும் தரப்பட்டுள்ளன. அவருடைய இளமைப் பருவம் முதல் மனித உறவுகள் குறித்தும் உளவியல் புரட்சி குறித்தும், கல்வி, சமயம் ,பிரச்சனை ,வாழ்க்கை, சமூகம், கடவுள், காலம் ,சுய அறிவு ,பயம், அகம்பாவம் ,நம்பிக்கை ,உண்மை ,அன்பு ,எளிமை சுதந்திரம் , மெளனம் இப்படியாக தொடர்ந்து பல தலைப்புகளில்  கொடுக்கப்பட்டுள்ளன

ஜேகே , உலகம் முழுவதிலும் நிறைய நாடுகளில் பல நகரங்களில் 65 ஆண்டுகளுக்கும் மேலாக பல ஆயிரக்கணக்கான சொற்பொழிவுகளை நிகழ்த்தி இருக்கிறார் . அவர் ஒவ்வொரு இடத்திலும்,  நான் ஒரு ஆசிரியன் அல்ல. உங்கள் யாரையும் மாற்ற நான் இங்கு வரவில்லை, நான் சொல்லிவருவனவற்றை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற எந்த நிர்பந்தமும் கிடையாது. நான் கூறுகிறேன் உங்களுக்கு அவற்றில் நம்பிக்கை ஏற்படலாம்,

இல்லாவிட்டால் அவற்றை  நிராகரித்து விடுங்கள் என்று பேசுகிறார். உரையாடல் நிகழ்த்துவதே தனது முக்கிய நோக்கமாக ஒவ்வொரு பகுதியிலும் குறிப்பிட்டுள்ளார்

மகரிஷி , ஆச்சாரியார் , சுவாமி முதலான மகுடங்களை மற்றவர்கள் ஜேகே அவர்களுக்கு சூட்ட முற்பட்டபோது,  அவற்றை நிராகரித்திருக்கிறார். யாரும் அவரை ஐயா என்று அழைப்பதையும் அனுமதிக்கவில்லை. தன்னை கிருஷ்ணமூர்த்தி என்றோ அல்லது சுருக்கமாக ஜேகே என்றோ கூப்பிடும்படி கேட்டுக் கொண்டுள்ளார் அதேபோல அவரை யாராவது விழுந்து வணங்க முயன்றால் , அந்த இடத்தை விட்டு விலகி விடுவாராம் . மதம் என்பது ஒரு கூண்டைப் போன்றது, எனது சிந்தனைகளின் அடிப்படையில் யாரும் புதிய மதத்தை உருவாக்க கூடாது என்றும் கூறி வந்திருக்கிறார்.

 அதே போல பலர் தங்களை, ஜேகே வினுடைய வாரிசுகள் என்று சொல்லிக் கொண்டு வரும்பொழுது,  அவர் இதை நிராகரித்திருக்கிறார். நான் யாரையும் எனது வாரிசாக நியமிக்கவில்லை, எதிர்காலத்தில் எந்த ஒரு வாரிசையும்  நியமிக்கப் போவதும் இல்லை , நான் இல்லாத காலத்திலோ அல்லது இருக்கும் போது யாரும் உரிமை கோராமல் பார்த்துக்கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளார் .

எளிமையாக வாழ்வதையே விரும்புகிறேன் யாரையும் சீடர்களாக ஏற்றுக்கொண்டு புதிய பரம்பரையை உருவாக்க விரும்பவில்லை என்னுடைய பெயரில் ஞாபகார்த்த மண்டபங்கள் பிரார்த்தனைக் கூட்டங்கள் கோவில்கள் எதையும் உருவாக்கக் கூடாது என்று கட்டாயமாக கூறியிருக்கிறார் ஜே.கிருஷ்ணமூர்த்தி .

அதேபோல எந்த ஒரு நிறுவனத்துடனும் என்னை சம்பந்தப்பட்ட கூடாது யாரும் எங்கேயும் என்னுடைய சிலைகளை நிறுவ கூடாது நான் இறந்தவுடன் என் சடலத்தை மக்களுடைய பார்வைக்கு வைக்க கூடாது , எந்த ஒரு சடங்கும் இல்லாமல் ஆடம்பரம் இல்லாமல் என் இறுதிக் காரியங்களை மிகவும் எளிமையாக செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டாராம்.

அதேபோல தான் எந்த ஒரு நாட்டையும் சமயத்தையும் கட்சியையும் சார்ந்தவன் அல்ல என்றும் தான் எந்த ஒரு மதத்தின் புனித நூலையும்  படித்தது கிடையாது என்றும் எந்த ஒரு மத வழிபாட்டையும் கடைபிடிப்பது இல்லை என்றும் மதக் கட்டுப்பாட்டையோ மத நம்பிக்கையோ ஆதரிப்பவன் அல்ல என்றும் கூறியிருக்கிறார்

பிரச்சினைகள் இல்லாத அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த புதிய உலகை உருவாக்க ஜே கே பலவாறாக தனது சிந்தனைகளைக்

கூறியுள்ளார் , ஆனால் அது எப்படி சாத்தியம் என்று தான் நமக்கு தெரியவில்லை ஆகவேதான் இந்த நூல் தத்துவமாகவே இருக்கிறதோ என்னவோ ,ஆனால் அவர் கூறுவதில் நிறைய நியாயங்களும் உள்ளன. உண்மை மனிதர்கள் அனைவரும் மற்றவர்களுடன் ஆரோக்கியமான உறவை உருவாக்கிக் கொள்ளவேண்டும், உண்மையைக் கண்டு கொள்ளும் போது பிரச்சனைகள் மறைந்து விடும் என்கிறார்.

ஆனால் இன்றைய  சமூக சூழல் எதை உணர்த்துகிறது என்று நமக்கு தெரியும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்து வர வேண்டும் அனைத்து கட்டுப்பாடுகளில் இருந்தும் ஒருவன் தன்னை முழுமையாக விடுவித்துக்கொண்டு சுதந்திரமாக செயல்பட வேண்டும் நம்முடைய செய்திகள் அனைத்தும் அன்பை அடிப்படையாகக் கொண்டே அமையவேண்டும் என்றும் இவர் கூறியது அனைத்தும் நன்மை புரியும்  உணர்வாக இருந்தாலும் எதார்த்தத்திற்கு முரணாகவே அமைந்துள்ளது என்பது என்னுடைய கருத்து.

1939ஆம் ஆண்டு ஜே.கே.  மூன்று வரங்கள் இத்தாலி நாட்டில் ரோம் நகரில் தங்கி இருந்தாராம் அப்போது அந்த சர்வாதிகாரியாக இருந்த முசோலினி அவர் பேசுவதற்கு தடை விதித்துள்ளார் ஐநாசபை பாராட்டி ஒரு தங்கப் பதக்கத்தை கொடுத்துள்ளது விழா முடிந்தவுடன் ஜேகே அந்தப் பதக்கத்தை மேஜையின் மீது வைத்து விட்டு அமைதியாக சென்று விட்டாராம்.

கிருஷ்ணமூர்த்தி என்ற ஒருவனை நினைவில் வைத்துக்கொள்வதினால்  உலகத்திற்கு எந்த ஒரு நன்மையும் கிட்டப் போவதில்லை செம்பில் என்ன இருக்கிறது என  பார்க்க வேண்டுமே தவிர செம்பை வணங்கி வரக்கூடாது ஆனால் உலக மக்கள் பாலை நினைவில் வைத்துக்கொள்வது இல்லை, செம்பைத் தான்  நினைவில் வைத்துக்கொள்கிறார்கள், என்னை நீங்கள் மறந்து விடுங்கள் நான் சொல்லும் கருத்துகளை ஆழ்ந்து விசாரணைக்கு உட்படுத்தி உங்களுக்கு  நான் சொல்லும் வரிகளில் உண்மை இருந்தால் அவைகளை ஏற்றுக் கொண்டு உங்களை மாற்றிக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார் கிருஷ்ணமூர்த்தி.

ஹிம்சை பேராசை புகழ் பெற வேண்டும் என்ற ஆசை மிருகத்தனம் தற்பெருமை பொறாமை தந்திரம் வஞ்சகம் சூது போன்ற குணங்களில் இருந்து மனிதன் தன்னை முழுமையாக விடுவித்துக் கொள்ளும் போதுதான் அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்த புதிய உலகத்தை உருவாக்க முடியும் என்பதனை ஜேகே தான் எழுதிய நூல்களிலும் உலகம் முழுவதும் ஆட்சி ஆயிரக்கணக்கான சொற்பொழிவுகளிலும் கூறி வந்திருக்கிறார்.

இதே போல 42 தலைப்புகளில் ஜேகே வின் கருத்துகள் விரிகின்றன. இறுதியாக கேள்வி பதில் பகுதி. இதில் மக்கள் ஜேகே விடம் கேட்கும் கேள்விகளும் அதற்கு அவர் முன் வைத்துள்ள செறிவான அனுபவமான பதில்களும் இடம் பெற்றுள்ளன.

இப்புத்தகம் வாசித்தல் நம்மைப் பல கோணங்களிலும் வாழ்க்கையை சிந்திக்க வைக்க ஒரு கருவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

வாழும் கலை

மரணமில்லா ஜே. கே தத்துவங்கள்

பதிப்பகம் : நர்மதா

விலை: 300 , பக்கம் : 436

One thought on “வாழும் கலை மரணமில்லா ஜே. கே தத்துவங்கள் |மதிப்புரை ஆசிரியை உமா மகேஸ்வரி”
  1. ஜேகே பேசியது அடிப்படையில் அத்வைதம்தான்.மிக நவீன மொழியில் உரையாடல் மூலம் உலகுக்கு அதை எடுத்துச் சொன்னார்.மணல்மேல் கட்டிய வீடு என்றொரு புத்தகம் முன்னர் வந்தது.வைகை என்ற இலக்கிய இதழில் 80 களில் ஜெகே பற்றி விமர்சனப்பூர்வமாக கட்டுரைகள் வந்தது.இதையெல்லாம் நினைவு படுத்தியது உங்கள் கட்டுரை.அவருடைய Commentaries on Living இரண்டு தொகுதிகள் வாசிக்கச் சுகமானவை.நல்ல முஅற்சி .வாழ்த்துக்கள் தோழர் உமா..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *