ஒரு நாவலை அறிமுகப் படுத்துவதற்கும்; சிறுகதைத் தொகுப்பொன்றினுள் நுழைந்து ஒவ்வொரு கதாப்பாதிரமாக தனை நினைது உருகி அதற்குள் மூழ்கி எழுதுவதற்கும்; கவிதைத் தொகுப்பிற்குள் கவிஞனின் விரல்பிடித்து காதலில் லயித்து, பறவையாக உருமாறி வானவெளியெங்கும் பறந்து, இயலாமையில் அழுது, கோவமதில் இருதயம் வெடித்து எழுவதற்கும்; எழுதுவதற்கும்;
என்னுடைய வேர் எது..?அதனைடைய மூலம் எது.? அதனுடைய ஆதி எது என்று நுழைந்து பார்த்து அதனுடைய பல நூற்றாண்டு கால வளர்ச்சியில் நான் ஒருவனாகவும்.. கூடவே இருக்கும் இன்னொருவனின் அடையாளம் தொலைந்தோ.. தொலைத்தோ.. அழிந்தோ.. வளர்ச்சி, நாகரீகம் என்கிற சொல்லாடலுக்குள் அவனை அழித்தோ நின்றுத் திரும்பிப் பார்க்கும் ஆய்வு என்றாக வெளிவந்திருக்கும் ஆவணத்தை வாசித்து அறிமுகப் படுத்துவதற்குமான வேறுபாடு.. மலைக்கும் மடுவிற்குமானது.. இதுவே எனது யோசனை படித்து முடித்ததில் இருந்து.
அந்த மடுவில் நின்றே மலை மேல் வாழ்விழந்தவர்களின்.. வாழும் மூதாதையர்கள் வாழ்நிலை குறித்து பல தரவுகளின் ஊடாக கள ஆய்வு செய்து தமிழ்ச் சமூகத்திற்கு கொடையாக்கி இருக்கும், மானுடவியல் துறையில் முனைவர் பட்டம் பெற்ற இந்த நூலின் ஆசிரியர் முனைவர்.அ.பகத்சிங்
அவர்களுக்கு மதிப்புறு வாழ்த்துகளும்
பாராட்டுதல்களும்.
தமிழக பழங்குடி மக்கள் குறித்தான “வாழும் மூதாதையர்கள்” என்கிற இந்த நூலை சிறப்பான முறையில் வடிவமைத்து நேர்த்தியான அழகியலோடு பல வண்ணப் புகைபடங்களைத் தாங்கி வெளிக் கொண்டு வந்திருக்கும் உயிர் பதிப்பகத்திற்கும் நெஞ்சார்ந்த பாராட்டுதல்கள்.
கொல்லிமலை
மலை முகட்டில் ஓங்கி வளர்ந்திருக்கும் காட்டு மரங்களின்; படர்ந்திருக்கும் செடிகளின் மீதான மோகத்தால், மேகங்களின் உரசலால்.. காதல் மொழியால்  தூவானமாகி மழையாகி மலையிலிருந்து  வரும் வழியெங்கிலும் வனப்பெய்தி பூத்திருக்கும் கொத்து மலர்களின் வாசத்தை வாரியெடுத்து; கூடவே மூலிகை செடிகளின் வேர், கிளை, இலை, காய், கனி அசைத்து தாளலயத்தோடு சலசலத்து கீழிறங்கி ஓவென ஓங்காரக் குரலெடுத்து வீழ்ந்து பரந்தோடிடும் அருவிக்கும்.. காட்டு மரங்களுக்கும்..
கிளர்ச்சியடையச் செய்திடும் கொத்து மலர் வாசத்திற்கும் மூலிகைச் செடிகளுக்கும் பாதுகாவலர்களாக இருந்திட அம் மலை மக்களையும்.. பழங்குடியினர்களையும் தவிர வேறு யாராக இருக்க முடியும்.. ஆனால் வளர்ச்சியின் பெயராலும், நவீனத்தின் முகம் காட்டியும் இயற்கையோடு இயைந்து, இணைந்து வாழ்ந்த, அன்புள்ளம் தாங்கிய அப்பழங்குடி மக்களை வஞ்சகமாகவல்லவா வெளியேற்றி இருக்கிறோம்.
புலிகளை காப்பதற்காக 40,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் இருந்த சூதுவாதற்ற நம் முன்னோடிகளை மொத்தமாக வெளியேற்றி இருக்கும் கொடு மதி செய்களைத்தானே செய்திருக்கிறோம் அரசாங்கத்தின் வழியாகவும், புதிய புதிய சட்டத்தின் வழியாகவும்..
பூர்வகுடி மக்கள் தன்னை நோக்கி வரும் எந்த ஒரு காட்டு விலங்கையும் என்றுமே கொன்றது கிடையாது பயமுறுத்தி விரட்ட மட்டுமே செய்வான்.. உணவிற்கானதைமட்டுமே வேட்டையாடுவான்.. எந்தெந்த காலங்களில் எந்த தாவர உணவை உட்கொள்வது; அதனுடைய விளைச்சல் எப்போது மிகுதியாக இருக்கும் என்பதை அனுபவ அறிவால் உணர்ந்தல்லவா தன் பசியைப் போக்க அதைப் புசிப்பான்.. என்ன அவனுக்குத் தேவையோ.. எவ்வளவு அவனுக்கு தேவையோ அதைமட்டுமே அன்றக்கு தனதாக்கி வாழ்வான்..
Photo Courtesy: Vikatan
ஆனால் சமவெளியில் இருக்கும் நாம் என்று காடுகளுக்குள்ளும்.. மலைகளுக்கும் புகுந்திட்டோமோ அன்றே அம்மக்களின் வாழ்முறை சீர்கெடத் துவங்கியது.. மலைகளிலும்.. காடுகளில் வாழ்ந்திட்ட அம்மக்களை வெளியேற்றியது மட்டுமல்லால் வாழ்க்கைத் தேவைக்காகவும் அவர்களை உள்ளே சென்றுவர அனுமதி மறுத்து வருகிறோம் வனப் பாதுகாப்பு என்கிற பெயரில்.
அப்பூர்வகுடிகள் பாதுகாத்த, சேர்த்து வைத்திருந்த அத்தனை உயிரினங்களையும் சட்டத்தின் பெயரால் உள்ளே சென்றவர்கள், சட்ட விரோத வேலைகளை செய்து வருவதை இன்றளவும் பத்திரிக்கைச் செய்தியாகவும்.. கள ஆய்வின் போது நேரிடையாக அம் மக்கள் சொன்னவைகளை வலியோடு பதிவாக்கி இருப்பார் ஆசிரியர் அவர்கள்.
தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் ஒரு விழுக்காடு மட்டும் இருக்கக் கூடிய பூர்வகுடி மக்களிடையேதான் எத்தனை விதமான பண்பாட்டு விழுமியங்கள்.. எத்தனை விதமான பழக்கங்கள்.. எத்தனை விதமான உறவுமுறைகள்.. எத்தனை விதமான சமூக அமைப்புகள்,குலங்கள்.. குழுக்கள்.. ஊர்கள்.. ஊர்த் தலைவர்கள்.. அவர்களுக்கான உதவியாளர்கள்.. விதவிதமான உணவு முறைகள்.. ஒவ்வொரு குழுவிற்கான பாரம்பரிய அறிவு,
சடங்கு முறைகள், திருமணம் முறைகள் இப்படி நிறைய விடயங்களை தன் கள ஆய்வின் மூலம் கொண்டு வந்திருக்கிறார்.
தமிழக அரசு அட்டவணைப்படுத்தி வெளியிட்டிருக்கிற 36 பழங்குடி சமூக குழுகக்களில் 13  குழுக்கள் குறித்து இந்நூலில் பதிவு செய்திருக்கிறார். தனக்குக் கிடைத்த தரவுகளின் கள அனுபவ ஆய்வு அடிப்படையில் ஆசிரியர் அவர்கள்.
Merku Thodarchi Malai Stills – Suryan FM
13 குழுக்களின் திருமணம் சடங்கு முறைகளில் வெவ்வேறான பழக்கவழக்கங்கள் இருந்தாலும் எந்த உறவின் முறையில் திருமணங்கள் நடைபெறவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர்.. அதேபோன்று எந்த குழுவிலும் கட்டாய திருமணம் என்பதே கிடையாது. பெரும்பாலும் காதல் திருமணங்களாகவே, ஒருவரை ஒருவர் விரும்பி ஏற்பதாகவே நடைபெற்று இருக்கிறது.. திருமணத்தில் இருபாலரின் ஒப்புதலை பொதுவில் பெற்றே திருமணங்கள் நடைபெற்றிருக்கிறது.. திருமண நிகழ்வுகள் அனைத்தும் ஊர் பொதுவிலேயே ஊரே கொண்டாடக்கூடிய வகையிலேயே நடைபெற்று இருக்கிறது
திருமண முறிவு என்பதும் அப்படியே நடந்திருக்கிறது.. ஆண், பெண் யார் விருப்பப்பட்டாலும் முறிவுக்கு முன் மொழியலாம்.. பெண் முன் மொழிந்தால் திருமனத்திற்கு ஆண் வீட்டில் இருந்து பெண் வீட்டிற்கு கொடுத்திட்ட அன்பளிப்பை திருப்பிட வேண்டும்; ஆண் முறிவை முன் மொழிந்தால் பெண் வீட்டிற்கு உரியதை திருப்பி அளித்திட வேண்டும்.. இது பெரும்பாலான பழங்குடிக் குழுக்களுக்கு பொருந்தி இருக்கிறது.
பெண்களின் மறுமணத்திற்காகவும், விதைவைத் திருமணத்திற்காகவும், பெண் உரிமைகளுக்காகவும் நாகரீக சமூகம்  என அழைத்துக் கொள்ளும் நாம்தான்  எத்தகைய  அநாகரீக இழி செயல்களில் ஈடுபடத் தயங்குவதில்லை என்பதற்கு சாட்சிகள்தான் ஏராளம் நம் கண் எதிரே.. ஆனால் பழங்குடிகள் சமூகத்தில் விதைவைத் திருமணத்திற்கும்.. மறு மணத்திற்கும் ஊரே கொண்டாடி நடத்திக் கொடுப்பார்கள்.
பெரும்பாலான இனக் குழுக்களில் மன முறிவுக்குப் பிறகு முதல் தாரத்திற்கு பிறந்த குழந்தைகள் பெண்னுடனே அனுப்பி வைக்கப்படுகிறார்கள். அப்பெண்ணை மறுமணம் செய்யும் ஆணும் அக்குழந்தைகளை தன் குழந்தைகளாகவே ஏற்றிட வேண்டும்.. அப்படித்தான் ஆண்களும் இருந்து  வந்திருக்கிறார்கள்.
சத்யமங்கலம் சோளகர்கள் இனக் குழுவில் மட்டும் மணம் செய்யும் ஆண்வீட்டார்கள் பெண் வீட்டார்களுக்கு பரிசுப் பணம் கொடுக்க வேண்டும்.. ஏனென்றால் ஒரு பெண் திருமணமாகி ஆணின் வீட்டிற்கு வருவதால் கூடுதலாக ஒரு உழைக்கும் நபரைப் பெறுகிறார்கள்,பெண் வீட்டில் உழைக்கும் நபர் ஒருவரை இழக்கிறார்கள். எனவே பரிசுப் பணமாக கேழ்விரகு போன்ற விளைச்சல் பொருளை கண்டிப்பாக கொடுத்தாக வேண்டும் என்பதை கள ஆய்வில் சொல்லி இருப்பார் ஆய்வாளர் பகச்சிங் அவர்கள்.
கோவை மாவட்ட பழங்குடிகளும் மலை வளமும்
ஆசிரியர் அவர்கள் இருளர்கள் குறித்தான வாழ்வதனை பேசிடும்போது “கோவன் புதூர்” எப்படி “கோயம்புத்தூர்” ஆனதிலிருந்து  மொழியியல் அறிஞர் கமில் சுவலபில் இருந்து ஆரம்பித்திருப்பார்.
திருமணம் நிச்சயத்த பின்னர் ஓராண்டுகாலம் இருவரும் இணைந்து வாழலாம்.. அதனபிறகு கருத்து வேறாடின்றி வாழ்வைத் தொடர முடியும் என்கிற ஒப்புதல் இருவரிடமும் இருந்து கிடைத்தபிறகே திருமணம் நடத்தி வைக்கப் படும். ஒத்து வராத சூழலில் வேறு இணையை ஏற்கும் உரிமை இருவருக்குமே உண்டு.
இருளர்களின் ஒவ்வொருவர் வீட்டிலும் தப்பை, ஜால்ரா, மேளம் போன்றை இசைக்கருவிகள் குடும்ப உறுப்பினராகவே தொடர்கிறது.. இவ்வினக்குழுவினர் அனைவருமே ஆட்டக் கலைஞர்களாகவும்.. இசைஞர்களாகவுமே இருப்பார்கள்.. இங்கு கலைகள் தனி நபர் சார்ந்து கிடையாது..  கலைகள் அனைத்தும் இனக் குழுவினர் அனைவருக்குமே.
இவர்களின் சிறப்புப் பட்டறிவே எந்தவகையானா பாம்பு என்றாலும் எளிதில் கையாளக் கூடிய திறன் படைத்தவர்கள். நச்சுப் பாம்புகளைப் பிடித்து விஷத்தை சேகரித்து பக்குவப் படுத்தி மருந்தாக்கிடும்  திறமையைப் பயன்படுத்தி அரசும், பல தனியார் நிறுவனங்களும்  இவர்களின் உழைப்பை சுரண்டி இன்றளவும் ஏமாற்றி வருவது பெரும் கொடுமையே என்பதை ஆசிரியர் பதிவு செய்திருப்பார்.
தென் இந்தியாவிலேயே வேட்டையாடி உணவு சேகரிக்கும் வாழ்வியல் முறையில் தொடரும் ஒரே இனமாக இருந்த ” ஆனைமலைக் காடார்கள்”  வாழ்வு எப்படி சூறையாடப்பட்டு, சிதைக்கப்பட்டது என்பதை தனக்கு கிடைத்த தரவுகள் அடிபடையில் பதிவாக்கி இருப்பார்.
இவர்களின் தனித்துவமான வாழ்க்கை முறையை அழகாக பதிவாக்கி இருப்பார் ஆசிரியர். காட்டில் எந்த ஒரு  மரத்தையும் வெட்டாமல் பெரிய மரத்தின் கீழ் மூங்கில், களிமண், வைக்கோல் கொண்டே குடிசைகளை அமைத்து வாழ்ந்தார்கள் என்பதை தெரியப் படுத்தி இருப்பார்.
“வைக்கோல்” என்பது பயன்படுத்தப் பட்டிருக்கிறது என்றால் அரிசி உணவை உட்கொண்டார்களா என்பது கேள்வியாகி நிற்கிறது அங்கே.! வைக்கோல் என்பது வேறு ஒன்றின் விளைச்சலில் இருந்து வந்ததா என்பதும் தெரியவில்லை.
உணவுப் பொருட்களின் தேடுதலில்  “அகத்தியமலைக் காணிகள்” மீன்பிடித்தலின் போது மீன்களை மயக்கமுறச் செய்து  எளிதாகப் பிடிக்கும் வழிமுறை அறிந்தனர் என்பது ஆச்சர்யமான ஒன்று.. அதற்கு அவர்கள் பயன்படுத்தும் “நஞ்சாங் கரு” என்ற காயையும் நாம் அறிந்திராத நாகரீக மனிதர்களே..
இந்த காணிகள்தான் தங்களின் பாரம்பரிய மருத்துவ அறிவு வழியாக கண்டுபிடிக்கப்பட்ட பொருளுக்காக சர்வதேச அளவில்  காப்புரிமை பெற்ற முன்னோடிகள் என்பதை பல்வேறு தரவுகள் வழியாக ஆசிரியர் நிறுவி இருப்பார்.
நமது மூதாதையர்கள் எவ்வளவு நேரம் ...
வழக்கமாக மலைகளின் காடுகளில் இருந்தே சமவெளிக் நோக்கி பெயர்ந்து வரும் இனக் குழுக்களில் இருந்து “பாண்டிய நாட்டு முதுவர்கள்” இனக் குழு மட்டும் சமெவெளிப் பகுதியில் இருந்து மலைக் காடுகள் நோக்கி செல்கின்றனர் என்றால் அவர்களுக்கான பழக்கவழக்கங்களும்.. பண்பாட்டு விழுமியங்களும் சமவெளி மக்களிடமிருந்து பெறப்பட்டதின் தொடர்ச்சியாகவே இருக்கும்..
இல்லை என்றால் இவர்கள் குடியேறுவதற்கு முன்னரே காட்டுப் பகுதியில்  வாழ்ந்திருந்த  முன்னோர்களின் பண்பாட்டு விழுமியத்தை உட்கொண்டவர்களாக இருக்க வேண்டும்; அல்லது அதில் தங்களைக் கரைத்துக் கொண்டவர்களாக இருக்க வேண்டும்..
இதில் ஆசிரியர் எங்கேயோ இடர்கிறாரோ என்கிற எண்ணம் மேலோங்கி வருகிறது.
“சாவடி வீடு” என்கிற வீடு நான் சிறுவயதில் திருவண்ணாமலைக்கு அருகில் இருக்கும் எனது ஊரானா சோமாசிபாடியில் கேள்விப் பட்டிருக்கிறேன்.. அந்த வீட்டில்தான் இடம் விட்டு இடம் மேய்ந்திடும் கால் நடைகள் கட்டி வைத்திருபார்கள்.. கால்நடைகள் தொலைந்து போனவர்கள் அங்கு சென்றால்  அதற்குண்டான அபராதம் செலுத்தி உரிமையாளர் தங்களின் கால்நடைகளை அழைத்து வரலாம்.. இப்படி பல ஊர்களில் திருவண்ணாமலையை சுற்றி.. அங்கேயும் கள ஆய்வினை மேற்கொண்டால் பல சிறப்புகள், தொன்மங்கள் வெளியே வர வாய்ப்பும்.
காடுகளிலும்.. மலைகளிலும் இயற்கையோடு இணைந்து வாழும்; இயற்கையை வணங்கி வாழ்ந்த பூர்குடிமக்களிடம் எதன்வழியாக ராமாயணம், மகாபாரதக் கதைகள், செவ்வியல் கடவுள்கள் வந்திருக்கும் என்கிற கேள்வி நம் முன்னால் எழுகிறது. இயற்கையை சூறையாடியதோடு நில்லாமல் நாகரீக மனிதர்கள் அவர்களிடையே விஷத்தையும் அல்லவா விதைத்திருக்கிறார்கள்.
13 இனக்குழுக்கள் குறித்து, அவர்களின் தொன்மம் குறித்து, வாழ்வியல் குறித்து, பண்பாடு, கலாச்சாரம் குறித்து கையில் கிடைத்த தரவுகளைக் கொண்டு குளிரூட்டும் அறையில் அமர்ந்து எழுதிடாமல் களத்திற்கே நேரடியாக சென்று அம்மக்களை கண்டு  அவர்களோடே பயணித்து தமிழ் நிலத்திற்கு, அறிவுசார் தளத்தில் இயங்குபவர்களுக்கு பூர்வகுடி மக்கள் குறித்தான ஒரு ஆவணத்தை வழங்கிட; எப்போதும் எளிய மக்களின் மேம்பாடு குறித்து களத்தில் நிற்கும் போராளியால் மட்டுமே சாத்தியப்படுத்த முடியும். சாத்தியப் படுத்திய முனைவர் அ.பகத்சிங் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
வாழும் மூதாதையர்கள் - நூல் ...
இந்த “வாழும் மூதாதையர்கள்” நூலுக்கு அருமையானதொரு முன்னுரையை பேராசிரியர் ஆ.சிவசுப்பிரணியன், பேராசிரியர் ஆ. செல்லபெருமாள், எழுத்தாளர் நக்கீரன் ஆகியோர் வழங்கி இருப்பது நூலுக்கு கூடுதலான சிறப்பு.
நவீன உலகில், உலகமயமாக்கலால், நகரமயமாக்கலால் சிதறி சின்னபின்னமாகிக் கிடக்கிறது அம்மக்களின் வாழ்வு என்பதை அழுத்தமாக பதிவு செய்திருப்பார் நூலாசிரியர். நவீனத்தின், நாகரீகத்தின் பெயரால் பூர்வகுடிகள் இருந்ததற்கான அடையாளங்களே ஒழித்துக் கட்டப்படுவதாக பேசி இருப்பார்.ஒரு படைப்பாளியின் செயல் அம்மட்டுமே என்பது எனதின் நிலை.
அப்பூர்வகுடிகளுக்கான வாழ்நிலையை உருவாக்கி அம்மக்களை அவர்களின் நில எல்லையில் இருந்தே நவீன உலகத்தோடு தங்களை கூடுதலாக இணைத்துக் கொள்ள தேவையான அரசியல் பணிகளை அம்மக்களுக்காக இயங்கிடும் உண்மையான குழுக்ககளாலும், அரசியல் கட்சிகளால் மட்டுமே முடியும்.
தவறும் பட்சத்தில் புலிகளின் எண்ணிக்கை மட்டும் உயர்ந்து கொண்டே இருக்கும்..
பூர்வகுடிகள் எங்குமில்லாம வாழ்வொழிந்து அழுந்து போகலாம்.
வாழும் மூதாதையர்கள்
முனைவர். அ.பகத்சிங்
உயிர் பதிப்பகம்.
கருப்பு அன்பரசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *