தடுப்பூசியும் காப்புரிமையும் – பேரா.பிரபாத் பட்நாயக் | தமிழில் : எஸ்.சுகுமார்கோவிட் 19 தொற்றுநோய்க்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டு அங்கீகாரம் கொடுப்பதற்கு முன்னரே அக்டோபர் 2, 2020ல் இந்தியாவும் தென் ஆப்ரிக்காவும் இந்த தொற்றுநோய்க்கான புதிய கண்டுபிடிப்பு மருந்திற்கு காப்புரிமை என்ற சட்டத்திலிருந்து விதிவிலக்கு கொடுக்கப்பட வேண்டும் என்று உலக வர்த்தக சபையிடம் முறையிட்டன. பின்னர் இந்த கோரிக்கையினை 100 நாடுகள் ஆமோதித்தன. எப்போதும் காப்புரிமைக்காக வாதாடும் அமெரிக்கா, கருத்தொற்றுமை மூலம் உலக வர்த்தக சபையில் ஒப்பந்தம் ஏற்படும் வரை காத்திருந்து, கோவிட் 19 தடுப்பூசிக்கான காப்புரிமை தளர்வு தேவை என்று 2021 மே மாதம் 5ம் தேதி தான் கோரிக்கை விடுத்தது.

இன்று உடனடியாக தடுப்பூசி உற்பத்திக்கு இந்த விதிவிலக்கு தேவை என்பதை உணர்ந்ததினாலே இவ்வாறு கூறப்படுகிறது. ஒரு மருந்திற்கான காப்புரிமை என்பது அது சந்தையில் கால வரையறையின்றி தட்டுப்பாட்டினை ஏற்படுத்தும், அதனால் அந்த மருந்தினை கண்டறிந்த நிறுவனமானது மிக அதிக விலையில் விற்று தான் அதற்காக செலவழித்ததை ஈடுகட்ட வழிவகுக்கிறது, ஆனால் மருந்திற்கான தட்டுப்பாடானது அந்த மருந்தினை வாங்க வழியில்லாமல் செய்கிறது என்பதை உலகம் உணர்ந்திருக்கிறது. உலகில் பல லட்சம் உயிர்கள் பலியாவதைத் தடுப்பதானது நிறுவனத்தின் லாபத்தினை விட முக்கியத்துவம் பெறுகிறது. ஆகவே தடுப்பூசிகளுக்கான காப்புரிமை என்பது கூடாது.யாருடைய பணம்?

கோவிட் தடுப்பூசியினை கண்டுபிடிக்க இந்த மருந்துநிறுவனங்கள் தங்களின் சொந்தப் பணத்தை முதலீடு செய்யவில்லை, அரசுகள் வருமானமாகப் பெறும்வரிகளிலிருந்து இவைகளுக்கு நிதி அளிக்கப்படுகிறது. ஆஸ்ட்ரா ஜெனகா நிறுவனம் உற்பத்தி செய்த (கோவிஷீல்ட் என்ற) தடுப்பூசியினை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆராய்ச்சி செய்தது. இதற்கு பிரிட்டிஷ் அரசுதான் முதலீடு செய்துள்ளது. அதே போன்று மாடர்னா என்ற அமெரிக்க நிறுவனத்தின் தடுப்பூசிக்கு அமெரிக்க அரசு அதன் வரியிலிருந்து நிதி கொடுத்துள்ளது (எப்படி இந்திய அரசானது கோவாக்சின் தடுப்பூசிக்கு அரசின் நிதி ஒதுக்கீட்டிலிருந்து கொடுத்துள்ளதோ அப்படியே). எனவே, இந்த நிறுவனங்கள் கண்டுபிடிப்புகளுக்கு தாங்கள் செலவிடுவதாக கூறுவது போலியானதாகும், அதுதங்களின் லாப சுயநலனுக்கான வழியேயன்றி வேறில்லை. உண்மையில் அரசுகள் மக்களின் வரிப்பணத்தைத்தான் இதற்கு செலவிடுகின்றன.

இருப்பினும் மக்களின் வரிப்பணத்தினால் கண்டுபிடித்தாலும், உற்பத்தி செய்வதற்கு செலவிடுவதை மீட்டெடுக்க இந்த நிறுவனங்களுக்கு உரிமை இல்லையா என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. இதற்கு ஒரே பதில் அந்த நிறுவனங்கள் இத்தகைய உற்பத்திக்கு போதுமான லாபத்தினை ஈட்டுகின்றன, காப்புரிமை வேண்டும் என்று வாதிடுவதே அதீத லாபத்திற்காகத்தான், காப்புரிமை இல்லை என்றால் பல நிறுவனங்கள் இந்த மருந்தினை உற்பத்தி செய்து சந்தைக்கு கொண்டு வந்துவிடும்; மேலும் புதிய நிறுவனங்கள் இந்த ஊசியினை உற்பத்தி செய்ய முதலீடு செய்யும் (இதுதான் சரியான முறையும் கூட) புதிய நிறுவனங்களுக்கே லாபம் கிடைத்திடும் என்றால்பழைய நிறுவனங்கள் லாபம் ஈட்டாமலா இருக்கும்? எனவே இந்த கோவிட் தடுப்பூசிகளுக்கு காப்புரிமை அவசியம் என்பது ஒரு போலியான வாதமாகும். பன்னாட்டு நிறுவனங்களின் காப்புரிமைக்கான வாதத்தின்பின்னணியில் எவ்வளவு கொள்ளை லாபம் அடிக்க முடியும் என்ற நோக்கம்தான் உள்ளது. இந்த தடுப்பூசியினை இலவசமாக அனைத்து நாடுகளும் வழங்குவதால் (இந்தியாவில்தான் நிலைமை வேறு) இந்த லாபம் மக்கள் தலையில் விழவில்லை, ஆனால் இத்தகைய லாபம் அரசின் நிதிநிலையின் மீது தாக்கம் செலுத்துகிறது. அரசு இலவசமாக கொடுத்தாலும் அந்த தொகையின் தாக்கம் மக்கள் மீதுதான் மறைமுகமாக விழுகிறது. இத்தகைய கொள்ளை லாபம் என்பது எவ்வளவு தெரியுமா? பைசர்என்ற அமெரிக்க நிறுவனம் இந்த 2021 முதல் காலாண்டிலேயே 3.5 பில்லியன் டாலர் கொள்ளை லாபம் அடித்துள்ளது(1 பில்லியன் = 100 கோடி. இன்று ஒரு டாலர் ரூ.75க்கு சமம்).நான்கு வழிகள்

இத்தகைய தனியார் நிறுவன கொள்ளை லாபத்திற்கான காப்புரிமை வேண்டாம் என்றாலும் (ஏனெனில் அரசு இதற்கான முதலீட்டினை செய்துள்ளது) அரசு செய்தமுதலீட்டிற்கு வருவாய் தேவைதானே, அதற்கு காப்புரிமை அவசியமாகிறதே என்ற வாதமும் முன் வைக்கப்படுகிறது. இதற்கு நான்கு வழிகளில் பதில் சொல்ல முடியும். முதலில் தனியாருக்கு லாபம் ஈட்டுவதைப் போன்றுஅரசுக்கு இந்த லாபம் இன்றியமையாதது இல்லை; ஏனெனில் மக்களின் வரிப்பணத்தில் புதிய கண்டுபிடிப்புகள் ஊக்குவிக்கப்படுகின்றது. மாறாக காப்புரிமை என்றால் அதுஅந்த நாட்டு மக்களுக்கே அதிக விலையில் விற்கப்படும். இது எந்த அளவில் வெளிநாட்டு மக்களை பாதிக்குமோ அதே அளவு உள் நாட்டு மக்களையும் பாதிக்கும்.

இரண்டாவதாக, ஓர் அரசு புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஏன் முதலீட்டினை செய்கிறது என்றால் அது அந்த நாட்டு மக்களுக்கு பயன்படும். இதன் பயன்பாடு யாரையும் விதிவிலக்காக்குவதில்லை, அதாவது அமெரிக்க நாட்டின் கண்டுபிடிப்பு என்றாலும் இந்தியாவில் காப்புரிமை இல்லைஎன்பதால் அமெரிக்க மக்களை எந்த விதத்திலும் பாதிக்கப் போவதில்லை. இந்திய மற்றும் அமெரிக்க மக்களின் உயிர்களை அது பாதுகாக்கும். என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.மூன்றாவதாக, காப்புரிமை இல்லை என்பது பாராட்டுக்குறிய செயலாகும், இந்திய மக்கள் தொற்றுநோயால் பாதிக்கப்படும்போது அமெரிக்க மக்கள் பாதுகாப்பாக இருக்க முடியாது. ஆகவே ஒரு நாட்டின் வரிப்பணத்தில் கண்டுபிடிப்புகளுக்கு முதலீடு செய்வதும், அதுவேறொரு நாட்டில் உற்பத்தி செய்யப்படுவது எந்த விதத்திலும் எந்த நாட்டு மக்களையும் பாதிக்கப்போவதில்லை. அதனால் எந்த நாட்டு நிதியும் வீணாகப்போவதில்லை.

நான்காவதாக, அமெரிக்க மக்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றனர். ஒரு ஆய்வில் அமெரிக்காவின் 69 விழுக்காடு மக்களே கோவிட் தொற்று நோய்க்கு காப்புரிமைகூடாது என்கின்றனர். 27 விழுக்காடு மக்கள் தான் காப்புரிமை வேண்டும் என்கின்றனர். அங்குள்ள இடதுசாரிஜனநாயகவாதிகளும் காப்புரிமைக்கு எதிராக உள்ளனர். இந்த சூழல்தான் அமெரிக்க ஜனாதிபதியை காப்புரிமை விதிவிலக்கினை அறிவிக்க தள்ளியுள்ளது. ஜெர்மனியும் மற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் காப்புரிமையினை ஆதரித்து வலுவாக கூச்சலிடுகின்றன. எனவே இந்த காப்புரிமைக்கான விதிவிலக்கு வெற்றி பெறுவது நிச்சயமில்லை. சில வெறுப்பு வேதாந்திகள் ஜோ பைடனின் முடிவின் பின் சில திட்டமிட்ட ஆதாயங்கள் உள்ளன என்றும் இது தெரிந்தே செய்யப்பட்டது, இதில் ஒரு வித்தியாசமுமில்லை என்கின்றனர். உலக வர்த்தக சபைகூட்டத்தில் இதைப்பற்றிய விவாதம் நெடுநாட்கள் தொடரும்,இந்த காப்புரிமை விதிவிலக்கிற்கு வரும் காலத்தில் பல இடர்பாடுகள் எழும்.இந்தியா ஆதரிப்பது ஏன்?

அமெரிக்காவின் இந்த காப்புரிமைக்கான இடைக்கால விதிவிலக்கு அறிவிப்பை நாம் வரவேற்கிறோம், (உண்மையில் பெரிய அளவு நோய்க்கான எந்த மருந்திற்கும் காப்புரிமை கூடாது) அதே நேரம் நாம் இந்த நிலையினை கண்டு ஆனந்தப்படவில்லை. ஏனெனில் இன்று கோவிட் தொற்றானது இரண்டாவது மற்றும் மூன்றாவது அலைகள் என தொடர்கிறது. இதற்கு மாற்று என்னவெனில் இந்ததடுப்பூசியினை கட்டாய உரிமம் முறையில் உற்பத்தி செய்ய வழிவகை செய்வதுதான். இந்த முறை “தேசிய அவசரநிலை காலம்” என்று சட்டத்தால்; உலக வர்த்தக சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆகவே யாராலும் இந்தியா இந்த “தேசிய அவசரகால நிலை” என்ற பிரிவு சட்ட முறைப்படி தனக்கு வேண்டிய தடுப்பூசியினை உற்பத்தி செய்துகொள்வதை தடுக்க முடியாது. அமெரிக்கா எப்போதும் இந்தகாப்புரிமை முறையினை வலுவாக வலியுறுத்தியே வந்துள்ளது, இருப்பினும் இந்த கோவிட் தொற்று நோய்க்கான காப்புரிமை விதிவிலக்கிற்கு ஆதரவு கொடுத்துள்ளது. ஆனால் இந்திய அரசோ காப்புரிமைக்கு ஆதரவாக பேசுவது புதிராக உள்ளது.

வெளிநாட்டு தடுப்பூசிகளுக்கு காப்புரிமை இல்லாமல் கட்டாய உரிமம் கொடுப்பது இருக்கட்டும். நம் நாட்டில் அரசின் நிதி ஆதாரத்தால் உற்பத்தி செய்யப்பட்ட கோவாக்சின் தடுப்பூசிக்கு கட்டாய உரிமம் கொடுக்க மைய அரசு மறுக்கிறது. மாறாக கோவாக்சின் தடுப்பூசிக்குஏகபோக உரிமை கொண்டாடும் பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு பொது மக்கள் நிதியிலிருந்து – (ரூ.1,500 கோடி)உற்பத்தி விரிவாக்கத்திற்கு என்ற பெயரில் கொடுக்கப்பட்டுள்ளது. அதே போன்று ஏகபோக உரிமை உள்ள சீரம்இன்ஸ்டிடியூட் நிறுவனத்திற்கு கோவிட்ஷீல்ட் உற்பத்திவிரிவாக்கத்திற்கு அரசின் நிதி ரூ.500 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. இது இதுவரை கடந்த நூற்றாண்டில் நாம் பார்த்திராத ஒன்று. இது, ஏகபோக நிறுவனத்திற்கு சார்பாக செயல்பட்டு, தொற்று நோயால் பாதிக்கப்படும் மக்களின் நலனைஓரங்கட்டும் அரசின் செயலைத்தவிர வேறு என்ன?

https://peoplesdemocracy.in/2021/0516_pd/patents-versus-people

தீக்கதிர் நாளிதழ் – மே 21, 2021