நூல் அறிமுகம்: ஷாலின் மரிய லாரன்ஸ் “வடசென்னைக்காரி” – கதிரவன் ரத்தினவேலு



ஷாலின் எனக்கு முகநூலில்தான் அறிமுகம். சொல்லப் போனால் முதலில் மதிமுகம் சேனலுக்கு அவர் கொடுத்த பேட்டியைப் பார்த்த பிறகே அவரது புத்தகங்களைப் பற்றி அறிந்து கொண்டேன். கடந்த ஜனவரி சென்னை புத்தகத் திருவிழாவில் உயிர்மை அரங்கில் அவரது இரண்டு புத்தகங்களையும் வாங்கி வந்தேன். இரண்டாவது புத்தகமான ஜென்ஸி ஏன் குறைவாகப் பாடினார்? என்பதைத்தான் சிறிய புத்தகம் என்பதால் முதலில் வாசித்தேன். மிகவும் பிடித்திருந்தது. அடுத்து இந்த புத்தகம்.

முதலில் அட்டைப்படத்தைப் பாருங்கள். வடசென்னைக்கு அடையாளமே இந்த சிரிப்புதான். மெட்ராஸ் படத்தின் துவக்கத்தில் சென்னை வடசென்னை என்ற பாடலை பாருங்கள், விதவிதமான வெகுளித்தனமான சிரிப்பை வரிசையாகக் காட்டிருப்பார்கள்., இந்த படத்தில் இருப்பவர் கூட கார்த்தியின் அம்மாவாக வருபவர்தான். எனக்கு அட்டைப்படம் மிகவும் பிடித்திருக்கிறது. அதிலும் பின்பக்க படத்தில் “ஷாலின் நீங்க ரொம்ப அழகா இருக்கிங்க” இதை நான் மட்டுமில்லை என் பொண்ணும் அடிக்கடி சொன்னது.

அடுத்து இது என்ன வகை புத்தகம் என்றால் இது ஒரு கட்டுரைத் தொகுப்பு. எது குறித்த கட்டுரைகள் என்றால் சமூக நீதி குறித்தவை. முதலில் சமூக நீதி என்பதற்கான அர்த்தம் பலருக்குப் புரிவதில்லை. அது ஏதோ ஒடுக்கப்பட்ட சாதியினருக்கான சொல்லாடல் என்று நினைக்கிறார்கள். சமூக நீதி என்பது சாதி, மதம், இனம், நிறம், மொழி, பிறப்பிடம், பாலினம் போன்ற காரணங்களால் ஒருவருக்கான வாய்ப்பு மறுக்கப்படுவதற்கு எதிராக, அவர்களின் பிரதிநிதித்துவத்தையும் உறுதி செய்வதுதான் சமூக நீதி. அதற்காகத்தான் இட ஒதுக்கீடு, தனித்தொகுதி, பெண்களுக்கான சலுகைகள் இன்னும் பல. ஆனால் அந்த சமூக நீதி ஏன் தேவைப்படுகிறது? நிகழ்காலத்தில் அதன் தேவையைக் கோரும் விசயங்களைத்தான் மிக அழகாகச் சொல்லியிருக்கிறார்.



முதலில் ஷாலின் தான் ஒரு வடசென்னைக்காரி என அறிமுகமாகும் கட்டுரையிலிருந்தே அவர் யார் என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும். என்னளவில் நான் அறிந்த சிறந்த எம் ஜி ஆர் ரசிகை என்றுதான் முதலில் சொல்வேன். அதன்பின் தான் அவரது மற்ற அடையாளங்கள். சென்னை குறித்து நேரடியாக எந்த வாழ்வனுபவங்களும் இல்லாமல் திரைப்படத்தில் பார்த்து இப்படித்தான் என்ற எண்ணம் இருப்பவர்களுக்கு ஷாலின் காட்டும் சென்னையின் புதிய முகம் படு சுவாரசியமாக இருக்கும்.

சமோசா & மைசூர்பாக் கட்டுரைகளை விட, சியர்ஸ் ஜீசஸ் தான் என்னைப் பயங்கரமாகப் பொறாமை கொள்ளச் செய்தது. உண்மையில் ஆங்கிலோ இந்தியர்கள் பற்றிய எந்த அறிமுகமும் இல்லாத என்னைப் போன்றவர்கள் கட்டாயம் இந்த நுலை வாசிக்க வேண்டும். அவர்களைப் பற்றி சட்டமன்றத்தில் ஒரு நியமன உறுப்பினராக ஆங்கிலோ இந்தியர் நியமிக்கப்படுவார் என்பதுதான் இதுவரை என் அதிகபட்ச அறிதலாக இருந்தது. சியர்ஸ் ஜீஸஸ் கட்டுரையைப் படித்த பின் ஏதோ புதிய உலகத்தைப் பார்ப்பது போல இருந்தது. இதையெல்லாம் ஏன் எந்த படத்திலும் காட்டவில்லை என்று இருந்தது.

மிக முக்கியமானது ஜெய் ஹிந்துக்கு முன்பே தோன்றிய ஜெய் பீம். சமீபத்தில் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கும் அம்பேத்கர் தொடரின் டைட்டில் சாங்கில் “ஜெய் ஜெய் ஜெய் பீம்” என்று வரும். உண்மையில் பலர் ஜெய் பீம் என்பது அம்பேத்கரை வாழ்த்தும் துதி என்று நினைத்திருக்கிறார்கள். ஆனால் அப்படியல்ல. அது அம்பேத்கர் முன்னெடுத்த கோஷம். இதைப் படித்திருந்ததால்தான் வீட்டில் ஜெய் பீமுக்கு என்னால் தெளிவாக விளக்கம் தர முடிந்தது.

ஜெயலலிதாவின் கடைசி நாள், இது அட்டகாசமான ஒரு சிறுகதையாக வந்திருக்க வேண்டிய ஒன்று. அதே போல் தாஜ்மஹால் சில அந்தரங்க குறிப்புகள் கட்டுரையும். ஒரு கட்டுரையில் இரத்தமெல்லாம் கொதிக்கும்படி எழுதி விட்டு, அடுத்த கட்டுரையில் எங்கே ரோஜாப்பூ என்று தேட வைத்து விடுகிறார்.

“மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா” இந்த கட்டுரை எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. நான் பார்த்த ஷாலின் பலரைத் தற்கொலையிலிருந்து கவுன்சிலிங் கொடுத்துக் காப்பாற்றுமளவு தெளிவானவர். மனம் நொந்து கைகளில் முடிந்தளவு தூக்க மாத்திரைகளை அள்ளி விழுங்கியிருப்பார் என்பதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அந்த தருணத்திலிருந்து தான் மீண்டதை அட்டகாசமாக எழுதியிருக்கிறார்.

நான் வடசென்னைக்காரி - Shalin Maria Lawrence | ஒரு படைப்பாளரின் கதை | MadhimugamTV - YouTube
Shalin Maria Lawrence

அப்படியே கற்பனை செய்து கொள்ளுங்கள். தூக்க மாத்திரைகளை விழுங்கி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டவர் கண் விழிக்கையில் பெரியார் மடியில் படுத்திருக்கிறார். பாரதி அவர் கால்களை அமுக்கி விட்டுக் கொண்டிருக்கிறார். தஸ்லீமா நஸ்ரின் அவர் கைகளைப் பற்றிக் கொண்டிருக்கிறார். இந்த இடத்திலிருந்து அவர்களது உரையாடல் துவங்குகிறது. ஒவ்வொருவரும் என்ன சொல்லியிருப்பார்கள் என யூகிக்க முடிகிறதா? இதெல்லாம் பதின்மத்தில் இருக்கும் அனைத்து குழந்தைகளும் வாசிக்க வேண்டிய கட்டுரை.

எம் ஜீ ஆரையும் கலைஞரையும் இப்படி சமமாக இரசிப்பவரைப் பார்க்கையில் அவ்வளவு சுவாரசியமாக இருக்கிறது. அதிலும் எம் ஜி ஆரை பற்றி இதில் விட ஜென்ஸி புத்தகத்தில் சிறப்பாகப் பதிவு செய்து இருப்பார்.

“இசைக்கு யார் ஓனர்?” என்ற கட்டுரையும் மிக மிக முக்கியமானது. தமிழ் மரபு இசையின் மும்மூர்த்திகளான வேதநாயக சாஸ்திரிகள், சாமுவேல் வேத நாயகம் பிள்ளை, ஆப்ரஹாம் பண்டிதர் பற்றி ஏற்கனவே கேள்விப்பட்டு இருந்தாலும் முழு விவரங்களை அறிந்தது இந்த கட்டுரையில்தான். அதிலும் விஜய் ஆண்டனியின் பூர்வீகம் வெகு சுவாரசியம்.

ஒவ்வொரு கட்டுரையைப் பற்றியுமே நிறையச் சொல்லலாம். ஆனால் சிலவற்றையெல்லாம் வாசித்தால்தான் நன்றாக இருக்கும் என்பதால் இத்தோடு நிறுத்தி கொள்கிறேன்.

ஒவ்வொருவரும் அரசியலையும் சமூக அறிவியலையும் புத்தகத்தில் படித்தால் ஷாலின் தனது 35 வருட வாழ்வியலிலேயே அதனை அறிந்திருக்கிறார்கள். அதனால் அவ்வளவு எளிதாக ஒவ்வொரு சம்பவத்துடன் தொடர்புடைய சமூக நீதியை எளிதாக அவரால் விளக்க முடிகிறது.

ஒவ்வொரு கட்டுரையும் எழுந்து நின்று கைதட்டுமளவு முக்கியமான விசயங்களை நறுக்கென்று பேசுகிறது. ஒரு பெண்ணாக, ஒரு சிறுபான்மையினராக, ஒரு சமூக செயல்பாட்டாளராக அவரது அனுபவங்களை மிக மிக எளிமையாக வாசிப்பவருக்குக் கடத்துகிறார்.

குழந்தைகளுக்கு வாழைப்பழத்தில் மருந்தினை மறைத்து வைத்துக் கொடுப்பது போல, யாருக்காவது சமூக நீதி சிந்தனைகளை அவர்கள் அறியாமலேயே அவர்களுக்குள் விதைக்க வேண்டும் என நினைத்தால் தாராளமாக இந்த புத்தகத்தை அவர்களுக்குப் பரிசளிக்கலாம்.

மற்றபடி சமூக நீதி ஆர்வலர்கள், பெண்கள் தவறவிட்டு விடாதீர்கள்.



கட்டுரைத்தொகுப்பு

நூல்: வடசென்னைக்காரி
ஆசிரியர்: ஷாலின் மரிய லாரன்ஸ்
வெளியீடு: உயிர்மை வெளியீடு
விலை: ரூ. 171