Vadinilam Cuddalore Mavatta Varalaru | வடிநிலம்: கடலூர் மாவட்ட வரலாறு

உங்களுடன் கொஞ்ச நேரம் என்ற நூலாசிரியரின் அழைப்பு நம்மை வரவேற்று வடிநிலத்திற்குள் அழைத்துச் செல்கிறது. ஒவ்வொரு பகுதியையும் சுற்றுலா வழிகாட்டிபோல் சுவைபட விவரித்து உடன் வருகிறார் நூலாசிரியர். கதை,கட்டுரை, கவிதைகளை எழுதுவதை விடவும் வரலாறு எழுதுவது கடினம்.
,பெருமளவு உழைப்பைக் கட்டணமாய் வசூலிக்கும். தரவுகள், சான்றுகள், தடயங்கள் கேட்கும், ஏழு ஆண்டுகள் கள ஆய்வுகள் பல செய்து இவற்றைத் திரட்டி இந்நூலை உருவாக்கிப் பெற்ற வெற்றியை ஆசிரியர்.’மாவட்ட வரலாற்றுப் பெட்டகம் தந்துள்ளேன்’ என்று சொல்லிப் பெருமிதம் கொள்கிறார்.

மொத்தம் 140 தலைப்புகளில், 42 தலைப்புகளில் பல்வேறு இடங்களின் தொன்மை,சிறப்பு, தற்போதைய நிலை விவரித்து விட்டு 43 ஆம் தலைப்பிலிருந்து 88 ஆம் தலைப்பு வரையில் மண்ணின் மைந்தர்கள் என்று வாழ்ந்த, வாழும் ஆளுமைகளை அறிமுகம் செய்கிறார்.89 ஆம் தலைப்பு தொட்டு இந்த மாவட்டத்தில் விளைந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரர்களை நினைவூட்டி 106 ஆம் தலைப்பில் மகாத்மா காந்தியின் புனித சாம்பலைத் தென்பெண்ணையாறு கரைத்துக் கொண்டதில் நிறைவு செய்கிறார். ஆன்மீகம் என்று 107 ஆம் தலைப்பு முதல்132 ஆம் தலைப்பு வரை தொன்மைச் சிறப்பு வாய்ந்த இசுலாமிய,கிறித்தவ, இந்து ஆலயங்களுக்கு அழைத்துச் செல்கிறார்.அதன் பின் வரும் தலைப்புகளில் மாமனிதர்களின் கல்லறைகளில் அஞ்சலி செய்ய வைத்து வடிநிலம் நதிகளுக்கு முடிவுரை எழுதி பொன் விளையும் பூமி ஒன்று வளமிழக்கும் முடிவின் துவக்கமாகியுள்ளதை வருத்தத்துடன் பதிவிட்டு. அச்சம் தரும் ஒரு செய்தி இதற்குத் துணைபோகிறது என்று அடையாளம் காட்டி.. இதன் மீட்சிக்கான தீர்வும் சொல்லி விடுகிறார்.

137 ஆம் தலைப்பு- இணைப்பு 1. இல் மாவட்டப் பொது விவரம் சொல்லி,138-இணைப்பு. 2 இல் கடலூர் மாவட்ட விடுதலைப் போராட்ட வீரர்களின் பட்டியலைப் பெயர்,முகவரி, சிறைத்தண்டனை என்ற விவரத்தோடு தருகிறார். 139 ஆம் தலைப்பு- நேதாஜி படை வீரர்களின் வரிசை. 140 ஆம் தலைப்பு- நூல் வடிநிலத்திற்கான ஆதார ஆவணங்களை எடுத்து வைக்கிறது.

கடற்கரை அழகு பற்றிச் சொல்லுகையில்,’பாலாறு கடலில் கலக்கும் இடத்திலிருந்து தென் ஆற்காடு மாவட்ட எல்லையான பரங்கிப்பேட்டைவரை கடற்கரை நீண்டிருக்கும்.என்று எல்லை சொல்லி, ‘மரக்காணம் உப்பங்கழியின் ஓரம் மினுக்கும்வெள்ளி முத்துகளைப் பரப்பி வைத்தாற்போல் காய்ந்த உப்பளங்கள்’
‘தோணிகளும், படகுகளும் செல்லும்போது துள்ளும் ஆற்று மீன்களின் வனப்பும் வளமும் தனிக்காட்சி.

கடந்து வந்த பாதை பற்றி;

நகராட்சித் தெருக்களில் அன்று மின்விளக்குகள் இல்லை, இரும்பினாலான ஒரு கம்பத்தில் விளக்கு இருக்கும், தினமும் மாலையில் நகராட்சிப் பணியாளர் ஒருவர் வந்து திரியிட்டு, எண்ணெய் ஊற்றி ஏற்றுவார், என்பதும், தீயணைப்புத் துறைக்குத் தேவையான நீர் சேமிக்கும் பெரிய தொட்டிகள் நகரின் பலபகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும். மழைக் காலங்களில் பொழியும் மழைநீர் இதில் நிரம்பும்.ஒரு நாளும் தண்ணீர் குறையவே குறையாது. என்பதும், தென்பெண்ணையாற்றுப் பாலத்தைக் கடந்து அருகிலுள்ள புதுச்சேரிக்குச் சென்றுவர கடவுச்சீட்டு தேவைப்பட்டது. என்பதும், தேவனாம்பட்டினம் உப்பனாற்றில் நொச்சிக்காடு,திருச்சோபுரம் போன்ற பல பகுதிகளிலிருந்து சவுக்கு மரங்களும், அடுப்பெரிக்கும் மரக்கரித்துண்டுகளும், சுண்ணாம்பு தயாரிப்பதற்கான சிளிஞ்சல்கள் மற்றும் நெல்மூட்டைகளும் படகிலும் தோணியிலும் வந்து இறக்குமதியாகும். 1970 வரை இச்தச் சிறிய துறைமுகம் இயங்கியது என்பதும் நாம் அறிந்திராத செய்திகளாகின்றன.

ஆட்சியாளர் பெருமை;

ஆங்கில ஏகாதிபத்தியத்தில் அத்தனை பேரும் கொடுங்கோலர் அல்லர், திருப்பாதிரிப்புலியூர் கடைவீதியில் உள்ள,’பான்பரி அங்காடி; உருவாவதற்கு அப்போது ஆட்சியராக இருந்த ,’ஜார்ஜ் பான்பரி’ தனது சொந்தப்பணம் 1100 டாலர்களைத் தந்து உதவியுள்ளார். அவர் பெயர் சொல்கிறது இது.

எண்ணிலடங்கா ஏரி,குளம்,குட்டைகள் இருந்த இடம் தெரியாமல் போனதை வரலாறு சொல்கிறது, ஆனால் நிலக்கரிச் சுரங்கத்தால் தூர்ந்துபோன வாலாஜா ஏரியை கடலூர் மாவட்ட ஆட்சியாளராக இருந்த திரு.ககன்தீப்சிங் பேடி பத்தாண்டு தொடர்முயற்சியால் சுரங்க நிர்வாகத்தை ஏரியை மீட்டெடுக்க வைத்தார் என்கிறார்.

புவியியல் வளங்கள்;

பண்ருட்டிப் பகுதியில் செம்மண்ணும்,திட்டக்குடி, விருத்தாசலம் பகுதிகளில் சரளை மண்ணும், கடலூர்,குறிஞ்சிப்பாடி, பரங்கிப்பேட்டைப் பகுதிகளில் வண்டல் மண்ணும், காட்டுமன்னார் கோவில்,சிதம்பரம் பகுதிகளில் கரிசல் மண்ணும் விரவி வேளாண்மையை மேம்படுத்துகின்றன.

தொழில் வளம்;

முந்திரி, நிலக்கரி, பீங்கான் மற்றும் களிமண் கைவினைப் பொருட்களும் பொம்மைகளும் , செம்பு,பித்தளைப் பாத்திரங்களும், ஈச்சம்பாய்,கோரைப்பாய், பனையோலைப் பொருட்களும், மரவேலைப் பொருட்களும்,தென்னங்கீற்று,கயிறு மற்றும் கைலிகளும் பல வெளிநாடுகட்கு ஏற்றுமதியாகின்றன.
பரங்கிப்பேட்டையில் இரும்பு ஆலை இருந்தது என்றும் அங்கு தயாரான இரும்பு ‘போர்ட்டனோவா இரும்பு ‘ என்று அழைக்கப்பட்டது என்றும் இங்கிருந்து இரும்புக் கம்பிகள் புகழ் பெற்ற லண்டன் பாலத்தை உருவாக்க அனுப்பப்பட்டன என்றும், இன்றும் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ,’ ‘மேட் இன் போர்ட்டனோவா’ என்று பொறிக்கப்பட்ட நினைவுத்தூண் ஒன்று உள்ளதாகவும் சொல்கிறார்.

இலக்கியப் பதிவுகள்;

வீரமாமுனிவர் தாம் இயற்றிய தேம்பாவணிக் காவியத்தை விருத்தாசலத்துக்கு அருகில் உள்ள கோணான் குப்ப தேவாலயத்தில் அரங்கேற்றினார்.
தேவாப்பாடல்களை மன்னன் இராஜராஜன் தில்லைக் கோவிலிலிருந்து மீட்டெடுத்தான்.

பெரிய புராணம் அரங்கேறியது தில்லையம்பலத்தில். வைணவ ஆச்சாரியாரகள் சிலரும்,சுந்தரர்,அப்பர் போன்ற சமயக்குரவர்களும் பிறந்து புகழ்சேர்த்த மாவட்டம் .

கல்விச் சாதனை;

திரு.சாமிக்கண்ணுப் படையாச்சி எனும் பெருந்தகையாளர் தென் ஆற்காடு மாவட்ட நாட்டாண்மைக் கழகத்தலைவராகப் (தற்போது மாவட்ட ஆட்சியருக்கு நிகரான) பொறுப்பேற்றபோது காமராஜர் முதலமைச்சராக் இருந்தார். இவர் கிராமந்தோறும் செல்லும்போதெல்லாம் அவ்வூரில் பள்ளி இல்லையென்றால் உடன் பள்ளியைத் தொடங்கச் சொல்லிவிடுவார்.அவ்வூரில் அல்லது அருகுள்ள ஊரில் எஸ். எஸ், எல்.சி படித்தவரைத் தேடிப்பிடித்து ஆசிரியராக நியமனம் செய்து விடுவார். கடலூர் வந்தபின் அதிகாரிகளிடம் சொல்லி ஆணைகளை வழங்கி விடுவார். ஒருங்கிணைந்த தென்ஆற்காடு மாவட்டத்தில் உள்ள 70 விழுக்காடு உயர்நிலை மற்றும் தொடக்கப் பள்ளிகள் இவரால் தொடங்கப்பட்டவையே என்று எடுத்து மொழிகிறார் ஆசிரியர்.

வரலாறு;

கி.பி.11 ஆம் நூற்றாண்டில் முதலாம் இராஜேந்திர சோழனின் கப்பற்படைத் தளங்களாக பரங்கிப்பேட்டையும்,பிச்சாவரம் அருகில் உள்ள தேவிக்கோட்டையும் புகழ்பெற்றிருந்தன என்று மலைக்க வைக்கிறார்.

இங்ஙனம் ஒருங்கிணைந்திருந்த கடலூர் மாவட்டத்தின் வரலாற்றைச் சான்றுகளோடு நிறுவி அரும்பெரும் செய்திகளைத் தொகுத்து இலக்கிய நயத்துடன்,’ வடிநிலம்’ என வடித்து வரலாற்றில் இடம்பிடிக்கும் நூலாசிரியரை வணங்குகிறேன்..

 

நூலின் தகவல்கள்

நூல் : வடிநிலம்: கடலூர் மாவட்ட வரலாறு

ஆசிரியர் : இரா.இராதா கிருட்டினன்

வெளியீடு : பாரதி புத்தகாலயம்

விலைரூ.290

 

நூலறிமுகம் எழுதியவர் 

ஆ.மீனாட்சிசுந்தர மூர்த்தி
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *