வகுப்பறை கதைகள் 3 (Vagupparai Kathaikal) :- பெஸ்ஸி டீச்சரும் அன்வரும் (Bessie Teacher and Anwar Story) - விட்டல்ராவ் | தமிழ் கல்விக் கதைகள்

வகுப்பறை கதைகள் 3 :- பெஸ்ஸி டீச்சரும் அன்வரும் – விட்டல்ராவ்

பெஸ்ஸி டீச்சரும் அன்வரும்

வகுப்பறை கதைகள் – 3

– விட்டல்ராவ்

அன்று தர்மபுரியில் ஒரே ஒரு தனியார் பள்ளிக்கூடம்தான் இருந்தது. ஸ்ரீராம வித்யாசாலா என்ற பெயரில் அது இருந்தது. அப்படிச் சொன்னால் ஊரில் யாருக்கும் சட்டென்று தெரியாது. ஆனால் ‘‘விட்டல்ராவ் ஸ்கூல்’’ என்றால்தான் எல்லாருக்கும் தெரியும். தர்மபுரியில் அது 40-50களில் பரவலாய் அறியப்பட்ட தனியார் ஆரம்பப் பள்ளிக்கூடம். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புவரைதான் அங்கிருந்தன. அதன் தலைமையாசிரியர் துக்காஜிராவ் என்பவர் தக்காஜிராவின் தந்தைதான் விட்டல்ராவ். விட்டல்ராவ்தான் அந்தப் பள்ளிக்கூடத்தை ஆரம்பித்து நீண்ட நாட்களுக்கு தலைமையாசிரியராயிருந்தவர். அதனால் அவர் பெயராலேயே அப்பள்ளிக்கூடம் புகழ்பெற்றிருந்ததோடு அப்பெயராலேயே அழைக்கப்படவுமாயிற்று. அவரது பெயருக்கும் என் பெயருக்கும் எவ்வித சம்மந்தமுமில்லை. நாங்கள் கன்னடம். அவர் மராத்தி, நாங்கள் சைவம். அவர்கள் அசைவம்- கறி, மீன்.

பள்ளிக்கூடத்தை அணைத்தபடியே இருக்கும் திண்ணைகள் கொண்ட ஓட்டு வீடுதான் அவருடையது. எல்லாரும் விட்டல்ராவ் ஸ்கூல் என்றே அழைப்பதை துக்காஜி அவ்வளவாக விரும்பாதவராய் அப்பள்ளியை அதன் பெயராலேயே அழைப்பதைத்தான் விரும்பினார். எனவே காலையில் ஒவ்வொரு நாளும் இறை வணக்கம் முடிந்து மாணவ, மாணவிகள் வகுப்பறைக்குள் வந்தவுடனே அவ்வகுப்பு ஆசிரியர் மாணவர்களை ஒரு கேள்வி கேட்பது தினசரி கட்டாயப் பாடம்.

‘‘உன் பள்ளியின் பெயரென்ன?’’

உடனே மாணவ- மாணவிகள் ஒரே குரலில், ‘‘நான் படிக்கும் பள்ளியின் பெயர், ஸ்ரீராம வித்யாசாலா’’ என கூறியாக வேண்டும். அப்படியும் ஊர்க்காரர்கள் அப்பள்ளியைக் குறிப்பிடுகையில், விட்டல்ராவ் ஸ்கூல் என்று சொல்லுவது மாறவேயில்லை. பள்ளிக்கூடத்தின் கூரை நாழி ஓடுகள் வேயப்பட்டது. நாழி ஓட்டு வீடுகள்தான் ஊரில் அதிகம். நாழி ஓடு வேய்ந்த கட்டிடங்களில் கோடைகாலத்தில் தேள் தொந்தரவு ஏகம். வகுப்பறைகளிலும் சரி, எங்கள் வீடுகளிலும் சரி, எப்போது வேண்டுமானாலும் கூரையிலிருந்து தேள்கள் ‘‘சட்’’டென்ற ஓசையுடன் தரையில் உதிர்ந்து கொடுக்கைத் தூக்கிக்கொள்ளும், என்னை தர்மபுரியில் நிறைய தடவை தேள் கொட்டியிருக்கிறது. தேள்கடி விஷத்தை இறக்க அப்போது இரண்டு வழியை கடைபிடிப்பார்கள். எதிர்வீட்டு சாம்பசிவ ஜோசியர் தன் மேல்துண்டைச் சுழற்றிச் சுழற்றி பாடம் போடுவார். மற்றொரு எளிமையான வழி, உடைந்த கிராமபோன் ரிக்கார்டு தட்டின் சில்லை நீரில் நனைத்து உராய்த்து கடிவாயில் வைத்தால் விஷத்தை உறிஞ்சிவிடும். எங்கள் வீட்டில் உடைந்த கிராமபோன் தட்டுச் சில்லுகள் டப்பா நிறைய இருக்கும்.

அப்பா எங்களுக்கு ஓமலூர் பள்ளியிலிருந்து டி.சி. வாங்கி வரவேயில்லை. ஆனால் விட்டல்ராவ் பள்ளியில் டி.சி. இல்லாமலே எங்களை சேர்த்துக்கொண்டதோடு ஒவ்வொருவரையும் ஒரு வகுப்பு உயர்த்தியே சேர்த்துக்கொண்டார்கள். விட்டல்ராவ் என்று சொல்லக்கூடிய எண்பது வயது மனிதர் திண்ணையில் பிரம்புநார் பின்னிய சாய்வு நாற்காலியில் படுத்துக் கிடப்பார். அவரது மகனும் அந்தப் பள்ளியில் தலைமையாசிரியருமான துக்காஜிராவ் நாற்பது வயதானவர். முரடர், பொத்தான் போடாது திறந்தே கிடக்கும் கோட் அணிந்து கருப்புக் குல்லாய் வைத்திருப்பார். கோட்டை மீறி சட்டையின் கீழ்ப்பகுதி வெளியில் வந்திருக்கும். வேட்டி- கோட்டு- கருப்புக் குல்லா என்பது அன்றைய ஃபாஷன்.

அன்றைக்கு பியாரிஜானை இறைவணக்கம் முடிந்து முதல் மணியடித்தும் காணோம். அவனப்பா தர்மபுரியில் பெரிய ஜவுளி வியாபாரி. பியாரிஜான் சிகப்பாய் ஒல்லியாயிருப்பான். வெள்ளை வெளேரென்று உடுத்தி சிவப்புக் குல்லாயணிந்திருப்பான். ‘‘ழ’’ எங்கெங்கு வருகிறதோ அந்தச் சொல்லை உச்சரிக்கும்போது ‘‘ழ’’- வை ‘‘ஷ’’ – என்றுதான் அவனால் உச்சரிக்க முடிந்தது. குழந்தை- குஷந்தையாகவும், பழம்- பஷமாகவுந்தான் அவன் நாக்கில் வரும். சிலசமயம் அவனப்பா அவனை காரிலேயே கொண்டுவந்து விட்டுப்போவார். என்னமோ, இன்றைக்கு இன்னும் காணோம். பிள்ளைகள் தத்தம் வீட்டுப்பாடங்களை டீச்சரின் மேஜைமீது வைத்ததையடுத்து பெஸ்ஸி டீச்சர் வருகைப் பதிவேட்டைப் பிரித்து ஒவ்வொரு பிள்ளையின் பெயரைக் கூப்பிடவும், ‘‘ஆஜர் சொல்லிக்கொண்டே வந்தனர்.

‘‘பியாரிஜான்?’’

‘‘பியாரிஜான் வர்லே டீச்சர்’’, என்று ஒரே குரலில் பிள்ளைகள் சொன்னார்கள். அதைத் தொடர்ந்து கசமுசவென்னு நீடித்த பிள்ளைகளின் சத்தம் திடீரென்று கப்பென்னு நின்றுபோனது. தலைமையாசிரியர் துக்காஜிராவ் இந்த வகுப்புக்குள் நுழைந்தார். அவருக்குப் பின்னாலேயே பியாரிஜானும் அவன் குட்டித் தம்பியும் வந்தனர்.

‘‘பெஸ்ஸி, இது அன்வர், பியாரிஜான் தம்பி. புது அட்மிஷன். ஒண்ணாவது வகுப்புல உட்காரவச்சா இருக்கமாட்டேங்கறான். அண்ணன்கூடத்தான் இருப்பேனு சண்டித்தனம் பண்ணறான். வீட்ல செல்லம் ஜாஸ்தி. பரவாயில்லே. இங்கேயே இருக்கட்டும். சொல்லிக் குடுங்க. அப்புறமா ஒண்ணாங்கிளாஸ்ல போட்டுக்கலாம்.’’ என்று சொல்லிவிட்டு துக்காஜி போய்விட்டார்.

கையில் புதுப் பலகையைப் பிடித்துக்கொண்டு நீண்ட கல் பலப்பத்தை வாயில் வைத்து சூப்பியபடியே அன்வர் தன் அண்ணன் பியாரிஜானின் சட்டையைப் பிடித்துக்கொண்டிருந்தான். பியாரிஜானின் பக்கமாகவே அன்வரும் உட்கார்ந்து கொண்டான். துக்காஜிராவ் பிள்ளைகளிடம் பள்ளிக்கூட சம்பளம் வசூலிப்பதில் காட்டும் கறார், கண்டிப்பு, கெடுபிடி எதையும் மற்ற விஷயங்களில் காட்டமாட்டார். சிலர் வீட்டில் பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதற்கான வயதுக்கு வராத ஐந்து வயதில் குழந்தைகளிருக்கும். அப்போது குறைந்த வயது ஆறு இருக்க வேண்டும். எல்கேஜி, யூகேஜி விஷயம் கிடையாது. அந்த ஐந்து வயதுக் குழந்தைக்கு மூத்த பையனோ, பெண்ணோ பள்ளிக்கூடத்துக்குப் போகும். அதோடு வீட்டில் சதா சுற்றிக்கொண்டும் விளையாடிக்கொண்டுமிருக்கும் சின்னதும் பெரியதும் பள்ளிக்கூடம் போகையில் தானும் கூடப்போக வேண்டுமென அடம்பிடித்து அழுது அட்டகாசம் பண்ணும். இதைப் பொறுக்க முடியாது அப்பாகாரனோ, அம்மாகாரியோ பள்ளிக்கூடத்துக்கு வந்து தலைமையைக் கெஞ்சி பெரிசுடன் சிறிசையும் உட்கார வைத்துக்கொள்ளக்கேட்பார்கள். அரசாங்கப் பள்ளிகளில் அனுமதிக்காத அந்தச் சலுகையை சில தனியார் பள்ளிகள் முதல் வகுப்புக்கான கட்டணத்தைப் பெற்றுக்கொண்டு பள்ளியில் சேர்த்துக்கொள்ளும். ராமா வித்யாசாலாவில் இது அனுமதிக்கப்பட்டதால் பியாரிஜானும் அன்வரைத் தன்னோடு அழைத்து வந்துவிட்டிருந்தான்.

அன்வரை முதல் வகுப்பில் சேர்த்துக்கொண்டு அதற்கான சகல கட்டணத்தையும் வாங்கிக் கொண்டு, தானே வகுப்புக்கும் வந்து சொல்லி அன்வரை உட்காரவைத்து விட்டுப்போனார் தலைமை. பியாரிஜானின் தம்பி அன்வர் முயல் குட்டிபோல அழகான பையன், தலையில் அழகான குல்லாய். மற்ற பிள்ளைகளுக்கு பாடம் நடத்திவிட்டு பெஸ்ஸி டீச்சர் அன்வரை கவனிப்பாள். ஸ்லேட்டில் ஆனா- ஆவன்னா இரண்டை மட்டும் பெரியதாக எழுதி அதன் மீது பலப்பத்தைக்கொண்டு எழுதச் சொல்லுவாள் பெஸ்ஸி.

‘‘கார் ஓட்டி விளையாட வருமா?’’ என்று கேட்டார் டீச்சர். வரும் என்று தலையாட்டினான் அன்வர்.

‘‘இந்தப் பல்பம்தான் ஒன்னோட கார். இந்த ரெண்டு எழுத்தும் ரெண்டு ரோடு. கார் ஓட்டி விளையாடறப்ப எப்பிடி சவுண்டு குடுப்பே?’’
அன்வர் தயங்கிவிட்டு, ‘‘டுர்ர்ர்’’னு… என்றான். மற்ற பிள்ளைகள் பெரிதாகச் சிரித்தனர்.

‘‘இப்போ எது ரோடு?’’ என்றாள் பெஸ்ஸி. அன்வர் சிலேட்டில் பட்டையாக பெரிய வடிவில் எழுதப்பட்ட ஆனா- ஆவன்னாக்களை- அ-ஆ- சுட்டிக்காட்டினான் அன்வர்.

‘‘குடீ, இங்கே ஒன்னோட கார் எது?’’

தன் பலப்பத்தை தூக்கிக் காட்டினான் அன்வர்.

‘‘வெரி குட்.! இப்ப அந்த ரோட்ல கார் விடு. ஆனா குர்ருனு சொல்லாம, இதில ‘‘அ’’னு சொல்லிட்டே பலப்பத்தை இழுத்துக்கிட்டேயிரு. கொஞ்ச நேரம் போனதும் அந்த ரோட்ல ‘‘ஆ’’னு சொல்லிக்கிட்டே இழுக்கணும். தெரிஞ்சிதா அன்வர்?’’

அன்வர் தலையாட்டிவிட்டு, ‘‘பியாரிஜான்’’என்று குரல் எழுப்பினான்.

‘‘எழுதுடா!’’ என்றான் பியாரி.

முதலில் அன்வருக்கு ரோடும் காரும்தான் மூளையில் நின்றதால், டுர்ர்ரென்று கத்தியபடியே இரு எழுத்துகளிலும் பலப்பத்தை இழுத்தது. அது மூன்றாம் வகுப்பாகையால் பிள்ளைகள் கிடுகிடுவென எழுதுவதையே கவனித்துவிட்டு அ-ஆ-மீது கார் விடுவதை நிறுத்திக்கொண்டு பலகையில் பலப்பத்தால் முட்டை வடிவில் குண்டாலம் போடவாரம்பித்தது. உயிரெழுத்துகள் இரண்டின் மீதும் அவற்றை உச்சரித்தபடி பலப்பம் தேய்ப்பதைவிட மற்றவர்கள்போல எழுதும் விதமாய் குண்டாலங்கள் கிறுக்குவதில் அன்வருக்கு ஆர்வமும் உற்சாகமும் இருந்தது. நிறைய குண்டாலங்கள் போட்டு பலகையே நிறைந்துவிட்டது. மாணவ- மாணவிகள் எழுதி முடித்ததும் டீச்சரிடம் போய்க் காட்டி ரைட் வாங்குவதைப் பார்த்துவிட்டு அன்வரும் எழுந்துபோய், தான் எழுதியதைக் காட்டினான். ஒரு சிறுமி பக்கென்று சிரித்துவிட்டது.

‘‘சிரிக்காதே, வேலையைப் பார். அது குழந்தைப் பையன். அதாச்சும் எழுதறானே, பலப்பத்த சரியா புடிச்சிக்க வருதே, அதே பெரிசு,’’ என்றார் பெஸ்ஸி டீச்சர்.
மறுநாள் பெஸ்ஸி டீச்சர் அன்வரை பியாரிஜானிடமிருந்து பிரித்து உட்கார வைக்கும் முயற்சியிலும், பிற பிள்ளைகளோடு கலந்து அமர வைக்கும் முயற்சியிலும் வேறொரு இடத்தில் உட்கார வைத்தார். சிறிது நேரம் போனதும் அன்வர் அலறினான், ‘‘பியாரிஜான்!’’ என்று .

‘‘கீரே… கீரே அன்வர்?’’ என்றான் பியாரி.

‘‘டோப்பி…’’ என்று கூறிவிட்டு தன் குல்லாவை இரு கைகளாலும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருந்தான் அன்வர். அண்ணன்காரனிடமிருந்து பிரித்து வேறிடத்தில் உட்கார வைப்பதன் மூலம் தன்னம்பிக்கை வளர்ந்து ஒண்ணாம் வகுப்பில் உட்கார அன்வர் சம்மதிப்பான் என்று நினைத்த பெஸ்ஸி டீச்சர் அவனையும் பியாரிஜானையும் வெவ்வேறு இடத்தில் அமர வைத்தார்.

மீண்டும் அன்வரின் அலறல் கேட்டது, ‘‘பியாரி, டோப்பி.’’ டீச்சர் தலையுயர்த்திப் பார்த்தார்.

அன்வருக்கு பின்பக்கப் பலகையில் உட்கார்ந்திருக்கும் கரீம், அன்வரின் குல்லாவை எடுத்து தன் தலையில் வைத்துக்கொண்டிருந்தான். கரீமுக்கு அவனப்பா குல்லாய் வாங்கிக் கொடுக்கவில்லை. சிறிது வளர்ந்த ரோமம் கொண்ட தன் மொட்டைத் தலைக்கு அன்வரின் அழகிய குல்லாவை எடுத்து போட்டுக்கொண்டிருந்தான். டீச்சர் கரீமை அதட்டி எச்சரித்து குல்லாவைத் திருப்பித் தர வைத்தார்.

‘‘அன்வர்! வா இங்கே’’ என்றார் பெஸ்ஸி.

அன்வர் தயங்கியது. டீச்சர் மீண்டும் அன்போடு அழைக்கவும் அன்வர் தன் பலகை பல்பத்தோடு எழுந்து வந்து நின்றான். டீச்சர் பையனைத் தடவிக்கொடுத்துவிட்டு தனது அகன்ற மர நாற்காலியின் ஓரமாய் அன்வர் உட்கார தன்னை ஒதுக்கிக்கொண்டு, ‘‘உட்கார், எம் பக்கத்தில உட்கார்’’, என்றார். அன்வர் தயங்கி நின்றான்.

‘‘உட்காரு, பயப்படாதே, உட்காரு’’

அன்வர் நாணிக்கோணி உட்கார்ந்தான்.

‘‘இப்ப எழுது’’, என்றார் பெஸ்ஸி.

அன்வர் தன் பலகையில் குண்டாலம் போட்டது.

அன்வருக்கு டீச்சர் பக்கத்தில் உட்கார்ந்திருப்பது பாதுகாப்பாக இருந்தது. செளகரியமாயுமிருந்தது. தனக்கு முன்னால் இருபத்தைந்து பிள்ளைகள் உட்கார்ந்திருப்பதில், டீச்சர் பக்கத்திலிருந்து அவர்களைப் பார்ப்பதில், அவர்கள் டீச்சரை அண்ணாந்து பார்க்கும்போதெல்லாம் தன்னையும் அண்ணாந்து பார்ப்பதில் அன்வருக்குப் பெருமையாக இருந்தது. ஆனால் குண்டாலம் போடுவது நிற்கவில்லை.

சில நாட்களில் பெஸ்ஸி டீச்சர் வகுப்புக்கு வருவதில் தாமதமாக நேரிடும். பக்கத்து வகுப்பறை முதல் வகுப்பு. அதன் ஆசிரியரான ரஞ்சிதம் தலைமையாசிரியரின் அனுமதி பெற்று அரைமணி நேரம் தாமதமாக வந்து கொண்டிருந்தார். அதனால் முதல் வகுப்பில் வருகைப் பதிவையும் ஓரிரு ஆரம்பப் பணிகளையும் கவனித்துக்கொள்ளும்படி பெஸ்ஸிக்கு கூடுதல் பொறுப்பை வழங்கியிருந்தார் துக்காஜிராவ். அன்வர் வகுப்பாசிரியரின் நாற்காலியில் அமர்ந்து குண்டாலம் போடத் தொடங்கும். பிள்ளைகளில் சிலர், ‘‘குட்மார்னிங் டீச்சர்!’’, என்று கூறி அன்வரை கேலி செய்தால் அன்வரும் டீச்சர் மாதிரியே அவர்களைப் பேசாமலிருக்கும்படி உருதுவில் ‘‘சுப்.. சுப்.’’ என்று கத்துவான்.

கிறிஸ்துமஸ் சமயம். பெஸ்ஸி டீச்சர் தொடர்ந்து பத்து நாட்களுக்கு வரமாட்டார் என்பதால் முதல் வகுப்பு ஆசிரியர் ரஞ்சித்தையே மூன்றாம் வகுப்பையும் பார்த்துக்கொள்ளும்படி துக்காஜி ஏற்பாடு செய்திருந்தார். ரஞ்சிதம் கொஞ்சம் சிடுசிடு. ஒண்ணாங்கிளாஸ் பிள்ளைகளுக்கு அவர் லாயக்கில்லை. பெஸ்ஸியின் மூன்றாம் வகுப்பை எடுத்துக்கொள்ளுவதில் அவருக்கு பரம சந்தோஷம். ரஞ்சிதம் நடுத்தர வயது. முதல் நாள் வரும்போதே அவர் தன் நாற்காலியில் அன்வர் உட்கார்ந்திருப்பதைப் பார்த்ததும் திடுக்கிட்டார்.

‘‘டேய்! எந்திரி. உம் பேரென்ன? இதிலேயெல்லாம் உக்காரக்கூடாது. போ, அங்கே போய் உக்காரு. யாரிது பையன் ஒண்ணாங்கிளாசுக்குப் போறதுக்கு, இங்கே வந்திருக்கு?’’ என்றார் அதட்டலாக ரஞ்சிதம் டீச்சர்.

அன்வர் போகாமல் அங்கேயே உட்கார்ந்து புதிய ஆசிரியைப் பார்த்து விழித்துவிட்டு பலகையில் குண்டாலம் போடத் தொடங்கியது. பியாரிஜான் அன்வரை அழைத்தான்.

‘‘அன்வர், இதர் ஆவ்..’’ என்று சொல்லிவிட்டு ஆசிரியையிடம், ‘‘எந்தம்பிதான் டீச்சர். ஹெட்மாஸ்டர் என்னோடயே இருக்க வச்சிருக்காரு’’ என்றான்.

‘‘உன்னோட தம்பிதானா?’’ என்றார் டீச்சர்.

இப்போது பிள்ளைகள் அன்வரை தலைமையாசிரியர் அங்கு உட்கார வைத்திருப்பதை ஒரே குரலில் உரக்கச் சொன்னார்கள்.

‘‘இருக்கட்டும். ஆனா, டீச்சர் சேர்லயெல்லாம் உட்காரக்கூடாது, தெரிஞ்சுதா? போ, அங்க போய் உக்காந்து எழுது. அப்படியெல்லாம் கிறுக்காதே. சிலேட்டைக் கொண்டா’’ என்ற ரஞ்சிதம் அன்வரின் பலகையில் அ-ஆ- இரண்டையும் எழுதி அதன் மீது பலப்பத்தால் இழுத்துக் கொண்டேயிருக்கும்படி சொன்னார்.

‘‘டீச்சர், அவனுக்கு எழுத வராது, முட்டைதான் போடுவான்’’ என்றாள் ஒரு சிறுமி.

‘‘என்னமோ போடட்டும்’’ என்று சொன்ன ரஞ்சிதம் அப்பவும் அன்வர் தயங்கவும், அவன் கையைப் பிடித்து தூக்கி நாற்காலியிலிருந்து இறக்கிவிட்டு போகச் சொன்னார் ரஞ்சிதம். அன்வர் அழத் தொடங்கினான். பியாரிஜான் எழுந்து வந்து அன்வரைத் தேற்றி அழைத்துப் போனான்.

மறுவாரம் பெஸ்ஸி டீச்சர் வந்துவிட்டார். மதிய உணவு இடைவேளையில் ரஞ்சிதத்தையும் பெஸ்ஸியையும் தன் அறைக்கு அழைத்து சிறிது நேரம் பேசினார் தலைமையாசிரியர் துக்காஜிராவ். அவர்கள் இருவரும் தலையை ஆட்டிக்கொண்டு வெளியில் வந்தவுடன் தத்தம் வகுப்புகளுக்குள் நுழைந்தனர். பெஸ்ஸி டீச்சர் நாற்காலியில் அமர்ந்ததும் அன்வரைக் கண்களால் தேடினார். அவன் வேறொரு இடத்தில் அமர்ந்து அ-ஆ-மீது பலப்பத்தால் இழுத்துக்கொண்டிருந்தான். முட்டைகள் கிறுக்கவில்லை.

‘‘அன்வர்! வா இங்கே’’, என்றழைத்தார் பெஸ்ஸி. அன்வர் எழுந்து வந்துவிடாமல் விழித்துப் பார்த்தான்.

‘‘என்னாச்சி?’’ என்றார் பெஸ்ஸி.

ஒரு சிறுமி எழுந்து நின்று கைகளைக்கட்டி நடந்ததை ஒப்பித்தது. பெஸ்ஸி எழுந்து வந்து அன்வரைத் தடவிக்கொடுத்து எழுந்து வரச் சொன்னபோது அவன் மாட்டேன் என்று தலையாட்டினான்.

‘‘இங்கேயே இருக்கியா?’’ என்று கேட்கவும் சரியென தலையாட்டினான்.

மறுநாள் காலை, பெஸ்ஸியுடன் ரஞ்சிதமும் வந்தார். பெஸ்ஸி டீச்சர் பிள்ளைகளைப் பார்த்துக் கூறினார்:

‘‘இனிமே, உங்க கிளாசுக்கு இவங்கதான் கிளாஸ் டீச்சர். நான் பக்கத்து ஒண்ணாங்கிளாஸ் டீச்சர். எங்கே எல்லாரும் ஒரு தபா கைதட்டி வணக்கம் சொல்லுங்க.’’

வணக்கம் சொல்லி கைதட்டல் அடங்கிற்று. ஆசிரியைகள் இருவரையும் வகுப்பு மாற்றம் செய்த துக்காஜி வரவில்லை. பெஸ்ஸி ரஞ்சிதத்திடம் ஒப்படைக்க வேண்டியவற்றைச் செய்துவிட்டு மூன்றாம் வகுப்புப் பிள்ளைகளிடம் விடை பெற்றுக்கொண்டு வெளியேறுகையில் திடீரென நினைத்துக் கொண்டு திரும்பி ஒரு முறை பார்த்தார்.

அன்வர் தன்னையே பார்த்தபடி எழுந்து நின்றதைக்கண்டு பெஸ்ஸி, ‘‘அன்வர்! வா, நம்ம கிளாசுக்குப் போலாம்’’ என்றாள். அன்வர் தயக்கம் எதுவுமின்றி அவளோடு சேர்ந்து வெளியேறுகையில் பியாரிஜானிடம்கூட சொல்லிக்கொள்ளவில்லை. அன்வரைக் கையைப் பிடித்து அழைத்துச் சென்ற பெஸ்ஸி, ‘‘இங்கே உட்கார். உட்கார்ந்து அ, ஆ எழுது’’ என்று சொல்லி, சிறுமிகள் பக்கமாய் முதல் வரிசையில் உட்கார வைத்தார். அன்வர் வாய் திறந்து சொல்லிக் கொண்டே எழுதவாரம்பித்தான்.

எழுதியவர்:-

கி. விட்டால் ராவ் - தமிழ் விக்கிப்பீடியா

✍🏻 விட்டல்ராவ்

முந்தைய தொடரை வாசிக்க:-  “வகுப்பறைக் கதைகள்” (Vagupparai Kathaikal) – 2 | காந்தி கணக்கு – எழுத்தாளர் விட்டல்ராவ்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *