வகுப்பறை கதைகள் 4 :- ஓடிப் போனவன்- விட்டல்ராவ்

வகுப்பறை கதைகள் 4 :- ஓடிப் போனவன்- விட்டல்ராவ்

வகுப்பறைக் கதைகள் – 4

 

4. ஓடிப் போனவன்

– விட்டல்ராவ்

அன்றைக்கு அம்மாதத்தின் பதினைந்தாம் தேதி. விட்டல்ராவ் பள்ளிக்கூடத்து பியூன் சக்கரை ஒவ்வொரு வகுப்புக்கும் வந்து ஒரு காகிதத்தை வகுப்பு ஆசிரியரிடம் கொடுத்து விட்டுப்போனார். அவ்வாறு பிரதி மாதமும் அவர் ஒவ்வொரு வகுப்பாசிரியரிடமும் பதினைந்தாம் தேதியன்று பதினோறு மணிக்கு அப்படியொரு சீட்டைக் கொடுத்துவிட்டுப் போவதென்பது பியூன் சக்கரைக்குண்டான ‘‘டூட்டி’’களில் ஒன்று. அந்தச் சீட்டைக் கொடுத்துவிட்டு வகுப்பைவிட்டு வெளியேறுமுன் வகுப்புப் பிள்ளைகளை ஒரு மாதிரி பார்த்துவிட்டே வெளியேறுவார் சக்கரை. மாணவர்களிடையே சிறு சலசலப்பும் குசுகுசுப்பும் அச்சமயம் தவறாது ஏற்படும். ரஞ்சிதம் டீச்சர் அந்தக் காகிதத்திலுள்ள பெயர் பட்டியலைப் படிக்கத் தொடங்கினார். சலசலப்பு அதிகரித்து சற்று உரத்து கேட்கும்.
‘‘பேர் படிக்கிறேன். அந்தப் பேர்க்காரங்க மட்டும் எழுந்து நில்லுங்க’’, என்றார்.

அந்தப் பெயர்ப்பட்டியல் பள்ளிக்கூட அலுவலகத்திலிருந்து அலுவலக குமாஸ்தா தயாரித்து ஒவ்வொரு வகுப்பிற்கும் அனுப்பியிருப்பது. பியூன் சக்கரை 15-ம் தேதி வந்தால், தானே அலுவலக குமாஸ்தாவுக்கு நினைவுபடுத்தி, ‘‘சார், இண்ணிக்கு தேதி பதினஞ்சு’’ என்பார். குமாஸ்தாவுக்கான வேலைகளில் முக்கியமானதொன்றான அதை பியூன் நினைவூட்டுவதும் கணக்கில் வராத முக்கிய டூட்டியாக சக்கரையாகவே எடுத்துக் கொண்டதாகும். இதனால் பள்ளிக்கூட குமாஸ்தா-பியூன் நட்புறவில் ஒரு நெருக்கம் கூடியிருந்தது.
ரஞ்சிதம் டீச்சர் பெயர்ப்பட்டியலைப் படித்து முடிக்கையில் கடைசியாக என் பெயரும் அதில் இருந்து, டீச்சர் அதைப் படிக்கும்போது மட்டும் தலையை நிமிர்த்தி ஓரிரு கணங்களுக்கு என்னையே பார்த்தார். நானும் விழித்தபடி எழுந்து நின்றேன்.

‘‘நீங்கெல்லாம் சம்பளம் கட்டலேனு சீட்டு அனுப்பிச்சிருக்காங்க’’ என்றார் ரஞ்சிதம் டீச்சர்.
‘‘எனக்கு எங்க அண்ணன் கட்டிட்டான் டீச்சர்’’ என்றேன் நான்.

‘‘அதென்னமோ, உம் பேருமிருக்கே. சரி, எல்லாரும் வீட்டுக்குப் போய் பணம் வாங்கிட்டு வந்து கட்டிட்டு வகுப்புக்கு வாங்க. புஸ்தகப் பைய எடுத்திட்டுப் போங்க’’ என்றார் வகுப்பாசிரியர்.

புத்தகப் பையோடு தளர்ந்துபோன கதியில் வெளியேறும் மாணவன் ஒவ்வொருவனும் ஒருவித அவமான உணர்வோடு வெளியேறினான். உற்சாகம் குறைந்து தண்டனை எதையோ சுமக்கும் உணர்வோடு.
தனியார் பள்ளிக்கூடத்தில் படிப்புக்கான மாதக் கட்டணத்தை ‘‘சம்பளம்’’ என்று சொல்லுவார்கள். ‘‘சம்பளம் கட்டி படிக்க வைக்கிறாங்க அவங்க பசங்களெ’’ என்று குறிப்பிடுவதில் பிறருக்குள்ள இயலாமையோடு ஆற்றாமையும் பொறாமையும் இணைந்திருக்கும். மாதா மாதம் பள்ளிக்கூடச் சம்பளம் பதினைந்து தேதிக்குள் கட்டியாக வேண்டும். கட்டினவுடனே சம்பளம் கட்டியதற்கான ரசீதை கைமேல் கொடுத்துவிட மாட்டார்கள். அதற்கு ஓரிரு நாட்கள் பிடிக்கும். ரசீதுகளையும் சக்கரை வகுப்புக்கு வந்து வகுப்பாசிரியரிடம் தந்துவிட்டுப்போக, ஆசிரியர் பெயர் சொல்லியழைத்து பையன்களுக்கு ரசீதுகளை வினியோகிப்பார். இருபத்தைந்து தேதிக்குள்ளும் சம்பளம் கட்டாத பிள்ளைகளின் பெயர்களை வருகைப் பதிவேட்டிலிருந்து அடித்துவிடுவார்கள். மீண்டும் சம்பளத்தோடு, புதிதாகச் சேர்கையில் கட்ட வேண்டிய நுழைவுக் கட்டணத்தொகையையும் சேர்த்து வசூலிப்பார்கள். இந்தப் பெயர் நீக்கம் என்பது ஒரு கட்டத்தில் கடுமையான நடவடிக்கை என்பதால் இச்செயல் தலைமையாசிரியர் துக்காஜிராவின் மேற்பார்வையில்தான் நடக்கும். அச்சமயம் அவர் தமக்கு மிகவும் வேண்டப்பட்டவர்களின் பிள்ளைகளின் பெயர்களைக் கண்டுவிட்டால், அவர்களின் பெற்றோர்களை உடனடியாகத் தொடர்புகொண்டு எடுத்துச் சொல்லி பணம் கட்டவைத்து விடுவதுமுண்டு. அட்மிஷன் கட்டணம் கட்டுவதைத் தவிர்க்கச் செய்வார் துக்காஜி.

எனக்கு மூன்றாம் வகுப்பிற்கு மாதச் சம்பளம் ஆறணா. அக்கா நாலாம் வகுப்புக்கு எட்டணா. அண்ணா ராமு ஐந்தாம் வகுப்பு. அவன் பத்தணா சம்பளம் கட்ட வேண்டும். அக்கா மோகனா துடுக்கானவள். தன் வகுப்புச் சம்பளத்தை தானே கட்டிக்கொள்ளுவாள். அப்பா, ராமுவிடம் ஒரு ரூபாயாகக் கொடுத்து எனக்கும் அவனுக்குமாய் சம்பளம் கட்டிவிடச் சொல்லுவார்.

அம்மா திரும்பத் சிரும்ப ராமுவிடம் சொன்னாள், ‘‘பத்திரம், பத்திரம்’’, என்று ஒவ்வொரு முறையும் அம்மா எச்சரிக்கை விடுவாள்.

‘‘நிக்கர் ஜோபி ஓட்டையா பாருடா, போனவாரம் துவைக்கறப்போ ஒரு ஜோபி ஓட்டையாயிருந்திச்சி.’’
‘‘அது இந்த நிக்கரில்லேம்மா, வேறே’’ என்றான் ராமு.

மாலை பள்ளிக்கூடம் விட்டதும் வழக்கம்போல வெளியில் காத்திருக்கும் ராமுவை இன்று காணவில்லை. பேசிக் கொண்டே போன அவனுடைய வகுப்பு பிள்ளைகளில் எனக்கு நன்கு தெரிந்த ஒருவனிடம் கேட்டேன், ‘‘எங்க அண்ணனைப் பாத்தியா?’’ என்று.

‘‘சம்பளம் கட்டலேனு ஊட்டுக்குப் போகச் சொல்லிட்டாங்க. அப்பவே போயிட்டானே’’ என்றான் அவன். புரியவில்லை. அதிகம் யோசிக்குமளவுக்கு புத்தி வளராத வயது. நடந்தேன். சாலையோர கோயில் ஒன்றின் முன் தன் புத்தகப் பையுடன் குந்தியிருந்தான் ராமு. என்னைக் கண்டதும் ஓடி வந்து, ‘‘என் பைய கொண்டுபோய் வீட்ல வை கேட்டா, வந்திடரேனு சொல்லு, போ’’ என்றான்.

‘‘நீ எங்கே போறே?’’ என்று கேட்டதற்கு, ‘‘வந்து சொல்றேன், போ’’ என்று கூறிவிட்டான். அவனுடைய ஐந்தாம் வகுப்புப் புத்தகங்கள் நிறைந்த பை கனத்தது. வீட்டிற்கு கொண்டுபோய் எங்கள் வீட்டு சரசுவதி படத்துக்கு அருகில் அண்ணாவின் புத்தகப்பையை வைத்துவிட்டு நடந்ததை அம்மாவிடம் கூறினேன். அம்மாவின் முகத்தில் கலவரம் படர்ந்தது.

‘‘எங்கே போறேனு போனான்?’’ என்று கேட்டாள். ‘‘எங்கேயோ போறேனு சொன்னான். வந்து சொல்றேனு சொன்னாம்மா’’ என்றேன்.

ராமு வீடு திரும்பவில்லை. மாலை ஐந்து மணிவரை எதுவும் நிகழ்ந்துவிடவில்லை. அப்பா ஆறு மணிக்கு வந்துவிடுவார். அம்மா எதையெதையோ யூகித்தவளாய் ராமுவின் புத்தகப் பையை சோதித்தாள். அதில் ஐந்தாறு பொட்டலங்கள் இருந்தன. அம்மா என்னைப் பார்த்தாள். என் உச்சந்தலையில் ஐஸ் கட்டியை வைத்தாற்போன்று உணர்ந்தேன். அந்தப் பொட்டலங்களை எங்கேயோ பார்த்திருந்ததாய் ஞாபகம். ஆனால், என்ன என்பது சட்டென்று நினைவுக்கு வரவில்லை.

‘‘என்னடா இதெல்லாம்?’’ என்று அம்மா கேட்டபோது, ராமுவை நினைத்தபடி நான் வேறு எதையும் கூற முடியாதவனாய் இருந்தேன்.

வீட்டுக்கு ஒரே பிள்ளை, செல்லம் ஜாஸ்தி என்பார்கள். பிரச்சனை அதிகமிருக்காது. ஒரு வீட்டில் ஐந்தாறு பிள்ளைகள் இருந்து அதில் ஒரேயொரு பிள்ளை மீது அன்பு, ஆசை, சலுகையென்று பிரத்தியேக கூடுதல் கவனம் செலுத்தப்படுகையில்தான் அவ்வித செல்லம் பின்னர் வெவ்வேறு பிரச்சனைக்கு இழுத்துச் செல்லும் என்பது ராமுவின் விஷயத்தில் ஏகதேசம் சரியாய்ப் போய்விட்டது. தீபாவளி வந்தால் பட்டாசு, மத்தாப்பு, தின்பண்டங்களில் ஒரு பங்கு அதிகமாய் எடுத்துக் கொள்ளுவான்். பிள்ளையார் பண்டிகையின்போது, பச்சைக் களிமண் பிள்ளையாரின் தொப்புளில் அப்பா நாலணா காசைப் பதிய வைப்பார். மூன்று நாட்களுக்கு விருந்தாளியாக வந்து வீற்றிருந்த பிள்ளையாரை தண்ணீரில் விடும் உரிமையையும் அச்சமயம் அவரை நீரில் விடுபவரைச் சேரவேண்டிய அவரது தொப்புள் காசையும் ராமுவே ராஜ உரிமையோடு எடுத்துக்கொள்ளுவான்.

வீட்டிலுள்ள கொலுபொம்மைகளில் ஒன்றிரண்டு காணாமற்போகையில் பெரியக்காவுக்கு ராமுவின் மீதுதான் சந்தேகம் ஏற்படும். அவை பித்தளை உலோக பொம்மைகளாயிருந்துவிடும். எங்கள் வீட்டு கொலு சாமான்கள் விசேஷமானவை. ஐந்து அடுக்குப் படிகள் கொண்டதாயிருக்கும் எங்கள் வீட்டுக் கொலு. இரண்டு வயதுக் குழந்தையின் உயரத்துக்கு அந்தக்  காலத்து ராமர், லட்சுமணர், சீதா, கிருஷ்ணன் மண் பொம்மைகள், லட்சுமி சரசுவதி, பொம்மைகளும் பூதம் பூதமாயிருக்கும். தசாவதார பொம்மைகள் அதற்கடுத்த உயரத்திலிருப்பவை. மேல் வரிசையில் இந்த ‘‘லம்பா’’ பொம்மைகளை நிறுத்தி வைப்பாள் பெரியக்கா. கீழ்ப்படியில் பீங்கான் பொம்மைகள், வெண்கல விளக்கு நாச்சியார்கள், பித்தளை சாமான் பொம்மைகள், வீட்டில் சமையல் காரியத்தின்போதும் விருந்து பரிமாறும்போதும் உபயோகப்படுத்தும் சகலவித பித்தளைப் பாத்திர பண்டங்களையும் அதே பித்தளையில் விளையாட்டு சாமான்களாய் தயாரித்து பொம்மைக் கொலுவுக்கென்றே விற்பார்கள். பாதிக்கு படியைப் பிடித்துக்கொண்டிருந்த அந்த பித்தளைச் சாமான்களின் எண்ணிக்கை குறைந்து காணப்பட்டபோது அக்காவின் ஆள்காட்டி விரல் ராமுவைக் குறி வைத்தது. ராமு ஒரு சினிமா தவறமாட்டான். ஓட்டலில் சாப்பிடுவதில் ருசி கண்டவன். அப்பா வெளியில் கடைக்குப் போகையில் அவனைத்தான் உடன் அழைத்துப்போவார். அவருக்கே நாக்கு நீளம். தான் நுழையும் ஓட்டல்களுக்கு ராமுவையும் அழைத்துப் போவார்.

அப்பாவுக்கு இரவு பத்து மணிக்கு காலைப் பிடித்துவிட ராமு வேண்டும். பொம்மைகள் களவுபோன விஷயம் எதுவும் அப்பாவுக்கு தெரிவிக்கப்படாதவை. மிலிடரியிலிருந்தவர். முரட்டு சுபாவம், அவருக்கு படுக்கைக்குப் போகிறபோது காலைப் பிடித்து விடுவதோடு தூங்கப் பண்ண பாட்டுப் பாட வேண்டும். ராமு நன்றாகப் பாடுவான். இந்த இரண்டு சேவைகள் செய்வதன் மூலம் அப்பாவுக்கு செல்லமானவன் அவன். புதுப் புதுபாட்டாகப் பாடுவான். புதுப் புது திரைப்படங்களைப் பார்த்தும் பாட்டுப் புத்தகங்களை வாங்கிப் படித்து மனனம் செய்திருக்கும் விதமாய் அவை. பொம்மைகளை விற்ற காசு சினிமா செலவைப் பார்த்துக் கொள்ளும்.

ம்மா அந்தப் பொட்டலங்களை ராமுவின் பையிலிருந்து எடுத்தெடுத்து வெளியில் வைத்தாள். அவை வைக்கோலால் சுருணைபோல சுருட்டிக் கட்டி அதன் மேல் சிறு வண்ணக் காகிதம் சுற்றப்பட்டிருந்தது. வைக்கோல் பொட்டலத்து வயிற்றின் ஒரு புறத்தில் கிழித்தாற்போல பொட்டலத்தைக் கிழித்திருப்பது புலப்பட்டது. அந்தக் கிழிசல் வழியே உள்ளேயிருக்கும் மிட்டாய் ஒன்று தெரிய வந்தது. எனக்கு அந்தப் பொட்டலமும் அதன் சூட்சமமும் நினைவுக்கு வந்துவிட்டது. சக மாணவன் அப்துல் கறீம் சொல்லியிருக்கிறான். கறீம் சுவரொட்டிகளை உரித்தெடுப்பதில் கில்லாடி.
பள்ளிக்கூட வாசலுக்கு வெளியில் சற்றுத் தள்ளி இலந்தைப்பழம், அரிநெல்லிக்காய், ஜவ்வு மிட்டாய் எல்லாம் வண்டியில் வைத்து விற்பவர்கள், ஐஸ்புரூட் வண்டியென்றல்லாம் இருப்பது விட்டல்ராவ் பள்ளிக்கூடத்துக்கு விதிவிலக்கல்ல. துக்காஜி சக்கரையை ஏவிவிட்டு அவர்களையெல்லாம் விரட்டச் சொல்லுவார். சக்கரை இந்த வியாபாரிகளைப் பயமுறுத்தி மிரட்டி விரட்டும் விதமாக பேசி அனுப்புகையில், ‘‘அப்படி தள்ளிபோய் வச்சிக்கங்க’’ என்று இணக்கமாய் கூறுவார். சாயங்காலம் வீட்டுக்குப் போகையில் அவர்கள் சக்கரையின் குழந்தைகளுக்கு என அரைப்படி இலந்தைப்பழம், அரிநெல்லிக்காயை பொட்டலம் கட்டித் தருவார்கள். இந்த விதமாய் வந்தவன்தான் வைக்கோல் பொட்டலக்காரன்.

அது என்ன பண்டம் என்று கறீமை நான் கேட்டதற்கு அவன் குசுகுசுத்த குரலில் கூறினான்.

‘‘ஜுதுடா, ஜுது’’

‘‘சூதாட்டம்னு சொல்றாங்களே, அதா?’’
கறீம் பொட்டல ஆட்டத்தை விவரித்தான்.

‘‘ஒவ்வொரு பொட்லத்துக்குள்ளேயும் ஒரு முட்டாய்கூட நெம்பர் ஒண்ணிருக்கும். நெம்பருக்கு தகுந்தமாதிரி துட்டு தருவான். வெறும் சைபர் வந்தா முட்டாயோட சரி. டேய் அவன் நெறைய பொட்டலத்தில சைபரே வச்சிருப்பான்டா’’, என்றான் கறீம்.

‘‘நாம்ப எவ்வளவு கட்டணும்?’’

‘‘நாம்போ, ஒரு பொட்லத்துக்கு நாலணா வக்கணும். ஒங்க அண்ணன் நாலு பொட்லம் வாங்கினான்’’, என்றான் கறீம்.
இதையெல்லாம் அம்மாவிடம் சொன்னபோது அவள் கைகள் ஒரு முறை நடுங்கின.

ஆறு மணிக்கு அப்பா வந்துவிட்டார். கை, கால் கழுவிக்கொண்டு காபியை வாங்கினார். வீட்டுக்குள் வலம் வந்தவர் ‘‘ராமு எங்கே?’’ என்று கேட்டார். உடனே சொல்ல வேண்டாமென்று அம்மா, ‘‘விளையாடப் போயிருப்பான்’’ என்று கூறிவிட்டாள். ராமு வரவில்லை. இரவு சாப்பிட்டானதும் அம்மா, அப்பாவிடம் ராமு பள்ளிக்கூட சம்பளம் கட்டாததையும் பிள்ளைகளை வீட்டுக்கு அனுப்பிவிட்டதையும், ராமு சூதாட்டத்தில் சம்பளப் பணத்தை வைத்தாடி இழந்து எங்கோ ஒளிந்திருப்பதையும் சொல்லவும், அப்பா, அம்மாவின் கன்னத்தில் ஓங்கி ஓர் அறைவிட்டார். பின் வாசல் திண்ணையில் உட்கார்ந்து கொண்டார். ராமு பின்பக்க கதவைத் தட்டிக் கொண்டிருந்தான். அக்கா கதவைத் திறந்து அவனை எச்சரித்தாள். இதற்குள் அப்பாவும் அங்கு வந்துவிடவே… ராமுவைப் பிடித்து நையப் புடைத்தார். அம்மா நடுவில் புகுந்து தடுத்தாள். ராமு வந்த வழியாகவே மீண்டும் ஓடிப்போனான். மறுநாள் அப்பா என்னையும் அழைத்துக்கொண்டு பள்ளிக்கூடத்துக்குப் போனார். எனக்கு மட்டும் சம்பளம் கட்டிவிட்டு துக்காஜியுடன் பேசிக்கொண்டிருந்தார்.

‘‘ஒங்க கிணறு லோன் சேங்ஷனாயிடுச்சி. அடுத்தவாரம் தாலுக் ட்ரெஷரீக்குப் போய் லோன் பணத்தை வாங்கிக்கோங்க’’ என்றார் அப்பா.

மகிழ்ச்சியுடன் காணப்பட்ட துக்காஜி உடனே, ‘‘ஒங்க பெரிய பையனுக்கு சம்பளம் கட்டலியே?’’ என்று கேட்டார்.
‘‘அப்பறம் பாத்துக்கலாம்’’ என்றார் அப்பா.

ராமு அன்றிரவும் அதற்கடுத்த நாட்களிலும் திரும்பி வரவேயில்லை. அம்மா அழுதபடியே இருந்தாள். ‘‘போய்ப் பாருங்க… போய்ப்பாருங்க’’, என்று பயந்தவாறே அப்பாவிடம் கெஞ்சினாள்- தேடிப் பாருங்கள் என்று அர்த்தம்… அப்பா, ராமுவின் சினேகிதப் பையன்களையெல்லாம் என்னுடைய வழிகாட்டலோடு கண்டு விசாரித்துவிட்டார்.
இருபத்தைந்தாம் தேதியும் வந்துபோய்விட்டது. ஆனால் துக்காஜிராவின் உத்தரவு பேரில் ராமுவின் பெயர் வருகைப் பதிவேட்டில் அடிக்கப்படாமலேயிருந்தது. அந்த வகுப்பாசிரியருக்கு வியப்பாயிருந்தது.

மறுநாள் துக்காஜிராவ் ஊர்க் கோடியிலுள்ள காபி கிளப்பில் காபி சாப்பிடப் போய் உட்கார்ந்தபோது எதிர்வரிசை மேஜைக்கு போண்டா, சட்னி பரிமாறிக்கொண்டிருந்த பையனைக் கண்டதும் திடுக்கிட்டு காபி சாப்பிடாமலே எழுந்துபோய் அவனது கையைப் பிடித்துக்கொண்டார் ராமு.

ஓட்டல் முதலாளியிடம் பேசிவிட்டு அவனை இழுத்துக்கொண்டு எங்கள் வீட்டுக்கு வந்தார் தலைமையாசிரியர் துக்காஜிராவ், அப்பா ராமுவை அடிக்க வேட்டிக்கு கட்டியிருந்த பெல்டை உருவினார். துக்காஜி தடுத்து சமாதானப்படுத்திவிட்டு சம்பளம் கட்டிவிடுமாறு கூறிவிட்டு புறப்பட்டார்.

அப்பா ராமுவுக்கு சம்பளம் கட்டவில்லை. கடை கண்ணிக்குப் போய்வர அவனை வைத்துக்கொண்டார். அவனுக்கும் பள்ளிக்கூடத்துக்குப் போக நாட்டமேயில்லை. வீட்டுக்கு ஓர் எடுபிடியாக வளரத் தொடங்கினான்.
அதன் பிறகு, இரவு படுக்கையில் தன் கால்களைப் பிடித்துவிட அப்பா என்னையே அமர்த்திக்கொண்டார். நான் பாடினால் அப்பாவுக்கு பிடிக்காது. பாடச் சொல்லாமல் கால்களை மட்டும் பிடித்துவிடச் சொல்லுவார். அவ்வாண்டு பிள்ளையாரை தண்ணீரில் விடுவதும் அப்போது அவரது தொப்புள் காசை எடுத்துக்கொள்ளும் கைங்கரியமும் என்னையே சார்ந்ததாயிற்று.

எழுதியவர்:-

கி. விட்டால் ராவ் - தமிழ் விக்கிப்பீடியா

✍🏻 விட்டல்ராவ்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *