எப்பேசு
வகுப்பறைக் கதைகள்- 5
– விட்டல்ராவ்
‘‘நாம வேறே ஊருக்குப் போப்போறோம்’’ என்றாள் பெரியக்கா. நானும் மகிழ்ச்சியில் சிலிர்த்துக் கொண்டேன்.
‘‘எந்த ஊருக்கு?’’
‘‘மேச்சேரியாம்’’
‘‘அங்கே எலெக்டிரிக்கேயிருக்காதாம்’’ என்றாள், அம்மா சலிப்போடு.
‘‘முழுப் பரீட்சைக்கு மூணு மாசமிருக்கு’’ என்றாள் மோகனா அக்கா.
அப்பாவின் இலாகா பள்ளிக்கூட முழு ஆண்டுத் தேர்வையெல்லாம் கணக்கிலெடுத்துக் கொள்ளாமல் அப்பாவுக்கு சின்ன பதவி உயர்வு ஒன்றை வழங்கி வேலை மாற்றல் உத்தரவை நீட்டிவிட்டது. விட்டல்ராவ் பள்ளிக்கு டி.சி. தருவதில் எவ்வித பிரச்சினையுமில்லை. துக்காஜி எங்கள் மூவருக்கும் டி.சி. வழங்கிவிட்டார்.
தர்மபுரியிலிருந்து மேச்சேரிக்கு நாங்கள் வந்து இறங்கும்போது இரவு ஏழுமணியிருக்கும். கும்மிருட்டு. அது கடைத் தெருவாதலால் சிறிது வெளிச்சமிருந்தது. கடைகளில் ‘‘பவர் லாம்ப்’’ என்னும் பிரகாசம் அதிகம் தரும் ஒரு வகை மண்ணெண்ணெய் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. சைக்கிள் பழுது பார்க்கும் கடை, மருந்து கடை, காவல் நிலையம் ஆகியவை பெட்ரோமாக்ஸ் விளக்கொளியில் தங்கள் காரியங்களைப் பார்த்துக் கொண்டன. மேச்சேரியிலிருந்து பன்னிரண்டு மைல் தொலைவில்தான் மேட்டூர் அணையிருக்கிறது. அங்குதான் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் மிக அருகிலுள்ள மேச்சேரியில் இன்னும் மின்சார வசதி ஏற்படுத்தப்படவில்லை.
மேச்சேரி ஊர் நடுவில் கருப்புச் செட்டி மெத்தை வீடு என்றழைக்கப்பட்ட பெரிய வீட்டை அரசாங்கம் வாடகைக்கு எடுத்து அப்பாவின் அலுவலகம் இயங்க வகை செய்தது. மிகக் குறைந்த வாடகை. வாடகையை இலாகா பார்த்துக் கொள்ளும். ஏழு மணிக்கு மேல் கருப்புச் செட்டி மெத்தை வீட்டில் மனிதர்கள் இருக்கமாட்டார்கள், என்று சொன்னார்கள். அந்த வீட்டில் பேய் நடமாடுவதாக ஊரில் பேச்சு.
இரண்டாவது உலக யுத்த காலம் தொடங்கி உணவுப் பொருள் கட்டுப்பாடு சுதந்திர இந்தியாவில் நீடிக்கையில் கடும் பஞ்சம் நிலவியிருந்தது. ஒவ்வொரு மாவட்டத்திலும் சிற்றார்கள் சிலவற்றைச் சேர்த்து ‘‘ஃபிர்கா’’ என்பார்கள். அந்தந்த ஃபிர்காவுக்கு ரேஷன் கடைகளை ஏற்படுத்தி அவற்றுக்கு மாதா மாதம் உணவு தானியங்களை அரசாங்கம் வழங்கிக் கொண்டிருந்தது. அதை செயல்படுத்த ஓர் அதிகாரி – ஃபிர்தாவுக்கு ரேஷன் கடைகளை ஏற்படுத்தி அவற்றுக்கு மாதா மாதம் உணவு தானியங்களை அரசாங்கம் வழங்கிக் கொண்டிருந்தது. அதை செயல்படுத்த ஓர் அதிகாரி- ஃபிர்கா சப்ளை ஆபீசர் என்று இருப்பார். சுருக்கமாக ‘‘எஃப்பெஸ்வோ’’ (FSO) என்றழைப்பார்கள். அப்பாவுக்கு மூன்றாண்டுகளுக்கான பதவி உயர்வாக எஃப்., எஸ்.ஓ. பதவியில் தர்மபுரியிலிருந்து மேச்சேரிக்கு அவரைப் போட்டிருந்தார்கள்.
அப்பா கருப்புச் செட்டி மெத்தை வீட்டிற்குப் போய் ஒரு சில வேலைகளைத்தான் செய்வார். அப்போது மட்டும் அவருக்கான பியூன் துணையிருப்பார். மற்ற வேலைகளை வீட்டிலேயே செய்து முடிப்பார். அப்போதெல்லாம் ராமு உடனிருந்து பியூன் வேலை பார்ப்பான். ஊரிலுள்ள எல்லா உணவு வினியோக அட்டைகளையும் புதுப்பிப்பது, ரேஷன் கடைகளுக்கு மாதாமாதம் அத்தியாவசிய உணவு தானியங்கிகளுக்கான இண்டெண்டு கோரிக்கைகளை சரிபார்த்து கலெக்டருக்குப் பரிந்துரைத்து அனுப்புதல் எல்லாம் வீட்டிலிருந்துதான் நடந்தன. ரேஷன் அட்டைகள் மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கையில் குடும்பத்தில் இருப்போர், இறந்தோர் மற்றும் புதியதாக வந்து சேர்ந்தவர்கள் என. நீக்கம் சேர்க்கை விவரங்கள் இடம் பெறுவது முக்கியமானது. நீண்ட வரிசையில் மக்கள் நின்றிருப்பார்கள்.
இந்தச் சூழலில், மேச்சேரியின் ஒரேயொரு பஞ்சாயத்து போர்டு பள்ளிக்கூடத்தில் என்னையும் மோகனா அக்காவையும் சேர்த்தார் அப்பா. ராமுவை அப்பா பள்ளிக்கூடத்துக்கு அனுப்பவில்லை. பஞ்சாயத்து போர்டு பள்ளி பெரியது. எட்டாம் வகுப்பு வரை இருந்தது. அந்தக் காலத்தில் எட்டாம் வகுப்பு இறுதித் தேர்வை எழுதித் தேர்ச்சி பெற்றால் (ஈ.எஸ்.எல்.சி.) என சுருங்க அழைக்கப்பட்ட ‘‘எலிமெண்டரி ஸ்கூல் லீவிங்கு சர்டிஃபிகேட்’’ என்ற சான்றிதழை அரசு வழங்கும். இதைக் கொண்டு உயர் வகுப்பான ஒன்பதாம் வகுப்பில் நான்காம் படிவத்தில்- சேரலாம். ஈ.எஸ்.எல்.சி. படித்து முடித்தவர்கள் ‘‘லோயர் செகண்டரி கிரேடு’’ ஆசிரியர் பயிற்சிக்கு விண்ணப்பித்து, பயிற்சி பெற்று ஒன்று முதல் ஐந்து வகுப்பு பிள்ளைகளுக்கு கல்வி புகட்டும் பள்ளிகளில் வேலை வாய்ப்பு பெற்று ஆசிரியராகலாம். அப்படியே எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்கும் பட்டதாரி படிப்புக்கும் தொடர்ந்து படித்து முயற்சிக்கலாம். குறைந்த படிப்பறிவு கொண்டவர்களுக்கும் கெளரவமான அரசு வேலை வாய்ப்பளிக்கும் வழி வகைகளை அரசு ஏற்படுத்தியிருந்தது.
அக்கம்பக்கத்து கிராமங்கள் நங்கவள்ளி, மல்லிகுந்தம், பூசாரிப்பட்டி, குட்டப்பட்டி, குஞ்சாண்டியூர் என்றெல்லாம் ஊர்களிலுள்ள பிள்ளைகளும் ஆணும் பெண்ணுமாய் இந்த ஊர் பள்ளிக்குத்தான் படிக்க வந்து போனார்கள். தலைமையாசிரியர் செங்கோடன் சாருக்கு அப்பா மீது ஏக பயபக்தி. அவரது குடும்ப ரேஷன் அட்டையை அப்பா பள்ளிக்கூடத்துக்கே போயிருந்து வேண்டிய திருத்தங்களைச் செய்து புதுப்பித்துக் கொடுத்துவிட்டார். ஊரார் வாயில் ‘‘எஃப்பெஸ்ஸோ’’ அப்பா ‘‘எப்பேசு’’ ஆனார். எஃப்பெஸ்ஸோ என்பது சேலத்து கிராம உச்சரிப்பில் எப்பேசு ஆனது. எப்பேசு வீட்டுப் பசங்க என்று எனக்கும் அக்காவுக்கும் தனி மரியாதையிருந்த ஆரம்ப நாட்கள் அவை. எனக்கு வகுப்பாசிரியர் கணேசன் என்பவர், லோயர் செகண்டரிகிரேடு பயிற்சி பெற்ற சற்றுவயதான ஆசிரியர், குடுமி வைத்திருப்பார். குடுமி என்றுதான் ரகசியமாய் அழைக்கப்பட்டவர். அப்பா, சில சமயம் யாரையாவது குறுப்பிடும்போது, ‘‘அவன் குடுமி எங்கையிலேயிருக்கு’’ என்று பெருமையோடு சொல்லுவது எனக்கு விளங்காதிருந்து வந்தது. கணேசன் சாருக்கு அப்பா ரேஷன் அதிகாரி என்பது என்னை ஒரு நாள் அடிக்கும்வரை தெரியாது. என்னை பிரம்பால் கணேசன் சார் மூர்க்கமாக அடித்த நாளன்றுதான் அப்பா ரேஷன் அதிகாரி என்பது அவருக்குத் தெரியவந்தது.
பெரிய விஷயமல்ல அப்படி அடிவாங்குவதற்கு. இயல்பாகவே எனக்கு சித்திரம் வரைவது எளிதாக கை வந்தது. பிள்ளைகள் எதையாவது வகுப்பறைக்குள் மெல்லிய குரலில் கேட்டால் அப்படி மெல்லிய குரலில் பதில் சொல்லுவதையும் தவிர்ப்பவன்நான். என் பதிலை அப்போது சிலேட்டில் எனக்கு வந்த மாதிரி ஒரு படம் போட்டு காட்டிவிடுவேன்.
கணேசன் சாரே மிகவும் பாராட்டியிருக்கிறார். ஆனால் அவர் பாடம் நடத்தும்போது கவனிப்பதைத் தவிர வேறெதையும் செய்யக்கூடாது என்பது எல்லா வகுப்பறைக்குமான பொது உத்தரவு.
பஞ்சாயத்து போர்டு பள்ளியில் ஆண்பிள்ளைகளும் பெண்பிள்ளைகளும் சேர்ந்து படித்தார்கள். ஒரு பெண் என்னைப் பார்த்து எதற்கோ அழகு காட்டினாள். எனக்கு ரோஷம் பீறிட்டது. அந்தக் காலத்தில் புலவர்கள் கோபம் வந்தால் கவிதை வழியாக வசைபாடுவார்களாமே. அதுபோல எனக்கு கோபம் ரோஷம் என்று வந்தால் படம் போட்டே வசைபாடுவேன். அந்தப் பெண்ணுக்கு தலை சற்று பெரியது. சின்ன ஒற்றை ஜடைப் பின்னல், ஜடை என்பதைவிட குடுமியென்றே அழைக்கலாம். உடனே சிலேட்டுப் பலகையில் அவள் தலையைப் பக்கவாட்டில் பெரியதாகப் படம் போட்டு அவளுக்குக் காட்டினே்ன். அவளுடைய சின்ன ஒற்றை ஜடைதான் படத்தில் தூக்கலான விஷயம். அது சற்றே ஆட்டுவால் கணக்கில் வளைந்து மேல்நோக்கி நின்றிருந்தது. நான் எதையோ வரைந்து அந்தச் சிறுமிக்கு காட்டுவதை வகுப்பாசிரியர் கணேசன் பார்த்துவிட்டார். அவர் செய்யுள் நடத்திக்கொண்டிருந்தார். பாடம் நடத்துகையில் அதைக் கவனிக்காமல் வேறு எதையோ செய்வதை தனக்கு இழைக்கப்படும் அவமரியாதையாக எடுத்துக் கொள்ளுபவர் கணேசன் சார். அத்தோடு அவரது வீட்டில் எதற்காகவாவது சச்சரவு, கோபம் என்றால் அது வகுப்பறையில் எதிரொலிக்கும்.
‘‘கொண்டாடா அதை, அழிக்காம கொண்டா’’ என்றார் கோபமாக.
பலகையைக் கொண்டுபோய் மேஜைமேல் வைத்தேன்.
‘‘என்னடா இது?’’
‘‘படம் சார்’’
‘‘ஆரு படம்? ஆரு படம்டா?’’
‘‘பாப்பம்மா தலை சார்.’’
‘‘ராஸ்கல், பொய்யா சொல்றே. என் தலையப் போட்டிட்டு’’ என்று பல்லைக் கடித்துத் திட்டிக் கொண்டே, பிரம்பை எடுத்து விளாசித் தீர்த்தார் என்னை. அந்தப் பெண் பாப்பம்மாளே கூறினாள், ‘‘இல்லீங்க சார், என்னியதான் அவன் போட்டான்’’ என்று. மற்ற பிள்ளைகளும், ‘‘காலேல இவ அவன வம்புக்கு வலிச்சா சார், அதான்’’ என்று கூறினார்கள்.
குடுமி இருந்தாலே அது தன்னைப் பரிகசிப்பதாகவே சட்டென எடுத்துக்கொள்ளும் கணேசன் சார், தான் அவசரப்பட்டுவிட்டதை கொஞ்சம் கொஞ்சமாய் உணரத் தலைப்பட்டார். அது அந்தப் பெண்ணின் படம்தான் என்றும் தன்னுடைய குடுமித் தலையல்ல என்பதும் அவருக்குத் தெளிவாயிற்று. அந்தக் கணம் முதலே அவருக்கு அபரிதமான குற்ற உணர்வு தலைதூக்கிற்று. இந்த சமயம் பார்த்து ஒரு பையன் மெதுவாக ஊதினான்,
‘‘சார், அவிங்கய்யா எப்பேசு சார்.’’
‘‘என்னது?, என்றார் கணேசன் சார்.’’
‘‘ரேஷன் கார்டு ஆபீசர் எப்பேசுங்க சார்’’
இரண்டு நாட்கள் கடந்துவிட்டன. கணேசன் சார் என்னைப் பார்க்கும்போதெல்லாம் மெளனமாய் இருந்தார். ஒருவித பதட்டம் மேலோங்க என்னைப் பார்ப்பார். பிறகு ஜன்னலையே பார்ப்பார். பிறகு சமாதானமாக, ‘‘அதுக்குத்தான் சொல்றது, பாடம் நடத்தறப்ப அதைக் கவனிக்காம வேறெதையும் செய்யாதேனு. கவனம் வேறெங்கியும் போப்படாதினு’’ என்பார். நான் அன்று முதல் வகுப்பில் படம் போடுவதை விட்டுவிட்டேன்.
அன்று பள்ளி விடுமுறை. அப்பாவுக்கு விடுமுறை ஞாயிற்றுக்கிழமை மட்டுமே. அவரோ ஞாயிற்றுக்கிழமைகளிலும் வேலை செய்பவர். அதில் பொழுதும் போய்விடும். அப்பா, வீட்டில் ரேஷன் கார்டுகளை புதுப்பிக்கும் வேலையில் முசுவாகயிருந்தார், ராமு கூடமாட அப்பாவுக்கு உதவி செய்து கொண்டிருந்தான். நான் தூர நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். குடும்ப அட்டைகளைப் புதுப்பிக்க, நீக்கம் – சேர்க்கை என வந்திருப்பவர்கள் நிற்கும் வரிசை மிகவும் நீண்டிருந்தது. வரிசை முடிய வெகு நேரம் பிடிக்கும் போலிருந்தது. காரியம் முடிந்து வெளியேறுபவர்களைவிட, வரிசையில் வந்து புதியதாக நிற்பவர்களே அதிகம்போலிருந்தது. ஓராள் போனால், மூணாள் வரிசையில் சேர்வதாயிருந்தது.
அப்போதுதான் வேக வேகமாக வந்த கணேசன் சார் வரிசையில் கடைசி நபராக நின்று கொண்டார். வரிசையின் நீளத்தை ஒரு முறை கவலையோடு கவனித்துக் கொண்டார். பரிதாபமாக அங்குமிங்கும் விழித்தார். வரிசை நகர்வதாய்ப் படவில்லை. ஒவ்வொருவரும் தம்முறை வந்தபோது அப்பாவிடம் அப்பாவை எரிச்சல் கொள்ளும்படி என்னென்னமோ சந்தேகங்களை திரும்பத் திரும்பக் கேட்டதையே கேட்டுக் கொண்டிருந்தனர். அப்படியும் விளங்கிக்கொள்ள முடியாத சிலர் வரிசையில் நிற்பவர்களில் விவரமான தோற்றம் கொண்டவராய்ப் பார்த்து கேட்டுக்கொண்டனர். அதிலும் சிலர் தப்புத் தப்பாய் வழிகாட்டியனுப்பினர். பாமரம், அரைகுறை என்பவை சமூகப் பரிதாபங்களில் முக்கியமானவை.
‘‘ரெம்ப நேரமா நகராமயே இருக்கா?’’ என்று ஜாக்கிரதையாக தமக்கு முன்னால் நிற்பவரைக் கேட்டுக் கொண்டார் கணேசன் சார். வந்த பதில் சமாதானமாயில்லை. இந்த தருணத்தில் கணேசன் சாரின் கண்களில் நான் பட்டுவிட்டேன். ஒரு புதையலைக் கண்டெடுத்த மகிழ்ச்சியில் என்னைப் பார்த்து சார் சிரித்தார். நான் கண்டுகொள்ளாதவனாய் வேறுபுறம் திரும்பிக்கொண்டேன். அடுத்து ஐந்தாறு பேர் வேகமாய் தம் காரியம் முடிந்து வெளியேறவும் வரிசையும் துரிதமாய் முன்னேறியது. இப்போது கணேசன் சாருக்கும் பின்னால் ஏழெட்டு பேர் வந்து வரிசையில் நின்று கொண்டதில், சாருக்கு ஒரு பாதுகாப்பு உணர்வும் நம்பிககையுமாய் இருந்தது. இப்போது அந்த ஏழெட்டு பேரின் கேள்விகளுக்கு தமக்கு வந்த மாதிரி பதிலளிப்பதில் இனம் புரியாத பெருமையும் கெளரவமும் கணேசன் சாருக்கு ஏற்பட்டிருக்கக்கூடும். மீண்டும் அவரது கண்கள் என்னைத் தேடின. நான் முயற்சி செய்து என் பார்வையை அவரது கண்களிலிருந்து அகற்றிக்கொண்டாலும் அவர் பரிதாபமாகச் சிரிப்பதை பார்க்காமலிருக்கவில்லை. அவர் தன் கண்களால் என்னைத் தேட வேண்டும் என்ற ஆவேசம் எனக்குள்ளே எழுந்து ஆடியது.
‘‘போடா, போய் விளையாடு, இங்கே எதுக்கு நிக்கிறே?’’ என்றார் அப்பா.
நான் அப்பாவின் காதில் பேசினேன், ‘‘அப்பா, தோ கடேசியில நிக்கிறாரு பாரு, குடுமிக்காரரு, அவர்தான் என் க்ளாஸ் டீச்சர். அன்னைக்கு நல்லா அடிச்சிட்டாருப்பா. அவருக்கு கார்டு தராதேப்பா. திருப்பியனுப்பு’’
அப்பா என்னை ஒரு கணம் ஒரு மாதிரி பார்த்துவிட்டு, கணேசன் சாரை சில கணங்களுக்குப் பார்த்தார். நான் மீண்டும் ஓதினேன், ‘‘கார்டு தராதேப்பா, திருப்பியனுப்பு’’ என்று.
‘‘சரி பார்த்துக்கலாம், நீ போய் விளையாடு’’ என்றார் அப்பா. அதே சமயம் என் சினேகிதர்கள் வந்துவிடவே நானும் அவர்களோடு வெளியேறிவிட்டேன்.
அப்பா ராமுவையழைத்து ரகசியமாய் எதையோ கூறியனுப்பினார். ராமு மெதுவாக நடந்து வரிசையில் நிற்பவர்களைக் கடந்து கணேசன் சாரையடைந்து அவரைத் தன்னோடு வருமாறு அழைத்துச் சென்றான். சுற்றி வளைத்து பிறர் கண்களிலிருந்து தப்பி அவரை எங்கள் வீட்டு பின் பக்க கதவு வழியே வீட்டுக்குள் அழைத்து வந்துவிட்டான். அவர் உட்கார ஒரு மர ஸ்டூலை வைத்தான்.
‘‘ஒரு அரை மணி வெய்ட் பண்ணுங்க. சாப்புட்டுட்டு வந்திடறேன்’’ என்று சொல்லிக்கொண்டு அப்பா வீட்டுக்குள் வந்துவிட்டார்.
‘‘கார்டை குடுங்க’’ என்றார் அப்பா கணேசன் சாரைப் பார்த்து.
கணேசன் சார் அழுக்கேறிய தம் ரேஷன் கார்டை எடுத்து பவ்வியமாக நீட்டிக்கொண்டே, ‘‘ஒங்க பையன் ரெம்ப கெட்டிக்காரன். ரெம்ப நல்லா படிக்கிறான். நல்ல குணவான்’’ என்றார்.
‘‘இதிலே நீக்கம், சேர்க்கை என்ன?’’ என்று கேட்டார் அப்பா.
‘‘நீக்கம் எதுவுமில்லீங்க. சேர்க்கைதான் ஒண்ணிருக்கு. என் மாமியார் ஆதரவு இல்லேனு ஆறு மாசமா எங்கூடத்தான் வந்திருக்காங்க. இனிமேட்டும் எங்கூடத்தானிருப்பாங்க’’ என்றார் சார்.
‘‘சரி,பெரிய நபர் ஒண்ணை கூடுதலா சேர்க்கணும், இல்லையா?’’
‘‘ஆமாங்க, எங்கய்யா எப்பேசுனு ஒங்க பையன் சொன்னப்ப ரெம்ப நிம்மதியா இருந்திச்சிங்கய்யா’’
‘‘இந்தாங்க புது ரேஷன் கார்டு. இங்கே ஒங்க கையெழுத்தப் போடுங்க, வாங்கினதுக்கு. ஒவ்வொரு அவுன்ஸ் அரிசியும் கோதுமையும் அதிகப்படியா கிடைக்கிற மாதிரி கார்டை மாத்தியிருக்கேன். பையனை கவனிச்சிக்கங்க.’’
‘‘சரிங்கய்யா. ரெம்ப நன்றி, வர்ரேனுங்க’’ என்று கண்கள் பளபளக்க கணேசன் சார் புதுப்பிக்கப்பட்ட தம் ரேஷன் அட்டையைப் பெற்றுக்கொண்டு வெளியேறி வேறொரு சந்தில் நுழைந்து மறைந்தார்.
எழுதியவர்:-

✍🏻 விட்டல்ராவ்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

