பனைமரக்கதை
வகுப்பறைக் கதைகள்- 6
– விட்டல்ராவ்
‘‘ஒனக்கென்னடா, ஒங்கம்மா சாமை சோறா ஆக்கிப்போட்டனுப்பறா’’ என்றார் வகுப்பாசிரியர் மாணிக்கம் சார். அது நாலாம் வகுப்பு. வகுப்பாசிரியர் அவர்தான். திருமணமாகாத இளைஞர். மாணிக்கம் சார் பிள்ளைகளோடு பிள்ளையாகப் பழகுபவர். எக்காரணத்துக்கும் பிள்ளைகளை அடிக்கவே மாட்டார். கடுமையான அரிசிப் பஞ்சம், ரேஷனில் போடும் ஆறு அவுன்ஸ் அரிசிக் கணக்கு மாத முழுக்க காணாது. கருப்புச் சந்தையென்பது மேச்சேரியில் இல்லாதது.
ஆனால் அரிசிப் பற்றாக்குறையை ஓரளவுக்கு சிறு தானியமான சாமை ஈடு செய்தது. சாமை அரிசியை பொங்கினால் அரிசிக் குருணைச் சோறுபோலயிருக்கும். மேச்சேரி பகுதியில் பெருவாரியாக விளைவிக்கப்பட்ட பயிர் சாமை. குடியானவர்களும் ஏழை மக்களும் சாமையைப் புழுங்கவைத்து புழுங்கல் வகையாகவும் சமைத்து உண்டு பசியாறினர். ஐய்யம்மா எங்களுக்கு பாலும் தயிரும் வாடிக்கையாக ஊற்றிவிட்டு மாதம் கண்டு பால், தயிர் கணக்குத் தீர்ப்பது வழக்கம். அந்தம்மாள்தான் எங்களுக்கு சாமையை கொண்டு வந்து கொடுத்து அறிமுகப்படுத்திவைத்தது.
மேல் உமி நீக்காத சாமையைக் கொண்டு வந்து அம்மாவிடம் தந்து உமியை நீக்கும் முறையை செயல் பூர்வமாகக் கற்றுக் கொடுத்தாள் ஐய்யம்மா. வீட்டில் கல் உரல், குந்தாணி, மர உலக்கை எல்லாமிருந்தது. உலக்கைக்கு இருபுறமும் இடிக்கும் இரும்பு பூண்களுடண்டு. ஒரு புறத்து பூண் தானியத்தைக் குத்தி மாவு இடிக்கவும், மறுபுறத்து பூணால் இடித்தால் நெல், கம்பு, சாமைகளின் உமி நீங்கும். அம்மா ஐய்யம்மாவிடம் இவ்விதமாய் பாடமும் செய்முறையும் கற்றுக் கொண்டு வல்லுனராகியது எங்கள் பாக்கியம்.
அன்றைக்கு மாணிக்கம் சார் தமிழ்ப் பாட நூலில் ஒரு புதிய பாடலை எடுத்துக் கொண்டார். சங்கத் தமிழ் வாசகம் நாலாம் வகுப்புக்கான தமிழ்ப் பாடநூல். கூடவே, ‘‘நானே படிக்கும் புத்தகம்’’ என்று ஒரு மெலிந்த உப வாசகமும் எங்களுக்கு இருந்தது. இதில் பத்து கதைகள் அடங்கியிருந்தது. காலாண்டுத் தேர்வுக்குப் பிறகே அதிலுள்ள கதைகளைப் படித்துக் காட்டுவதாக மாணிக்கம் சார் சொன்னார். பரீட்சைக்கு அந்தக் கதைகளிலிருந்து வினாக்கள் எதுவும் கேட்கப்படாது. சும்மா வாசிப்பு பழக்கத்தைத் தூண்டிவிடவே அது வைக்கப்பட்டிருப்பதாகக் கூறினார். பிள்ளைகளே படித்துப் புரிந்துகொள்ளக்கூடிய வகையிலிருப்பதாயும் கூறிய மாணிக்கம் சார், காலாண்டுத் தேர்வையடுத்து விடப்படும் விடுமுறை நாட்களில் முதல் கதையை படித்துப் பார்க்கச் சொன்னார். விடுமுறையும் வந்தபோது முதல் கதையைப் படித்தேன். கஷ்டம் எதுவுமில்லை. என் சினேகிதர்களுக்கு நான் படித்ததைச் சொல்லவும் சுவாரசியமாய் கேட்டார்கள். விடுமுறை கழிந்தது.
பள்ளிக்கூடம் திறந்ததும், மாணிக்கம் சாரும் என் கதை சொல்லும் முறையைக் கண்டு வியப்படைந்து, ‘‘வீட்ல சொல்லிக் குடுத்தாங்களா?’’ என்று கேட்டார். மறுநாள் அவர் முதல் கதையை படித்துக் காட்டினார். அந்தக் கதை ஒரு பாடலோடு தொடங்குவதாயிருந்தது. பாடலும் எளிமையானது. ஒரு பையனையழைத்து பாடலைப் படிக்கச் சொல்லி விளக்கத் தொடங்கினார் வகுப்பாசிரியர்.
பனை மரத்தைப் பாருங்கள்
பறவைக் கூடு தொங்குது.
பனம் பழத்தைப் பறிக்கவே பையன் ஒருவன் ஏறினான்.
ஏறி பையன் செய்தது
எனக்குப் பிடிக்கவில்லையே.
கூற நாவும் கூசுதே
கொடிய பையன் செய்தது
பறவைக்கூட்டைப் பிய்த்துமே
பையன் கீழே தள்ளினான்.
பறவை திரும்பி வந்தது
பார்த்து மிகவும் நொந்தது.
ஆசிரியர் மாணவ- மாணவிகளைப் பார்த்து பாடலில் பையன் செய்த கொடிய செயலை விவரித்து, ‘‘பிள்ளைகள் ஒவ்வொருவரும் சக பிராணிகளிடம் அன்பு, பரிவு, பாசம் காட்ட வேண்டும். அவையும் நம்மைப்போன்ற ஜீவராசிகளே, சும்மா போகும் நாயைக் கல்லால் அடிப்பது, ஓணான்களைப் பிடித்து சித்திரவதை செய்வது என்றெல்லாம் கொடுமை செய்யக்கூடாது. முடிந்தமட்டில் பரிவுகாட்டி உதவி செய்ய வேண்டும்’’ என்றெல்லாம் புத்திமதி கூறினார் மாணிக்கம் சார். பலமாய்த் தலையை ஆட்டிய பிள்ளைகளில் பேர் பாதிக்கு கொடூரச் செயல்களை விளையாட்டென்றே, சாகசச் செயல்கள் என்றே எடுத்துக்கொண்டு புரிந்து வருபவர்களாயிருந்தனர்.

பள்ளிக்கூடம் முடிந்து வகுப்பறையைவிட்டு வெளியேறும்போதே ஒருவரையொருவர் அடித்துக் கொண்டும் திட்டிக்கொண்டும் ஓடுவதும் சகஜமான நிகழ்வாகவே இருந்தது. என்னோடு வரும் மூவர் என்னை பேச்சுக்கிழுத்தனர்.
‘‘மரம் ஏறுவதானே?’’
‘‘ஆமா’’ என்றேன்.
‘‘எந்தெந்த மரத்தில ஏறியிருக்கே?’’
‘‘வாழை மரம், பனை மரம் தவிர மத்ததில ஏறியிருக்கேன்.’’
‘‘இப்ப, பனை மரத்தில ஏறச் சொன்னா ஏறுவியா?’’
‘‘மாட்டேன்.’’
‘‘ஏன்?’’
‘‘ஆவாது.’’
‘‘ஏறிப் பார்ரா. ஒத்தப் பனைமரம். நொங்கெல்லாம் வெட்டியாச்சி. ஆனா, ஒரேயொரு ஒத்த பனம் பழம் தொங்குது. ஏறிப் பறிச்சிப்போடு.’’
‘‘ஆவாதுனு சொல்றேன்லே.’’
‘‘டேய் பார்ரா, முடியுண்டா!’’
‘‘டேய்! ஏறி பனம்பழம் பறிச்சிப் போட்டேன்னா குட்டி ஓட்டல்லே தோசை வாங்கித் தர்ரோம்.’’
குட்டி ஓட்டல் என்பது பஸ் நிறுத்தத்திற்கு அருகிலுள்ள ஓலைக் கீற்றுக்கொட்டகை சிற்றுண்டி காபிக் கடை. தோசை மிகவும் பெயர் பெற்றது. குக்கூர் குட்டி மேச்சேரிக்கு வந்து காபி கிளப் வைப்பதற்கு முன்னால் கேரளாவில் வெவ்வேறான தொழில்களைப் புரிந்து வருகையில்தான் வேற்று மதத்துக்கு மாறிக் கொண்டவன். சமையலில் நளன் கெட்டான் என்று அப்பா ஒரு சமயம் விவரித்தார். ஒரு நாள் அப்பா கேட்டுக் கொண்டதற்கிணங்கி குக்கூர் குட்டியின் மனைவி சுரயா மலபார் அவியல் தயாரித்து ஓர் மனைவி சுரயா மலபார் அவியல் தயாரித்து ஓர் அடுக்கு நிறைய கொண்டுவந்து கொடுத்துவிட்டுப் போனாள். எல்லாரும் ருசித்த அவியல் எனக்கென்னமோ ஏற்கவேயில்லை. குட்டி கடை தோசை ஓசியில் வருகிறது என்பதை மனத்திலிருந்து அகற்ற முடியவில்லை. ஆனால் அது ஓசியுமில்லையே…
அந்த ஒற்றைப் பனைமரம் பள்ளிக்கூடத்துக்கு வெகுவாகத் தள்ளி இரண்டு குடியானவர்களுக்குச் சொந்தமான இரு விளைநிலங்களுக்கு இடையில் வரப்போரமாய் நின்றிருந்தது. அதில் தொங்கிய நுங்குக் குலைகளை வெட்டி முடித்தாயிற்று. ஒரே ஒரு பனங்காய்-சற்று அளவில் பெரியதாய் நின்று போய், இப்போது பழமாகியிருக்கிறது. பனம்பழத்தை சாதாரணமாய்ச் சுவைத்து விடமுடியாது. அதைப் பறித்துத் தீயில் சுட வேண்டும். சுட்டானதும் வேகவைத்து பத்தைப் பத்தையாக அறுத்துச் சாப்பிடக்கூடிய ஒரு பழம். சேலம் பகுதியில் அதை சேவா என்பார்கள். அந்தப் பனைமரத்தில் பனம்பழம் தொங்குவது மட்டுமே பையன்களின் கண்ணை உறுத்திற்றே ஒழிய, மற்றொரு விஷயம் கண்ணில்படவில்லை. ஒரு குருவிக்கூடு.
‘‘சரி, ஏறிப் பாக்கறேன், ஆளா எங்க வூட்டுக்குத் தெரியக்கூடாதுடா, எங்கய்யா கொன்னுடுவாரு’’
‘‘நாங்க யாரும் சொல்லமாட்டோம்’’
ஏறத் தொடங்கினேன். ஏறுவதில் சிரமம் அதிகம் தெரியவில்லை. ஒரு கணம் ஏறுவதை நிறுத்திக் கொண்டு தலையைத் திருப்பிப் பார்க்க, பத்ர காளியம்மன் கோயில் கோபுரம் கருப்பாகத் தெரிந்தது. வாழை மரத்தில் தேரை தத்தித் தத்தி ஏறுவது மாதிரி ஏறினேன். தோ, ஆயிற்று, வந்துவிட்டேன். மேல்சட்டைப் பையில் வைத்திருந்த பழைய சவரத் தகடையெடுத்து பனம் பழத்தை அறுத்துத் தள்ளினேன். அதைப் பிடிக்க இரண்டு பையன்கள் முயன்றும் பழம் நழுவி தரையில் விழுந்தது.
‘‘எறங்கப் போறேன்’’ அறிவிப்பு கொடுத்துவிட்டு இறங்க முற்படுகையில்தான் தலையில் யாரோ பலமாக ஒரு குட்டு குட்டியதுபோல் இருந்தது. ஒரு கணநேர வலி, மறுபடியும் அது. ஒரு பறவை. என் தலைக்குமேல் பறந்து தலையைச் சுற்றி வட்டமிட்டு கொத்திய குட்டு அது. அதை விரட்டும் யத்தனிப்பில் கைப்பிடியை நழுவிக்கொண்டு விழுந்துவிட்டால்… வேறுவழியின்றி பறவையை சமாளிக்க முடியாது இறங்குவதில் கவனத்தைத் திருப்பினேன்.
திடீரென்று ஒரு பையன் கத்தினான்,
‘‘டேய்! எறங்கிடாதேடா. அந்த குருவிக்கூட்டம் பாத்தியா, அதில குஞ்சியிருக்கு. அதைப் புடிச்சி கீளே போடு’’ இவன்தான் பனம் பழம் பறித்துப் போட்டால் குட்டிக் கடை தோசை வாங்கித் தருவதாய்ச் சொன்னவன். அவன் மேலும் தொடர்ந்து கத்தினான்.
‘‘குருவிக்கூட்ட கலைச்சிப் போடு. குஞ்சுங்கள மட்டும் ஓம் பாக்கெட்ல வச்சிக்கிட்டு எறங்கு. ரெண்டு தோசை வாங்கித் தாரேன். இல்லாங்காட்டி தோசை இல்லே…’’
நான் பனம்பழம் பறிப்பதற்காக பனை மரத்தில் ஏறியதாக அந்தப் பறவைகளிரண்டும் நினைத்திருக்காது என்பதும் அதன் குஞ்சுகளை எடுத்துக்கொண்டு கூட்டைப் பிய்த்துப்போடத்தான் மரத்தில் ஏறியிருக்கிறேன் என்றும் பறவைகள் நினைத்திருக்கும்.
காலையில் மாணிக்கம் சார் தமிழ் உபவாசத்திலிருந்து படித்த பனைமரப் பாட்டு தானாகவே நினைவுக்கு வந்தது. மனத்தில் மனனமாகிப்போன பாடல்.
‘‘ஜல்திடா, குஞ்சுங்கள பாக்கெட்ல போட்டுக்கிட்டு கீளே எறங்குடா,’’ கீழேயிருந்து கத்தினார்கள்.
– பனம்பழத்தைப் பறிக்கவே
பையன் ஒருவன் ஏறினான்-
ஏறி- பையன் செய்தது
என் மனம் உறுதியாக ‘‘முடியாது,’’ என்றது. அச்சமயம் யாரோ ஒருவன் எதற்கோ ஓடிவந்து கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு, ‘‘டேய் டேய், எறங்கு, மரத்துக்காரன் வர்ரான்’’ என்று கத்தி எச்சரித்துவிட்டு நண்பர்கள் பனம்பழத்தைத் தூக்கிக்கொண்டு ஓடினார்கள். நான் பதறிப்போய் சருக்கல் விளையாட்டில் சருக்கி வழுக்குவதுபோல பனைமரத்தில் வழுக்கியபடி இறங்க முற்படுகையில் இடது கை விரல்களுக்கிடையில் சர்ரென்று என்னமோ குத்திப் பாய்ந்தாற்போன்ற வலியுணர்வைக்கொண்டு உடலும் மனமும் சிலிர்த்துப்போய் இறங்கிவிட்டேன்.
ஒரு பையன் ஆத்திரத்தோடு என் சட்டையை இறுக பிடித்துக்கொண்டு பறவைக் குஞ்சை கொண்டுவராததற்காக ஒரு குத்துவிட்டான்.
அவனை விலக்கிவிட்டு, ‘‘ஒனக்கு தோசையெல்லாம் கிடையாது, பனஞ் சேவா மாத்திரம் தருவோம்’’ என்றார்கள்.
எனக்குள் மாணிக்கம் சார் படித்து விளக்கிய பனைமரக் கதைப் பாடல் திரைப்படமாய் ஓடிக் கொண்டிருந்தது. பறவைக்கூட்டைப் பிய்த்துப் போடாததும், பறவைக் குஞ்சுகளை கவர்ந்து வந்து அந்தப் பையன்களிடம் தராததும் ஒரு வித்தியாசமான சாகசச் செயலாகவே எனக்குள் வீரியமிட்டுக் கொண்டிருந்தது. தோசை பெரிய விஷயமாகப் படவேயில்லை.
ஆனால் இடது கை முஷ்டியில் வலியொன்னு நெறியேறுவதுபோல விண்விண்ணென்று தெறிப்பதை உணர்ந்தேன். என் இடது கை சுட்டு விரலுக்கும் நடுவிரலுக்குமிடையில் ஒரு முத்துபோல இரத்தம் நின்றிருந்தது. வீட்டுக்குப் போய் ஓரிடத்தில் உட்கார்ந்தேன். இரவு முழுக்க உறக்கம் வராதபடிக்கு கையில் வலி தெறித்தது. முனகிக்கொண்டேயிருந்தேன். அம்மா என் நெற்றியையும் கழுத்தையும் தொட்டுப் பார்த்துவிட்டு, ‘‘சுடுது, ஜூரம்டா!’’ என்றாள். கையின் அப்பகுதி குபுகுபுவென வெகுவாக வீங்கிக் கொண்டு வந்தது. வலியும் அதிகரித்தது.
காலையில் வலியும் வீக்கமும் மேலும் அதிகரிக்கவே… பள்ளிக்கூடத்துக்குப் போகவில்லை. ஒன்பது மணிக்கு தயிர் கொண்டுவந்த ஐய்யம்மா பார்த்துவிட்டு, ‘‘இதென்ன, சின்னவரு கை பணியாரம் மாதிரி உப்பியிருக்கு!’’ என்று சொல்லிக்கொண்டு தன் தாலிக் கயிற்றில் தொங்கின சேஃப்டி பின்னை எடுத்து என் கையின் வீக்கத்தில் ஒரு குத்து குத்தி எடுத்தாள். ஒரு பீங்கான் சாஸர் வழிய சீழ் நிரம்பிவிட்டது. கையை ஐய்யம்மா நசுக்கவும் இப்போது சீழ் வெள்ளையும் கொஞ்சம் சிவப்பு பாரித்தும் வெளிவந்தது. வலி குறைந்திருந்தது. அத்தோடு கனத்து தோன்றிய இடது முன்னங்கை இலேசாகிக்கொண்டு வந்தது.
ஐய்யம்மா கையை பிதுக்கிப் பிதுக்கி சீழ் மொத்தத்தையும் வெளியில் கொண்டுவரும் யத்தனிப்பிலிருக்கையில் ஊசியால் குத்திய வாய் வழியாக இரண்டு மூன்று கரிய பனஞ் சிலாம்புத் துண்டுகள் அரையங்குல நீளத்துக்கு வெளியில் வந்தன. பழைய வீக்கமே வலியைப் பொறுத்தளவு தேவலாம் போலிருந்தது. புது வலியாக உணர்ந்தேன் இப்போது.
அப்பா குதிரை வண்டி கொண்டுவந்து என்னை ஏற்றிக்கொண்டு ஊர்க்கோடியிலுள்ள மருத்துவமனைக்குப் போனார். டாக்டர் என்னை ஏகமாய்த் திட்டியதோடு அப்பாவையும் கண்டித்தார். பிறகு அவர் சிறு அறுவை சிகிச்சை செய்து மேலும் உடைந்த கரிய பனஞ் சிலாம்புத் துண்டுகளை மீதமுள்ள சீழை இரத்தம் கலந்ததாய் அமுக்கிப் பிதுக்கியெடுத்துவிட்டு தக்க மருந்துகளை வைத்துக் கட்டுப்போட்டதோடு ஊசி மருந்தும் செலுத்தி அனுப்பினார். கை பழைய நிலைக்கு மாறிக்கொண்டு வந்தாலும் வலி மட்டும் குறையவில்லை.
ஆனாலும்-ஒரு நிலையான மனச் சாந்தி மாறாத கதியில் தங்கிற்று. நான் படித்த பனைமரக் கதைப் பாடலில் வரும் கொடிய பையனாக பேரெடுக்காமல் பறவைக் கூட்டையும் குஞ்சுகளையும் காப்பாற்றிய காரியத்தை எண்ணி பெருமிதமே கொண்டேன். இரு விரல்களுக்கு இடையில் அறுவை சிகிச்சை செய்து பனைமர சிலாம்புகளை அகற்றிய வடு இன்றளவுமிருக்கிற ஒன்று. எனது எஸ்.எஸ். எல்.சி. தேர்வின்போது அங்க மச்ச அடையாளங்களில் இந்த வடுவும் ஒன்றாக ஏற்கப்பட்டு பதிவாகியிருக்கிறது.
எழுதியவர்:-

✍🏻 விட்டல்ராவ்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

