வகுப்பறை கதைகள் 7 (Vagupparai Kathaikal) :- மேட்டூர் டூர் (Mettur Tour Kadhai in Tamil) - விட்டல்ராவ் | தமிழ் கல்விக் கதைகள் - www.bookday.in

வகுப்பறைக் கதைகள் 7:- மேட்டூர் டூர் – விட்டல்ராவ்

மேட்டூர் டூர்

வகுப்பறைக் கதைகள்- 7

– விட்டல்ராவ்

மேச்சேரியில் கூடும் வாரச் சந்தைக்கான பொட்டல் வெளி மேச்சேரி பஞ்சாயத்து போர்டு பள்ளிக்கூடத்துக்கு மிக அருகிலிருந்தது. சற்று தொலைவில் திரெளபதையம்மன் கோயில். உற்சவ காலத்தில் சந்தைப் பொட்டலில்தான் கூத்து மேடை அமையும். பொட்டலில் மத்தியானத்து வறண்ட காற்றுக்கு புழுதி பறக்கும். வறட்சி-வெயில்-புழுதி-சூரைக்காற்று. சூரைக்காற்று சுழன்று சுழன்று அடிக்கையில் புழுதியுடன், சந்தை மேட்டில் தங்கியிருக்கும் காகிதத் துண்டுகள் தூக்கப்பட்டு காற்றில் சுழன்று சுழன்று வரப்போரம் நிற்கும் ஒற்றைப் பனைமரம் உயரம்கூட போய்ச் சுழலும்.

‘‘தும்டிகாய் இவ்வளோ பெரிசாருக்கே?’’ என்று முத்துவைப் பார்த்து கேட்டேன். தும்டிகாய் டென்னிஸ் பந்துக்கும் அளவில் சிறியது. வாயில் வைத்தால் பேய்க் கசப்பு. தரையில் படர்ந்து ஓடும் ஒருவகை வெள்ளரி இனம். நாட்டு மருந்துவகை. இலைகள் தர்பூசணி கொடி இலையின் சாயலைக் கொண்டிருக்கும்’’ பில்லிசூனியம்

‘‘ஏவல் குட்டிச் சாத்தான் வகையறாக்களுக்கு துணைபோகும் ரகசிய மருந்து மூலிகைகளில் ஒன்று. வாசலிலே கட்டினா பேய் கருப்பையெல்லாம் வெரட்டும்’’ என்பாள் ஐய்யம்மா.

‘‘தும்டிகாய்தானே இது?’’ என்று மீண்டும் கேட்கவும் முத்து அலட்சியமாய் சொன்னான்.

‘‘தும்டிகாயில்லடா, கோசாக்கா. கோசாப்பழம் அது.’’

மேச்சேரி சந்தை மைதானத்தில் அங்கங்கே தர்பூசணி கொடிகளும் காய்களும் பழங்களும் கேட்பாரற்று காணப்பட்டன. சந்தையில் வாங்கித் தின்றுவிட்டு துப்பிய விதைகளுக்கு எப்போதாவது பூச்சிகாட்டும் சன்னமழை அந்த விதைகளுக்கும் மறுவாழ்வளிக்கும்.

தலைமையாசிரியர் செங்கோடனுக்கு பெருமை பிடிபடவில்லை. இதுவரை, தான் ஒரு கவிதைப் பிரியன் என்ற நினைப்பில் சினிமாவில் தத்துவ அசரீரிப்பாடல்களைப்பாடும் எம்.எம்.மாரியப்பா குரலில் ஒலிக்கும் பின்பாட்டு ரசனையுடன் பல நாள் யோசித்து ஒரு கவிதையை கட்டி முடித்திருந்தார். எல்லா ஆசிரியர்களையும் தம் அறைக்கு அழைத்து வைத்துதான் கட்டிய கவிதையை வாசித்துக் காட்டியனுப்பினார். ஒவ்வொரு ஆசிரியரும் தத்தம் வகுப்பை அடைந்ததும் தம் மாணவர்களுக்கு அதை எடுத்துச் சொல்லி வரிகளை வாசித்தும் காட்டினர்.

எங்கள் மாணிக்கம் சாரும் வகுப்புக்கு வந்து அமர்ந்ததுமே அதைக் கூறினார்.

‘‘பசங்களா’’- சிறுமிகளையும் சேர்த்தே அழைப்பது அப்படி. நாங்கள் கவனமானோம்.

‘‘நம்ம ஹெட்மாஸ்டர் ஒரு பாட்டு கட்டியிருக்காரு. நம்ம பள்ளிக்கூடத்தப் பத்தினபாட்டு. நாளையிலேந்து அதுதான் காலையில் ப்ரேயர்ல பாடற பாட்டாயிருக்கணும்னு சொல்லிட்டாரு. நாளைக்கி ப்ரேயர்ல முதலிலே அவரே பாடிக்காட்டுவாரு. பசங்களும் டீச்சருங்களும் கூடவே சேர்ந்து பாடணும். அப்பத்தான் மனப்பாடமாகும். பாட்டப் படிக்கிறேன் கவனமா கேளுங்க’’, என்று சொல்லி முடித்துவிட்டு மாணிக்கம் சார் தலைமையாசிரியர் இயற்றியிருக்கும் கவிதையைப் படிக்கத் தொடங்கினார். செங்கோடன் அதை வார்த்தைக்கு வார்த்தை கவிதையென்றே அழைத்த அதே சமயம் ஆசிரியர்கள் அதை பாட்டு என்றே குறிப்பிட்டார்கள். தும்டிகாயிக்கும் கோசாப் பழத்துக்கும் தோற்றத்திலிருந்த வித்தியாசம்போல.

காலையில் இதுவரை பாடி வந்த இறை வணக்கப்பாடல் இன்று பாடப்படவில்லை. அதை ஐந்தாம் வகுப்பு மாணவிகள் அம்பிகாவும் லட்சுமியும்தான் சேர்ந்து இறை வணக்கத்தின்போது பாடுவர். இன்று, தான் இயற்றி, தானே இசையமைத்த பாடலை தலைமையாசிரியரே பாடுவதாயிருந்ததால் மாணவிகள் இருவரும் மெளனமாய் ஒதுங்கி நின்றனர்.

செங்கோடன், தான் இயற்றிய கவிதையைப் பாடத் தொடங்கினார். நீண்ட இடைவெளிக்குப் பின் பாடுகிறார், போலும். கடைசி இரு வரிகள் அவரது இசைக்கொப்ப சட்டென்று உச்சஸ்தாயியைக் கொண்டு மேலெழும்ப வேண்டியிருந்த நிலையில் அவருக்கு திடீரென்று குரல் இறங்கி உயர்த்த முடியாமல் கிறீச்சிட்டுக் கீழிறங்கியது.

நா நிலம் புகழ் பெறும்
ஞான கலை வாணியே
மா நிலம் உயர்வு பெற
பேரருள் செய்வாயே – (நாநிலம்)
சீர் பெற்றுயர் மேச்சேரி
செல்வ கலைப் பள்ளி
பேர் பெற்று யர்ந்திட
பேரருள் செய்வாயே நீயே – (நாநிலம்)

கணேசன் சார், ‘‘எல்லாரும் கைய தட்டுங்க,’’ என்று கூறவும் பிள்ளைகளோடு வகுப்பாசிரியர்களும் சேர்ந்து கை தட்டினர். மூத்த ஆசிரியர் நிலையில் அவரை இருவார்த்தைகள் பேசுமாறு செங்கோடன் கேட்டுக் கொள்ளவும் கணேசன் சார் அருகிலிருந்த பெரியண்ணன் சாரை ஜாடை செய்து தனக்கு பதிலாக பேசும்படி வேண்டிப் பார்த்தார். ‘‘நீங்கள்தான் சீனியர், பேசுங்க’’ என்றார் பெரியண்ணன் சார். ஒரு வழியாக கணேசன் சார், ‘‘நம்ம ஹெட்மாஸ்டர் அவர்கள் தாமே கட்டிய பாட்டை தாமே மெட்டு போட்டு பாடியிருப்பது சிறப்பானது. நாளையிலேந்து அதையே அம்பிகாவும் லட்சுமியும் பாடணுமினு கேட்டுக்கறேன்’’, என்றபோது பெரியண்ணன் சார் கணேசன் சாரின் காதில் ‘‘பாட்டில்லே, கவிதைனு சொல்லணும்’’ என்றார். தலைமையாசிரியர் தம் பங்கிற்கு பேசத் தொடங்கினார்.

‘‘இந்த நன்நாளில் எல்லாருக்கும் இன்னொரு மகிழ்ச்சியான விசயத்தையும் சொல்ல விரும்புகிறேன். அதாவது அடுத்தவாரம் சனி, ஞாயிறு விடுமுறையில் நம் பள்ளி மாணவ, மாணவிகளோடு உல்லாசப் பயணம் ஒன்று போகலாமென்று தீர்மானம். அதைப் பற்றி இரண்டு நாட்களில் தெரியப்படுத்துவோம்’’ என்றார். உடனே மாணவ, மாணவிகள் ஓவென்று கூவி கைதட்டி ஆரவாரம் ெசய்தனர். அன்றெல்லாம் வகுப்பறைகள் அனைத்திலும், உள்ளும் வெளியிலும் உல்லாசப் பயணம் குறித்தே பேச்சாயிருந்தது. பிள்ளைகள் பள்ளிவிட்டு வீட்டுக்குச் செல்லுகையில் மேலும் சுதந்திரமாக அது தொடர்பாகவே பேசிக் கொண்டு நடந்தனர். வீட்டுக்குள் நுழைந்ததுமே பின்னும் புத்துணர்ச்சியோடு தத்தம் வீட்டில் செய்தி தெரிவிப்பதிலிருந்தனர். அம்மாவிடம் சொல்லி முடிப்பதற்குள் மூச்சு வாங்கியது. செங்கோடனின் கவிதைப் பெருமையை அவர் வெளியிட்ட உல்லாசப் பயணச் செய்தி விழுங்கிவிட்டது.

வகுப்பறை கதைகள் 7 (Vagupparai Kathaikal) :- மேட்டூர் டூர் (Mettur Tour Kadhai in Tamil) - விட்டல்ராவ் | தமிழ் கல்விக் கதைகள் - www.bookday.in
மேட்டூர் டூர் (Mettur Tour)

மறுவாரம் மாணிக்கம் சார் பிள்ளைகளிடம் உல்லாசப் பயணத்தைப் பற்றி பேசினார். பிள்ளைகள் தலா ஒரு ரூபாயை அந்தந்த வகுப்பாசிரியரிடம் செலுத்த வேண்டும். மேட்டூருக்கு உல்லாசப் பயணம். ஒரு நாள், ஓரிரவு தங்கி மறுநாள் பகல் முழுக்க சுற்றிப் பார்த்துவிட்டு திரும்புவதாகத் திட்டம். மேச்சேரியிலிருந்து மூன்றரை மைல் தொலைவிலுள்ள குட்டப்பட்டிக்கு எல்லாரும் நடந்தேபோய் குட்டப்பட்டி ரெயில்வே ஸ்டேஷனில் ரயிலேறி மேட்டூரை சென்றடைய வேண்டும். இரவு தங்கல் மேட்டூர் அணைப்பகுதியின் டவுன்ஷிப்பிலுள்ள அரசாங்க உயர்நிலைப் பள்ளியில். அன்றைய இராச் சாப்பாட்டுக்கு பிள்ளைகள் வீட்டிலிருந்து எடுத்து வந்துவிட வேண்டும். மறுநாள் காலைச் சிற்றுண்டி, மதிய உணவு முடித்துக்கொண்டு பார்க்க வேண்டிய இடங்களைப் பார்த்துக்கொண்டு மாலை ரயிலில் குட்டப்பட்டி வழியாக ஊர் திரும்ப ேவண்டும்.

மற்றொரு கவர்ச்சிகரமான விஷயத்தையும் மாணிக்கம் சார் கூறி பிள்ளைகளை பரவசம்மிக்க வியப்பிலாழ்த்தினார். அன்றிரவு சினிமாவுக்கும் போகலாமென்ற திட்டமும் இணைக்கப்பட்டிருந்தது. மின்சார வசதியில்லாத மேச்சேரிக்கு டைனமோவில் ஓடக்கூடிய ஓலைக் கீற்றுக்கொட்டகை சினிமா எப்போதாவது வரும். ஒரு வருடமாய் அது எதுவும் இல்லாததால் சினிமா தாகம் மேலிட்ட பள்ளிக்கூட ஆசிரிய-ஆசிரியைகள் உல்லாசப் பயண சந்தர்ப்பத்தை முழுமையாக்கி தீர்மானித்தனர். தலைமையாசிரியரின் பேரவாவும் அதுவாகவே இருந்தது நல்லதாய்ப் போயிற்று.

சில ஆசிரியர்கள் மேட்டூரில் சுவையான ஆற்று மீன் கிடைப்பதால் நல்ல உணவு விடுதி ஒன்றில் இராச் சாப்பாட்டை வைத்துக்கொள்ளலாமென யோசனை கூற, தலைமையாசிரியருக்கு பிரியாணி நினைவுக்கு வந்துவிட்டது. ஆசிரியர்களின் இராச் சாப்பாட்டுத் திட்டம் இவ்வாறு அமையவும், அவர்களில் பேர் பாதிக்கு வீட்டிலிருந்து சாப்பாடு எடுத்து வரவில்லை.

இராணுவ அணிவகுப்பு முறையில் வரிசையமைத்து நடத்தி மூன்று மைல் தொலைவை சுளீர் வெயிலில் கடந்து குட்டப்பட்டி ரெயில் நிலையத்தைச் சென்றடைய வைத்தனர். ஆசிரியர்கள் அனைவரும் குடை கொண்டு வந்திருந்தார்கள். புகைவண்டி வந்து நிற்கையில் கூட்டமில்லை. பிள்ளைகள்தான் என்றால் ஆசிரியர்களும் ரயில் பெட்டிக்குள் ஜன்னலோரம் பிடித்து அமரத் துடித்தார்கள். மேட்டூர் சேலம் கேம்ப் என்றழைக்கப்பட்ட பகுதியில் ரயில் நிலையம் இருந்தது. தொடர்வண்டி அத்தோடு நின்றுவிடும் என்றார்கள். சேலம் கேம்ப் வழியே காவிரி, அணைக்கட்டின் பக்கவாட்டிலிருந்து பிரிந்து பாயும் வேகத்தைத் திறந்து மூடக்கூடிய மேலிருந்து கீழிறங்கும் பதினாறு மதகுகள் கொண்ட பெரும்பாலத்தைக் கடந்து பெரிய மலையை அடைந்தோம். மலையை இரண்டாகப் பிளந்து நடுவில் தார்சாலை போடப்பட்டுள்ள வழியைக் கடந்து படிக்கட்டுகள் மூலம் மலையைவிட்டு இறங்கி மேட்டூர் அணைப் பகுதியை அடைவோம் என்று ஒவ்வொரு வகுப்பாசிரியரும் தத்தம் வகுப்புப் பிள்ளைகளுக்கு பாடம் எடுத்தனர்.

பதினாறு ஷட்டர்களை பதினாறு கமான் என்றார்கள். மேட்டூர் அணை டவுன்ஷப்பிலிருந்து மலைப் பாதை வழியே சேலம் கேம்ப் வரை வந்துபோக இரண்டு மூன்று டவுன் பஸ்கள் இருந்தன. ஆனால் மாணவ, மாணவிகளை நடத்தியே அழைத்துச் சென்றார்கள். அணைக்கட்டைப் பார்த்து அதிசயித்தவாறே காவிரிக்கு குறுக்கே இருந்த நீண்ட பாலத்தைக் கடந்து உயர்நிலைப் பள்ளியை அடைந்தோம். முன்னதாகவே தலைமையாசிரியர் இராத் தங்கலுக்கு அனுமதியை எழுதிக் கேட்டு பெற்றிருந்தார். அத்தோடு ஆளுனர் மாளிகை, அணைக்கட்டு, பூங்கா என்று எல்லாவற்றையும் மாணவர்கள் சுற்றிப் பார்க்க அனுமதி பெற்றுவிட்டார்.

‘‘காபி, டீ குடிக்கிற பசங்க யாராரு? கூச்சப்படாம கை தூக்குங்க?’’, என்றார் பெரியண்ணன் சார்.

பெரும்பாலும் பிள்ளைகள் மேச்சேரியையும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களையும் சேர்ந்தவர்கள். நாலைந்து பேர் மட்டுமே கைதூக்கினோம். அவர்களில் நானும் மோகனா அக்காவும் சேர்த்தி.

‘‘மத்தவங்கெல்லாம் காபி, டீ குடிக்கிறதில்லையா?’’

‘‘காலைல கூளுதாங் குடிப்போங்க சார்’’ என்றார்கள் ஒரே குரலில்.

‘‘நல்ல பழக்கம்.’’என்று கூறிவிட்டு எங்கள் நாலைந்து பேரை மட்டும் அழைத்துக் கொண்டு அருகிலுள்ள தேநீர் கடைக்குச் சென்றார்கள். எல்லாருக்கும் தேநீரே வரவழைத்தார்கள். எங்கள் வீட்டில் காபிதான் இரண்டு வேளையும். அக்கா முகத்தை ஒரு மாதிரி வைத்துக்கொண்டாள். நடந்த அலுப்பில் எனக்கு எதுவும் சூடாயிருந்தால் போதுமென்றிருந்தது.

மூன்று ஆசிரியைகள் மாத்திரம் இரவுக்கு சாப்பாட்டை டப்பா கட்டி எடுத்து வந்திருந்தார்கள். தலைமையும் ஆண் ஆசிரியர்களும் பிரியாணிக்கு கடை தேடத் தொடங்கியிருந்தனர். ஒரு கடையைத் தேர்ந்தெடுத்து சாப்பிட்டுவிட்டு இரவு பத்துமணி ஆட்டத்துக்கு சினிமாவுக்கு போகலாமென்று திட்டம். சேலம் கேம்பில் துணிக்கூடார தியேட்டரில் ‘மருதநாட்டு இளவரசி’ ஓடிக் கொண்டிருந்தது. தலைமையாசிரியருக்கும் பெரியண்ணன் சாருக்கும் அந்த திரைப்படத்தைப் பார்த்துவிட வேண்டும் என்று துடிப்பு. மாணிக்கம் சார், கணேசன் சார் மற்றும் மூன்று ஆசிரியைகளும் மேட்டூர் அணை டவுன்ஷிப்பில் மற்றொரு கூடாரத் திரையரங்கில் ஓடிக் கொண்டிருந்த ‘இதய கீதம்’ திரைப்படத்தைப் பார்க்க ஆர்வம் கொண்டனர்.

அதற்கேற்றாற்போல மாணவ, மாணவிகளை இரு பகுதிகளாய்ப் பிரித்து தம்முடன் அழைத்துச் சென்றனர். மோகனா அக்காவும் வேறுசில மாணவிகளும் சிவகாமி டீச்சரும் சினிமா பிடிக்கவில்லையென்று கூறி தூங்கத் தொடங்கினர். அந்த வகுப்பறைகளில் விளக்கு வசதியில்லை. இதையறியாத ஆசிரியர்களும் மெழுகுவர்த்திகூட வாங்கித் தராமல் சினிமாவுக்குப் போவதிலும் பிரியாணிக்கடை தேடுவதிலுமே கருத்தாயிருந்துவிட்டனர். இருட்டில் சாப்பாடு தேடும் விஷயம் சரிபடவில்லை. ஒருவர் டப்பா இன்னொருவர் கைக்கு என்றானவுடன் அதன் பண்டமும் கைமாறி சுவையும் வேறுபட்டது. மாணவிகள் எல்லாவற்றையும் நகைப்புணர்வோடு ஏற்றுக்கொண்டதுதான் பெருந்தன்மை இருட்டிலேயே பாத்திரங்கள் உருட்டல் ஓசை, சிரிப்பு, எக்காளம்.

‘இதய கீதம்’ கொஞ்சம் நீளம் குறைவு. படம் முடிந்து அங்கு போனவர்கள் வந்துவிட்டனர். வந்தவர்கள் அரைத் தூக்கத்திலிருந்த சினிமாவுக்கு வராதவர்களுக்கு கதையைக் காட்சி ரூபமாய் விவரித்துச் சொல்லுவதில் இறங்கிவிட்டனர். அந்த சமயம் எதிர்பாராத ஒன்று நிகழ்ந்தது.

சேலம் கேம்ப் திரையரங்கில் சினிமா பார்த்துவிட்டு வந்த ஆசிரியர்கள் குதிரைவண்டி பிடித்து ஏறி இறங்கினார்கள். இன்னும் சில ஆசிரியர்கள் மாணவர்களோடு நடந்து வந்துகொண்டிருந்தனர். தலைமையாசிரியர் வண்டியைவிட்டு இறங்காமல் படுத்தே இருந்தார்.

‘‘அவருக்கு பிரியாணி ஒத்துக்கலே’’ என்றார் பெரியண்ணன் சார்.

‘‘அவ்வளோ நேரத்துக்கு மேலே இந்த வயசில பிரியாணியெல்லாம் சாப்புடக்கூடாதுங்க சார்’’, என்றாள் லட்சுமி டீச்சர்.

‘‘என்னாச்சி?’’ என்று கேட்டார் மாணிக்கம் சார்.

‘‘வயித்தால போயிக்கிட்டேயிருக்கு. ரண்டுவாட்டி வாந்தியுமாயிருக்கு’’, என்றார் பெரியண்ணன் சார்.

அந்த நேரத்துக்கு அந்த ஊரில் டாக்டர் யாரையாவது பார்க்கலாமா என்று ஓர் ஆலோசனை.

‘‘அம்மாங்க ஆசுபத்தரிதான் பெஸ்டு. எந்நேரமும் ஆராய்ச்சி டாக்டரிருப்பாங்க’’, என்றார் பள்ளிக்கூட வாட்சுமேன்.

‘‘அது எங்கிருக்கு?’’

‘‘’’தூக்கனாம்பட்டி மிஷன் சர்ச்சிகிட்டே’’

‘‘எனக்குத் தெரியும் அம்மாங்க ஆசுபத்தரி, போலாமுங்களா?’’என்று கேட்டார் குதிரை வண்டிக்காரர்.

வண்டி மேட்டூர் டவுன்ஷிப்பை அடுத்துள்ள தூக்கனாம்பட்டி மிஷன் ஆசுபத்தரிக்கு திரும்பியது. பெரியண்ணன் சாரும் ஃபிலோமினா டீச்சரும் உடன் சென்றார்கள்.

‘‘ஒண்ணரை மைல் தூரத்திலிருக்கும் மிஷன் மருத்துவமனையில் கன்னியாஸ்திரீகளும் மதர் ஒருவரும் இருப்பார்கள்’’ என்றார் வண்டிக்காரர்.

‘‘அம்மாங்க ஆசுபத்தரில எல்லாம் இலவசங்க’’ என்றார் வண்டிக்காரர்.

‘‘ஃபுட் பாய்ஸனாயிருக்கலாம். கூட துணைக்கு யாராச்சி இருக்கணுமே’’ என்றார்கள். ஃபிலோமினா டீச்சர்தான் இருப்பதாகச் சொன்னார். தலைமையாசிரியர் அங்கே அனுமதிக்கப்பட்டார்.

மறுநாள் பிள்ளைகள் தயாராகி மேட்டூர் அணைக்கட்டை, மின் நிலையம், பூங்கா ஆகியவற்றை பெரியண்ணன் சார், மாணிக்கம் சார், கணேசன், லட்சுமி, சிவகாமி டீச்சர்களோடு பார்த்துவர புறப்பட்டனர். மத்தியானம் இரண்டு மணியளவில் தலைமையாசிரியருக்கு உடல்நிலை தேறி ஃபிலோமினா டீச்சருடன் திரும்பி வந்தார். எல்லாரும் மாலை ரயிலுக்குப் புறப்பட தயாராகினர். ஏழாம்- எட்டாம் வகுப்பு மாணவர்கள்மட்டும் தங்கள் உல்லாசப் பயணத்தை வியாசம் எழுதிக்கொண்டு வர வேண்டும் என்று ஃபிலோமினா டீச்சர் கூறினார். தலைமையாசிரியரும் பெரியண்ணன் சாரும் ரயில்வே ஸ்டேஷனுக்கு குதிரைவண்டியில் பயணித்தனர். மற்றவர்கள் யாவரும் நடை கட்டினர். பயணிகள் தொடர்வண்டி ஒரு மணிநேரம் தாமதமாக வரும் என்று அறிவிக்கப்பட்டது.

எழுதியவர்:-

கி. விட்டால் ராவ் - தமிழ் விக்கிப்பீடியா

✍🏻 விட்டல்ராவ்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *