வால்முளைத்த சாமியார்
வகுப்பறைக் கதைகள்- 8
– விட்டல்ராவ்
காலையில் வகுப்பறையில் ஒருவருக்கொருவர் பிள்ளைகள் ரகசியம் பேசுவதிலிருந்தனர். கணேசன் சாரிடம் சிவகாமி டீச்சரும், லட்சுமி டீச்சரிடம் ஃபிலோமினா டீச்சரும் கேள்விக்குறியை முகத்தில் தேக்கியபடி மெல்லிய குரலில் பேசிக்கொண்டிருந்தனர். ‘‘என்னடா?’’ என்று கேட்டார் மாணிக்கம் சார். பிறகு,
‘‘என்னடா?’’ என்று கேட்டார் மாணிக்கம் சார். பிறகு, ‘‘அமைதி’’, என்று மேஜையைத் தட்டி வகுப்பறையை மெளனமாக்கினார். அவர் மற்ற ஆசிரியர்களை சந்திக்காமல் நேரே வகுப்பறைக்கு வந்துவிட்டிருந்தார். பிறகு தமக்கும் ஆர்வம் மேலிட்டவராய் வகுப்பறையை மெளனமாக்கிவிட்ட தெம்பில் ஆர்வம் மேலிட்டவராய் பிள்ளைகளின் பக்கம் திரும்பினார்.
‘‘என்னடா, உங்களுக்குள்ளே?’’
‘‘சார்! இவன் சொல்றான் சார்..’’-என்று ஒருவன் இழுத்தான். உடனே இரண்டு மூன்று மாணவர்கள் எழுந்து வகுப்பாசிரியரை சூழ்ந்து கொண்டனர். பியூன் வந்து தலைமையாசிரியர் அவசரமாய் அழைப்பதாய்க் கூறி மாணிக்கம் சாரை அழைத்துப் போனார். வகுப்பு மீண்டும் கூச்சல் கும்மாளத்துக்குத் திரும்பியது.
மேச்சேரி கடைத் தெருவிலுள்ள கடைகள், தேநீர் விடுதிகள், சிற்றுண்டி விடுதியெங்கும் ஒரே விஷயம் பேச்சாக மூச்சாக பரவியிருந்தது. வீடுகள் எங்கும் அதே பேச்சுதான். பொதுக் கிணற்றடியில் பெண்கள் தண்ணீர் சேந்துவதைவிட்டு வரிசையாக அமர்ந்து மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருந்தனர்.
இப்போது காவல் நிலையத்துக்கும் அந்த விஷயம் பரவி அதைப் பற்றின சர்ச்சையைக் கிளப்பிவிட்டது. இன்ஸ்பெக்டர் போலீஸ் காவலர்களை நோக்கி, ‘‘முதல்லே, ஜனங்களுக்கு இருக்கிற காப்ராவை போக்கணும். ஜீப்ல ஏறி ஒலிபெருக்கியாலே தைரியம் சொல்லணும். வதந்திகளை நம்பவேண்டாம்னு, வதந்திகளை பரப்பாதீங்கனு. ஜீப் என்னாச்சி? என்றார்.?’’
‘‘மேட்டூர் ஒர்க் ஷாப்ல இன்னும் வேலை முடியில்லே சார். மூணு நாளாவும்னு சொன்னான்.’’
தலைமையாசிரியர் அறையில் ஆசிரியர்கள் அனைவரும் கூடியிருக்க, எட்டாம் வகுப்பு மாணவ-மாணவிகள் ஆர்வ மிகுதியால் அவ்வறையைக் குறுக்கும் நெடுக்குமாக போய் போய் வந்தார்கள்.
‘‘எல்லாரும் க்ளாஸ் ரூம்ல போயிருங்க. வெளியில குறுக்கும் நெடுக்குமா அலையக்கூடாது,’’ என்று அதட்டலாகச் சொன்னார் தலைமை.
‘‘யாரோ வால் மொளைச்ச சாமியாராம், நடுராத்திரில வருவாராம்.’’,- இதுதான் பீதியைக் கிளப்பும் பேச்சாக மேச்சேரியைப் போட்டு உலுக்கிக் கொண்டிருந்தது.
யோசனையே இல்லாமல் பெண்கள் நம்பிக்கையின் வசமாய் பயத்தின் உச்சத்திலிருந்தார்கள். கற்பனை வெகுவாக கை ஓங்கியது. பய உணர்வை இருட்டு அதிகரிக்கச் செய்தது. கற்பனை பய உணர்வையும் இருட்டையும்கண்டு கை கொட்டிச் சிரித்தது. ஊரில் மின்சார வசதியில்லாதது இருட்டுக்கு வெகுவாகக் கை கொடுத்தது. இருட்டில் மிதந்து பரவும் பய உணர்வு பல்வேறு மூட, நம்பிக்கைகளை உருவாக்கவும் உருவானவற்றை உறுதி செய்யவும் பிறகு அவை நிலைத்து நிற்கவும் அடிப்படையானது. இருட்டு- தெய்வ நம்பிக்கையை ஒரு புறமும் பேய், பிசாசு நம்பிக்கையை இன்னொருபுறமுமாய் காட்டியபடியிருந்தது.
வால் முளைத்த சாமியார் வருகிறார் – இருட்டினதும் வருவார். கடிகாரம் காட்டும் காலக் கணக்கில் வரமாட்டார். அந்த வருகை மனோவேகக் கணக்கிலானது.
இருட்டில் எப்போது வேண்டுமானாலும் தன் வருகையை வைத்துக்கொள்ளுவார். இந்த நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் முதலில் எங்கு முளைத்தது என்பது யாருக்கும் முக்கியமாய்ப் படவில்லை. யாரால் கிளப்பிவிட்டது என்பதும் யோசனையில்லை. பொதுக் கிணற்றடியா, சந்தை நாளா, கடைத்தெரு முனையா, கருப்புச் செட்டி பங்களாவா எதுவும் தெரியாது. பக்கத்து ஊர் மல்லிகுந்தம். அங்கு கோயில் உற்சவத்தை முன்னிட்டு எங்கெங்கிருந்தோ வந்திருந்த ஆண்டிப் பரதேசிகளில் மூன்றுபேர் இங்குள்ள பத்ரகாளியம்மன் கோயில் மண்டபத்தில் இராத் தங்கலுக்கு ஒதுங்கியிருந்தனர். ஏழாம் வகுப்பு மாணவர்கள் காலையிலும் மாலையிலும் போக வர நின்று நின்று கவனிப்பதை பரதேசிகளும் கவனித்தனர். இரவு அவர்களை போலீஸ் அழைத்து விசாரித்து அனுப்பியதையடுத்து மறுநாள் அதிகாலையிலேயே அவர்கள் இடத்தைக் காலி செய்தனர்.
முதலில் செய்தி வகுப்பறையில்தான் காதில் விழுந்தது.
‘‘டேய், சத்தமா சொல்லாதே’’
‘‘மறுவாட்டி சொல்லு, சரியா கேக்கல்லே’’
‘‘வால் முளச்ச சாமியாராம்.. இருட்டினதும் வருவாராம். மோசமானவராம்’’
‘‘சரி, வந்தா என்ன?’’
‘‘கடை, வீடு எல்லாமே கதவ சாத்திவச்சிருக்கணுமாம். எந்த வீட்டுக் கதவையும் தட்டுவாராம். ஆனா திறக்கவே கூடாதாம்.’’
‘‘திறந்தா?’’
‘‘திறந்து வால்முளைச்ச சாமியாரப் பாத்தாக்கா, கண் போயிடுமாம். கண்ணே தெரியாதாம்’’
‘‘குருடாயிடுவோமா?’’
‘‘ஆமாடா..’’
‘‘மெய்யாவா?’’
‘‘ஒங்கொப்புரானெ’’
‘‘இதெல்லாம் ஆரு சொன்னாங்க?’’
‘‘எங்கம்மா, அப்பா’’
‘‘அவங்களுக்கு எப்பிடி தெரியும்?’’
‘‘அதெல்லாம் பெரியவங்க விஷயம்டா..’’
‘‘இல்லே, எனக்கு என்னானு சொன்னாங்கனா, பாத்தா, ஊமையாப் போயிடுவோமினு சொன்னாங்க.’’
‘‘அதான், எப்பிடியோ ஆபத்தாயிடும்பா,’’
‘‘போலீஸ் டேசன்கூடவா சாத்திவைப்பாங்க?’’
‘‘பின்னே, போலீஸ்மட்டும் மனுசங்க இல்லியா?’’
‘‘அப்ப, நம்பளையெல்லாம் காப்பாத்தறது ஆரு?’’
‘‘சாமி.’’
வகுப்பறைகள், குழம்பித் தோன்றின. திடுதிப்பென கசமுசப்பும் அடுத்து மெளன அமைதியுமாய் தோன்றின. மாணிக்கம் சார் தவிர மற்ற ஆசிரிய, ஆசிரியைகள் குடும்பஸ்தர்கள். அவர்கள் கொஞ்சம் கலவரமாகவே இருந்தனர். அவர்களின் முகம் வகுப்பறையில் பிள்ளைகளோடு இருக்கையில் சாதாரணமாக காணப்படும். வீட்டுக்குப் போனதும் மாலை மங்கத் தொடங்கவும் ஒருவித பதட்டம் தென்படும். மாணிக்கம் சார் ஒண்டிக்கட்டை. பிள்ளைகளோடு பிள்ளையாக குதூகலத்தோடு காணப்பட்டார்.
இரவு முற்றத் தொடங்கியிருந்தது. அம்மாவுக்கு அந்த நேரம் பார்த்து ஒரு பிரச்சினை வந்துவிட்டது. தீப்பெட்டி காலியாகிவிட்டது.
‘‘மொனைக் கடைவரை போயிட்டு வாடா. ஒரே ஓட்டமா ஓடி வாங்கிட்டு வந்திடு.’’
‘‘தொறந்திருக்குமா?’’
‘‘ஒரே ஒரு கதவு மட்டும் தொறந்திருக்கும்’’
‘‘பூரா இருட்டாயிருக்கேம்மா, பெயம்மாருக்கே.’’
‘‘முருகா முருகானு சொல்லிக்கிட்டே போ, வா.’’
‘‘அன்னிக்கி ராமா ராமானு சொல்லுனு சொன்னியே..’’
‘‘எது வேணுமானாலும் சொல்லிக்க.’’
‘‘சொன்னா வால் முளைச்ச சாமியார் ஒன்னும் பண்ணமாட்டாரா.’’
‘‘மாட்டார்’’
யாரும் தூங்கவில்லை. சாமானியத்தில் உறக்கம் வந்துவிடவில்லை. வால் முளைத்த சாமியார் இரவு பத்து மணிக்கு மேலேதான் பார்வேட்டைக்கு கிளம்புவாராம் என ஒரு பெண்மணி பொதுக் கிணற்றடியில் சொன்னதை மற்ற பெண்கள் எந்த குறுக்குக் கேள்வியுமின்றி கேட்டுக்கொண்டு முகத்தில் திகிலறைந்து கொண்டனர்.
இரவு பத்துக்கு மேல் வாசற்கதவையே பார்த்துக் கொண்டிருந்தவர்களுமுண்டு. தனக்கு தோன்றும் நேரத்தில் – நாளில்- இன்னார் வீட்டுக் கதவு என்று ஒரு தோராயக் கணக்கில் வந்து ஒரே ஒருமுறை தட்டுவானாம். நள்ளிரவில் கதவை ஒரே ஒருமுறை தட்டினால் அது நிச்சயம் வால் முளைத்த சாமியார்தானாம். இரவு எட்டுக்குமேல் எல்லாரும் கதவைச் சாத்தி வைத்தாக வேண்டும். அப்படி நள்ளிரவில் கதவு தட்டப்பட்டால் தவறியும் திறந்து பார்த்துவிடலாகாது என ஊரில் பொது எச்சரிக்கை விடப்பட்டது. அவர்களே தங்களுக்குள் ஒவ்வொரு திகிலாக சிருஷ்டித்து தங்களுக்குத் தாங்களே வினியோகித்துக் கொண்டனர். இதை எல்லாவற்றையும் மறுத்து வதந்திகளை உருவாக்கிப் பரப்பவேண்டாம். வதந்திகளை நம்பவேண்டாம் என்றெல்லாம் ஒலி பெருக்கியில் சொல்லிவைத்து மூடநம்பிக்கையை எதிர்த்து பிரச்சாரம் செய்ய நல்ல நேரம் பார்த்துக்கொண்டிருந்தது போலீஸ். உண்மையில் ஏட்டய்யாகூட இரவு பன்னிரண்டு வரை புழு நெளிந்துகொண்டிருந்தார்.
ஐய்யம்மா இந்தப் பரவலான பயநோய்க்கு ஒரு முறிமருந்து கண்டுபிடித்துவிட்டவளாக தீவிர முக பாவத்தை ஏந்திக்கொண்டு காலையில் வந்தாள். தயிர்ச் சட்டியிலிருந்து தயிரைக்கூட எடுத்து ஊற்ற மறந்தவளாய் வாயைத் திறந்தாள்.
‘‘நேரத்து எதனாச்சி கதவத் தட்டிச்சாம்மா?’’
‘‘இல்லே ஐய்யம்மா.’’
இதே கேள்வி ஊரில்- தெருவில் சந்திக்கும் ஒவ்வொருவரும் ஒருவரையொருவர் கேட்கும் கேள்வியாயிற்று. பள்ளிக்கூடத்தில் வகுப்பறைகள்தோறும் பிள்ளைகளும் ஆசிரியர்களும் கேட்டுக் கொள்ளும் கேள்வியாக இருந்தது.
‘‘ஒங்கூட்டு கதவு தட்டிச்சா?’’
‘‘இல்லே, ஒங்கூட்டு கதவு?’’
‘‘ஆரூட்டுக் கதவனாச்சி தட்டினாங்களா?’’
‘‘தெரியில்லையே’’
இந்த சமயம்தான் ஐய்யம்மா வால் முளைத்த சாமியார் அச்சுறுத்தலுக்கு முறி மருந்தொன்றைத் தன் மடியில் ஒளித்து வைத்துக்கொண்டு வந்து நுழைந்தாள்.
‘‘இத வாசல்ல கட்டித் தொங்கவுடணும். பேய் பிசாசு எந்த காத்துக் கருப்பும் கிட்ட அண்டாது’’ என்று உறுதியாகச் சொல்லிக்கொண்டே வாசல் நிலைப்படியை அண்ணாந்து பார்த்தாள். மாவிலைத் தோரணம் கட்டுவதற்காக ஏற்கெனவே மூலைக்கொன்றாக வாசற்காலில் அடிக்கப்பட்டிருந்த ஆணிகள் அவளுக்குத் தெம்பூட்டின.
‘‘ஒரு கவுறு எடு’’ என்று கேட்டுவிட்டு தன் மடியில் ஒளித்து வைத்திருந்த வஸ்துவை வெளியில் எடுத்தாள். ‘‘என்னாது?’’ என்று கேட்டாள் அம்மா.
‘‘தும்டிகா’’ என்றாள் ஐய்யம்மா.
‘‘ஓ, இதான் தும்டிகாயா?’’
அம்மா தந்த சணல் கயிற்றில் தும்டிகாயின் நீண்ட கொடியோடு காயைக் கட்டி நிலையிலடிக்கப்பட்ட ஆணியில் கட்டித் தொங்கவிட்டாள்.
‘‘நம்பூட்டுக்கு வால் மொளச்ச சாமியார் எதுவும் வராது..’’ என்றாள் ஐய்யம்மா.
‘‘ஒங்க வீட்லயும் கட்டியிருக்கியா?’’, என்று கேட்டாள் அம்மா.
‘‘எங்கூர்ல இந்த சங்கதி வர்லியே. இந்தூரு பெரிய வூரு. இங்கிட்டுத்தான் அதெல்லாம். நம்பூர்ல நம்பள கண்டுதான் பெயப்படுவான்,’’ என்றாள் ஐய்யம்மா சிரித்துக்கொண்டு.
விடிந்து வீடுதோறும் வாசல் தெளித்து கோலம் போடும் பெண்கள் உடனடியாக ஒருவரையொருவர் கேட்டுக்கொள்ளும் முதல் கேள்வியாக அதுவே இருந்தது.
‘‘ராத்திரி ஆருநாச்சி கதவத் தட்னாப்பல ரிந்திச்சா?’’
‘‘இல்லியே’’
‘‘இங்கியுமில்லே’’
‘‘அதென்ன வாசல்ல தொங்குது?’’
‘‘தும்டிகா’’
‘‘எதுக்கு?’’
‘‘கெட்டது எதுவும் அண்டாதாம். ஐய்யம்மாதான் கொணாந்து கட்டிச்சி.’’
அடுத்த வீட்டுக்காரி தனக்கு அடுத்த வீட்டுக்குச் சொல்ல… விஷயம் அடுத்தடுத்தும் எதிர் வரிசை வீடுகளுக்குமாய் தெரு முழுக்க தும்டிகாய் மகத்துவம் மீட்டெடுக்கப்பட்டது. அறிந்த அந்த மகத்துவம் அவசியமில்லாத காலத்தில் கிடப்பில் எறியப்பட்டு வந்து இப்போது அவசியம் நினைவூட்டி மறு அவதாரம் பெற்றது. பள்ளிக்கூடத்தில் வகுப்பறைகளிலும் தும்டிகாய் விசயம் பரவியிருந்தது. தலைமையாசிரியரும் பெரியண்ணன், கணேசன் சார்களும் லட்சுமி, சிவகாமி மிஸ்களும் தத்தம் வகுப்பு மாணவர்களை ஏவிவிட்டு தும்டிகாய்களை கொடியோடு பிய்த்தெடுத்து வந்து தரும்படி செய்தபோது, மாணிக்கம் சாகும் ஃபிலோமினா மிஸ்ஸும் வெவ்வேறு நம்பிக்கைகளின் அடிப்படையில் தும்டிகாயோடு வால்முளைத்த சாமியார் கருத்தையே நிராகரித்து ஒதுங்கினர்.
பொதுக்கிணற்றடியிலும் கடைத்தெருவிலும் சாலையோரங்களிலும் புதர்களில் ஆவாரம் செடிக் கூட்டங்களில் புரட்டிக் கிளறி தும்டிகாய் கொடித் தாவரத்தை தேடியலைந்தனர். கிடைக்கப் பெற்றவர்கள் புதையலைக் கண்டெடுத்த சாகச மகிழ்ச்சியில் திளைத்தனர். காவல் நிலையத்தில் ஏட்டய்யா சொல்லி வைத்து ஒன்றை கிடைக்கப் பெற்றுவிட்ட மனமகிழ்ச்சியில் சைக்கிளில் ஏறினார் வீட்டுக்கு…
சிலருக்கு தும்டிகாய் கொடிக்கும் தர்பூசணி கொடிக்கும் சட்டென்று வித்தியாசம் தெரியாமல் தர்பூசணிப் பிஞ்சையும் கொடியோடு பிய்த்தெடுத்துச்சென்று கட்டித் தொங்கவிட்டனர்.
‘‘குஞ்சாண்டியூர் ஏரிக்கரையில ஏகமா முளைச்சிருக்கு, போயி எடுத்தா’’, என்றார் பூக்கடைக்காரர். குஞ்சாண்டியூர் இங்கிருந்து இரண்டு மைல் தொலைவிலிருந்தது. அங்கிருந்து மேச்சேரியில் படிக்க பிள்ளைகள் வந்து போகிறார்கள். சைக்கிளிலும் நடையிலுமாய் ஜனங்கள் குஞ்சாண்டியூர் ஏரிப் பக்கம் போய் வந்தார்கள். போகும்போதே ஆணிக்கால் அமாவாசை சிறு எச்சரிக்கை செய்தான்.
‘‘ஏரியோரம், சைக்கிள எறங்கித் தள்ளு, கிளுவை முள்ளு கிடக்கும்.’’
உடனே ஊரிலுள்ள ஒரே சைக்கிள் ரிப்பேர் கடைக்கார இஸ்மாயில் பாய் இதைக்கேட்டு உஷாரானார். பஞ்சர் ஓட்டும் பசை கையிருப்பை சரிபார்த்துக்கொண்டார். இரண்டு மூன்று சைக்கிள்கள் திரும்பி வரும்போதே கிளுவை முள் குத்துக்கு பஞ்சராகி தள்ளிக்கொண்டு வரப்பட்டன. இஸ்மாயில் ஆண்டவன் கிருபையை எண்ணி கண்மூடினார். போனகாரியம் பலருக்கு வெவ்வேறுவிதமாய் காயும் பழமுமானது.
‘‘பொறந்தவனே, ரண்டு வச்சிருக்கியே, ஒண்ணு எனக்குக் குடேன்,’’ என்று கெஞ்சினாள் புட்டுக்காரி.
‘‘அதான் வாசல்ல கட்டியிருக்கியே, புட்டுக்காரம்மா’’ என்றான் அந்தப் பையன்.
‘‘ஐயே, அது கோசாக்கா பிஞ்சு, தும்டிகானு எம்மவன் கொணாந்து கட்டிட்டான்.’’ பையன் தன்னிடமிருந்த இரண்டு தும்டிகாய்களில் ஒன்றை அந்தம்மாளின் வாசலில் கட்டிவிட்டுப் போகையில், ‘‘இரு, புட்டு தின்னிட்டுப் போ’’ என்றாள்.
‘‘இன்னொரு நா வாரேன்’’ என்று கூறினான். அன்றிரவு மேச்சேரி நிம்மதியாக உறங்கினது என்று கூறிவிடலாகாது. காலையில் எதிர் வீட்டுக்காரர் சாதாரணமாய் வராதவர் அப்பாவைத் தேடிவந்தார்.
‘‘எப்பேசு சார், நேத்து ராத்திரி எங்கூட்டுக் கதவ தட்டின சத்தம் கேட்டிச்சி, ஒரே ஒரு வாட்டி தட்னாப்பல’’
‘‘தொறந்து பாத்தீங்களா?’’
‘‘இல்ல, தொறக்கல்ல’’
பக்கத்து வீட்டுக்காரரும் சொல்லிக்கொண்டிருந்தார். அவர் வீட்டுக் கதவையும் நள்ளிரவில் ஒரேயொருமுறை தட்டினாற்போல இருந்ததாம். நிறைய வீடுகள் அந்தத் தெருவில் நள்ளிரவில் ஒரு முறை கதவு தட்டப்பட்டதாக பேச்சு.
‘‘யாருமே தொறந்து பாக்கலியா, கதவத் தொறந்து பாக்கறதுதானே, எங்க வீட்டுக் கதவ தட்டவேயில்லையே’’ என்றார் அப்பா.
இதற்குள் வேறொரு செய்தி மிகவும் தீவிரமாக வால் முளைத்திருந்தது.
‘‘கோடி வீட்டுக் கதவ ஒடைச்சிருக்காங்க’’
‘‘பேட்டைய செட்டி வூடா?’’
‘‘ஆமா, செட்டியார் போன வாரந்தான் குடும்பத்தோட திருப்பதிக்கு போயிருக்காரு’’
‘‘என்னென்ன போச்சோ, செட்டியார் வந்தாத்தான் தெரியும்’’
பேட்டையசெட்டி ஊரிலுள்ள இரு ஜவுளிக்கடைகளில் ஒன்றின் உரிமையாளர். மாலைதான் ஊர் திரும்புவார் என்றார்கள். பொதுவான புகார் என அந்த வீடு உடைக்கப்பட்டிருக்கும் தகவல் முனிசீப் மூலமாக காவல் நிலையத்துக்கு தரப்பட்டது. அந்த வீட்டுக்கு முன்னால் இரு போலீஸார் காவலாக நிறுத்தப்பட்டனர். செட்டியார் வந்த பிறகு தெரியவரும் களவுபோன பொருள்கள் விவரம் குறித்து ஊரில் புதிய அக்கறை பிறந்தது. என்னென்ன விலை மதிப்புள்ள பொருட்கள் இருக்கும் என்பதை தெருவில் அவரவர்கள் பாட்டிற்கு சொல்லிக்கொண்டனர்.
எழுதியவர்:-
✍🏻 விட்டல்ராவ்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
இந்த கதையை வாசிக்கையில் என் நினைவுகள் சிறு வயதுக்கு என்னை அழைத்துச் சென்றது. ரத்தக்காட்டேரி வருகிறது என்று வேப்பமரத்தின் இலைகளை கொத்துக்கொத்தாக ஊர் முழுவதும் வீடுகளில் செருகி வைத்தது இன்னும் நினைவில் இருக்கிறது.
அப்போது அவிழ்த்து விடப்பட்ட ரத்தக்காட்டேரியின் கோர முகங்களும் கற்பனை கொடூரங்களும் இப்போது நகைப்பைத் தருகிறது.
மூடநம்பிக்கைகளுக்கு சமகால அரசியல் பூசி எழுதப்பட்டிருக்கும் சிறப்பான கதை இது.
வாழ்த்துகள் தோழர்…