வகுப்பறை கதைகள் 9 (Vagupparai Kathaikal) :- பாட்டு வாத்தியார் (Pattu Vaathiyaar Story in Tamil) - விட்டல்ராவ் | தமிழ் கல்விக் கதைகள்

வகுப்பறைக் கதைகள் 9 :- பாட்டு வாத்தியார்- விட்டல்ராவ்

பாட்டு வாத்தியார்

வகுப்பறைக் கதைகள்- 9

– விட்டல்ராவ்

ஒன்றரை நாள் உல்லாசப் பயணத்தின்போது கண்டு அனுபவித்த அணைக்கட்டு, அதன் பூங்கா, ஆற்றின் ஓட்டம், நகர வாழ்க்கை என்பவற்றை இனி நிரந்தரமாய் பார்க்கப்போகிறோம் என்ற மெய்சிலிர்ப்பு. ஆம், அப்பாவை மேட்டூர் தாலுகா அலுவலகத்துக்கு மாற்றிவிட்டார்கள். அரசுக் குடியிருப்பு வீடு, காவிரி நீர், மின்சாரம் எல்லாம் வாய்க்கப் பெற்ற ‘‘லைன் வீடு’’ அது. போலீஸ் குடியிருப்பு மனைகள் போலவே, ஆனால் அவற்றைவிட வசதிமிக்க இடைவெளிவிடாது ஒரே தொடராக கட்டப்பட்ட குடியிருப்புகள். ஒரே மாதிரி அமைப்பில் தனித்தனியாய் தடுத்து கட்டப்பட்ட வீடுகள். மரத் தூண் ஒன்றோடு வாசற்புறம் அகன்ற திண்ணை.
ராமு அண்ணனை மேட்டூர் கெமிக்கல்ஸ் தொழிற்சாலையில் ஏதோ பிரிவில் வேலை பயில அப்ரண்டிஸ்டாக சேர்த்துவிட்டிருந்தார் அப்பா. மேட்டூர் டவுன்ஷிப்பிலிருந்த பெரிய உயர்நிலைப் பள்ளி ஆசிரியர் பயிற்சி மையத்தோடு இணைந்திருந்தது. தொடக்கப் பள்ளியுமுண்டு. மேச்சேரியில் காலாண்டுத் தேர்வை நாலாம் வகுப்பில் எழுதியிருந்த நிலையில் மேட்டூர் அரசுப் பள்ளியில் அதே நான்காம் வகுப்பில் என்னைப் போட்டார்கள். அக்காவுக்கு ஐந்தாம் வகுப்பு. அது எங்கள் லைன் வீடுகளுக்குப் பக்கத்தில் தபாலாபீசுக்கு அருகிலிருந்தது.

சங்கு- டமாரம்- அம்பி- பாலர் மலர் – அனில் பத்திரிகைகள் வாங்கி வாசித்த பக்குவம் காரணமாய் கொஞ்சம் வாசிப்பு மோகம் கொண்ட சினேகிதர்கள் சேர்ந்தனர். கூடவே அரையணா, ஓரணா விலையில் விற்ற சிறுவர்க்கான கதைப் புத்தகங்கள் என் நட்பு வட்டத்தை விரிவாக்கியது. கதை சொல்லுவதும் கதை கேட்பதுமாக…
ஓர் ஆச்சரியம் வரவேற்றது. நான்காம் வகுப்புவரை வகுப்பாசிரியர் என்று ஒருவர் இல்லை. ஒவ்வொரு பாடத்தை நடத்துவதற்கென்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஆசிரியர் என்று வெவ்வேறு ஆசிரிய இளைஞர்கள் வந்து பாடம் எடுத்துவிட்டுப் போனார்கள். இன்றைக்கு ஒரு பாடத்தை ஒருவர் பாதிவரை நடத்திவிட்டுப் போனால் மறுநாள் மறு பாதியை இன்னொருவர் தொடர்ந்து முடிக்குமுன் ‘‘நேத்து எதுவரை நடத்தினாரு?’’ என்று தவறாது கேட்பார்.

காலாண்டுத் தேர்வை மேச்சேரியில் எழுதிவிட்டு மேட்டூருக்கு வந்து அரசுப் பள்ளியில் சேர்ந்தவுடன் சோமுவைக் கேட்டேன். அவனது தந்தை மேட்டூர் அணைக்கட்டில் இளநிலை கட்டிடப் பொறியாளர், அண்ணன் மேட்டூர் இண்டஸ்டிரீஸில் மெக்கானிக்கல் என்ஜினீயர்.

‘‘நமக்கு க்ளாஸ் டீச்சர் இல்லையா?’’

‘‘அஞ்சாங்கிளாசிலேருந்துதான் கிளாஸ் டீச்சர்னு வருவாங்க. இப்ப நமக்கு வர்றவங்கெல்லாம் டீச்சர் டிரெயினிங்கெடுக்கிற ஸ்டூடெண்டுங்க’’, என்றான் சோமு.
மேச்சேரிக்கும் மேட்டூருக்கும் பேச்சு- நாகரிகம்- விஷயஞான ரீதியாக பெரிய வித்தியாசமிருந்ததை போகப் போக புரிந்து கொண்டேன். மேச்சேரி கிராமம். எல்லாருமே அந்த ஊரையும் சுத்துமுத்து கிராமங்களையும் சொந்த ஊராய்க் கொண்டவர்கள். மேட்டூர் சிறு தொழில்நகரம். தொழிற்சாலைகள் இருந்ததாலும், அணைக்கட்டும் மின் உற்பத்்தி நிலையமும் அதன் அலுவலகங்களும் இருந்ததாலும் பெரும்பாலும் எங்கெங்கிருந்தோ வந்து பணியில் சேர்ந்து குடியேறியவர்கள். ஊரில் விளையாட்டு மைதானங்களிருந்தன. கால்பந்து, ஹாக்கி, வாலிபால் விளையாட்டுக்களையெல்லாம் அங்குதான் முதன்முதலாகப் பார்த்தேன். மேட்டூர் பள்ளி வகுப்பறையில்தான் கிரிக்கெட் என்ற சொல்லையும் அவ்வாட்டத்தைப் பற்றி வகுப்பில் சோமுவும் விஜயராகவனும் சரளமாக பேசிக்கொள்ளுவதையும் முதன்முதலாக கேட்டறிந்தேன்.

மாணவ ஆசிரியர்கள் ஒருநாள் வகுப்பெடுப்பவர்களை மீீண்டும் மிக அரிதாகவே வகுப்பெடுக்க வருவதைப் பார்க்க முடிந்தது. அவர்களில் யார் பெயரும் தெரியாது.

‘‘ஸ்டூடண்ட் வாத்தியார்’’என்றே குறிப்பிடப்படுவார்கள். அவர்கள் ஏழெட்டுப்பேர் சேர்ந்த குழுவாக வந்து ஒருவர் பாடமெடுக்க… மற்றவர்கள் அதைக் கவனித்து

‘‘பாடக் குறிப்புகள்’’ தயாரிப்பார்கள். வேறொரு நிரந்தர ஆசிரியரிடம் அதைக் காட்டி கையொப்பம் பெறுவார்கள். இதைப் பற்றியெல்லாம் நாங்கள் வகுப்பறையில் பேசுவோம்.

ரமணிகரன் பேரில் மாணவ ஆசிரியர்களுக்கு தனி மரியாதையுண்டு. எப்படியென்று கேட்டபோது ராமானுஜன் வெளியில் வந்து சொல்லுகிறேன் என்றான். ரமணியின் தலை சிறிது பெரியதாய் தோன்றுவதால் அவனைப் பனங்கொட்டைத் தலைவன் என்றழைப்பார்கள். ஆண், பெண், மாணவ, மாணவிகள் அனைவருக்குமே வகுப்பறையில் ‘‘பட்டப் பெயர்’’ சூட்டப்பட்டிருக்கும்.

‘‘பனங்கொட்டைத் தலையனோட அக்காதான் சரோஜினி டீச்சர். ஆறாவது, ஏழாவதுக்கு பாடமெடுக்கறாங்க. ஸ்டூடண்ட் வாத்தியாருங்க அவங்ககிட்டே காட்டி கையெழுத்த வாங்கறதுக்கு இவனைக் கூட்டிகிட்டுப் போவாங்க’’ என்றான் கக்கூஸ் சுவரருகில் வைத்து ராமானுஜன். உள்ளே ஒன்றுக்கு பெய்தபடியிருந்த சோமு எங்கள் பேச்சைக் கேட்டுவிட்டவனாக வெளியில் வந்து, ‘‘ரமணிகிட்டே சொல்லட்டுமா?’’ என்று மிரட்டினான். நாங்களிருவரும் கெஞ்சியும் அவன் விடாததால் ராமானுஜன் தன் கால்சட்டை ஜேபியிலிருந்து அச்சுவெல்லம் ஒன்றையெடுத்துத் தந்து சமாதானம் பெற்றான்.

‘‘வெல்லம் ஏது?’’ என்றேன்.

‘‘எங்கம்மா கூடையில வச்சி வீடு வீடா போய் விக்கிறாங்க. தேங்காய்கூட. ஒனக்கு நாளைக்குத் தர்ரேன் அச்சு வெல்லம்’’ என்றான் ராமானுஜன். அவன் அப்பா லட்சுமிபதி நாயுடு மேட்டூர் இண்டஸ்டிரீஸில் ஸ்பிட்டர் தொழிலாளி. அவர்கள் ஃபிட்டர்ஸ் குவார்டர்ஸில் வசிப்பவர்கள்.

காலை நான்காவது வகுப்பு. வெயிலும் பசியும் பொதுவாக பள்ளிக்கூடங்களில் காலையில் கடைசியான நாலாம் வகுப்புதான் டிராயிங் வகுப்பாக, இசை வகுப்பாக, ஒழுக்கப் பாடமாக, கைவினைப் பயிற்சி வகுப்பாக, விளையாட்டு வகுப்பாகவெல்லாம் வாரம் ஒரு வகுப்பைக் கொண்டிருக்கும். நான் பள்ளியில் சேர்ந்த புதிது அது. நான்காவகு பீரியட்.

‘‘யார் வருவாங்க?’’, என்று கேட்டேன்.

‘‘நீ இன்னும் டைம் டேபிள் எழுதிக்கலியா, தர்ரேன், கோடு போட்டு எழுதிக்க. இன்னிக்கி நாலாவது பீரியடு பாட்டு கிளாஸ். பாட்டு வாத்தியார் வருவாரு’’, என்றான் ராமானுஜன்.

‘‘பாட்டுகிளாஸா!’’ என்று மூக்கில் விரல் வைத்தேன்.

வகுப்பில் சரி பாதிக்கு பெண் பிள்ளைகள். கால் பரீட்சை விடைத்தாள் திருத்தப்பட்டு ஒவ்வொருவருக்கும் தரப்பட்டதில் பெண் பிள்ளைகளே முன்னிலையிலிருந்தனர். ராமானுஜன் மூன்று பாடங்களில் தோல்வியடைந்திருந்தான். வகுப்பில் நுழைந்தவரைக்கண்டு பிள்ளைகள் எல்லாரும் எழுந்து, ‘‘நமஸ்தே சார்!’’ என்றார்கள். மேச்சேரியில் ‘‘வணக்கம்’’ என்றே சொல்லி பழக்கமான நான் இப்போது மெளனமாக எழுந்து நின்றபோது ராமானுஜன், ‘‘பாட்டு வாத்தியார், நமஸ்தே சொல்லு’’ என்றான்.

நாலரையடி உயரமிருப்பார். பப்ளிமாஸ் தலை. மிளகும் உப்பும் கலந்த தலை முடியை நுணுக்க வெட்டியிருந்தார். கருப்பும் குண்டுமான மேனியை முழுக்கைச் சட்டையும் பழுப்பு வேட்டியும் அலங்கரித்தன.

‘‘போன வகுப்பில என்ன பாடினோம்? வசந்தாபாய் எழுந்து பாடு’’ என்றார்.

‘‘இவர் பேரென்ன?’’ என்று ராமானுஜனைக் காதில் கேட்க அவன், ‘‘சுந்தரம்’’ என்று என் காதில் சொன்னான். சார் கவனித்துவிட்டார்.
‘‘என்ன காதைக் கடிப்பு?’’ என்று கேட்டார். ராமானுஜன் ‘‘ஒன்றுமில்லை’’ என்றான்.

‘‘நீ கொறவனாச்சே, நீ சொல்லு, ஒம்பேரென்ன, புதிசா?’’ சொல்லிவிட்டு, ‘‘ஒங்க பேரைக் கேட்டேன் சார்’’, என்றேன்.

‘‘என்னையே கேட்டிருக்கலாமே, நான் சுந்தரம்’’ என்று கூறிவிட்டு, ‘‘ஒப்பா பேரென்ன, என்ன உத்தியோகம்?’’ என்றார்.

பாட்டு வாத்தியார், தான் கற்றுத் தரும் பாட்டை முதலில் கரும்பலகையில் முத்தான குட்டிக் குட்டி எழுத்தில் எழுதிப் போட்டு அடியில் ராகம், தாளம், இயற்றியவர் பெயரெல்லாம் எழுதுவார். எங்களை பாட்டு நோட்டில் எழுதிக்கொள்ளச் சொல்லுவார். அதற்கென தனிக் குறிப்பேடு என்னிடம் இல்லாததால் தமிழ் நோட்டின் கடைசிப் பக்கத்தில் எழுதி வைத்தேன்.

‘‘சீக்கிரம் நோட்புக் வாங்கி அதில எழுதி எனக்கு காட்டணும்’’, என்றார் சுந்தரம். அன்று பல்லவியை மட்டும் வகுப்பு முடியும் வரை திரும்பத் திரும்பப் பாடிக் காட்டுவதும் பிள்ளைகளை பாடச் சொல்லுவதுமாகவே இருந்தார்.

‘‘அடுத்த வகுப்பிலே அனுபல்லவிய சொல்லித்தரேன். பல்லவிய வீட்ல பாடிப் பாருங்கோ’’, என்று கூறிவிட்டு எங்களை சாப்பாட்டுக்கு அனுப்பி வைத்தார். தான் கொண்டுவந்திருந்த சிறு உணவுப் பாத்திரத்தை மேஜை மேல் வைத்து திறப்பதற்காகத் தட்டிக்கொண்டிருந்தார்.

‘‘ரொம்ப நல்லவரு’’, என்றான் ராமானுஜன்.

மறுவாரம், சென்ற வகுப்பில் எழுதிப்போட்ட பாட்டின் ராகம், தாளம், பாடலாசிரியர் பெயரெல்லாம் கேட்டார். பிறகு பல்லவியைப் பாட மீனாட்சியைக் கேட்டார்.
பெண்களிலேயே சின்ன உருவம் மீனாட்சிதான். எல்லா மாணவிகளும் பாவாடை, சட்டை அணிவார்கள். மீனாட்சி மட்டுமே கெளன் அணிந்து வருவாள்.

அதற்கேற்றாற்போன்று எலிக்குஞ்சு குரலில் பாடினாள்.

‘‘சரி, ஆம்பளப் பசங்க யாரு பாடறது?’’ என்று கேட்டார் சுந்தரம்.

நெற்றியில் ஒற்றைச் செங்கோடு துலங்க வெள்ளை வெழுப்பாயிருக்கும் விஜயராகவன் பாடினான். என்ஜினீயர் வீட்டுப் பையன்.

‘‘பல்ராமா, நீ பாடு’’, என்றார்.

பலராமனுக்கு ‘‘ழ’’ வரவே வராது. ஆனாலும் ராகம் தப்பாது பாடினான். வாத்தியார் சபிதாவைப் பாடச் சொல்லிவிட்டு என்னைப் பார்த்து, ‘‘நெக்ஸ்ட் நீ பாடணும்’’ என்றார்.

‘‘வெற்றி எட்டு திசையும் எட்ட
முரசு கொட்டி வாழ்த்துவோம்
வீரமுடன் சேர சோழ பாண்டியர்
புகழ் நாட்டுவோம்’’ என்று பாடினேன்.

‘‘குட், நல்ல சாரீரம்’’ என்றார் சுந்தரம்.

வகுப்பறை கதைகள் 9 (Vagupparai Kathaikal) :- பாட்டு வாத்தியார் (Pattu Vaathiyaar Story in Tamil) - விட்டல்ராவ் | தமிழ் கல்விக் கதைகள்

வீட்டுக்குப் போனதும் தெரிந்த பாட்டுக்களையெல்லாம் வந்த மாதிரி குரலெடுத்து பாடித் தீர்த்தேன். ராமு கெமிக்கல் ஆலைப் பயிற்சி முடித்து களைந்து வந்தவன் என்னைப் பார்த்து ‘‘வெளியில போய் கத்து, இங்கே கத்தாதே’’ என்றான்.

நானும் முறைத்துவிட்டு திண்ணைக்கு வந்து தூணைப் பிடித்தபடி முந்தா நாள் வீட்டாருடன் பார்த்த ‘மணமகள்’ படத்தில் வி.என். சுந்தரம் குரலில் பாலையா பாடும், ‘பாவியிலும் படும்பாவி’ என்ற பாட்டைப் பாடத் தொங்கினேன். முழுவதும் தெரியாதலால் முதலிரண்டு வரிகளைப் பாடிவிட்டு மிகுதியை வெறும் ராகத்தை மட்டும், ரரரரரா என்று இழுக்கையில், ‘‘பலே’’ என்ற குரல் கேட்டு திரும்பினேன்். எங்கள் வீட்டுக்கு நேரெதிர் வீட்டுத் திண்ணையில் பாட்டு வாத்தியார் நின்றிருந்தார்.

வெற்றுடம்பு இடுப்பில் ஓர் ஈரிழைத்துண்டைக் கட்டியிருந்தார்.

‘‘ஏன் நிறுத்திட்டே, பாடு’’, என்றார். வெட்கத்தோடு ‘‘தெரியாது’’ என்றேன். தன் வீட்டுக்கு அழைக்கவும் போனவுடனே, ‘‘டீ, அம்மாமி இவனுக்கு மோர் குடு’’ என்றார்.
தலையைச் சிரைத்து பழுப்பு நிறப் புடவை சுற்றி தலைக்கு முக்காடிட்ட அவரது அம்மா சின்னக் கிண்ணத்தில் உப்பு, கறிவேப்பிலை போட்ட திப்பித்திப்பியாய் மிதக்கும் மோரை கொண்டுவந்து வைத்துவிட்டு, ‘‘எச்சை பண்ணாம தூக்கிக் குடி’’ என்றாள். பிறகு ‘‘ஆரிவன்?’’ என்று தன் பிள்ளையைக் கேட்டுக்கொண்டாள்.

‘‘நாலாங்கிளாஸ்ல புதிசா சேர்ந்திருக்கான். நன்னா பாடுவான். எதிர்வீடுதான், ராயர் குடும்பம்’’, என்றார்.

‘‘ஒரு பாட்டு சொல்லு’’ என்றாள் அம்மாமி.

வண்டாடும் சோலைதனிலே எடுத்தேன். சாந்தாக்கா நன்றாகப் பாடும் பாட்டு என்பதோடு அவளுக்குப் பிடித்த உருப்படியும்கூட.

‘‘நன்னா பாட வர்றதே. எம் புள்ளகிட்டே பாட்டு சொல்லிக்கோ’’, என்றாள்.

நான் ஓடியே வந்துவிட்டேன். ராமு வாயைத் திறந்துகொண்டு கூடத்து வெறுந்தரையில் உறங்கிக் கொண்டிருந்தான்.

‘‘யார்ரா அது?’’ என்று கேட்டாள் பெரியக்கா.

‘‘எங்க பாட்டு வாத்தியார்’’ என்றேன்.

அன்றிரவு திண்ணையிலமர்ந்து எதிர்வீட்டையே பார்த்துக்கொண்டிருந்தேன். சுந்தரம் வெளிப்பட்டார். மெளனமாக என்னை வருமாறு கையசைத்தார். ஓட்டமாகப் போய் நின்றேன். கையில் சிறு கிண்ணத்தை ஏந்திக்கொண்டிருந்தவர் ‘‘ஒம்மா வெந்தயக்கொழம்பு பண்ணிருக்காளோ?’’ என்றார்.

‘‘ஆமா’’, என்றேன். அம்மா வத்தக்குழம்பு. வெந்தயக்குழம்பு செய்யும்போது வாசனை தெருவைத் தூக்கும். பாட்டு வாத்தியார் அந்தக் கிண்ணத்தை நீட்டி அதில் வெந்தயக் குழம்பு வாங்கிவரச் சொல்லி என்னை அனுப்பினார். அம்மா மகிழ்ச்சியாக அந்தக் கிண்ணம் நிறைய ஊற்றிக் கொடுத்தனுப்பும்போது ‘‘பத்திரம்டா’’ என்றாள்.

இன்னொரு நாள் இவரு எங்கள் வீட்டு வத்தக்குழம்புக்கு அதே கிண்ணத்தை நீட்டினார் சுந்தரம். திருவாதிரை எங்களுக்கு இல்லை. நாங்கள் அதைக் கொண்டாடுவதில்லை. மற்றபடி சிவன் கோயிலுக்கெல்லாம் போவதுண்டு. திருவாதிரையன்று அவர்கள் செய்யும் களியும் இருபத்தோறு காய் சேர்ந்த கூட்டும் தனித்துவமிக்க சிறப்பானது. அதைத் தயாரிக்கும் பக்குவமும் அம்மாவுக்குத் தெரியாது. பாட்டுவாத்தியாரின் அம்மாமியம்மா அதிலெல்லாம் கெட்டி. அவ்வருடம் திருவாதிரைக் களி- கூட்டை கொடுத்தனுப்பினார்கள். இதன் தொடர்ச்சி அம்மாவோடு பாட்டு வாத்தியார் அம்மாமிக்கு ‘‘பேசறது- கொள்றது’’, என்றானது உறவு.
இப்போது அம்மாமி வீட்டுக்கே வந்து திண்ணையில் தூணில் சாய்ந்தபடி உட்கார்ந்து அம்மாவோடு கதைத்துப் பொழுதைக் களிப்பாள். சுந்தரம் தம் வீட்டு அறையில் சங்கீத சாதகம் பண்ணிக்கொண்டும் அவ்வப்போது ஜன்னல் வழியே எங்கள் வீட்டைப் பார்ப்பதுமாயிருப்பார்.

பாட்டு வாத்தியார் சுந்தரத்தின் குரல் சினிமாவில் பின்னணி குரல் தரும் வி.என். சுந்தரம் குரல் போலவே இருக்கும். பெரிய அக்காவும் சொல்லிவிட்டாள் அப்படியென்று மணமகளில் வி.என்.சுந்தரம் வசந்தகுமாரியுடன் இணைந்து பாடும் ‘சின்னஞ்சிறு கிளியே’ பாட்டை நம்ம சுந்தரம் வீட்டில் பாடிக் கொண்டிருந்தார். தெருவில் போவோர் நின்றனர்.

மறுநாள் வகுப்பறையில் சினேகிதர்களிடம் சொல்லிக்கொண்டேன். என்னமோ, எவ்வளவு சொன்னாலும் வகுப்பறையில் பாட்டு வாத்தியார் பேரிலும் பாட்டு வகுப்பு மீதும் மாணவர்களுக்கு எவ்வித அக்கறையும் வரவில்லை.

மேட்டூர் டவுன்ஷிப்பில் ‘ஓர் இரவு’ படம் திரையிடப்பட்டிருந்தது. அன்று பாட்டு வகுப்பில் சுந்தரம் துன்பம் நேர்கையில் பாடிக் காட்டினார். ‘‘பாரதிதாசன் கட்டிய பாடல்’’ என்றார். அந்த இரு குரல் பாட்டில் ஆண் குரல் வி.என்.சுந்தரமல்ல. யாரோ தெலுங்குக்காரர். ஆனஆல் அந்தப் பாட்டை பாட்டு வாத்தியார் பாடினபோது வி.என். சுந்தரமே பாடினாற்போலிருந்தது.

அம்மா வத்தக்குழம்போ, வெந்தயக்குழம்போ வைத்தால் கேட்கப்படாமலே சுந்தரம் வீட்டுக்கு, தானே எடுத்துச் சென்று தருவதென்றாயிற்று. தெருவில் மற்ற வீடுகளிலுள்ள பெண்களின் கவன ஈர்ப்பை இதெல்லாம் பெற்றிருந்தது.

அன்று பாட்டு வாத்தியார் புதிய பாடலொன்றை எழுதிப் போட்டார். வேதநாயகம் பிள்ளை இயற்றிய அப்பாடல் காபி ராகம் ஆதிதாளத்தில் அமைந்திருந்தது. பாட்டு வாத்தியார் வி.என். சுந்தரத்தின் குரலில் கேட்போர் மனம் உருகப் பாடிக் காட்டினார்.

‘‘நாளே நல்ல நாள்
புண்ணியம் செய்யும் (நாளே)
ஆளும் வேத நாயகன்
தாளினைப் பூஜிக்கும் (நாளே)
வேதமும் பெரியவர்
கீதமும் முதலான
போதமும் தேவ சங்
நாதங்களுடன் செல்லும்- (நாளே)

மகுடியில் தன்னை மறந்தாடும் பாம்பாக நானும் சில மாணவ, மாணவிகளும்.

‘‘சரசுவதி’’- என்று அழைத்தவாறு சமையலறைக்கு வருவாள் அம்மாமி. பத்து நிமிடம் பேசிக் கொண்டிருந்தால் போதும், சுந்தரத்துக்குப் பொறுக்காது.

‘‘அம்மாமி… டீ, அம்மாமி!’’ என்று தெருக்கோடி வரை கேட்க கூவியழைப்பார்.

‘‘ஒங்க பிள்ளை கூப்பிடறார் மாமி’’

‘‘ஒன்னுமிருக்காது. அவனுக்குப் பொறுக்காது’’ என்று செல்லக் கோபத்தோடு போவாள் அம்மாமி. ஒரு நாள் திண்ணைப் பேச்சின்போது சுந்தரத்தின் அம்மா கேட்டாள்.

‘‘ஒங்க பொண்களுக்கு எம் பிள்ளைகிட்டே பாட்டு சொல்லிக்க ஏற்பாடு பண்ணிக்கலாமே’’ என்று கேட்டதோடு கூடவே, ‘‘வயசாறதோல்லியோ என்று பொடி வைத்தது வேறுவிதமாய் விபரீதமாயிற்று. அதைக் கேட்டுக்கொண்டே உள்ளறையிலிருந்த இரண்டாவது பெரிய அக்கா வசந்தா உர்ரென்று முணுமுணுத்தாள், ‘‘கெழ வயசாறது இவ பிள்ளைக்கு, இன்னும் கல்யாணம் ஆகல்லே. எங்களப் பத்தி இவளுக்கென்ன வந்தது?’’ என்றாள்.

அம்மாமிக்கு வம்பு ஜாஸ்தி. ஆனால் வசந்தாக்கா பதினாறடி பாய்பவளாயிற்றே.

‘‘ஒங்க வசந்தாவுக்கு கொழந்தைல செவ்வெண்ணெய் சமாச்சாரம் ஜாஸ்தி போலிருக்கு. தொண்டை பெரிசு’’, என்றாள் அம்மாமி.

அவள் போனதும் அம்மா, பெரிய அக்காக்கள் இருவரும் வீட்டு ‘‘புழக்கடையில் அமர்ந்து மெல்லிய குரலில் பேசிக்கொண்டிருந்தனர். பேச்சின் முக்கிய விஷயம் பாட்டுவாத்தியாரின் வயதும் சம்பளமும்.

‘‘நாப்பதிருக்கும்’’, என்றாள் மூத்தவள் சாந்தா.

‘‘தலை பூரா நரைகண்டிருக்கு, பாவம், என்றாள் அம்மா.’’

‘‘பாவமென்ன,’’ என்று கூறிய வசந்தா, ‘‘அதனால்கூட இல்லே, பாட்டு வாத்தியாருக்கெல்லாம் சம்பளம் கம்மி’’ என்றாள்.

‘‘என்ன வரும்?’’ என்று கேட்டாள் அம்மா.

‘‘முப்பதோ முப்பத்தஞ்சோயிருக்கும். பாட்டு, தறி, டிராயிங்கு, கிராஃப்டு சொல்லித்தர்ற வாத்தியாருங்களுக்கெல்லாம் அவ்வளவுதான் வரும்,’’ என்றாள் வசந்தா.

‘‘அதனாலே கல்யாணமாகாமேயிருக்கா?’’ என்றாள் அம்மா,

‘‘நீ கேளு அம்மாமிய, ஏன் ஒங்க பிள்ளைக்கு இன்னும் கல்யாணம் பண்ணலேனு’’, என்றாள் வசந்தா.

‘‘நமக்கேம்பாடு’’, என்று அம்மா ஒதுங்கினாலும் உள்ளூர அம்மாமியைக் கேட்டுவிட வேண்டும் என்றுதான் துடித்தது.

முழுப் பரீட்சை நெருங்கிக்கொண்டு வந்தது. கணிதப் பாடத்திலும் சரித்திரத்திலும் நடத்தி முடிக்க வேண்டிய பகுதிகள் நிறைய இருந்ததால் பாட்டு வகுப்பையும் அதற்காக எடுத்துக்கொண்டு அதிலும் அவ்விரு பாடங்களையே நடத்திக்கொண்டு போனார்கள். மூன்று வாரமாக மூன்று பாட்டு வகுப்புகளும் கணக்கும் சரித்திரமுமாகவே முடிந்துபோனது. முழுப் பரீட்சையும் தொடங்கிவிட்டது.

அன்றைக்கு வந்த அம்மாமியை திண்ணையிலமர்த்தி அம்மா பேசினாள்.

‘‘உள்ளே ஒரே புழுக்கம்’’, என்றாள் அம்மா. சிறிது நிலவிய மெளனத்தை சுந்தரத்தின் அம்மா கலைத்தாள்.

‘‘’’ஒண்ணு கேக்கணுமாயிருந்தது சரசுவதி, சாந்தாவுக்கு பாத்திண்டிருக்கேளா?’’

‘‘பார்க்கணும் மாமி’’

‘‘வயசாறதே’’

‘‘அது சரி, ஒங்க பிள்ளைக்கு ஏன் இன்னும் பண்ணல்லே?’’

‘‘பாக்கணும்’’

‘‘வயசாயிண்டே போறதில்லையோ?’’

‘‘அது பித்த நரை. புருஷாளுக்குப் பரவாயில்லை. ஒங்க சாந்தா நன்னாயிருக்கா. எனக்கொண்ணும் ஆட்சேபனையில்லை. பிராமணாளாயிருக்கணும். சுந்தரமும் அப்படித்தான். மாமா ஆபீசிலேந்து எப்ப வருவார்?’’ என்று அம்மாமி பேசி முடிக்குமுன் வசந்தாவும் சாந்தாவும் வெளியில் வந்து இடி மின்னல் மழை பொழியலாயிற்று. அம்மாவும் இணை சேர்ந்தாள்.

‘‘மன்னிச்சிக்கோங்கோ… மன்னிச்சிக்கோங்கோ.. தெரியாம கேட்டுப்பிட்டேன்’’, என்று மன்றாடினாள் அம்மாமி. மழை ஓய்ந்து சாமானியத்தில் வானவில் போடவில்லை.

‘‘அம்மாமி… டீ, அம்மாமி, வா இங்கே… வா, சொன்னா கேளு, இங்க வா’’, சுந்தரம் கத்தினார். எதிர் வரிசையில் இரு வீட்டு ஜன்னல்களும் பக்கத்து வீட்டு வாசற்கதவும் திறந்து கொண்டன.

இரவு அப்பா வரும்போதே உம்மென்றிருந்தவர் சாப்பிடாமல் படுத்துக்கொண்டார். வெகு நேரம் கழித்தே எழுந்து வந்தார்.

‘‘ஆபீஸிலே சண்டையா?’’, என மெல்லக் கேட்டாள் அம்மா.

‘‘தட்டப் போடு’’, என்றார் அப்பா கோபமாக. எனக்கு அடுத்த வருடம் ஜந்தாம் வகுப்புக்கு பாட்டு வகுப்பு இருக்காது. தறிப் பயிற்சி இருக்கலாம்.

எழுதியவர்:-

கி. விட்டால் ராவ் - தமிழ் விக்கிப்பீடியா

✍🏻 விட்டல்ராவ்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *