வகுப்பறை கதைகள் 2 (Vagupparai Kathaikal) :- காந்தி கணக்கு (Gandhi Kanakku) - விட்டல்ராவ் (Vittal Rao) | தமிழ் கல்விக் கதைகள்

வகுப்பறை கதைகள் 2 :- காந்தி கணக்கு – விட்டல்ராவ்

காந்தி கணக்கு

வகுப்பறை கதைகள் – 2

– விட்டல்ராவ்

அப்போது ஓமலூரில் பேருந்து நிலையம் என்று எதுவுமில்லை. ஓமலூரிலிருந்தே புறப்பாடு- வருகை என்றும் பஸ் போக்குவரத்தில்லை. சேலத்திலிருந்து எங்கெங்கோ போகும் – வரும் பஸ்களுக்கு ஓமலூர் ஓர் இடையில் நிற்கும் இடம். எந்தத் திசையிலுள்ள ஊருக்குப் போக வேண்டுமோ அந்தத் திசை மார்க்கத்தில் மரத்தடியில் பஸ்கள் அப்படி அப்படியே நிற்கும், போகும், வரும். சேலம் வழி பஸ்கள் அந்தத் திசையிலும், தர்மபுரி ஓசூர் என்று போகக்கூடியவை பெங்களூர் சாலையில் வசதியாக காந்தி பவன் ஓட்டலை ஒட்டி நிற்கும். அதுதான் ஓமலூரில் முக்கிய சாலைகள் சந்திப்பு. சேலம் முகமான சாலையும், தாரமங்கலம் முகமாய்ப் போகும் சாலையும், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூர் மார்க்க பஸ்கள் போகும் பெங்களூர் சாலையும் கூடும் பெரிய சந்திப்பு அது. அங்குதான் காந்தி பவன் இருக்கிறது. காந்தி பவன் சிற்றுண்டி ஓட்டலில் அப்பா கணக்கு வைத்துக்கொண்டிருந்தார்.

ஆரம்பத்தில், அது வீட்டுக்குத் தெரியாமல், தான் மட்டும் எப்போதேனும் சாப்பிட்டுவிட்டு அதற்கான நோட்டுப் புத்தகத்தில் அப்பா எழுதி வைத்துவிடுவார். வீட்டில் சிற்றுண்டியென்பது தினமும் இருக்காது. அப்போது அவருக்கு காந்தி பவன் கைகொடுக்கும். மேலும் அவருக்கு நாக்கு நீளம். முதல் தேதி சம்பளம் வாங்கினதும் நோட்டுப் புத்தகத்தில் கணக்குப் பார்த்து கடனை தீர்ப்பார். போகப் போக, ஒன்பது ரூபாய் கணக்காயிருந்தால், அப்பா எட்டு ரூபாய் தீர்த்துவிட்டு ஒரு ரூபாய் பாக்கி வைப்பார். அது அடுத்த மாதக் கணக்கோடு கை கோர்க்கும். சம்பளத்தை அப்பா, அம்மாவிடம் தரமாட்டார். தன்னிடமே வைத்துக்கொண்டு பால், மோர், விறகுக் கடன்களுக்கு கணக்குப் பார்த்து கொஞ்சம் தீர்ப்பார், கொஞ்சம் பாக்கி வைப்பார். அது அவரது தொட்டில் பழக்கம், அவர் தூங்கும்போது அவரது கோட்டுப் பாக்கெட்டில் அம்மா கைவிடாத நாளே கிடையாது. அப்படியெடுத்த சில்லரைகளை ஓவல்டின் டப்பா ஒன்றில் சேர்த்து யாருமறியா வண்ணம் ஒளித்து வைத்து மாதக் கடைசியில் காய்கறி செலவைப் பார்த்துக் கொள்ளுவாள், அப்பா விடுப்பில் வீட்டிலிருக்கையில் சின்னக் காகிதத்தில் எழுதித் தந்து என்னை காந்தி பவனுக்கு அனுப்புவார். ஓட்டல் முதலாளி முதன்முறை சீட்டைப் பார்த்ததும் என்னை சாமானியத்தில் நம்பிவிடாமல் கேள்வியால் துளைத்தார்.

‘‘உங்கப்பாதானா அது?’’

‘‘ஆமா’’

‘‘ஒரு தபா கூட அவர்கூட நீவந்து நா பாத்ததில்லியே.’’

‘‘அப்பா என்னை கூட்டிட்டு வந்ததில்லே.’’

‘‘என்ன படிக்கிறே?’’

‘‘ஒண்ணாவது’’

‘‘எங்கே?’’

‘‘போர்டு ஸ்கூலு’’

அவர் மேசை மீதிருந்த அழைப்பு மணியை இருமுறை அடித்த பிறகு பரிசாரகர் ஒருவர் வந்து நின்றார். பார்சலை வாங்கிக்கொண்டு கடையை ஒரு நோட்டம் விட்டேன். காந்திஜியின் பெரியபடம் கல்லாவுக்கு மேலே மாட்டப்பட்டிருந்தது. காந்தியின் நெற்றியில் ஓட்டல் முதலாளி தமக்குப் பிடித்த வழியில் பெரிய குங்குமப்பொட்டை வைத்திருந்தார், காலையில் சாற்றின கதம்ப மாலை தொங்க… காந்திஜி மாறாத சிரிப்புடன் திகழ்ந்தார். முதலாளி என் முன்னாலேயே கணக்குப் புத்தகத்தைத் திறந்து அப்பாவுக்கான பக்கத்தில் எழுதிவிட்டு என்னைப் பார்த்துச் சிரித்தார். வீட்டுக்கு கொண்டுவரும் பார்சலில் ஆளுக்கொரு போண்டாவோ, வடையோ இருக்கும்.

வகுப்பில் நுழைந்ததும் லூர்துமேரி டீச்சர் வீட்டுக் கணக்கு போட்டவர்களின் சிலேட்டுகளை மேஜை மேல் அடுக்கி வைக்கச் சொன்னார்.

‘‘வீட்டுக் கணக்கு செய்யாதவங்க யாரு?’’ அதட்டலாகக் கேட்டார் டீச்சர்.

‘‘இவ செய்யலயாம் டீச்சர்!’’

‘‘ஏண்டி செய்யல?’’

‘‘செய்யல டீச்சர்!’’

‘‘அதான் ஏன்னு கேக்கறேன்?’’

அந்தப் பெண் தரையைப் பார்த்தபடி கால் பெருவிரலால் தரையில் வீட்டுக் கணக்கு சிறுக்கியது.

‘‘போய் வெளியில நின்னு, கணக்குப் போட்டு உள்ளே வா, போ’’ என்றார் டீச்சர். ‘‘உனக்கு சுட்டுப் போட்டாலும் கணக்கே வராது.’’ பல்லைக் கடித்துத் திட்டிவிட்டு தலையில் ஒரு குட்டு குட்டி அனுப்பினார்.

அந்தக் குட்டும் சொல்லும் எனக்குமானது என்ற பயத்தோடு என் ஸ்லேட்டை அவர் எடுத்துப் பார்க்கும் தருணத்தை எதிர் நோக்கியிருந்தேன். அதிசயம், டீச்சர் என்னை அடிக்கவில்லை.

இப்போதெல்லாம் அப்பா அடிக்கடி ஆபீசுக்கு மட்டம் போட்டுவிட்டு காந்தி பவனுக்கு அடிக்கடி சீட்டெழுதிக் கொடுத்தனுப்பினார். அப்பாவுக்கும் தாசில்தாருக்கும் ஒத்துவரவில்லையென்றும் ஆபீசில் சண்டையென்றும் அதனால் லீவு போடுகிறார் என்்றும் அம்மா சொன்னாள். அடிக்கடி லீவு, சண்டையென்றானால் வேற்றூர் மாற்றல் கண்டிப்பாயிருக்கும் என்றும் அம்மா கூறினாள். அப்பா காந்தி பவனுக்கு போவதில்லை. என்னையே சீட்டெழுதிக் கொடுத்து அனுப்பிக் கொண்டிருந்தார். முதலில் சந்தோஷமாய் கணக்குப் புத்தகத்தில் வரவு வைத்துக் கொண்டிருந்த காந்தி பவன்காரருக்கு ஒரு கட்டத்தில் முகம் மாறத் தொடங்கியிருந்தது. சலிப்போடு ‘‘லொச்’’ என்று சொல்லிக்கொண்டே கணக்கெழுதிக் கொண்டார். ஒரு முறை நான் தந்த சீட்டை வாங்கிக்கொண்டு, ‘‘ஒங்கப்பா எங்கே, இந்தப் பக்கமே காணோம்?’’ என்று கேட்டார்.

‘‘லீவ்லயிருக்காரு’’

‘‘ஏன்?’’

‘‘சும்மாதான்’’

‘‘சும்மாவா?’’

இப்போது அப்பா தாலுகா கச்சேரிக்குப் போய் வர குறுக்கு வழியொன்றைக் கண்டுபிடித்திருந்தார். பழைய ஓமலூர் கோட்டைக்கும் ஆற்றோரமாய் நடந்து எருமைக்கடா பலி வாங்கும் காளியம்மன் கோயிலுக்கும் போக ஒரு கச்சா பாதையிருந்தது. வீட்டிலிருந்து அதன் வழியாக கச்சேரிக்குப் போய் வந்துகொண்டிருந்தார். அதன் வழியே போவது, வருவதென்பது காந்தி பவனைக் கடக்க வேண்டியிருக்காது. நான் பள்ளிக்கூடத்துக்குப் போகும்போதே காலையிலேயே சீட்டைக் கொடுத்துவிட்டு சொல்லுவார்: ‘‘ஸ்கூல் விட்டு வர்றச்சே அங்கே சீட்டக் குடுத்து பார்சல் வாங்கிட்டு வந்திடு’’ என்று. அம்மா ஒருவித திகிலறைந்த முகமாய் என்னையும் அப்பாவையும் பார்க்கத் தொடங்கியிருந்தாள்.

‘‘எல்லாரும் தமிழ் புஸ்தகத்த எடுத்து வச்சிக்கங்க;’’ என்றார் லூர்துமேரி டீச்சர்.

தமிழ்ப் புத்தகத்தை வெளியில் எடுக்கும்போது கூடவே ஒட்டிக்கொண்டு வந்து அப்பாவின் சீட்டு சிறு ஓசையுடன் விழுந்தது. தவுலத் சுறுசுறுப்பான பையன். விருட்டென அதையெடுத்துக்கொண்டு பிரித்துப் பார்த்தான். கடிதம் – அதுவும் கிறுக்கெழுத்திலிருப்பதையெல்லாம் வாசிக்கும் பக்குவத்தில் ஒண்ணாம் வகுப்பு பிள்ளைகளுக்கு படிப்பு ஐவேஜூ போதாது.

‘‘என்னடா இது?’’ என்று கேட்டானே ஒழிய… சீட்டை, தானே வைத்துக்கொண்டிருந்தான்.

‘‘அப்பா எழுதின சீட்டு’’

‘‘யாருக்கு எழுதினாரு?’’

‘‘அதெல்லாம் ஒனக்கெதுக்குடா, குட்ரா என் சீட்ட.’’

அவன் அதைத் தராமல், ‘‘சொன்னாதான் தருவேன்’’, என்றான். நான் அதை அவனிடமிருந்து பிடுங்குவதிலீடுபட்டபோது, மற்ற பிள்ளைகளும் கவனம் கொண்டனர்.

‘‘டீச்சர், இவிங்க ரண்டுபேரும் சண்டை போடறாங்க டீச்சர்!’’ செந்தாமரை என்ற சிறுமி குரலெழுப்பினாள். ‘‘என்னடா அது?’’ டீச்சர் கத்தினார்.

நாங்களிருவரும் சீட்டைப் பிடுங்கும் முயற்சியை கைவிட்டோம். இப்போது தவுலத் என் சீட்டை என்னிடமே கொடுத்துவிட்டு தள்ளி உட்கார்ந்துவிட்டு என்னோடு காய் விட்டுவிட்டான்.

‘‘கொண்டாட அதை, ரெண்டு பேரும் வாங்க’’ டீச்சர் எங்களிருவரையும் மேஜையண்டை அழைத்தார்.

‘‘என்னா இது, சீட்டு?’’, என்று கேட்டபடியே என் காதைப் பிடித்தார். ஆனால் திருகவில்லை.

இப்படியென்று சொன்னேன். சிரித்தபடியே தவுலத்தை அழைத்து அவன் காதைப் பிடித்து சற்று பலமாக முறுக்கியபடியே, ‘‘அதை ஏண்டா எடுத்து வச்சிக்கிட்டு குடுக்கமாட்டேனு சொன்னே?’’ என்றார்.

‘‘இல்ல டீச்சர், இல்ல டீச்சர்!’’ தவுலத் அலறினான்.

‘‘சீட்டெல்லாம் கிளாசுக்கு ஏண்டா கொண்டு வந்தேனு கேட்டதுக்கு, ஒங்கப்பா, அம்மா டிம்மினு சொன்னான் டீச்சர்’’ என்றான் தவுலத்.

‘‘சீட்டு கொண்டாந்ததுக்கு நாங்கேட்டுக்கறேன்’’ நீ ஏன் கேட்டே, எதுக்கு அவங்கப்பா சீட்ட எடுத்து வச்சிக்கிட்டு குடுக்கமாட்டேனு சொன்னே? அதெல்லாம் தப்பு. பத்து தோப்புக்கரணம் போடு. மத்தவங்க பொருள் எதையும் எடுத்து வச்சிக்கிட்டு குடுக்கமாட்டேனு சொல்லமாட்டேனு சொல்லிக்கிட்டே தோப்புக்கரணம் போடு, நீ போய் உட்காரு. அவங்கப்பா, அம்மா டிம்மினு ஏன் சொன்னே?’’

‘‘எங்கப்பாவ அசிங்கமா திட்டினான் டீச்சர்!’’

‘‘சரி, போய் உட்காரு,’’ டீச்சர்! சீட்டை என்னிடமே கொடுத்துவிட்டார்.

‘‘அப்பா, அம்மா டிம்மின்னா என்னடா அர்த்தம்?’’ என்று பிள்ளைகளைப் பார்த்து கேட்டார் டீச்சர்.

‘‘டீச்சர், அப்பா, அம்மா செத்துப்போவட்டும்னு அர்த்தம் டீச்சர்!’’- எல்லா பிள்ளைகளும் ஒரே குரலில் சொன்னார்கள்.

‘‘சைலன்ஸ், இனிமே யாரும் யாரையும் பார்த்து இந்த மாதிரி வார்த்தையெல்லாம் சொல்லக்கூடாது. தெரியுமா, அப்பா, அம்மா தெய்வம்’’ என்றார் டீச்சர்.
பிள்ளைகள் சரியென்று தலையாட்டின.

அன்றைக்கு காந்தி பவனில் பார்சல் வாங்கிக்கொண்டு கணக்கெழுதும் வரை நின்றிருந்தபோது முதலாளி என்னை அழைத்து மெதுவாகச் சொன்னார்.

‘‘போனமாச பாக்கி நிக்கிது. பார்சல் ரொம்ப வாங்காதீங்க.’’

அதே சமயம், ‘‘யாருக்குடா பார்சல்?’’, என்று கேட்டபடியே உள்ளே சாப்பிட்டு முடித்துவிட்டு கல்லாவில் வந்து நின்ற பள்ளித் தலைமையாசிரியரைக் கண்டதும் வெலவெலத்துப் போனேன்.

‘‘நீ நம்ம ஸ்கூல்தானே?’’ என்று கேட்டார். தலைமையாசிரியர். ஆமாமென்றேன் தடுமாறினபடி.

‘‘பார்சல் யாருக்கு?’’

‘‘வீட்டுக்கு சார்!’’

காந்தி பவனில் சாப்பிட்டுவிட்டு, பார்சல் வாங்கினதற்கெல்லாம் கணக்கு எழுதிவைத்துவிட்டு முதல் தேதி சம்பளம் வாங்கினதும் பாக்கி தீர்ப்பவர்கள் நிறையவே உண்டு. பள்ளியாசிரியர், தாலுகா கச்சேரி, பத்திரப் பதிவு அலுவலகம் ஆகியவற்றின் சிப்பந்திகளில் பலரும் காந்தி பவனில் கணக்கு வைத்துக் கொண்டிருந்தனர்.

ஒவ்வொருவருக்கும் அந்தத் தடித்த கணக்குப் பதிவேட்டில் தனித்தனியாக ஒரு பக்கம் ஒதுக்கி, தலைப்பில் அன்னாரது பெயரை பெரிய எழுத்தில் எழுதி வைத்திருப்பார் முதலாளி. கொடுத்த கடனை வட்டியுடன் வசூலிப்பது கடன் தர்மம் என்று நினைப்பாருண்டு. காந்தி பவன் முதலாளியும் விதிவிலக்கல்ல. அவர் கணக்கெழுதி வைக்கும்போதே ஒவ்வொரு பில்லுக்கும் ஓரணா-ரெண்டனாகூட சேர்த்தே கணக்கெழுதி வைப்பதாக கணக்கு வைத்துக்கொண்டிருந்தவர்களில் சிலர் சொல்லி வருத்தப்படுவதாக அப்பா அடிக்கடி கூறுவார். தலைமையாசிரியருக்கான பக்கமும் அப்பாவுக்குமான பக்கமும், அடுத்தடுத்தே இருந்த நிலையில் தலைமையாசிரியருக்கு 30-ம் பக்கமும் அப்பாவுக்கு 31-ம் பக்கமும் கணக்குப் புத்தகத்தில் முதலாளி ஒதுக்கியிருந்தார். ஒரு நாள் தலைமையாசிரியர் அவர் வகுப்புப் பையன் ஒருவனைவிட்டு என்னை அழைத்துவரச் சொன்னார்.

‘‘ஹெட்மாஸ்டர் ரூமுக்கு இவன வரச் சொல்லிட்டாரு. என்னமோ தப்பு நடந்திருக்கு’’, என்றான் வெள்ளையன்.

‘‘மாட்டிக்கிட்டான்’’, என்று ஒரு மாதிரி திகிலோடு என்னைப் பார்த்தார்கள். லூர்து மேரிக்கும் சற்று மனம் கலங்கியே, ‘‘சரி, போயிட்டு வா, என்ன கேட்டாலும் பணிவா பதில் சொல்லு’’ என்று தைரியப்படுத்தி அனுப்பினார்.

தலைமையாசிரியரின் அறை எங்கப்பா படுக்கும் அறை மாதிரியே சின்னது. அடைப்பாச்சாரம் அதிகம். அவர் ஐந்தாம் வகுப்புக்கு ஆசிரியர் ஆதலால் வகுப்பிலேயே இருப்பார். அவரது அறை அப்போது பூட்டியே கிடக்கும். மாலை பள்ளிக்கூடம் விட்டதும், தலைமையாசிரியர் தம் அறையிலேயே ஒரு மணி நேரம் இருந்துவிட்டுப் போவார். காலை வேளையில் திறந்திருக்கும். ஆசிரியர்களுக்கான வருகைப் பதிவேடு அவரது மேஜை மீதுதான் இருக்கும். லூர்துமேரி டீச்சரும் கமலா டீச்சரும் அங்குபோய் அவர் முன்னிலையில் கையெழுத்துப் போட்டுவிட்டுப் போனதும், தலைமையாசிரியரும் கையெழுத்திட்டுவிட்டு அறையைப் பூட்டிக்கொண்டு தன் வகுப்புக்குள் நுழைந்துவிடுவார்.

தலைமையாசிரியர் அறைக்குள் நான் நுழைந்தபோது அவர் எதையோ எழுதிக்கொண்டிருந்தார். நான் நின்றுகொண்டே அறையைச் சுற்றி கவனித்தேன். மேஜை மீது ஒரு பூகோள உருண்டை நின்றிருந்தது. அதைத் தொட்டு ஒரு முறை சுழற்றிப் பார்க்க ஆசை. தேச- உலக மேப்கள் சுருட்டி ஒரு ஸ்டாண்டில் படுத்தாற்போல வைக்கப்பட்டிருந்தன. ஓரிடத்தில் நுனியில் உருண்ட குண்டோடு இரு பிரம்புகளிருந்தன. மூலையில் பக்கெட், பூவாளி, மண்வெட்டி, கடப்பாறை, காலியான பால் பவுடர் டின்கள் இருந்தன. தலைமையாசிரியர் தலையை உயர்த்தினார்.

‘‘வாப்பா! ராயர் மகன்தானே? காந்தி பவன்லே உங்கப்பா கணக்கு வச்சிருக்காரா?’’ என்று அவர் கேட்டதை நான் எதிர்பார்க்கவில்லை.

‘‘ஆமாங்க சார்!’’

‘‘ஒன்னுமில்லே, ஓட்டல்காரருக்கு உன்னை நல்லா தெரியும். இந்த சீட்டைக் குடுத்து இதில் இருக்கிற மாதிரி பார்சல் வாங்கிட்டு வந்து குடுத்துட்டு வீட்டுக்குப் போ. இப்ப இல்லே, ஸ்கூல் விட்டதும்.’’

சரியென்று தலையாட்டினேன். அதன் பிறகு அவர் வகுப்பு நடந்துகொண்டிருக்கையிலேயே யாரையாவது அனுப்பி என்னை அழைத்து சீட்டு தருவார். தவுலத் ‘‘காக்கா’’ என்று என்னைக் காட்டி ரஜாக்கிடம் குசுகுசுத்தான்.

காந்தி பவன் முதலாளிக்கு கவனப் பிசகுமுண்டு. தலைமையாசிரியர் சீட்டின் கணக்கை அப்பாவின் பக்கத்திலும் அப்பாவின் கணக்கை ஆசிரியரின் பக்கத்திலும் அவ்வப்போது இடம் மாற்றி வரவு வைத்துவிடுவார். அப்பாவின் கணக்கு தோராயமாய் அதிகமானதாய்த் தோன்றினால் அப்பா, தானே கடைக்குப் போய் கணக்கை சரிபார்ப்பார். குறைவாக இருந்துவிட்டால் கமுக்கமாயிருந்துவிடுவார். அப்போது தலைமையாசிரியர் முதலாளியிடம் தன் கணக்கைக் காட்டி வாதாடிக் கொண்டிருப்பார்.

‘‘இனிமே இந்தப் பையனையெல்லாம் சீட்டு குடுத்து அனுப்பாதீங்க. அவங்கவங்களே வந்து

அவங்கவங்க கணக்கை கைப்பட எழுதி வைங்க சார்! இல்லேனா அக்கெளண்ட்டே வேணாம்’’ என்று பட்டென்று கூறிவிட்டார் முதலாளி.

இந்த சமயம் ஆண்டுத் தேர்வும் வந்து முடிந்து பள்ளி கோடை விடுமுறையிலிருந்தது. அப்பாவுக்கு தர்மபுரிக்கு பதவி உயர்வளித்து மாற்றல் வந்துவிட்டது. விவசாயிகளுக்கு கிணறு வெட்ட வருவாய்த்துறை கடன் அளித்து வந்தது. அவ்வித கிணற்றுக் கடனை அளிக்க விண்ணப்பதாரர்களின் விவரங்களை சோதித்து, கிணறு எடுக்கப்படும் இடத்தை நேரில் சென்று கவனித்து கடன் பெற பரிந்துரை செய்யும் சின்ன அதிகாரி ‘‘கடன் இன்ஸ்பெக்டர்’’ என்று அறியப்பட்டவர். மதிப்பு அதிகம், ‘‘கிம்பளம்’’ கிடைக்கக்கூடிய உத்தியோகம், அப்பா மாற்றல் உத்தரவு பெற்ற கையோடு தர்மபுரிக்குப் போய் அங்குள்ள தாலுகாகச் சேரியில் டூட்டிக்கு சேர்ந்து வீடும் பார்க்கத் தொடங்கிவிட்டார். கோடை விடுமுறையாதலால் நான் வகுப்புத் தோழர்களிடம் சொல்லிக்கொள்ளவும் முடியவில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மூலையிலிருந்தார்கள். வீடு கிடைத்து நாங்களும் ஓமலூர் வீட்டைக் காலி செய்துவிட்டு தர்மபுரிக்கு சென்றுவிட்டோம். அங்கு புதிய பள்ளியில் சேர ஓமலூர் பள்ளியிலிருந்து எங்கள் மூவருக்கு மாற்றல் சான்றிதழ் வாங்கியாக வேண்டும். அப்பா கடன் ரெவின்யூ இன்ஸ்பெக்டர் பணியில் சேர்ந்தது முதல் ஓய்ச்சலின்றி இருந்ததால் மாற்றல் சான்றிதழ் வாங்கி வருவதையே கவனம் கொள்ளாமலிருந்தார். அம்மா விடாமல் நச்சரித்துக்கொண்டேயிருந்தாள்.

‘‘எல்லாம் தெரியும். இப்போ லீவுதானே?’’, என்று சொல்லிவிட்டார் அப்பா.

காந்தி பவன் முதலாளி பள்ளித் தலைமையாசிரியரிடம் கேட்டிருப்பார். ‘‘உங்க ஸ்கூல் பையன் வருவானே, அவங்கப்பாவுக்கும் ஒங்களுக்கும் பார்சல் வாங்கிப் போக சீட்டு கொண்டு வருவானே, அவன் எங்கே சார்!’’ என்று.

‘‘அவனா, அவங்கய்யாவுக்கு வேறே ஊருக்கு டிரான்ஸ்ஃபர் ஆர்டர் வந்து போயிட்டாங்க, ஏன்?’’ என்றார் தலைமையாசிரியர்.

‘‘ஒன்னுமில்லே, கொஞ்சம் பாக்கி நிக்கிது.’’

‘‘போயிட்டாங்க’’

‘‘பையனுக்கும் பொண்ணுக்கும் டி.சி.வாங்கிட்டாங்களா?’’

‘‘பாக்கணும், வாங்கிட்டாங்களானு’’

‘‘டி.சி. வாங்கலேனா, வந்து வாங்குவாங்கதானே?’’

‘‘ஆமாமா!’’

‘‘வரும்போது நம்ம விஷயத்தை ஞாபகப்படுத்துனீங்கனா உபகாரமாயிருக்கும்.’’

‘‘அதெல்லாம் எனக்கு நல்லாயிருக்காது. இப்படி சொல்றேன், காந்தி பவன் முதலாளி ஒங்கள கேட்டாருனு சொல்றேன்.’’

ஆனால் அப்பா டி.சி. வாங்க ஓமலூருக்குப் போகவேயில்லை. டி.சி.யே வாங்கவில்லை. தர்மபுரியில் ஒரேயொரு தனியார் பள்ளிக்கூடமிருந்தது. அது அப்பாவுக்கு வேண்டியவர் ஒருவருக்குச் சொந்தமானது. அத்தோடு பள்ளி உரிமையாளருக்கு ஜெகசமுத்திரம் என்ற ஊரில் சிறிது நிலமுண்டு. அங்கு கிணறு எடுக்க அரசாங்கக் கடன் கேட்டு விண்ணப்பித்திருந்தார். அதை முன்னிட்டு வீட்டுக்கே வந்துவிட்டார். அப்பா எங்களை அவரது பள்ளியில் டி.சி. இல்லாமலே சேர்க்க ஏற்பாடு செய்துவிட்டார். அப்போதெல்லாம் ஆரம்ப தனியார் பாடசாலைகளில் டி.சி. என்பதையெல்லாம் மிகவும் வேண்டப்பட்டவர்களிடம் வற்புறுத்தமாட்டார்கள்.

அதுமட்டுமல்ல, என்னை இரண்டாம் வகுப்பு படிக்காமலேயே நேராக மூன்றாம் வகுப்பிலும் அக்காவை நாலாம் வகுப்பிலும் அண்ணனை ஐந்தாம் வகுப்பிலுமாய் சேர்த்துக் கொண்டார். அந்தத் தனியார் பள்ளியில் எனக்கு மாதக் கட்டணம் ஆறணா. ‘‘சம்பளம் கட்டிப் படிக்கிற பசங்க’’ என்று பக்கத்து வீட்டுக்காரர்கள் பேசிக் கொண்டனர்.

எழுதியவர்:-

கி. விட்டால் ராவ் - தமிழ் விக்கிப்பீடியா

✍🏻 விட்டல்ராவ்

முந்தைய தொடரை வாசிக்க:-  “வகுப்பறைக் கதைகள்” (Vagupparai Kathaikal) – 1 | லூர்துமேரி டீச்சர் – எழுத்தாளர் விட்டல்ராவ்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 1 Comment

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *