தனிமனித வளர்ச்சிக்கும், நாட்டின் முன்னேற்றத்திற்கும் மிக முக்கிய காரணமாக இருப்பது கல்வி. இன்றைக்கு,கற்றுக் கொள்வது என்பதிலிருந்து விலகி,கல்வியின் நோக்கம் மதிப்பெண்ணை நோக்கி ஓடுவது என்பதாக மாறிவிட்டது. அனைத்து குழந்தைகளாலும் முதல் மதிப்பெண் பெற இயலாது என்பதை மறந்தே விடுகிறோம். ஒரு மாணவனின் திறமையை வெளிக் கொணர வேண்டுமென்ற அடிப்படையில் இன்றைய கல்வி இல்லாமல், அவர்களைப் பணம் சம்பாதிக்கும் ஒரு கருவியாக மாற்றிக் கொண்டிருக்கிறோம். இந்த புத்தகத்தில் ஆசிரியர் சொல்கிறார் எது கல்வி என்பதற்கான பதிலாக.. “எது விடுதலை அளிக்கிறதோ அதுவே கல்வி”என்று.இந்த விடுதலைக்கான பல வழிகளைத் தன் அனுபவத் தேடலில் கவனித்த, அதைப் பற்றி யோசித்த பல விஷயங்களைக் கட்டுரைகளாகத் தந்திருக்கிறார் ஆசிரியர்.
ஆசிரியர்கள்,மாணவர்கள் எப்படி இருக்க வேண்டும்,ஒரு மாணவனை அணுகும் முறை பற்றியும், பெற்றோருக்கு அடுத்தபடியாக அக்கறை காட்டும் இடத்தில் இருக்கும் ஆசிரியர்கள் புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் என பன்னிரண்டு கட்டுரைகள் இந்த புத்தகத்தில் இருக்கிறது. நிறைய இடங்களில் திரு.மாடசாமி ஐயா அவர்களின் கருத்துக்களை மேற்கோள்காட்டி எழுதியிருக்கிறார். அவரின் வெளி வகுப்பறை பற்றி படித்தபின் தான் கற்பிக்கும் முறையை மாற்றி அதில் பலனடைந்ததைப் பற்றியும் சொல்கிறார்.மாடசாமி ஐயா அவர்கள் சொன்னது போல வகுப்பறையில் மாணவருக்கும் அவருக்கும் இடையே இருந்த இடைவெளி வெளியே கற்பித்ததில் பெருமளவு குறைந்திருக்கிறது.
அதன் பிறகு எப்போதெல்லாம் சந்தர்ப்பம் கிடைக்கிறதோ, வகுப்பறையை விட்டு மரத்தடிக்கும் பழத்தோட்டத்திற்கும் கூட்டிச் சென்றிருக்கிறார். மாணவர்கள் தங்கள் இறுக்கமான மனநிலையில் இருந்து மகிழ்ச்சியான மனநிலைக்கு மாறியிருக்கிறார்கள்.
வெளியே கற்பிக்கும் போதுதான் மாணவருக்கும் ஆசிரியருக்கும் இடையேயான கலந்துரையாடல் ஆரோக்கியமானதாகவும் இருந்திருக்கிறது. தைரியமாகத் தங்கள் சந்தேகங்களை முன் வைக்கவும் மாணவர்கள் தயங்குவதில்லை. இப்போதெல்லாம் எங்க பார்த்தாலும் மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்சனை மன அழுத்தம் என்பதாகக் கூறப்படுகிறது. வகுப்பறைகள் ஆசிரியர் மொழி என்பதிலிருந்து மாறி,எப்போது மாணவர் மொழி என்று மாறுகிறதோ அன்றைக்கு இந்த மன அழுத்தம் என்பதற்கே இடம் இருக்காது என்கிறார். கற்றுக் கொள்வதை விட, கற்றுக் கொடுக்கப்படும் இடம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.
இன்றைய கல்வி கொடுக்கும் அழுத்தம், அதுவும் ஒரே இடத்தில் இருந்து கற்கும் போது கொஞ்சம் கூடிப்போகிறது.கற்றுக் கொள்வதும் அவர்களுக்கு விளையாட்டு போல் அமைந்துவிட்டால் கல்வி இனிமையானதாக மாறிவிடும். அதற்கு உதாரணமாக அவர் சந்தித்த ஒரு அனுபவத்தைச் சொல்கிறார். பள்ளி முதல்வர் வகுப்புகளை பார்வையிட வருகிறார் என்று தெரிந்ததும் மாணவர்கள் வகுப்பறையை அழகாக்க முற்படுகிறார்கள். இதில் பத்தாம் வகுப்பைச் சேர்ந்த ஒரு வகுப்பில் மாணவர்கள் பாட அட்டவணையை வித்தியாசமாக,அற்புதமாக செய்து இருக்கிறார்கள்.தமிழ் பாட வேளைக்கு “ழ” என்ற தமிழின் சிறப்பு எழுத்தையும்,ஆங்கில வகுப்பிற்கு” A” கணக்கு வகுப்பிற்கு “1” அறிவியல் வகுப்பிற்கு ஆக்சிஜனின் வேதியியல் அடையாளம்,சமூக வகுப்பிற்கு இந்திய தேசியக்கொடி இப்படியாக வடிவமைத்திருக்கிறார்கள். எத்தனை அழகான சிந்தனை. சுயமாக, எந்த அழுத்தமும் இல்லாமல் கற்றுக் கொள்ளும் ஒரு விஷயம் என்றைக்கும் மறக்காது என்பதற்கான உதாரணம்தான் இது.
இந்த சுய கற்றல் என்பதை மாணவர்களிடத்தில் கடுமையாக நடந்து கொள்ளும் ஆசிரியரால் செயல்படுத்த முடியாது என்கிறார். எப்போது ஆசிரியர் மாணவர்களுடன் இயல்பாக பழகுகிறாரோ அப்போதுதான் சுய கற்றலும் இயல்பாகவே நடக்கும் என்கிறார்.இதற்கு ஆசிரியருக்குப் பல எதிர்ப்புகள் வந்த போதும்,தன் முடிவிலிருந்து மாறாமல் இருந்திருக்கிறார்.அதேபோல வகுப்பறையில் ஒரு மாணவன் கவனிக்காமல் இருக்கிறான் என்பதைப் பார்த்ததும்,உடனே ஒரு ஆசிரியர் என்ன செய்வார் ..நடத்திக் கொண்டிருந்த பாடத்திலிருந்து ஒரு கேள்வி கேட்பார்.அவனுக்கு அதற்கான விடை தெரியாது என்று தெரிந்திருந்தும் கூட.அது அந்த மாணவனை அவமானப்படுத்துவது போலத்தானே.. மறுமுறை அவனுக்கு ஆசிரியரை ஏதாவது ஒரு சந்தேகத்திற்காக அணுகுவதற்கு சுத்தமாக தைரியம் இருக்காது.
இதற்கு என்ன செய்யலாம்.. மாணவர்களுக்குப் பிடித்தது போல அவர்கள் விரும்பும் கருத்துக்களைச் சொல்லி பாடத்தை நடத்தலாம். இப்படி செய்வதினால்,அது ஆசிரியர் மொழியாக மட்டுமல்லாமல் வகுப்பறையில் மாணவனின் மொழியாகவும் மாறும்.
அவன் கற்றுக் கொள்வதில் ஆர்வமும் கூடும் என்கிறார். கற்றுக் கொள்வதில் அவர்களுக்கு ஏற்படும் தடைகளை ஆசிரியர்கள்தான் கவனித்து, அதைக் களைய உதவ வேண்டும் என்கிறார். அதேபோல சில ஆசிரியர்களின் பாடங்களை மட்டும் நன்றாக கவனிக்கும் ஒரு மாணவன்,வேறு ஏதாவது ஒரு ஆசிரியர் வகுப்பில் கவனிக்க முடியாமல் தூங்கி விழுவான். அதற்கு சம்பந்தப்பட்ட ஆசிரியர் அவனின் மேல் கோபம் கொள்வதில் எந்தப் பயனும் இல்லை. அவன் கவனிக்க முடியாமல் தூங்கும் அளவிற்குப் பாடம் எடுத்தது நம் தவறு என்பதையும் ஆசிரியர்கள் உணர வேண்டும். அவர்களோடு கலந்துரையாடிப் பாடம் நடத்தினால் நிச்சயம் இந்த சலிப்பு ஏற்படாது என்கிறார்.
அதேபோல சில ஆசிரியர்கள் கொடுக்கும் தண்டனைகள், வாயை மூடி அமைதியாக உட்கார், கையைக் கட்டு, பத்து தடவை எழுது போன்றவை எல்லாம் மழலையர் பள்ளியில் நிறைய பார்க்கலாம். அதற்குக் காரணம் சிறிய பிள்ளைகள் அங்கும் இங்கும் ஓடி கீழே விழுந்து பிரச்சனையாகக் கூடாது என்பதாக இருந்தாலும், பெரிய வகுப்பிற்குப் போகும் போதும் இந்தப் பிள்ளைகள் தங்களுக்குத் தேவையானதை வாய் விட்டு கேட்க முடியாத நிலைக்கு சென்று விடுவார்கள். மழலையர் பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் கவனிக்க வேண்டிய விஷயம் இது.
அடுத்து அனைத்து மாணவர்களையும் ஒரே போல நடத்த வேண்டும் என்பதும் ஆசிரியர்களுக்கு இவர் வைக்கும் வேண்டுகோள். நன்றாகப் படிக்கும் பிள்ளைகள், கொஞ்சம் கற்றலில் குறைபாடு உள்ள பிள்ளைகள் என இரண்டு தரப்பினரையும் வேறுபடுத்திப் பார்க்காமல், அவர்களுக்குக் கற்றலில் உள்ள தடுமாற்றம் என்ன என்பதை யோசிக்க வேண்டும். ஆசிரியர் என்று ஆணவம் ஒருபோதும் வந்துவிடக்கூடாது என்கிறார். அதிகாரத்தை காட்டாமல், அன்பைக் காட்டினால் நிச்சயம் கற்றல் மேம்படும் என்கிறார். அன்பான ஆசிரியராகத் திகழ, அவர் படித்துக் கற்றுக்கொண்ட சில விஷயங்களைப் பின்பற்றுமாறு கேட்கிறார்.
வகுப்பறையில் மகிழ்ச்சியாக கற்றுக் கொடுப்பது, சமூக அவலங்கள் ஏதாவது நிகழும் போது அதைப் பற்றி மாணவர்களுடன் விவாதிப்பது, குழுவாகவும் ஆர்வத்தோடும் செயல்படக் கூடிய வகையில் கற்பித்தலை வடிவமைப்பது, புன்சிரிப்புடன் குழந்தைகளிடம் பழகுவது, அவர்களுக்கான அங்கீகாரத்தைத் தவறாமல் வழங்குவது, சவால்களை எதிர்கொள்ளவும் சில சமயம் அதில் தோல்வி அடைந்தால் அதை ஏற்றுக் கொள்ளவும் அவர்களை பக்குவப்படுத்துவது, மதிப்பெண் சார்ந்த ஏற்றத்தாழ்வுகளை பார்க்காமல் அனைவரிடமும் பொறுப்புகளை ஒப்படைப்பது, முக்கியமாக குழந்தைகள் படித்த புத்தகம் பற்றி அவர்கள் பார்த்த திரைப்படங்கள் பற்றி கலந்துரையாடுவது, சாரணியம் செஞ்சிலுவைச் சங்கம் என அனைத்து குழுவிலும் இணைந்து செயலாற்றத் தூண்டுவது போன்ற பல வழிகளைச் சொல்லியிருக்கிறார்.
இதே போல மாணவர்களிடத்தும் அவர்களின் கனவு ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என அவர்களின் கருத்தைக் கேட்டிருக்கிறார். அதற்கு ஒவ்வொரு பிள்ளைகளும் அவர்களுக்குத் தோன்றியதை அப்படியே எழுதிக் கொடுத்திருக்கிறார்கள். என் கனவு ஆசிரியர் மாணவர்களிடத்தில் அன்பாக இருக்க வேண்டும், ஆண் பெண் என்ற வேறுபாடு காட்டக் கூடாது, பாடம் நடத்தும் போது தெளிவாகவும், அழகாகவும் நடத்த வேண்டும்,என் கனவு ஆசிரியர் இரண்டாம் தாய் போல நடந்து கொள்ளவேண்டும், என் கனவு ஆசிரியர் என் தவறைத் திருத்தும் அதே நேரத்தில் என்னுடைய நல்ல பழக்கங்களையும் சொல்லிப் பாராட்டவேண்டும், பாடத்தை மட்டும் நடத்தாமல் மாணவர்களுக்கு நன்மை எது தீமை எது என எடுத்துக் கூற வேண்டும், வகுப்பு எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் சோர்வு ஏற்படும் போது சிறிது நேரம் விளையாட வைக்க வேண்டும், தேர்வு நேரத்தில் திட்டாமல் எங்களை அன்போடு அரவணைக்க வேண்டும். இதில் ஒரு மாணவன் சொல்லியிருக்கிறான் உங்கள் கையெழுத்தை இன்னும் அழகாக மாற்றிக் கொள்ளுங்கள் என்று, தன் மீது வைக்கப்பட்ட விமர்சனத்தையும் மகிழ்வோடு ஏற்றுக் கொண்டிருக்கிறார் ஆசிரியர்.
ஒரு மாணவர் செய்யும் தவறை மறைத்து அவனைத் திருத்துவது எப்படி என்பதற்கு ஒரு ஆசிரியரின் அனுபவக் கதையைச் சொல்லி இருக்கிறார். ஒரு விழாவில் இளைஞர் ஒருவர் தன்னுடைய பழைய ஆசிரியரை சந்திக்கிறார் அவரிடம் கேட்கிறார் என்னை நினைவு இருக்கிறதா என்று, இல்லை என்று சொன்ன ஆசிரியரிடம் நான் உங்கள் முன்னாள் மாணவன் உங்களால் தான் இன்று ஆசிரியத் துறையில் இருக்கிறேன் என்று கூறுகிறார். ஆசிரியருக்கு ஆச்சரியம் அப்படி என்ன தாக்கத்தை நான் ஏற்படுத்தினேன் என்று கேட்கிறார் ..
அந்த இளைஞர் மாணவனாக இருந்தபோது ஒரு வகுப்புத் தோழன் உயர்ந்த கடிகாரத்தை அணிந்து வந்திருக்கிறான். ஒரு சபலத்தில் இந்த இளைஞன் அந்த கடிகாரத்தை எடுத்துத் தன் பாக்கெட்டில் போட்டுக் கொண்டான். கடிகாரம் காணாமல் போய்விட்டது என தெரிந்ததும் ஆசிரியர் அனைத்து மாணவர்களையும் கண்மூடி நிற்கச் சொல்கிறார். அவரே அனைவரின் பாக்கெட்டையும் பார்த்து அந்த கடிகாரத்தை எடுத்துக் கொள்கிறார். தன் பாக்கெட்டில் இருந்து எடுத்த கடிகாரம் தான் இது என அனைவரிடத்தும் வெளிப்படுத்தாமல் இருந்ததற்காக நன்றி என்று கூறுகிறார் இளைஞர். அந்த நிகழ்வுதான் என்னை ஆசிரியராக மாற்றியது என்கிறார். அதற்கு அந்த ஆசிரியர் கூறுவார்..
எனக்கு உன்னுடைய பாக்கெட் தான் என்று தெரியாது. ஏனென்றால் நானும் கண்ணை மூடிக்கொண்டுதான் இருந்தேன் என்று. எத்தனை அற்புதமான ஆசிரியர்.வாழ்நாள் முழுவதும் மறக்கவே முடியாதபடி செய்து விடுகிறது அவரின் செயல்.
கற்பித்தால் நம் கடமை முடிந்தது என்று இருக்காமல், ஒரு மாணவனின் திறமை அவனுடைய ஆர்வம் எதில் இருக்கிறது என்பதையும் கண்டுகொண்டு அந்தப் பாதையில் அவனை வழிநடத்தவும் ஆசிரியர் முயற்சி செய்ய வேண்டும். மேலும் அப்படி தங்கள் மாணவர்களை மெருகேற்றிய பல ஆசிரிய நண்பர்களை புத்தகத்தில் அறிமுகப்படுத்துகிறார். ஒவ்வொருவரும் தங்கள் பணியில் எப்படி சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள் என்று வாசிக்கும்போதே நம் ஆசிரியர்கள் அனைவருமே நினைவுக்கு வருவார்கள். ஆசிரியப் பணி அன்பும், அரவணைப்பும்,தியாகமும் சேர்ந்த அற்புதமான பணி என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.
மாணவர் நலனை மட்டும் கருத்தில் கொள்வது போதாது என இந்த சமூகத்திற்கு வேறு ஒரு வேண்டுகோளையும் முன் வைக்கிறார் ஆசிரியர். இன்றைக்கு ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் அழுத்தம் உண்மையில் மிகப் பெரிது. மாணவன் செய்யும் தவறுக்கும் ஆசிரியர்கள் பொறுப்பேற்க வேண்டி இருக்கிறது. பணிச்சுமைக்கிடையே இது போன்ற பிரச்சனைகளையும் ஆசிரியர்கள் சுமக்க வேண்டி இருக்கிறது. பெற்றோர் கூட்டம் நடத்தி மாணவர்களின் பிரச்சினையை கேட்பது போலவே, ஆசிரியர் கூட்டம் நடத்தி அரசாங்கம் அவர்களுக்கு இருக்கும் பிரச்சனைகள் என்ன, அதை எப்படித் தீர்க்க வேண்டும் என ஆலோசிப்பதும் இன்றைக்கு மிக அவசியமாக இருக்கிறது. ஆசிரியர்கள் மீது கொஞ்சம் அக்கறை காட்டினால், இதைவிட அற்புதமாக அவர்கள் பணியைச் செய்வார்கள் என முடித்திருக்கிறார்.
ஆசிரியர்கள் பெற்றோர் மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் வாசிக்க வேண்டிய ஒரு நூல். அனைத்து கோணத்திலும் என்னென்ன பிரச்சனைகள் இருக்கிறது என்பதை அலசி ஆராய்ந்திருக்கிறார் ஆசிரியர். பல விருதுகளையும் பெற்றிருக்கிறார். தங்களின் கனவு ஆசிரியராக பல மாணவர்கள் இவரைக் குறிப்பிட்டு எழுதியிருக்கிறார்கள். கற்கத் தொடங்குபவன் மாணவன், கற்றுக் கொண்டே இருப்பவர் ஆசிரியர் என அவர் கூறுவதைப் பல இடங்களில் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார். பல ஆளுமைகள் அவரவர் துறையில் சிறந்து விளங்க அவர்களின் ஆசிரியரே காரணம் என்பதையும் விளக்கிச் சொல்லியிருக்கிறார். தன்னலம் பாராது உழைக்கும் ஆசிரியர்கள்
இருப்பதால் மட்டுமே சமுதாயம் முன்னேற்றப் பாதையில் செல்கிறது என்பதை மறுக்கவே முடியாது. அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்.
நூலின் பெயர்: வகுப்பறை மொழி
ஆசிரியர்: மாலினி சீதா
பதிப்பகம்: பாரதி புத்தகாலயம், புக்ஸ் ஃபார் சில்ரன்
பக்கங்கள்: 80
விலை: ரூ. 90