நூல் அறிமுகம்: “வகுப்பறைக்கு உள்ளே” – ஆசிரியர் உமா மகேஸ்வரி 

நூல் அறிமுகம்: “வகுப்பறைக்கு உள்ளே” – ஆசிரியர் உமா மகேஸ்வரி 

 

நூலாசிரியர் : இரா. தட்சிணாமூர்த்தி . இவர் ஓய்வுபெற்ற தமிழாசிரியர் .புதுவையைச் சேர்ந்த இவர் புதுவை அறிவியல் இயக்கத்தின் பொதுச் செயலாளராகவும் , ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் பொறுப்பு வகித்தவர். சூடேறும் பூமி ,யார் குற்றவாளி உள்ளிட்ட 5 நூல்களை எழுதியுள்ளார்.

வகுப்பறைக்கு உள்ளே என்ற இந்த நூல் முழுவதும் ஆசிரியரின் பணி அனுபவங்கள் தான். எட்டு உட்தலைப்புகளை உள்ளடக்கிய இந்நூலுக்கு சிறப்பானதொரு  அணிந்துரையை நமது மூத்த கல்வியாளர் முனைவர் ச.சீ.இராஜகோபாலன் அவர்கள் நெஞ்சைத் தொடுமாறு எழுதியுள்ளார். அதைத் தொடர்ந்து வரும் என்னுரை என்ற பகுதியில் நூலாசிரியர் இந்நூல் உருவானதற்கான தருணங்களைப் பற்றிப் பகிர்ந்திருக்கிறார்.

வகுப்பறைச் சிக்கல் , அடியும் ஹார்லிக்சும் , நான் எந்த சாதியும் இல்லே .. , அன்புடன் ரஜினிகாந்த் , லேட்டா வரலாமா சார் ? கல்விச் சுற்றுலா , நல்லாசிரியர் விருது , என்னைப் பெயிலாக்கிடுங்க சார் . இந்த எட்டுக் கட்டுரைகள் தான் நம் மனதோடு நெருங்கி உறவாடுகின்றன. தனது 34 வருட ஆசிரியர்ப் பணியில்  கடந்து வந்த மாணவர்களை , கற்பித்தல் அனுபவங்களை மிக இயல்பாக , யதார்த்த சூழலின் வெளிப்பாடாக ஆசிரியர் படைத்திருக்கிறார். 40 ஆண்டுகளுக்கு முன்பு நமது கல்வி முறையில் சிக்கல்கள் இருந்தாலும் ஒரு மாணவரது வாழ்க்கையில் அன்றைய ஆசிரியர் கொண்டிருந்த நேசம் ஒவ்வொரு கட்டுரையிலும் முத்தாய்ப்பாகத் தெரிகிறது.

ஆசிரியர் மாணவர் உறவு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை , தான் வாழ்ந்த பள்ளி வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு நமக்குக் கூறியிருக்கிறார். மாணவரது வீட்டு சூழல் , பொருளாதார சூழல் , உளவியல் சூழல் என எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு மாணவர்களை அணுகிய அனுபவங்கள் குறித்து வாசிக்கும் போது நெகிழ்கிறது. முதல் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள வகுப்பறை சிக்கல் இன்று வரை சில பள்ளிகளில்  தொடர்வது தான் நமது சாபக்கேடு .

Image may contain: 1 person

கட்டுரைகளின் பல இடங்களில் நான் என்னையே உணர்கிறேன். அன்றாடம் எனது வகுப்பறையில் சந்திக்கும் பிரச்சனைகளுக்கும் இந்தப் புத்தகத்தில் தீர்வுகளைக்  காண முடிகிறது. அடியும் ஹார்லிக் சும் கட்டுரையின் முடிவில் மட்டுமல்ல அடுத்தடுத்த மற்ற ஆறு கட்டுரைகளை வாசித்து முடிக்கும் போதும் என்னையறியாமல் கண்கள் கலங்கின . மனம் என்று நாம் நம்பும் உணர்வின் பகுதியில் ஏதோ பிசைந்தது. எனது 19 வருட ஆசிரியர் பணியில் நான் கடந்து வந்த மாணவர்களது கதைகள் என் எல்லா நினைவுகளிலும் ஆக்ரமித்தன. இன்னும் இந்த மாணவனை இப்படி நாம் அணுகியிருக்கலாமோ என்ற ஆய்வை எனக்குள் சுய பரிசோதனை செய்ய இந்தப் புத்தகம் சொல்லிக் கொடுக்கிறது.

இந்த 72 பக்கங்களில் சத்தமில்லாமல்  ஒரு புரட்சியை செய்துள்ளார் ஆசிரியர் இரா. தட்சணாமூர்த்தி . அரசுப் பள்ளி ஆசிரியர்களில் இன்றும் இவர் போன்ற ஆசிரியர்கள் ஆங்காங்கே வாழ்ந்து வருவது உண்மை தான், ஆனால் அவர்கள் எண்ணிக்கையில் குறைந்த சதவீதமே இருக்கின்றனர்.

இந்தப் புத்தகம் ஆசிரியர் பயிற்சிப் பாடமாக வைக்க வேண்டிய நூல் .ஆம் கல்வி குறித்து ஆய்வு செய்யும் கல்வியாளர்களை விட ஒரு ஆசிரியரின் வாழ்வில் உண்மையாக நிகழ்ந்த இந்த அனுபவங்கள் தான் சமூக மாற்றத்தை உருவாக்க வரும் வருங்கால ஆசிரியர்களுக்குப் பாடமாக வைக்கப்பட வேண்டியவை . இன்று பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களும் தங்கள் பணியில் அர்ப்பணிப்பு சார்ந்து செயல்பட இந்த நூலை வாசிக்க வேண்டும். அற்புதமான புத்தகம் .

வெளியீடு : பாரதி புத்தகாலயம்

ஆண்டு : 2018

விலை : ரூபாய் 60

உமா

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *