Vaikai Nathi Nakarikam (S. Venkatesan) - வைகை நதி நாகரிகம்Vaikai Nathi Nakarikam (S. Venkatesan) - வைகை நதி நாகரிகம்

2500 வருடங்களுக்கு முன்னால் நாகரீகமடைந்த தமிழ்ச் சமுதாயம் மதுரை மாநகரில் வாழ்ந்திருக்கிறார்கள். அதற்கான சாட்சியமான கீழடியின் சிறப்புகளையும்,தொல்லியல் ஆய்வாளர்களின் கனவு பூமியாக மதுரை இருப்பதையும்,கீழடியை மீண்டும் மண்ணுக்குள்ளேயே புகைக்க முயன்ற முயற்சிகளையும் சான்றுகளுடன் விரிவாகப் பேசுகிறது புத்தகம்.

ஜீவ நதிக்கரையில் அல்ல,வறண்ட நதிக்கரையான வைகைக் கரையில் தழைத்த நாகரீகம் இது.

அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையிலான மத்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் அகழாய்வு பிரிவு 2013 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் வைகை ஆற்றில் இரு கரைகளிலும் உள்ள ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்குள் உள்ள எல்லா கிராமங்களிலும் நடத்திய ஆய்வு முடிவுகளில் கண்டறியப்பட்டது தான் கீழடி.

சங்க இலக்கியங்களில் உள்ள மதுரை இதுதான் என்கிறார்கள்.

மதுரை தேனூரில் 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் கனமழையில் சாய்ந்த கருவேலம் மரம் ஒன்றின் கீழ் முதலாம் நூற்றாண்டை சேர்ந்த தங்கக் கட்டிகள் நிறைந்த புதையலைக் கண்டெடுத்திருக்கிறார்கள். மிகப்பெரிய ஆச்சரியம் என்னவென்றால் அதில் கோதை என்ற ஒரு பெண்ணின் பெயர் இருக்கிறது.

மதுரையில் உள்ள கடச்சனேந்தலில், விவசாயிகளை அமைப்பாக திரட்டும் முயற்சிக்கு சென்ற போது, மழைக்கு ஒதுங்கிய இடத்தில் கோவலனும் கண்ணகியும் மதுரையில் தங்கியிருந்த வீட்டை பார்க்கிறார்கள். ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்த பொழுது வயதான மூதாட்டி, என்னப்பா இந்த ராத்திரியில் வந்து கண்ணகி வீட்டப் பாத்துகிட்டு இருக்கீங்க என கேட்டபடி அவர்களைக் கடந்து போகிறார்.
சிலப்பதிகாரத்தில் வரும் காட்சிகளுக்கான சாட்சிகளாக அந்த இடம் விரிவதைக் கண்டு அதிசயத்துப் போவது அவர்கள் மட்டுமல்ல நாமும் தான்.

கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுகளாக மதுரையில் குடியிருக்கிறேன். எங்கள் வீட்டிலிருந்து இரண்டு அல்லது மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருக்கிற கடச்சனேந்தல் என்கிற ஊரில்தான் கண்ணகி வீடு இருக்கிறது. கோவலன் கொலையுண்ட செய்தியை கேட்டு ஆத்திரம் பொங்க சிலம்பைக் கையில் ஏந்திப் புறப்படுகிறாள். கடை சிலம்பு ஏந்தல் என்கிற பெயர்தான் இருபது வருடங்களுக்குள்ளாக கடச்சனேந்தல் என்று மாறியிருக்கிறது.

புலிமான் கோம்பை தாதப்பட்டியில் இருக்கிற நடு கற்கள், வெம்பூரில் இருக்கிற 3000 ஆண்டுகள் பழமையான குத்துக்கல் வரிசைகள், கோட்டை மேடு பகுதியில் கிடைக்கிருக்கிற கப்பலின் கோட்டோவியம் கீறி வரையப்பட்ட கையளவு அகல அளவு அகலம் கொண்ட பானை ஓடு, தமிழர்களுக்கும் யவனர்களுக்குமான தொடர்பு என ஏராளமான ஆச்சரியங்கள் இந்தப் புத்தகத்தில் நிறைந்திருக்கின்றன.

ஏற்கனவே இருந்தவரை மாற்றி புதிய பொறுப்பாளரை நியமித்து, அவர் ஒரு அறிக்கை வெளியிடுகிறார். கீழடி அகழாய்வை இழுத்து மூட வேண்டிய வாசகத்தை எழுதுகிறார். கீழடியில் கட்டடங்கள் தொடர்ச்சியாகவோ அல்லது பரவலாகவோ கட்டப்படவில்லை என்பது தெரிய வருகிறது.

ஒரு பொருளின் காலத்தை நிர்ணயிக்கும் கார்பன் 14 பகுப்பாய்வுக்கு, ராஜஸ்தானில் உள்ள காளி பங்கனில் நடத்தப்பட்ட அகழாய்வில் 28 பொருள்களின் மாதிரிகளையும், தொழவீராவிலிருந்து 20 பொருட்களின் மாதிரிகளையும் ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் கீழடியில் கண்டறியப்பட்ட மூலப் பொருள்களின் மாதிரிகளில் இரண்டே இரண்டை மட்டும்தான் அனுப்ப மத்திய தொல்லியல் துறை அனுமதி வழங்கியிருக்கிறது.

இதையெல்லாம் ஏன் செய்தார்கள்?

வெறும் மதங்களும் கடவுளர்களும் உருவாகாத ஒரு காலத்தில் வளர்ந்திருந்த நாகரிகத்தின் சான்று தான் கீழடி. அங்கு கிடைத்துள்ள 5300 பொருள் பொருள்களின் மத அடையாளம் சார்ந்த பொருள் எதுவும் இல்லை

கூட்டிக் கழித்துப் பாருங்கள்.கணக்கு சரியாக வரும்.

இத்தனை நரித்தனங்களையும் கடந்து,இன்று கீழடியில் ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறுவதும்,ஒரு அற்புதமான அருங்காட்சியகம் நிறுவப்பட்டிருப்பதும் மனதுக்கு இதமாக இருக்கின்றன.

 

நூலின் தகவல்கள்

நூல் : வைகை நதி நாகரிகம்
                 கீழடி குறித்த பதிவுகள்

ஆசிரியர் : சு.வெங்கடேசன்

வெளியீடு : ஆனந்த விகடன் வெளியீடு

பக்கங்கள் :  151

விலைரூபாய் 200

 

நூலறிமுகம் எழுதியவர் 

ஜி.சிவக்குமார்

 
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *