நூல்: வாய்க்கால் மீன்கள்
ஆசிரியர்: வெ. இறையன்பு
வெளியீடு: நியூ செஞ்சி புக் ஹவுஸ்

இந்திய ஆட்சித்துறை அதிகாரி திரு. வெ. இறையன்பு அவர்களின் இரண்டாவது கவிதைத் தொகுப்பு “வாய்க்கால் மீன்கள்”.

எந்தவொரு அலங்கார வார்த்தைகளுமின்றி… முழுக்க முழுக்க எதார்த்தங்களின் கைப்பிடித்து நகரும் கவிதை மொழியிலான கதையோட்டமாக முற்றிலும் வித்தியாசமானதொரு வாசிப்பனுபவத்தைத் தருகிறது.. இந்தக் கவிதைத் தொகுப்பு.

கவிதைக்குள் கதையாய்…
கதைக்குள் கவிதையாய் வாசிக்க வாசிக்க.. மெல்லியதாயொரு அதிர்வலையை நமக்குள் நெய்து கொண்டே போகும் ஒரு அன்பின் முடிச்சினை.. உணர்வின் நெகிழ்ச்சியினை அத்தனை அழகானதொரு காவியமாக்கியிருக்கும் விதத்தில்… வாசிப்பவரின் மனங்களைக் கொஞ்சம் புரட்டிப் பார்த்துவிட்டுப் போகிறது
இந்த வாய்க்கால் மீன்கள்.

நகரத்து இளைஞன் ஒருவன் தன் விருப்பத்தின் பேரில்.. ஒரு கிராமத்து வங்கியின் மேலாளராகப் பணிக்கு வரும் இடத்தில்.. அவன் சந்திக்கும்
ஒரு காதலும் அதுசார்ந்த அனுபங்களும் அதைத் தொடர்ந்து அவன் எடுக்கும் முடிவுகளுமாக நகரும் கதையோட்டத்தில்… தொடக்கம் முதல் இறுதி வரைக்கும் நகர முடியாது நம்மை உள்ளிழுத்துக் கொள்கிறது நேசம் பாரித்துக் கிடக்கும் மேன்மை தாங்கியதொரு காதலின் பிரதிமையாய்த் திகழும் இந்த எழுத்தோவியம்…



// வாழ்க்கையைச் சிலர் மட்டுமே வாழ்கிறார்கள்
பலர் அதை
நகர்த்துகிறார்கள்//

// பணி பலருக்கு பாரம்
சிலருக்கு துலாபாரம்//

// திருமணம் ஆண்களுக்கு
ஒரு நுழைவாயில்
பெண்களுக்கு அதுவே பிரகாரம்//

// நாம் முழம் போடும்போது நிர்ணயிக்கப்படுவது பூமாலையின் அளவு மட்டுமல்ல கைகளின் நீளமும் தான் கணக்கிடப்படுகிறது//

//விருப்பமானவர்கள்
ஓய்வு நேரத்தில் மட்டுமின்றி அலுவலக நேரத்திலும் நம் சிந்தைக்குள் சென்றுவிடுகிறார்கள்//

வழி நெடுக இப்படியான வரிகளுக்குள் பதித்து வைத்திருக்கும் சிந்தனைத் துளிகளுக்குள் ஆழப் புதையும்படியாய் நம்மை வசியம் செய்துவிடுகிறார் ஆசிரியர் என்றுதான் சொல்ல வேண்டும்.

மனம் எண்ணி எண்ணிச் சுகம் காணும் உலகத்திற்கும்…
எதார்த்தத்தில் அதற்கு ஏற்படும் காயங்களுக்கும் இடையிலான
முரண்களைப் பேசுகிறது..
இந்தப் படைப்பு.

உவமைகள்… உவமைகள்.. உவமைகள் என வரிக்கு வரி
உருட்டப்படும் உவமைகளுக்குள் தாயங்களாகத் தெறித்து விழுகின்றன சிந்திக்கவும் ரசிக்கவுமான களிப்பூட்டும் மொழியுருட்டல்கள்.



பணிக்கு வந்த இடத்தில் அவனது சுற்றுப்புறத்தையும்
அவன் தங்கியிருக்கக் கிடைத்த வசிப்பிடத்தையும் இப்படி உவமைப் படுத்துகிறார் கவிஞர்…

// கோவணம் கட்டியவர்கள்
மத்தியில்
ஒருவன் மட்டும்
கோட் போட்டுக் கொண்டிருந்ததைப் போல்
இருந்தது
அந்தக் கட்டிடம்//

// அழுக்கடைந்த பனியனுக்கு மேல் சலவை செய்த
சட்டையைப் போட்டு சரிசெய்வதைப் போலிருந்தது
அந்த மொட்டைமாடி//

கீர்த்தனையொன்றினைப் பாடியவாறே சன்னலைத் திறக்க
எதிர்வீட்டு சன்னலில் முளைத்த தாமரையொன்று சிரித்தபடி உள்ளே ஓட… அந்தக் கண நேரத்து மின்னலில் ஊமையாகிப் போகிறது இவன் மனம். அதன்பிறகு மீண்டும் மீண்டும் அந்த மல்லிகையை நாடிக் களைக்கும் இவனது நிலையை தவிப்பை இப்படிக் காட்சிப் படுத்துகிறார் கவிஞர்..

// உயிரியல் பூங்காக்களில்
புலி மட்டும் பார்வைக்குத்
தட்டுப்படாததைப் போலவே
கிடைக்காமலே போனது//

புதிய சூழலில் தலையாய பிரச்சனையாக அவனை நெருக்கும் உணவுப் பிரச்சனையை இப்படியாக வரி சமைக்கிறார் கவிஞர்…

// காலி வயிற்றுடன்
இருக்கும்போது
கடல் சத்தம்
இனிக்க முடியாததாக
இருந்து விடுகின்றது//

// தேநீர்க்கடையிலிருந்து
வந்த தேநீர் அந்த ஊரில்
தண்ணீர்ப் பஞ்சமில்லை என்பதை பறைசாற்றியது//



தீவிரவாதிகளுடன் போராடும் காவல்துறையைப் போல்
உணவோடு சமராடும் இப்படியான தினமொன்றில்… தன் வீட்டிலிருந்து உணவு தருவதாக நேசக்கரம் நீட்டுகின்ற
எதிர்வீட்டுக்காரரது கருணையின் பின்னணியில்… அங்கே சந்திக்க நேர்கிறது
இவனது இதயக்கூட்டில்
இடையறாது இம்சை வாசிக்கும்
எதிர்வீட்டு சன்னலில் பூத்த அந்த மல்லிகையை.

தொடந்த தினங்களில் பாடசம்பந்தமாக அவளுக்கு உதவப்போக.. அவ்வப்போது இரு வீட்டு சன்னல்களும் திறந்துகொள்கின்றன. கைமாறும் கவிதைப் புத்தகங்களும்… வந்துபோகும் உணவுப் பாத்திரங்களும் உறவை வளர்க்க… நேசத்தின் மொழியில் நனையும் இரு இதயங்கள் தன்னாலே… இடம் மாறிக் கொள்கின்றன.

இருந்தும் இதயத்தின் நுகருதலாய் ஒருவரை ஒருவர் உணர்தலைத் தவிர… வேறெந்த வகையிலும் தங்கள் அன்பை.. நேசத்தை.. அவர்கள்
மொழிமாற்றம் செய்துகொள்ளாத அந்த கண்ணியம் தான்… மடைபாற்றிப் போடுகிறது இன்றைக்கான காதலின் பார்வையை இப்படியாக…

// முதல் முறை பார்க்கும்போது தான் பாலியல்
நினைவுக்கு வரும்
நாளடைவில் முகங்கள் கூட மறந்து உள்ளங்கள் மட்டுமே கைகுலுக்கிக் கொள்கின்றன//

//காதல் என்னும் கவிதை
தொடர்கதையாய்த்
தொடர வேண்டுமென்பதல்ல
உச்சரிக்கப்படாத வரை தான்
அதன் உயர்வும் உயிர் வாழ முடியும்//

// காதல் என்பதைக் கண் அசைவுகளால் கணிக்கும் உலகத்தில்
இதயத் துடிப்புகளால் எண்ணப்பட வேண்டியது அது//



நிறைகளை மட்டுமே கண்ணுக்குக் காட்டுகின்ற இருமனங்கள் இணையும் காதல்.. திருமணத்திற்குப் பிறகு குறைகளை மட்டுமே காட்டுகின்றன. மனைவி என்பது புனிதத்தன்மையில் நீர்த்துவிடுகின்றது. எதிர்பார்ப்புகளைச் சுமந்துகொண்டே வரும் பிணைப்பிலான திருமணம் மட்டுமே காதலர்களைத் தோல்வியுறச் செய்கிறது. ஆதலின் காலமெல்லாம் உன் நினைவுகளின் கதகதப்பிலேயே உயிர் வாழ்ந்து விடுவேன் என்ற நிலைப்பாட்டின் புள்ளியில்..
இப்படியான வார்த்தை அணிகளில் நிறைவடைகிறது இக்கவிதைத் தொகுப்பு…

//அதிகமாய் மலரை நேசிப்பவர்கள் அதைச் செடியிலேயே சிரிக்க விடுகிறார்கள்//

// அலைகள் கால்களை
நனைக்கிறபோது அனுபவிக்கும் ஆனந்தம்
கப்பலில் கடலின் நடுவே பயணப்படும்போது
கிடைப்பதில்லை//

// நினைக்கிற போது
நேர்கின்ற இன்பம்
நினைத்தது நடக்கிற போது கிடைக்கின்ற சுகத்தை விட அதிகம். ஏனெனில்
மனதின் கைகளின் எண்ணிக்கை
மனிதனின் கைகளை விட ஆயிரம் மடங்குகள்
அதிகம்//

84 பக்கங்களுக்குள்ளாக…
வெறும் உணர்ச்சிகளில் நீர்த்துப் போகாது…உள்ளத்தால் உணரப்படுவது மட்டுமே காதலென்று.. காதலின் மேன்மையை சமூக அக்கறையாகவும் உரக்கப் பேசியிருப்பதில்.. இதயத்தின் வேர்ப் பிடித்து நின்றாடும் பிரியத்தின் கிளைகளை… நிறையவே அசைத்துப் பார்க்கிறது.. இந்த காவியப் படைப்பு.

அன்பூ



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *