நவீன மலையாள இலக்கியத்தின் பிதாமகன்களில் ஒருவர் என்று வர்ணிக்கப்படுகிறவர் வைக்கம் முகம்மது பஷீர். ஒரு தேர்ந்த மனிதாபிமானி, சுதந்திர போராட்ட வீரர், நாவலாசிரியர், சிறுகதை எழுத்தாளர், கட்டுரையாளர் என பல்வேறு முகங்களை கொண்டு விளங்கியவர் பஷீர். வழக்காற்றுத் தொடர்பற்ற மொழிநடையினை தனது படைப்புகளில் பயன்படுத்தியதன் மூலமாக, மலையாள வாசகர்களிடையே நன்கு அறியப்பட்டவர். இயல்பான மக்கள் பேசுகின்ற மலையாள பேச்சு மொழியையும், மலையாள இலக்கிய மொழியையும் ஒருபோதும் அவர் வேறுபடுத்திப் பார்க்கவில்லை. இன்னும் சற்று குறிப்பிட்டுச் சொல்லப் போனால் தன்னுடைய எழுத்துக்களிலுள்ள மலையாள இலக்கண பிழைகளை பற்றி பஷீர் கவலைப்பட்டுக் கொள்ளவே இல்லை. ஒரு முழு நேர எழுத்தாளராக பஷீர் பரிணமிக்கத்  தொடங்கிய ஆரம்ப காலத்தில், அவருடைய எழுத்துக்களை பதிப்பித்த பதிப்பாளர்கள், பஷீரினுடைய மொழிநடையில் மலையாள மொழிக்குரிய அழகியல் தன்மைகள் எதுவுமில்லை எனக் கருதி அவருடைய எழுத்துக்களில் கூடுதலாக சில விஷயங்களை சேர்த்து மாற்றங்கள் செய்தனர். தன்னுடைய எழுத்துக்களை அழகியல் தன்மைக்கு மாற்றினால், அவை இயற்கையான ஓட்டத்தினையும், புத்துணர்ச்சியையும் முற்றிலும் இழந்துவிடுகின்றன எனக் கூறி, தன்னுடைய சொந்த எழுத்து நடையிலேயே தன் நூல்களை வெளியிடச் செய்தார்.

மலையாள மொழி ஆசிரியராக பணியாற்றிய பஷீரினுடைய சகோதரர் அப்துல்காதர் ஒருமுறை பஷீரினுடைய சிறுகதையொன்றை படித்து விட்டு, ‘உன்னுடைய இந்த கதையில் ‘ஆஹ்யாஸ் மற்றும் ஆஹ்யாதாஸ்’ (மலையாள இலக்கணத்தோடு சம்பந்தபட்டவை) எல்லாம் எங்கே இருக்கிறது..?’ எனக் கேட்டார். இதற்கு பஷீர் சற்று கோபமாக அளித்த பதில். ‘இயல்பான மக்கள் பேசுகின்ற மலையாள மொழிநடையில் என் கதையை நான் படைத்திருக்கிறேன். உன் அறிவுகெட்ட ஆஹ்யாஸையும், ஆஹ்யாதாஸையும் என் கதைகளில் தேடாதே..’

தன்னை சுற்றி வாழ்ந்து கொண்டிருக்கிற மனிதர்களின் குணநலன்களையும், மனநலன்களையும் சற்று அதீதமாய் உள்வாங்கிக் கொண்டு, அவைகளை ஒருவித நுண்ணறிவுத் தன்மையோடு ஒருங்கிணைத்து தன் எழுத்துக்களில் பதிவு செய்தவர் பஷீர். அலையாய் ஆர்ப்பரித்த சந்தோஷங்கள், மருகிக் கிடந்த சோகங்கள் என தன்னை பாதித்த எதையும் தன் படைப்புகளில் பதிவு செய்யத் தவறவில்லை பஷீர். அன்பு, மனிதாபிமானம், பசி, வறுமை ஆகிய இந்நான்கு கூறுகளே அவருடைய எழுத்துக்களின் மையக்கருக்கள். பஷீர் படைத்த காதல் கதைகள் அனைத்தும் தானாகவே ஒரு வழியைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு வாசகர்களின் மனதை சென்றடைந்து இன்றளவும் நீங்காது நிலைத்திருக்கின்றன. இதற்கு முக்கிய காரணம், பஷீருக்கு முந்தைய மலையாள எழுத்தாளர்கள் யாரும் ஒரு மலையாளியினுடைய பார்வையில் காதலை சொல்லாதது தான்.

സ്നേഹിക്കുന്ന വല്ല ഹൃദയങ്ങളും ...

‘முச்சீட்டுகளிக்காரண்டே மகள்  (1951)’ என்கிற பஷீரினுடைய கதையொன்றில் அக்கதை நாயகன் மந்தன் முத்தப்பா வாழைப்பழங்களை திருடி விட்டு ஆற்றுத் தண்ணிரிலிருந்து  வெளிவருகின்ற நாயகியை பார்த்து சொல்வான். ‘சாய்நாபா… வீட்டுக்கு சென்றவுடன் தலையை துவட்டி உலர வை. இல்லையேல் முடி உதிர்ந்து விடப் போகிறது.’. இதுபோன்ற எண்ணற்ற அடிப்படை மனித உணர்வுகளின் ஈரத்தை தன் பெரும்பாலான கதைகளில் பதிவு செய்திருக்கிறார் பஷீர்.

பஷீரினுடைய பெரும்பாலான எழுத்துக்கள், அதாவது சிறுகதைகள், நாவல்கள் என இவையனைத்தையும் உரைநடை புனைக்கதைகள் என்கிற தலைப்பின் கீழ், இலக்கிய விமர்சகர்கள் வரையறுத்திருந்தாலும், அவை தவிர்த்து ஒரு நாடகத்தினையும், கணக்கிலடங்கா கட்டுரைகளையும், கடந்த காலத்தை நினைத்துப் பார்க்கின்ற நினைவோடை தொகுப்புகளையும் படைத்துள்ளார் பஷீர். அவருடைய புனைக்கதைகள் அனைத்தும் முற்றிலும் வேறுபட்ட எதிரிடையான கதைகளை உள்ளடக்கியவை. ஒரு கதை சொல்லியினுடைய பாணியில் தன் கதைகளை எடுத்துரைத்தல், தத்துவ மேதை பாணியில் கதைகளின் உட்பொருளைக் கையாளுதல், சமூகத்தின் பார்வையில் கருத்துக்குறிப்பை வெளியிடுதல் என பல்வேறு விதமான தொனியில் தனது எழுத்துக்களை படைத்துள்ளார்  பஷீர்.

வடக்கு திருவிதாங்கூருக்கு உட்பட்ட தலயோலப்பரம்பு கிராமத்தை சேர்ந்த இஸ்லாமிய தம்பதிகளுக்கு மூத்த மகனாக 1908-ஆம் ஆண்டு ஜனவரி 21 ஆம் தேதி பிறந்தார் முகம்மது பஷீர். மர வியாபார ஒப்பந்தக்காராக  செயல்பட்ட பஷீரினுடைய தந்தையினுடைய வருமானம் அப்பெரிய குடும்பத்திற்கு சற்று போதுமானதாக இல்லை. தன்னுடைய ஆரம்ப கல்வியை தலயோலப்பரம்பு கிராமத்திலுள்ள மலையாள மீடியப் பள்ளிக்கூடத்தில் பயின்ற பஷீர், பின்னர் ஐந்து கிலோ மீட்டர் தொலைவிலுள்ள வைக்கத்திற்கு சென்று அங்குள்ள ஆங்கில பள்ளியொன்றில் தன் பள்ளிப்படிப்பைத் தொடர்ந்தார். பள்ளிப்பிராயக்காலத்தில் காந்திஜியினுடைய சுதேசிய கொள்கையின் மீது பஷீருக்கு அதீத ஈடுபாடு ஏற்பட்டு, கதர் உடைகளை அணிய ஆரம்பித்தார்.

1924இல் வைக்கத்தில் நடந்த சத்தியாகிரகப் போரட்டத்தில் பங்கேற்க காந்திஜி வந்த போது, அவரை பார்க்க பஷீர் சென்றார். காந்திஜி பயணித்த காரில் எப்படியோ தொற்றி ஏறிக்கொண்ட பஷீர், அவரது கரங்களை சற்று அழுந்தப் பற்றியிருக்கிறார். இச்சம்பவத்தை தன் வாழ்நாளில் மறக்க முடியாத சம்பவமாக பிந்தைய காலகட்ட தன் படைப்புகள் பலவற்றில் பஷீர் குறிப்பிட்டுள்ளார். காந்திஜியினுடைய பயணத்திற்குப் பிறகு, வைக்கத்திலுள்ள அவரது சத்தியாகிரக ஆஸ்ரமத்திற்கு தினமும் செல்வதை வழக்கமாக்கி கொண்டார் பஷீர். இதனால் பள்ளிக்கு  தாமதமாய் செல்ல, அங்கு அவர் தண்டிக்கப்பட்டார்.

இந்திய சுதந்திர போராட்டம் உச்சகட்டத்தில் இருந்த அத்தருணத்தில், சுதந்திர போராட்டத்தில் பங்கேற்க விருப்பப்பட்டு, ஐந்தாவது பாரம் படித்துக் கொண்டிருந்த பள்ளியை விட்டு வெளியேறினார் பஷீர்.  இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்து சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டார். அந்த காலகட்டத்தில் சமஸ்தானங்களாக செயல்பட்டு கொண்டிருந்த திருவிதாங்கூர் மற்றும் கொச்சி ஆகிய பகுதிகளில் சுதந்திர போராட்டங்கள் பெரிதும் இல்லாத நிலையில், 1930இல் கோழிக்கோட்டில் நடைபெற இருந்த உப்பு சத்தியாகிரக போராட்டத்தில் பங்கேற்பதற்காக ஒரு குழுவினரை அழைத்துக் கொண்டு சென்றார் பஷீர். ஆனால் அப்போராட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்பாகவே பஷீர் மற்றும் அவரது குழுவினர் அனைவரும் கைது செய்யப்பட்டு, போலீசாரால் தாக்கப்பட்டு கோழிக்கோடு சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர் பஷீருக்கு மூன்று மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு கண்ணூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

கண்ணூர் சிறையில் பஷீர் இருந்த சமயத்தில், வடக்கே சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாவீர இளைஞர்கள் பகத்சிங், சுக்தேவ் மற்றும் ராஜ்குரு ஆகியோர் தூக்கிலிடப்பட, அவர்களது புரட்சிகர போராட்டங்கள் பஷீருக்குள் சுதந்திர போராட்டம் குறித்த உத்வேகத்தை சற்று அதிகப்படுத்தியது.  1931ஆம் ஆண்டு மார்ச் மாதம், காந்தி – இர்வின் ஒப்பந்தம் கையெழுத்தான போது, கண்ணூர் சிறையிலிருந்த பஷீர் மற்றும் 600-க்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். சிறையிலிருந்து வெளிவந்த பிறகு ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஒரு விடுதலை போராட்ட இயக்கத்தை ஆரம்பித்து ஒருங்கிணைத்ததோடு,  ‘உஜ்ஜிவனம்’ என்கிற இதழில் இணைந்து, அதில் புரட்சிகர கட்டுரைகளை எழுதி வந்தார். இதன் விளைவாக பிரிட்டிஷ் அரசு பிடிவாரண்ட் பிறப்பிக்க, கேரளாவை விட்டு வெளியேறினார் பஷீர்.

கேரளாவை விட்டு வெளியேறிய பிறகு,  இந்தியாவிலுள்ள எல்லா இடங்களுக்கும் மற்றும் ஆசிய, ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள பல்வேறு இடங்களுக்கும் சற்றே நீண்ட நெடியதொரு பயணத்தை பஷீர் மேற்கொள்ள வேண்டியிருந்தது. சுமார் ஏழு வருட காலங்கள் நீடித்திருந்த இப்பயணத்தின் போது சில சமயங்களில் வறுமை பீடித்திருந்த போது, பல்வேறு தரப்பட்ட வேலைகளை பஷீர் செய்ய ஆரம்பித்தார். சமையல்காரர், பழவியாபாரி, பேப்பர்காரர், விளையாட்டு பொருட்கள் விற்பனையாளர், வாட்ச்மேன், கணக்காளர், மாடுகளை பராமரிப்பவர், ஜோசியக்காரர், ஹோட்டல் மேனேஜர் என பல வேலைகளை பஷீர் செய்தார். அதில் ஹிமாலயா மற்றும் கங்கை ஆற்றுப் பள்ளத்தாக்கு பகுதிகளிலுள்ள ஹிந்து மற்றும் ஆன்ம பலம் கொண்ட சூபீயிஸ துறவிகள் வாழ்ந்த ஆஸ்ரமங்களில் அவர்களோடு உடனிருந்து, அவர்களது தொன்று தொட்டு வரக்கூடிய பழக்கவழக்கங்களை நடைமுறைபடுத்துபவராக சுமார் ஐந்து வருடங்களுக்கு மேல் இருந்தார். குடிக்க தண்ணீரும், உண்ண உணவும் இல்லாத சில நேரங்களில், மரணத்தை நேருக்கு நேர் சந்திக்கும் வாய்ப்பு பஷீருக்கு ஏற்பட்டது .

thrissur local news about vaikkom muhammed basheer | ഇമ്മണി ...

நீண்ட நெடிய பயணத்தை முடித்துக் கொண்டு, மீதமுள்ள தன் வாழ்க்கையை கேரளாவில் கழிக்க விரும்பி, பஷீர் கேரளா திரும்பிய போது (1936-1937) அவரது குடும்பம் கடனில் மூழ்கியிருந்தது. எர்ணாகுளத்தில் விளையாட்டு பொருட்கள் விற்பனையாளராக  விரும்பி தன் பணியை பஷீர் துவக்கிய போது, தீடீரென்று ஏற்பட்ட சைக்கிள் விபத்தினால் அப்பணியை அவர் இழக்க நேரிட்டது. மீண்டும் ஒரு வேலையைத் தேடி, ஜெயகேசரி நாளிதழ் அலுவலகத்திற்குள் நுழைந்தார். அவ்விதழல் ஒரு பணியாளாக பணியாற்றிய ஜெயகேசரி நாளிதழின் ஆசிரியரால்  பஷீருக்கு ஏற்ற வேலையை அப்போது கொடுக்க முடியவில்லை.  மாறாக அந்நாளிதழுக்காக பஷீர் ஏதெனும் கதை எழுதித் தந்தால் அதற்குரிய சன்மானத்தை தந்து விடுவதாக பஷீரிடம் அவ்விதழாசிரியர் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து பஷீரினுடைய முதல் சிறுகதை ‘எண்டே தங்கம்’ (பிற்காலத்தில் ‘விஷப்பு’ என்ற சிறுகதை தொகுப்பில் இக்கதை தங்கம் என்ற பெயரில் பிரசுரிக்கப்பட்டது) ஜெயகேசரி நாளிதழில் வெளியானது. தன் வீட்டிற்கு நேரெதிலுள்ள தெரு குழாயடிக்கு தினமும் தண்ணீர் பிடிக்க வருகின்ற ஒரு பெண்ணை மையப்படுத்திய கதை இது. இக்கதை பிரசுரமான பிறகு முழு நேர எழுத்தாளரானார் பஷீர். இந்த காலகட்டத்தில் வறுமை அவரை மீண்டும் வாட்ட ஆரம்பித்தது. வீட்டு வாடகை செலுத்த போதுமான பணம் இல்லாமலும், பேனா, மை, ஸ்டாம்ப்புகள் வாங்க பணம் இல்லாமலும் என தினசரி வாழ்க்கையை நகர்த்த பஷீர் போராட வேண்டியிருந்த சூழ்நிலையிலும், அவர் தொடர்ந்து கதைகள், கவிதைகள், அரசியல் கட்டுரைகள் என எழுதி பல்வேறு பத்திரிக்கைகளுக்கும், பதிப்பகத்திற்கும் அனுப்பி வந்தார். சுதந்திர போராட்டம் குறித்த  பஷீரினுடைய பெரும்பாலான கட்டுரைகள் அப்போதைய திருவிதாங்கூர் திவானாக செயல்பட்ட சி.பி.ராமசுவாமி ஐயரை விமர்சித்து எழுதப்பட்டதாகும்.

இந்த காலக்கட்டத்தில், கொச்சி சமஸ்தானத்துக்கு உட்பட்ட எர்ணாகுளத்திலுள்ள ஒரு ஹோட்டலில் அறையெடுத்து தங்கியிருந்தார் பஷீர். இச்சமயத்தில் திருவிதாங்கூரில் ஒரு பொறுப்பான அரசாங்கம் தேவை என திருவிதாங்கூர் மாநில காங்கிரஸார் போராட்டம் நடத்த, போராளிகளை திருவிதாங்கூர் போலீசார் தேட, அவர்கள் மெல்ல எர்ணாகுளத்திற்கு தடம் பெயர்ந்தனர். பஷீர் மற்றும் அவரது குழுவினர், திருவிதாங்கூர் மற்றும் கொச்சி சமஸ்தானத்து உளவாளிகளால் தொடர்ந்து கண்காணிக்கபட்டு வந்தனர். அப்போது வெளியான பஷீரினுடைய ‘ஹதபாக்யாயா எண்டே நாடு’ (My ill-fated Motherland ) என்கிற சிறு நூலுக்கும்,  ‘பட்டஹிண்டே பெக்கிநாவு’ (The Terrible Nightmare of Pattam) என்கிற நாடக நூலுக்கும் திருவிதாங்கூரில் தடை விதிக்கப்பட்டதோடு, திருவிதாங்கூருக்குள் பஷீர் நுழைந்தால்  அவரை கைது செய்வதற்கான வாரண்டும் பிறப்பிக்கப்பட்டது. தலயோலப்பரம்புவிலுள்ள பஷீரினுடைய பூர்வீக வீட்டில் சோதனையும் நடத்தப்பட்டது. பஷீரினுடைய அம்மாவும், தம்பி, தங்கைகளும் திருவிதாங்கூர் போலீஸாரால் தொல்லை கொடுக்கப்பட்டனர். பஷீரினுடைய வலது கையை ஒடித்து விட்டால் அவர் எழுதுவதை  நிறுத்தி விடுவார் என இறுதியில் திருவிதாங்கூர் போலீஸார் மிரட்டிச் சென்றனர்.

அந்நேரத்தில் எர்ணாகுளத்தில் பால் டூட்டோரியல் கல்லூரி என்கிற கல்வி நிறுவனமொன்றை நடத்தி வந்த எம்.சி.பால் என்பவரோடு பஷீருக்கு பழக்கம் ஏற்பட்ட போது, தன்னுடைய கல்வி நிறுவனத்திலேயே பஷீர் தங்குவதற்கு ஒரு அறையை ஒதுக்கி தந்தார் எம்.சி.பால். அக்கல்லூரியில் தங்கியிருந்தவாறு அங்குள்ள சிற்றுண்டி விடுதியை கண்காணிக்கும் பொறுப்பை ஏற்று செயல்பட்டு வந்தார் பஷீர். பின்னர் பால் தன்னுடைய டூட்டோரியல் கல்லூரியை கோட்டயத்திற்கு இடம் மாற்றிய போது, கூடவே பஷீரும் இடம்பெயர்ந்தார். அப்போது கோட்டயத்தில் ‘சாஹிதிசக்யம்’ என்கிற எழுத்தாளர்களின் இலக்கிய சந்திப்பு நிகழ்ந்த போது, அந்நிகழ்வில் தன்னுடைய  ‘பால்யகாலசகி’ நாவலின் திருத்தங்கள் செய்யப்பட வேண்டிய நகலை பஷீர் வாசித்தார்.

ഇമ്മിണി ബല്ല്യ കഥാകാരന്‍!

1942இல் கோட்டயத்தில் வைத்து பஷீரை கைது செய்த போலீஸார், அங்குள்ள சிறையில் அடைத்தனர். பின்னர் கொல்லத்தில் உள்ள கஸ்பா போலீஸ் ஸ்டேஷன் சிறைக்கு பஷீர் மாற்றப்பட்டார். கஸ்பா சிறையிலுள்ள போலீஸ்காரர்களும், சக கைதிகளும் சொன்ன அனுபவக் கதைகளை பிற்காலத்தில் சிறந்த படைப்புகளாக பதிவு செய்தார் பஷீர். சிறையிலிருந்தவாறு சில சிறுகதைகளயும் அவர் எழுதினார். பஷீரின் மீது தொடுக்கப்பட்ட வழக்கு பலமுறை நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, இறுதியில் இரண்டரை வருடகாலம் தண்டனை என தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்புக்குப் பிறகு, திருவனந்தபுரத்திலுள்ள மத்திய சிறைக்கு பஷீர் மாற்றப்பட்டார்.

பஷீர் சிறையிலிருந்த போது அவரது  ‘பால்யகாலசகி’ நாவலை, எம்.சி.பால் பதிப்பிக்க முயன்ற போது அவரை தடுத்து நிறுத்தி விட்டார் பஷீர். பின்னர் 1943இல் பஷீரினுடைய முதல் நாவல் ‘பிரேமலக்னம்’ வெளிவந்தது.  கேசவன் நாயர் – வங்கியில் பணிபுரிகிற இளம்பெண் மற்றும் உயர்சாதி நாயர் பையன் – வேலையில்லாத கிறிஸ்துவ பெண் சாரம்மா ஆகிய நான்கு நபர்களுக்கிடையே மலர்ந்த ஹாஸ்யமான காதல் கதை இது. தனது நுண்ணியமான திறனாய்வின் மூலம் மதங்களிலுள்ள அவநம்பிக்கைகள், திருமணத்தின் போது கொடுக்கப்படுகின்ற வரதட்சணைகள் மற்றும் இதுபோன்ற சமூகத்தில் நிகழ்கிற அவலங்களை இந்நாவலில் பதிவு செய்திருந்தார் பஷீர்.

1944இல் பஷீரினுடைய ‘பால்யகாலசகி’ நாவல் சில மாற்றங்கள் செய்யப்பட்டு, எம்.சி.பால் முன்னுரையுடன் வெளிவந்தது. மஜீத் – சுக்ரா ஆகிய இருவரை மைப்படுத்திய காதல் கதை இது. மிகச் சிறிய வடிவிலான இந்நாவல் (75 பக்கங்கள்) பஷீரினுடைய இலக்கியபெரும்படைப்பு என பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்டது. தண்டனை முழுமையடைந்து சிறையிலிருந்து பஷீர் வெளிவந்த பிறகு, தன்னுடைய நூல்களை தானே பதிப்பிக்கத் தொடங்கியதோடு, அவைகளை ஒவ்வொரு வீடு வீடாகச் சென்று விற்பனை செய்யவும் ஆரம்பித்தார். சர்க்கிள் புக் ஸ்டால், பஷீர் புக் ஸ்டால் என இரண்டு புத்தகக் கடைகளை எர்ணாகுளத்தில் ஆரம்பித்து நடத்த ஆரம்பித்தார்.

எழுத்தாளன் ஒருவன் தன் பிறந்தநாளன்று உண்ண உணவின்றி போராடுவதை மையப்படுத்தி 1945இல் பஷீர் எழுதி வெளிவந்த ‘ஜென்மதினம்’ சிறுகதை அவருக்கு பெரிய அளவில் வாசகர்களிடையே வரவேற்பைப் பெற்றுத்தந்தது . இதைத் தொடர்ந்து 1947இல் ‘சப்தங்கள்’ நாவல் வெளியான போது, வன்முறையும், கொச்சையும் இந்நாவல் முழுவதும் நிரம்பிக் கிடப்பதாக சொல்லப்பட்டு, இலக்கிய ஆர்வலர்களால் மிகுந்த அளவில் விமர்சிக்கப்பட்டது.

பிரிட்டிஷ் பிடியிலிருந்து விடுபட்டு இந்தியா சுதந்திரமடைந்த பிறகு நிகழ்ந்து வந்த அரசியலில் ஈடுபாடு இல்லாமல், அரசியலை விட்டு முற்றிலும் விலகி இருந்தார் பஷீர். தன்னுடைய நாற்பதாவது வயதில் தன்னை விட மிகக் குறைந்த வயதையுடைய பெண்ணை (பெபி பஷீர்) திருமணம் செய்து கொண்டு, தன்னை சுற்றியிருந்த நண்பர்களின் புருவங்களை விரிய வைத்தார். அதன்பின், மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் அனீஸ், ஸாஹினா ஆகியரோடு, கோழிக்கோட்டின் தென்பகுதியிலுள்ள பேபூருக்கு சென்று வாழ ஆரம்பித்தார்.

பேபூரிலிருந்த காலகட்டத்தில் இரண்டு முறை மனநலம் பாதிக்கப்பட்டு, மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பஷீர். திருச்சூரிலுள்ள மனநல மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுக் கொண்டிருந்த போதே, பஷீரினுடைய சிறந்த படைப்புகளில் ஒன்று என இன்றளவும் அடையாளம் காட்டப்படுகின்ற ‘பாத்துமாவோட ஆடு’ என்கிற நாவலை எழுதி முடித்தார் பஷீர். மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இரண்டு முறையும் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பியதோடு, தன் எழுத்துப்பணியை தொடர்ந்து செய்து வந்தார்.

എം എഫ് ഹുസൈന് പുറമേ വൈക്കം മുഹമ്മദ്‌ ...

சுதந்திர காலத்திற்கு முந்தைய சிறை வாழ்க்கையில் இருக்கின்ற ஒரு கைதிக்கு ஏற்படுகின்ற காதலை மையப்படுத்தி 1965இல்   பஷீர் எழுதிய ‘மதிலுகள்’ நாவல், பிற்காலத்தில் (1989இல்) அடூர் கோபாலகிருஷ்ணனால் திரைப்படமாக எடுக்கப்பட்டு பெருத்த வெற்றியைப் பெற்றது. சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நாவலாசிரியருக்கும், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கும் இடையே காதல் மலர்கிறது. இருவரது சிறைகளுக்கும் நடுவில் ஒரு மதில் சுவர் உள்ளது. மதில் சுவருக்கு இருபக்கமும் நின்று கொண்டு தினம் தினம்  அவ்விருவரும் காதலை வளர்க்கின்றனர். ‘நாராயணி’ என்கிற அப்பெண்ணை சந்திப்பதற்கு முன்பு, தனிமையும், சிறையிலிருந்த  சுதந்திரமின்மையும் நாவலாசிரியரை வாட்டுகிறது. பின்னொரு நாளில், நாவலாசிரியரின் தண்டனை நிறைவு பெற்று, அவரை விடுவிப்பதற்கான உத்தரவு வந்த போது, ‘யாருக்கு வேண்டும் சுதந்திரம்..?  மிகப்பெரிய சிறை வெளியில் அல்லவா உள்ளது…?!’ என தன் எதிர்ப்பைக் முன்னிறுத்துகிறார் நாவலாசிரியர்.

பஷீரினுடைய படைப்புகளிலுள்ள ஒரே எதிரிடை, முக்கியத்துவம் வாய்ந்த அவரது வாழ்க்கை வரலாற்றோடு தொடர்புடைய சம்பவங்களும், கதாபாத்திரங்களுமே, அவருடைய கற்பனை திறன் பொருளாக அமைந்திருப்பது தான். ஒரு நாவலோ, சிறுகதையோ, ஒன்று அல்லது மற்றொரு வகையின் கீழ் எப்போதும் தெளிவாக சார்ந்திருக்க வேண்டும் என்று கூற முடியாது. உண்மையோடு தொடர்புடைய விஷயங்களின் சதவீதம் அதிகமாகவே மாறுபடும். எதுவாயினும், புனைக்கதை என்கிற பெயரில் பதிப்பிக்கப்படுகிற ஒரு புத்தகம், புனைக்கதையாகவே வாசகர்களால் வாசிக்க பட வேண்டுமே தவிர, ஒருவருடைய வாழ்க்கை குறிப்புக் கதைகளாக வாசிக்க படக்கூடாது.

இயற்கையோடு இணைகிற வரையில், பன்நெடுங்காலங்களாக பல இன்னல்களுகிடையில் எழுத்துலகில் தொடர்ந்து இயங்கி வந்த பஷீர், ஜூலை 5, 1994இல் அவரது 86வது வயதில் காலமானார். பேபூர் சுல்தான் (Sultan of Beypore) என கோழிக்கோடு பகுதி மக்களால் செல்லமாக அழைக்கப்பட்ட பஷீரினுடைய நூல்கள் ஆங்கிலத்திலும், பதினெட்டு இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *