நூல்: பாத்துமாவின் ஆடு
ஆசிரியர்: வைக்கம் முகமது பஷீர், தமிழில் குளச்சல்.யூசுப்
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோயில்.
கொரோனாவின் இரண்டாம் அலை அடைப்பில் அறை கைதியாக இருந்த போது வைக்கம் முகமது பஷீர் எழுதிய பாத்துமாவின் ஆடு என்னும் நாவலை மீண்டும் வாசித்தேன். முன்பு வாசித்தைதை விட அதே பிரதி கூடுதல் வெளிச்சம் தந்தது. அதே சூரியன் தான் நாமிருக்கும் சூழலில், மன நிலையில் பார்க்கும் கோணத்தில் அதிக வெளிச்சத்தையும் ஆற்றலையும் உணர முடிகிறது. இதே போல ஒரு புத்தகத்தை வாசகன் மீண்டும் வாசிக்கும் போது அவனது , வாழ்வியல் அனுபவம் , மனவிரிவு , வாசிக்கும் காலச் சூழல் இவற்றுக்கேற்ப அந்த புத்தகமும் கூடுதல் வெளிச்சத்தை, தெளிவைத் தருகிறது.. புத்தகம் காலத்தின் விதைநெல் என்று பாரதிதாசன் கூறுவதுபோல ஒரு புத்தகம் எழுதப் பட்ட காலத்தை தாண்டி அடுத்தடுத்த தலைமுறைக்கு சிந்தனையைக் கடத்துகிறது.
நான் முதலில் எனது வாலிபப் பருவத்தில் முகமது பஷீர் எழுதிய பாத்துமாவின் ஆடு நாவலை வாசித்தபோது வைக்கம் முகமது ஓர் ஆட்டை முன்வைத்து நாற்பதுகளில் கேரளத்து இஸ்லாமியக் கூட்டுக் குடும்பத்தில் நிலவும் சிக்கல்களை, சிடுக்குகளை மெல்லிய எள்ளலுடன் சுவையாய் சொல்லுகிறார் என்றே உணர்ந்தேன்.
இந்நாவலை இப்போது மீண்டும் வாசிக்கும் போது . இந்நாவல் முகமது பஷீர் தனது குடும்பத்து மனிதர்களை வைத்து சொல்லப்படும் தன் வரலாற்று நாவல் மட்டும் அல்ல அக்காலகட்டத்து கேரளா இஸ்லாமிய சமூக பொருளியல் வாழ்வியலையும் சொல்கிறது. பஷீர் பல இடங்களில் தன்னையே சுய பகடிக்கு உட்படுத்துகிறார். பாத்துமாவின் ஆட்டுப் பால் நேரடியாகவும், மறைமுகமாகவும் கறந்து சுரண்டப்படுகிறது. அது கூட்டுக்குடும்பத்தில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை மெல்லிய நகைச்சுவையோடு சொல்லப் படுகிறது. இந்நாவலில் சொல்லப்படும் ஆடு மட்டுமல்ல பஷீரும் எப்படி குடும்ப உறுப்பினர்களால் சுரண்டப்படுகிறார் என்பது உணர்த்தப்படுகிறோம். இந்நாவல் நாற்பது வயதைக் கடந்த பிரமச்சாரி பஷீரைப் பற்றி சொல்கிறது. இந்நாவல் எழுதி ஐந்தாண்டுகளுக்குப் பின் அதாவது 1959இல் பஷீரின் ஐம்பத்தோராவது வயதில் வெளியிடப்பட்டது என்று முன்னுரையில் அறிய வருகிறோம்.
திருமணமாகாத அஞ்ஞானியாக பஷீர் இருந்த போது [ “திருமணமாகதவர்கள் ஞானிகள் அல்ல “] எழுதிய தன் குடும்ப நாவல் இது. புனைவை விட எதார்த்தம் அதிகம் சுவையானது’ எதிர்பாரா திருப்பங்கள் கொண்டது என்ற கூற்றை மெய்ப்பிபதுபோல் இந்த நாவல் வெளிவந்த பல ஆண்டுகளுக்குப்பின் பஷீர் திருமணம் செய்து கொள்கிறார். மனைவியின் பெயர் பாத்துமா. இந்தத் தகவல் இந்நாவலுக்கு ஒரு புது வெளிச்சம் பாய்ச்சுகிறது. என்னவெனில் [மனைவி] பாத்துமாவின் ஆடாக முகமது பஷீரே சுரண்டப்படுவதாக அர்த்தப்படுகிறது. மகமது பஷீருக்கு உள்ள அனைத்துக் கல்யாண குணங்களும், வெகுளித்தனமும் இந்த ஆட்டுக்கும் அமைந்துள்ளது.
இந்நாவல் முன்னுரையில் சுதந்திரப் போராட்டவீரரான பஷீரை அந்நாளைய கேரளா மாநில காங்கிரஸ் எந்த அளவுக்கு புண்படுத்தியது என்பதை அறிய முடிகிறது. ஈ.எம்.எஸ் அரசு, முகமது பஷீர் எழுதிய “என் தாத்தாவுக்கு ஒரு யானை இருந்தது “ என்ற நாவலை பள்ளி மாணவருக்கு துணைப்பாட [ நான்- டீடைல்டு] நூலாக வைத்து இலட்சம் பிரதிகள் வாங்க ஆணையிட்டதை அன்றைய கேரளா மாநில காங்கிரஸ் முகமது பஷீர் கம்யுனிஸ்ட் கட்சியில் சேர்ந்து விட்டார் என்று விமர்சித்ததை பஷீரின் முன்னுரை குறிப்பிடுகிறது. இது பெரும் நகைப்பை உருவாக்குகிறது.. அதே நேரம் ஈ.எம்.எஸ். அரசின் கலை இலக்கிய பண்பாட்டுத் தளத்தில் கொண்ட அக்கறையான செயல்பாட்டையும் சுட்டுகிறது. இப்படி ஒரு படைப்பை மீள வாசிக்கும் போது ஏற்படும் உற்சாகம் அலாதியானது. புத்தகங்கள் எந்நாளுக்கும் ஆனது. வாசிப்போம் .