கதைச்சுருக்கம்: ராமச்சந்திர வைத்தியநாத்
அறமென்னும் பெரும்பொருளை அழியாமற் காக்கும் பெருங்கொண்ட வேலையை தன் படைப்புகள் செய்யும் என்கிறார் வைரமுத்து
எல்லா மழையும் நின்றே தீரும்
வைரமுத்து
சந்தோஷத்திற்கு எத்தனையோ பெயர்களுண்டு; ஒரு பெயர் மழை.
நான் எதிர்பார்க்கவே இல்லை – என் சந்தோஷத்தைக் கெடுக்க அவள் வருவாளென்று; மழையை ரசித்துக் கொண்டிருந்த என்னருகே இரண்டடி தூரத்தில் இடியாய் வந்து விழுவாள் என்று.
பதினேழு ஆண்டுகளுக்குப் பின் இந்த அதிகாலையில் ஆளற்ற நெடுந்தெருவில் அவளும் நானும் மட்டும் அருகருகே. என் பழைய காதலின் தூரன் இதோ இரண்டடி; என் அவமானத்தின் தூரமும் அதுவேதான்.
ஊர் ஊராய் அலைந்து கோவைக்கு நான் குடிவந்து ஆறுமாதமிருக்கும். இன்று வாக்கிங் புறப்படும்போது மேகமில்லை; சற்று நேரத்தில் மழை கல்லெறிந்தது. தெரு முனையில் தகடு வேய்ந்த தாழ்வாரம் தென்பட்டது. அதில் ஒதுங்கினேன். கைக்குட்டையால் தலை துடைத்துக் கொண்டேன். வெறிச்சோடிப் போயிற்று வீதி. ஆங்காங்கு கண்ணுக்குத் தென்பட்டவர்களும் மறைந்து போனார்கள்.
இத்தனை காலம் ஐம்புலனுக்கும் இன்பம் செய்து வந்த மழை ஆறாம் புலனுக்குத் துன்பத்தை அழைத்துவரும் என்று தெரியாது – நான் ஒதுங்கிய தாழ்வாரத்துக்குள் அவள் பொசுக்கென்று புகும் வரையில்.
வாழ்நாளில் அதிகம் உச்சரித்த வார்த்தை எது என்று கேட்டால் சிலபேர் யோசித்துச் சொல்வார்கள். எனக்கு அவசியமில்லை; நான் அதிகம் உச்சரித்த வார்த்தை ‘அமிர்தமீனாள்’. அவள்தான் அந்த அமிர்தமீனாள்தாள் தொடமுடிந்த தூரத்திலும் தொடக்கூடாத உறவிலும் இப்போது மழையை வேடிக்கை பார்த்து நிற்கிறவள். இவள் எலும்புக்கூட்டைக் காட்டினாலும் அடையாளம் சொல்வேனே, இவளையா தெரியாது?
என் இருபத்தேழாம் வயதில் நான் புதுக்கோட்டையில் ஒரு கல்லூரி நூலகர். அப்போது இவள் அங்கே ஆங்கில இலக்கிய மாணவி.
அவள் அப்படி ஒன்றும் சிற்பமுமில்லை; பார்க்க முடியாத அற்பமும் இல்லை. என் கவனம் கவ்வியது. மனம் அவள் மீது தத்தித் தாவியது.
நான் புத்தகம் தருவேன்; அவள் புன்னகை தருவாள்.
“நான் கட்டுரை தயாரிக்க அவசரமாக ஒரு புத்தகம் வேணும் குடுப்பீங்களா சார்?”
“என்ன புத்தகம்?”
“தி வேஸ்ட் லேண்ட், டி.எஸ்.எலியட்.”
ஒரு நாள் விடுப்பில் திருச்சிக்கு விரைந்தேன். செயின்ட் ஜோசப், ஐமால் முகமது இரண்டு கல்லூரிகளிலும் தேடிக் கிடைக்காமல் நேஷனல் கல்லூரி நூலகத்தில் தேடிக் கண்டெடுத்தேன். எந்தப் புத்தகமும் அத்தனை ஆனந்தம் தந்ததில்லை எனக்கு. அமிர்தமீனாளைத் தொட்ட சுகம் இருந்தது டி.எஸ்.எலியட்டைத் தொட்டபோது. அவள் வீட்டுக்கே சைக்கிள் மிதித்தேன்.
பாவாடை சட்டையணிந்த கோலத்தில் வெளியே ஓடி வந்தவள் புத்தகத்தைக் கொடுத்ததும் என் உள்ளங்கையை அழுத்திக் குலுக்கி ‘தேங்க்ஸ்’ சொன்னாள். என் விரல் இடுக்கில் அடைபட்ட விரல்களை அவ்வளவு சீக்கிரம் விடுதலை செய்ய விரும்பாதவள்போல் புத்தகத்தில் கண்களை மொய்க்கவிட்டாள்.
அந்த ஸ்பரிசம் இருபத்தேழு வயதில் என் உடல் அடைந்த உச்சபட்ச சந்தோஷம்.
அன்பு என்பது எந்த உயிரோடும் நேரலாம்; இச்சை என்பது எந்த உடலோடும் சாத்தியமே என்ற பௌதிக உண்மைகள் அறிவிற்சேராத வயது அது. ஆனால் ஒருத்தியோடு மட்டும்தான் காதல் தோன்றம் என்ற மூடநம்பிக்கை கடவுளைப் போல அழியாதது. காலத்தின் கனத்த சுத்தியல் தட்டும்போதுதான் இரண்டு பிரமைகளும் உடைகின்றன. இப்போது புரியும் இந்த நியாயம் அப்போது புரியவில்லை; புரிதலிலும் நன்மை இல்லை.
டி.எஸ்.எலியட்டை அவள் திருப்பிக்கொடுக்க வந்தபோதுதான் அது நேர்ந்தது.
‘மிக்க நன்றி’ என்று தனித்தமிழில் சொல்லிவிட்டு அவள் புறப்பட்ட போது என் உடலை மீறி மனமும் மனதை மீறி உடலும் செயல்பட்டன.
சட்டென்று திரும்பி அவள் உள்ளங்கைபற்றி அழுத்தினேன்; இடுக்குகளில் விரல் கோர்த்தேன்.
மிரண்டு திரும்பி விலகினாள்.
என் பிடி இன்னும் இறுகியது.
“விடுங்கள்”.
“ம் ஹூம். . .”
“எடு. . .”
“மாட்டேன்”.
“எடுடா. . .!”
அழுத்திய என் கையை உதறி எறிந்துவிட்டுத் தும்பறுத்த இளங்கன்றாய்த் திசை தெரியாமல் ஓடி மறைந்தாள் அமிர்தமீனாள்.
அன்று வியாழக்கிழமை. அதுதான் என் வாழ்வின் கறுப்பு நாள். முதலும் கடைசியுமாய் என் வாழ்வில் அம்பலத்தில் அவமானப்பட்டதும் அன்றுதான். காலையில் செம்பருத்திச் செடியோரம் சைக்கிள் துடைத்துக் கொண்டிருந்தேன்.
“ஏண்டா நாயே! எம்புட்டுக் கொழுப்பு இருந்தா எங்கவீட்டுப் பொண்ணு மேல கை வச்சிருப்ப . . .?”
சத்தம் வந்த திசையில் திரும்புவதற்குள், உட்கார்ந்து சைக்கிள் துடைத்துக் கொண்டிருந்த என் முதுகில் ஓங்கி விழுந்தது ஒரு மிதி. முதுகுத் தண்டு அந்த உதையை மூளைக்கு அறிவிப்பதற்குள் கழுத்தில் விழுந்தது ஓர் அடி. வண்டியோடு விழுந்ததில் சைக்கிளின் பெடல்குத்திக் கிழிந்தது என் தாடை. நிமிர்ந்து பார்த்தேன். முன் வழுக்கை விழுந்த ஒரு முரட்டு இளைஞன் பனியனோடு என்னைத் தூக்கிச் செவியில் அறைந்தான்.
நாலைந்து பேரில் ஒருவன் என் பனியனை அவிழ்க்கிறான். ஒருவன் லுங்கியை. என்னை என் சைக்கிள் கேரியரில் கட்டி உள்ளாடையோடு ஊர்வலம் விடுகிறார்கள் தெருவில்.
இரண்டு முடிவெடுத்தேன். இந்த ஊரில் இருக்கக்கூடாது. என் காதலைப் புரிந்து கொள்ளத் தெரியாத அந்த ‘முதிராச் சிறுமி’யின் முகத்தில் ஆயுளுக்கும் விழிக்கக்கூடாது.
அவள் மழையையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். ஒரு சகமனிதன் என்ற மரியாதைக்குக்கூட ‘ஹலோ’ சொல்லவில்லை.
மழை நின்று நிதானித்து இப்போது வேறு கதியில் கொட்டுகிறது.
சற்று நேரத்தில் குடையோடு ஓர் ஆள் வந்தார். அவரை எதிர்பார்த்த காத்திருப்பு அவள் உடல்மொழியில் தெரிந்தது. அவள் சட்டென்று குடைக்குள் புகுந்தாள்.
“வாக்கிங் போகும்போது செல்ஃபோன் கொண்டுபோன்னா கேக்குறியா மீனா?” வந்தவர் சொன்ன சொல் மழையில் கரைந்து கரைந்து கேட்டது.
அவர்கள் பார்வையில் மறையும்வரை பார்த்துக் கொண்டே நின்றேன். அப்பா அவள் அறியவில்லை என்னை. அது போதும் ஆழமாய் இழுத்து நீளமாய் ஒரு மூச்சு விட்டேன்.
எது நிகழ்ந்துவிடுமோ என்று அஞ்சினேனோ அது நிகழவில்லை. ஒரு வேளை என்னை அவள் அடையாளம் கண்டிருந்தால் யார் தொடங்குவது? எதில் முடிப்பது? அந்த அவமானத்தை எந்த அமிலத்தில் கரைப்பது? நல்ல வேளை தப்பித்தேன்.
“ராஜேந்திரன். . . “
யார். . . என்னைப் பெயர் சொல்லி அழைப்பது யார். . .?
குடை கொண்டு வந்தவர்; அதே அரைக்கால் சட்டைக்காரர்.
அவன்தான் அந்த அவர். அன்று என்னைத் தாக்கிய முன்வழுக்கைக்காரன் இன்று முழுவழுக்கையாய்.
சொல்லற்று நின்றேன்; அவனே பேசினான்.
“மீனா உங்கள வீட்டுக்கு வந்து காபி சாப்பிட்டுப் போகச் சொல்லுச்சு. அவ சொல்லித்தான் அழைக்கிறேன். நான் மீனாவோட புருஷன்தான்”.
என் சம்மதமோ மறுப்போ அவனுக்குத் தேவைப்படவில்லை. அவன் குடைக்குள் என்னை ஆதரவாய் அழைத்துக் கொண்டான். நான் உணர்ச்சியற்று அவன் குடைக்குள் நடந்தேன். மரத்தடியில் நனைந்து கொண்டே நின்ற அவள் ஓடிவந்து எங்கள் குடைக்குள் நுழையப் பார்த்தாள். குடையை அவளுக்கே கொடுத்துவிட்டு நனைந்து கொண்டே நடந்தோம் நாங்கள் இருவரும்.
சாயங்காலம் வரைக்கும் விடாது என்று நினைத்த மழை மெல்ல உள்வாங்கியது.
@பின் குறிப்பு:
தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது, அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு ஒரு நுழைவாயிலாக அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.