இத்தொகுப்பில் நாற்பது சிறுகதைகள் உள்ளன. பல்வேறு பரிமாணங்களில் பயணிக்கிறது கதைகள். கிராமத்து பணக்கஷ்டமான ஆனால் சந்தோஷமான வாழ்வு, புதிய வாழ்வைத்தேடிப்போகும் இன்றைய கிராமம், நகர வாழ்வு, இயந்திரத்தனமான, எதற்கும் இடம் கொடுக்காத வாழ்வு சிக்கல்கள், வரலாற்றை புதிதாகப் பார்த்தால் இப்படி பலவித அனுபவங்களை இதில் பதிவு செய்துள்ளார். மொழி அவருக்கு நெருங்கி இருப்பதால் அவர் சொன்னபடியெல்லாம் கேட்கிறது. வார்த்தைகள் வரிசையில் நின்று கவிஞரின் ஆசியை பெற்று வருகிறது.
அவருடைய சிறுகதையாற்றுப்படையில் (முன்னுரை )
“நல்ல படைப்பாளிகள் அவர்களின் ஒரு சிறந்த கலைக்கூறு கருதியே கொண்டாடப்படுகிறார்கள்,
கதைகளின் இயல்பான வெளிப்பாட்டுக்காக புஷ்கின்
ஒரு கதையின் தொடக்கம் முடிவு இரண்டுக்குமான செய்திறனுக்காக செக்கோவ்
வார்த்தைகளின் யதார்த்தத்திற்காக மார்க்சிம் கார்க்கி
கதையின் கடைசி வாக்கியத்தில் ஒட்டுமொத்தக் கதைகளையும் ஊற்றிவைக்கும் உத்திக்காக ஓ ஹென்றி
கதைகளில் ஏற்படுத்திய கலாச்சார அதிர்ச்சிக்காக மாப்பஸான் ” என்று சிறுகதை ஜாம்பவான்களை வரிசை படுத்துகிறார். இந்த வரிசையில் நமது தமிழ் எழுத்தாளர்கள் இல்லையென்பதில் எனக்கு வருத்தமே.
இறந்து போன தந்தைக்கு இறுதிச்சடங்கு செய்வதற்காக அமெரிக்காவிலிருந்து வந்திருந்த சிவராமன், தந்தையை எரித்துவிட்டு நீண்ட யோசனைக்குப்பின் மீசையை மட்டும் வழித்துக்கொள்ள சம்மதிக்கிறான், எல்லாம் முடிந்து வீட்டிற்கு வருகின்றனர், சிவராமன் மனைவி கௌ என்ற கௌசல்யா கணவனிடம், “தனியா இருந்தா அம்மாவுக்கு வீடு தேவை இல்லை, அம்மா அங்கே இல்லேன்னா வீடே தேவையில்லை “என்று கூறுகிறாள். அவள் அமெரிக்க சென்றுவிடுகிறாள். மனைவியின் வாக்கை மந்திரமாகக்கருதிய ஷிவ், தன் தாயிடம் சென்று தாயின் தனிமையை நினைத்து கவலைப்படுகிறான். வீட்டை விலைபேசுகிறான். கருப்பும் வெள்ளையுமாக வாங்கிக்கொள்கிறான். தன் தாயை வசதியான ஒரு முதியோர் இல்லத்தில் விடுகிறான். வீட்டை விற்பதற்கு எதிர்ப்புத்தெரிவித்த தாயிடம் வரலாற்றைக்கூறி சமாதானப்படுத்துகிறான். நிம்மதியாக நியூயார்க் சென்று அடைகிறான். மனைவிக்கு சென்னையிலிருந்து வாங்கிக் கொண்டுபோன சுவீட்டை எடுத்து தருகிறான், அப்போதுதான் கௌசல்யா தன் மாமியார் இறந்து போனதைப்பற்றிக் கூறுகிறாள். எப்போது என்று கேட்க உங்களின் பயணத்தின்போதே செய்தி வந்தது. வருத்தப்பட்ட சிவராமனுக்கு ஆறுதல் கூறுகிறாள். விடுதி காப்பாளருக்கு ஈமச்சடங்கை ஸ்கைப் மூலம் காட்டும்படி கூறுகிறாள். 13400 கிலோமீட்டருக்கு அப்பாலிருந்தே அம்மா எரிவதை பார்த்துக்கொண்டிருந்தான் சிவராமன்.
இக்கதையைப் பாடியது முடிக்கவும் இந்த உலக வாழ்க்கையின் பொருளற்ற, பொருள் தேடும் போக்கைப்பற்றி எண்ணும்போது வேதனைதான் மிஞ்சுகிறது.
ஒரு ஆச்சாரம் மிகுந்த பிராமணர் தன்னுடைய தென்னந்தோப்பை ஒரு வக்கீலுக்கு விற்பனை செய்கிறார். விற்பனை முடிந்ததும். தோப்பின் நடுவில் இருந்த ஒரு தாழ்வாரத்துடன் கூடிய ஒர் அறை கட்டிடத்தைக்காட்டி, இந்த சந்நிதிக்கு மட்டும் செவ்வாய் வெள்ளி தீபம் போட்டு சுத்தமா வைச்சுங்கோங்க என்று எழுதப்படாத நிபந்தனையை விதிக்கிறார். ஏனெனில் அந்த அறையில் ஒரே ஒரு நாள் சங்கராச்சாரியார் தங்கிச்சென்றுள்ளார், அதனால் அதை புனிதமான இடமாகக் கருதுகிறார். அவர் சொன்னபடியே வக்கீல், ஒரு அய்யரை நியமிக்கிறார். ஒரு நாள் அலைபேசுகிறார் பிராமணர், வக்கீல் நிபந்தனையை மீறிவிட்டார் என குற்றம் சாட்டுகிறார். தோப்பு விற்றவர் ஒரு நாள் அந்த இடத்திற்குச்சென்றுள்ளார், அப்போது தோப்பு காவலாளி அந்த அறையில் விளக்கு போட்டு இருந்துள்ளார் இதுதான் அவருடைய குற்றச்சாட்டு. அதற்கு வக்கீல் தான் நியமித்த அய்யருக்கு உடல் நலமில்லாமல் போனதால் தற்காலிக மற்றும் ஏற்பாடாக நடந்துள்ளது என்று விளக்கினார். ஆனால் அவர் ஒத்துக்கொள்ளாமல் சாபம் போடுகிறார். சந்நிதிக்கு அபகீர்த்தி நடந்து விட்டது என்று மிகவும் கோபம் கொள்கிறார். சிலநாள் கழித்து பெரிய காற்று மழை பெய்கிறது. வீசிய காற்றில் காவலாளி தங்கியிருந்த குடிசையெல்லாம் பறந்துபோகிறது. அந்த நேரத்தில் காவலாளி வக்கீலுக்கு அலைபேசுகிறார். அய்யா ஒண்டுவதற்குக் கூட இடமில்லை, பயமாக உள்ளது எனக்கூறுகிறார். வக்கீல் அந்த அறையின் கதவைத்திறந்து உள்ளே போங்கள் என்று அனுமதி தருகிறார். என் முடிவை மகாப் பெரியவா ஏற்றுக்கொள்வர் என்று நிம்மதியுடன் உறங்கச்செல்கிறார் வக்கீல்.
எரிதழல் கொண்டு வா என்றகதையில், வீட்டிற்கு ஒரே பெண். சகோதரர்களின் செல்லப்பெண். தாயின் முழு அன்பிற்குச்சொந்தமானவள் தந்தையின் பிரியமான மகள். செய்யக்கூடாதத் தப்பை செய்துவிடுகிறாள். ஆம், சாதி மாறி காதலித்து தொலைத்துவிட்டாள். காதலனுடன் கொடைக்கானல் மலையில் போய் தஞ்சமடைகிறாள். நாடு முழுக்க சல்லடைபோடும் உறவினர்கள் ஒருவர் கண்டுபிடித்து போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வருகிறார். காணாமல் போன கம்ப்ளெயிண்ட் வாபஸ் பெறப்படுகிறது. தாய் அவளை உயிரோடு விட்டுவிடுங்கள், எங்கே சென்றாலும் மகள் உயிரோடிருந்தாப்போதும் என அழுகிறாள். இரண்டு நாள் கழித்து தந்தையும் மகன்களும் சென்று அவளைக்காணவில்லை என்று மீண்டும் கம்ப்ளெயிண்ட் கொடுக்கிறார்கள். செங்கல் கலைவாசலில் உள்ளே வைத்து எரித்து விட்டதாக ஊர் பேசிக்கொண்டது.
வார்த்தை ஜாலங்களில் கவிஞர் அமர்களப்படுத்துகிறார். கவித்துவமான நடை. அருமையாக உள்ளது. வாசியுங்கள் நண்பர்களே.
நூல் =வைரமுத்து சிறுகதைகள்
ஆசிரியர் =கவிப்பேரரசு வைரமுத்து
பதிப்பு =சூர்யா லிட்ரேச்சர்
விலை =ரூ. 300/
அன்புடன் =பெ. அந்தோணிராஜ்
தேனி.