“கள்ளிக்காட்டு இதிகாசம்” நாவல் – நூல் அறிமுகம்
ஒரு மனிதன் வாழ்ந்தான் என்பதற்கும், அவனுக்கான உலகம் வாழ்ந்தது என்பதற்கும் இடையில் எத்தனை வேறுபாடுகள்..!!
அந்த உலகம் சிதைந்து விழும்போது, உயிரோடு இருக்கும் மனிதனும் உள்ளுக்குள் எத்தனை முறை இறந்து போகிறான்…
*அவன் உயிரோடு இருந்தான்; அவன் உலகம் இறந்து விட்டது* என்ற ஒற்றை வரியிலேயே ஒரு மனிதனின் ஒட்டுமொத்த வாழ்வையும், உணர்வுகளையும் உயிர்ப்பிக்கும் வல்லமை கவிப்பேரரசு வைரமுத்துவின் எழுத்தாணியில் என்றே சொல்ல வேண்டும்..
மனிதர்களின் வாழ்க்கையை எழுதுவது வேறு, அவர்கள் வாழ்ந்த உலகத்தையே வாசிப்போரின் கண்முன்னே மீண்டும் உயிர்ப்பிப்பது வேறு..
அந்த இரண்டாவது வித்தையை நிகழ்த்தியிருக்கும் படைப்புதான் கவிப்பேரரசு வைரமுத்துவின் *கள்ளிக்காட்டு இதிகாசம்*..
*மனுசன் செத்தாலும் சாகலாம் மகனே, மனசு செத்துரக்கூடாது* என்ற பேயத்தேவரின் தந்தையின் வாய்மொழி, ஒரு தந்தை மகனுக்குச் சொல்லும் அறிவுரையாக மட்டுமேயல்லாது, உடல் மரணத்தைவிட மனதின் மரணம் கொடியது என்பதை உணர்த்தும் வாழ்க்கைத் தத்துவமாக உயர்ந்து நிற்கிறது..
ஆனால், வாழ்நாள் முழுவதும் எதற்கும் எளிதில் உடைந்து போகாத பேயத்தேவரே, தன் அன்பு மனைவி அழகம்மாளை இழந்த அந்தக் கணத்தில், *பாறையில் இட்ட முட்டையாய்* நொறுங்கிப் போகிறார்..
அழகம்மாளை இழந்த பேயத்தேவர் அவளைக் காணச் செல்லும் அந்தக் காட்சி, வாசிக்கும் நம் இதயத்தையே உலுக்குகிறது..
பேயத்தேவர், நாயக்கரோடு தன் இறந்த மனைவி அழகம்மாளை காண வரும்போது, கண்ணுக்கு வழக்கமாகத் தெரியும் காடும் தெரியல, காட்டாமணக்கு வேலியும் தெரியல, காற்றின் அசைவில் பேயாட்டம் ஆடும் கருவேல மரங்களும் தெரியல, மாடு மேய்க்கும் சிறுவர்களும், ஆடோட்டும் சிறுமிகளும் தெரியல..
கண்ணீரால் மூடப்பட்ட கண்களுக்கு, கள்ளிக்காட்டின் ஜீவராசிகள் அனைத்தும் “அழகம்மா… அழகம்மா…” என்று கதறுவதாக மட்டுமே கேட்கின்றன.. என்னவொரு எழுத்தழகு..!!
“மழை நின்ற பிறகும் இலை சொட்டும் நீராய் கண்ணீரும் நினைவுகளும் சொட்டிக்கொண்டே இருந்தன” என்ற உணர்வில், துயரத்தின் கால அளவை அளந்து பார்க்கிறார் எழுத்தாளர்…
“நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும்” என்ற பழமொழியை கேட்டிருப்போம். ஆனால், இங்கே *நாளொரு இன்னலும் பொழுதொரு துன்பமுமாக வாழ்க்கை நகர்கிறது*, ஒரு துயரத்திலிருந்து மீள்வதற்குள் மற்றொரு துயரம் கதவைத் தட்டுகிறது. குறிப்பாக, *பிஞ்சு மனசுல ஒரு கவலை ஆணி அடிச்சு கூடாரம் போட்டு உட்கார்ந்திருந்துச்சு*
பழுப்பேறிய பத்து ரூபாய் நோட்டுகளை வர்ணிக்கும் இடத்திலும் வைரமுத்துவின் எழுத்து நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது, *சில நோட்டுகளின் மதிப்பில் ஜீவராசிகளும் வசிப்பதைப்போலத் தோன்றும்* அந்த வர்ணனை, பணத்தின் மதிப்பு அதன் எண்ணிக்கையில் மட்டுமல்ல, அதைச் சுருட்டிப் பாதுகாத்து, ஒவ்வொரு தேவைக்கும் கணக்கிட்டுச் செலவழித்து வாழும் மனிதர்களின் உழைப்பிலும் தியாகத்திலும் இருக்கிறது..
அதேபோல், பிணத்தின் நெற்றியில் விபூதி, குங்குமம், நெற்றிக்காசு வைக்கும் வழக்கத்தைச் சுட்டிக்காட்டிவிட்டு, அதற்கு நேர்மாறாகக் குளித்த பிணத்தைவிடக் குளிக்காத பிணங்களின் கெட்ட வாடையை உணர்த்தும் எழுத்து நேரடிப் போதனையாக அல்லாமல் இலக்கிய முரணின் வழியாக வெளிப்படுத்துகிறார் எழுத்தாளர்..
வைரமுத்துவின் எழுத்தாணி கண்ணீரை மட்டுமல்ல, அதன் பின்னால் காயப்பட்டுக் கிடக்கும் சமூகத்தின் வலியையும், ஒரு மனிதனின் மரணத்தைத் தாண்டி, அவன் வாழ்ந்த உலகத்தின் மரணத்தையும் உணர்த்தும் அவரது பாணி மண்ணையும் மனிதத்தையும் பேசும் மகத்தான வாழ்வியல் ஆவணம்!
பேயத்தேவரும் மொக்கராசுவும் நாவலை முடித்த பின்னரும் நம் மனதை விட்டு அகலாத பாத்திரங்களாகவே நிலைத்திருப்பர்..
அழகம்மாளின் நினைவுப் பாதையை இரண்டரை மைலிலிருந்து அரை மைலாகக் கடக்கும் வரை பேயத்தேவரின் மனநிலையை, எழுத்தாளர் தம் வார்த்தை ஜாலத்தால் அழகாகப் படைத்திருப்பார்..
நாவலின் கதாநாயகர் பெயத்தேவர், நாயக்கருடனான உரையாடலில் விரியும் கடந்தகால நிகழ்வுகள் நெஞ்சை நெகிழச் செய்கின்றன.. கணவன் மனைவிக்கிடையே காலத்தால் அழிக்க முடியாத ஆழமான அன்பையும், பிரிவிலும் உயிர்வாழும் நினைவுகளையும் இந்நாவல் நம் மனதில் ஆழமாகப் பதிக்கிறது..
தான் வாழ்ந்த வீட்டின் மண் சுவர்களைத் தொட்டுத் தடவி அழும் பேயத்தேவரின் வலி, நம் நெஞ்சையும் கசியச் செய்கிறது..
பிறந்த மண்ணையும் வாழ்ந்த வாழ்வையும் இழந்த துயரத்தில், *மண்ணை விடமாட்டேன்* எனப் போராடிய மனிதனை இறுதியில் அந்த மண்ணே தழுவிக்கொள்கிறது..
மண்ணைப் பிரிய மறுத்த மனிதனையும், மனிதனைப் பிரிய மறுத்த மண்ணையும் உணர்ச்சியின் உச்சத்தில் படைத்திருக்கிறார் எழுத்தாளர்..
வளர்ச்சி என்பது புதிய அணைகளிலும், சாலைகளிலும், நகரங்களிலும் மட்டுமின்றி மனிதர்களின் வாழ்வுரிமை பாதுகாக்கப்படுவதிலும் இருக்கிறது..
வைகை அணைத் திட்டத்தால் கள்ளிக்காட்டு மக்கள் இழந்தது வீடுகளையும், நிலங்களையும் மட்டுமல்ல, தங்கள் அடையாளத்தையும் பண்பாட்டு உறவுகளையும் வாழ்வின் நினைவுகளையும் கூட..!
ஒரு திட்டத்தின் வெற்றி அதன் பொருளாதாரப் பலன்களில் மட்டுமல்ல, பாதிக்கப்படும் மக்களின் வாழ்வாதாரத்தையும் உரிமைகளையும் எவ்வாறு பாதுகாக்கிறது என்பதில்தான் அடங்கியிருக்கிறது..
மனிதர்களை இழக்கச் செய்யும் வளர்ச்சி, அதன் மறுபக்கத்தில் மறைந்திருக்கும் வலியையும் பேச வேண்டிய கடமையைக் கொண்டுள்ளது என்பதை இந்நாவல் நமக்கு உணர்த்துகிறது..
கவிப்பேரரசு வைரமுத்துவின் எழுத்துலகை எனக்கு அறிமுகப்படுத்திய முதல் வாசிப்பு அனுபவம், அவரது எழுத்தாணியின் ஆழத்தையும் ஆளுமையையும் உணர்த்தி அவரது எழுத்து நடையின்மீது எனக்கு ஈர்ப்பை ஏற்படுத்தும் வகையில் இந்நூலை அன்போடு வழங்கிய என் இனிய தோழி இந்துமதி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | “கள்ளிக்காட்டு இதிகாசம்” நாவல் |
| தொகுப்பாசிரியர்: | வைரமுத்து |
| வெளியீடு: | சூர்யா லிட்ரேச்சர் |
| விலை: | ₹.400 |
| அறிமுகம் எழுதியவர்: | ✍🏻 சுகிர்தா.அ |
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

