“சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன்” – நூல் அறிமுகம்
இன்று இந்தியாவில் உள்ள, *வாழ்க்கையைப் பற்றிய அனுமானமோ, வாழ்க்கையில் ஒரு பிடிமானமோ இல்லாமல், புறப்பட்ட இடமும் தெரியாமல் போகும் இடமும் புரியாமல் போய்க் கொண்டிருக்கும்* இளைஞர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் விதத்தில் அமைந்திருக்கும் நூல் *_சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன்_ .*
இந்நூலானது, வெறுமையாக இருக்கும் இளைஞர்களின் நெஞ்சில் வாழ்க்கையைப் பற்றிய சில தீர்மானங்களை எழுதிக் கொடுத்து எதிர்காலத்தை நோக்கி நம்பிக்கையோடு நடைபோடச் செய்வதாகவும், அத்தகைய இளைஞர்களோடு அவர்களது மொழியில் உரையாடுவதாகவும் அமைந்துள்ளது.
*“இல்லாத ஓர் ஊருக்கு யாரும் செல்லாத ஒரு வழியில் நீ தூக்கதில் நடப்பவனாய்த் தொடர்ந்து போய்க்கொண்டிருக்கிறாய். மயில் தோகைகளைப் பரப்பி மல்லிகைப்பூத் தெளித்த சாலை உனது கனவாக இருக்கிறது. ஆனால் காலில் ஆணியடித்துக் கொண்டு முட்களின் மீது நடப்பது தான் உனது எதார்த்தமாக இருக்கிறது”.* என எளிய நடையில் இங்கு தடம் மாறி நடக்கும் இளைஞர்களுக்கு எதார்த்தத்தை எடுத்துரைக்கிறார்.
மேலும், தன் வாழ்வில் நடந்த பல நிகழ்ச்சிகளை தனக்கே உரிய பாணியில் வெளிப்படுத்தியுள்ளார் வைரமுத்து.
*“நாளையின் நம்பிக்கைச் சுடர் நீதான் என்று உன்னைப் போலி வார்த்தைகளால் புகழ மாட்டேன். ஏனென்றால் – எரிந்து கொண்டிருப்பவனே நீ தானே!”*
என்னும் வரிகளில் உண்மைக்கு உருவம் தருகிறார்.
ஆறுதல் தர வேண்டிய இடங்களில் ஆதரவு வார்த்தைகளையும், அறிவுரை தர வேண்டிய இடங்களில் படிப்பவர்க்கு புரியும் வண்ணம், அருமையான எளிமையான உவமை மொழிகளை உறுதி படவும் தெரிவித்துள்ளார் வைரமுத்து அவர்கள்.
சினேகத்தோடு சில வார்த்தைகள் என்னும் தலைப்பில்,
*”ஒரு கிழவியைக் கல்யாணம் செய்து வைத்த மாதிரி கல்வி உனக்கு கசப்பாக இருக்கிறது”,* *”உன்னைப்பற்றி கவலைப்பட இந்தியா தயாராக இல்லை”*,
*“உன் முதுகுக்குப் பின்னால் பள்ளம் , முகத்துக்கு முன்னால் இருட்டு. கண்பார்வை உனக்கு இருக்கிறதா இல்லையா என்று சோதித்துப் பார்க்கக் கூட அந்த இருட்டு உனக்கு சந்தர்ப்பம் தரவில்லை. ஆட்டுவித்தால் ஆடும் பொம்மைகளாய் , சாவிகொடுத்தால் சுற்றும் சக்கரங்களாய் நம் இளைஞர்கள் மாறியுள்ளனர்”.* என்று, ஒரு மத போதனாக அல்லாமல் இளைஞர்கள் அன்றாடம் வெறுக்கும் ஒரு ஆசிரியனாக அல்லாமல், இக்கால இளைஞர்களுக்கு அந்நியமாக ஆகிப்போன தாய் தந்தையாகக் கூட இல்லாமல், நன்மை கருதும் நண்பனாய், உரிமை கொண்ட தோழனாய் எடுத்துரைக்கிறார் ஆசிரியர்.
கல்வி என்னும் தலைப்பில்,
இனிய இளைஞனே!
மாணவ தோழனே!
*”ஓராண்டு காலமாய் திணித்த திணிப்பை மூன்று மணி நேரத்தில் அவசரமாய் வாந்தி எடுக்கச் சொல்வது அநியாயம்.”*
*”இந்தக் கல்வி முறை நல்ல குடிமகன்களை அல்ல கையொப்பமிடத் தெரிந்த மரங்களைத்தான் உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது”*
*”மேல்நாடுகளில் எந்திரங்களை கூட மனிதர்களாக மாற்றி வருகிறார்கள். நமது கல்வி முறையோ மனிதர்களை கூட எந்திரங்களாக மாற்றிக் கொண்டிருக்கிறது”* என்று தற்கால கல்வி முறையால் இளைஞர்கள் எதிர்காலம் கேள்விக்குரியாகிறது என்பதை அருமையாக விளக்குகிறார்.
கல்வி என்பது இதமான விஷயமாக இருக்க வேண்டும். நெஞ்சுக்கு இணக்கமான விஷயமாக இருக்க வேண்டும். அதனால்தான் வள்ளுவன் கூட கல்வியை *”தொட்டனைத் தூறும் மணற்கேணி”* க்கு ஒப்பிட்டான். பாறையை உடைத்து நீர் பெறுவது போன்றதல்ல கல்வி ஓடையைத் தோண்டி நீர் வருவது போன்று கல்வி சுகமானது என்று சொல்லாமற் சொன்னான் வள்ளுவன்.
பிறிதொரு பக்கத்தில் *“பொழுது என்பது போக்குவதற்கு அல்ல ஆக்குவதற்கு”* எனவும், பொழுது போக்கு என்பதே தேவையில்லை என தெளிவுற கூறுகிறார்.
இலட்சியம், கல்வி, கலை, உறவு, வீரம், எதிர்ப்பு, சாதனை, காதல், அடக்கம், சோம்பல், உணவு, மொழி, இலக்கியம், நண்பன், புகழ், தாய்மண், படைப்பும் படைப்பாளியும், இலக்கியமும் மனிதமும் போன்ற இன்றைய இளைஞர்களின் தேவைகளைப் புரிந்து 24 தலைப்புகளில் மாபெரும் கருத்துகளைச் சுமந்து நிற்கும் உளியாக நிற்கிறது _*‘சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன்* ’_ புத்தகம்.
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | சிற்பியே உன்னைச் செதுக்குகிறேன் |
| ஆசிரியர்: | கவிஞர் வைரமுத்து |
| வெளியீடு: | சூர்யா லிட்ரேச்சர் |
| விலை: | ₹.120 |
| அறிமுகம் எழுதியவர்: | I.A.தினேஷ் |
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
