ஒரு குருவி கூடு பற்றிய குட்டிக்கதை இது. குட்டிக்கதையை சிறுகதை என்று தம்பட்டம் அடிக்க முடியாதில்லையா. எனவே ஊடாக சில கசப்பான உண்மைகளைச் சொல்லி நீட்டிக்கலாம் என்ற திட்டம் உள்ளது. உண்மையென்றால் கசக்கத்தானே செய்யும். கதையின் கருவுக்கு உபகதை போல துண்டு துண்டாகத் தெரியலாம், ஆனால், சிறுகதை இலக்கணத்தை மீறாது.
அந்த பகுதி நகரம் முடிவதற்கும் நகர விஸ்தரிப்பு ஏற்பட்டு வரும் இடங்களுக்கும் இடைப்பட்ட பகுதி. சாலையின் இருமருங்கும் கடைகள், மருத்துவ ஆலோசனை கூடங்கள், சிறிய சிறிய வாகன பழுது நீக்கப் பட்டறைகள், ஈக்கள் மொய்க்கும் கசாப்பு கடைகள் தொடர்ந்தும் விட்டு விட்டும் அமைந்துள்ளன. அவற்றில் ஒன்றுதான் அண்ணாச்சி கடை. அதில்தான் நான் அவ்வப்போது தேவைப்படும் வீட்டு உபயோகப் பொருட்களை கொள்முதல் செய்வேன். பழைய அண்ணாச்சி தற்போது கம்பு ஊன்றி நடக்கிறார். அவரது இரு மகன்கள் தற்போது விற்பனையாளர்கள். அவர்களுக்கே முப்பது மற்றும் நாற்பது வயது இருக்கும் என்றால் நான் அந்த கடைக்கு வாடிக்கையாளன் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அண்ணாச்சி கடையில் பெரும்பாலும் எல்லா பொருட்களும் கிடைக்கும். தரமாக நியாயமாக இருக்கும். சில கடைகளில் தரம் இல்லையென்றாலும் முகம் சுழிக்க மாட்டார்கள். சில கடைகளில் தரம் இருக்கும் முகத்தை உம்மென்று வைத்திருப்பார்கள். சிலர் தரங்கெட்ட பொருட்களை வைத்திருப்பதோடு எள்ளும் கொள்ளுமாய் முகத்தை வைத்துக்கொண்டு இருப்பார்கள். வெகு சில கடைகளில் மட்டுமே தரம், நியாயமான விலை எல்லாவற்றிற்கும் மேலாக நல்ல பண்புள்ள விற்பனையாளர்கள் இருப்பார்கள்.
அண்ணாச்சி கடை இதில் கடைசி ரகம். யாரையும் காத்திருக்க வைக்கமாட்டார்கள். இருவரும் பம்பரம் போல சுழல்வார்கள். அசந்து போகும் அளவுக்கு பச்சைப் பசேலென காய்கறிகள் வைத்திருப்பார்கள். எங்குதான் கிடைக்கிறதோ அவ்வளவு தரத்தில்! பழைய அண்ணாச்சி எப்போதாவது வந்து கடைக்கு வெளியே நாற்காலியில் அமர்ந்திருப்பார். ஒரு மெல்லிய சிரிப்பில் வரவேற்பார். நானும் விழுந்து விடாத ஒரு புன்னகையை மலரச் செய்வேன். கடைக்கு வெளியே உள்ள புங்கை மரம் நிழலில் வாகனங்களை நிறுத்தி வைத்துக் கொள்ளலாம். கூட்டம் அதிகமாக இருக்கும்போது நான் கூட வாகனத்தை நிழலில் நிறுத்தி அதிலமர்ந்து காத்திருப்பேன். அந்த மரத்தைத்தான் ஒரிரு நாட்களில் வெட்டப் போகிறார்களாம். அதில் ஒரு குருவிக்கூடு உள்ளது.
குருவிக்கூடு இருப்பதற்காக மரத்தை வெட்டாமல் விடுவார்களா என்ன. சாலையை அகலப் படுத்துபவர்கள் என்ன சாலமன்களா! சாலமன் என்றாலும் சாலை போட்டுதானே ஆகவேண்டும்.
மாநகராட்சியில் சாலையை அகலப் படுத்துகிறார்கள். ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியல்ல அது. தனியார் நிலங்களை கையகப்படுத்தி அதற்கான இழப்பீட்டுத் தொகையை கொடுத்து விடுகிறார்கள். மக்கள் தொகை புழுத்து போய்விட்டது. வாகன எண்ணிக்கைகள் பெருகிவிட்டன. சாலைகளை அகலப் படுத்தித்தானே ஆக வேண்டும். புதிய சாலைகளும் போடத்தான் வேண்டும். சாலைகள்தான் நாட்டின் முதுகெலும்புகள். கழுகு பார்வையில் பார்த்தால் கூட சாலைகள் குறுக்கும் நெடுக்குமாக மனித முதுகெலும்பு போலத்தான் உள்ளன.
தொழில் வளர்ச்சி, போக்குவரத்து, தடையற்ற வர்த்தம் போன்றவற்றிற்கு சாலை வசதிகள் தேவைப்படுகின்றன. ஒரு காலத்தில் திருச்சியிலிருந்து சென்னைக்கு ஒரு வழிப்பாதைதான் இருந்தது. ஒர் இடத்தில் போக்குவரத்து தடைபட்டால் நான்கு ஐந்து மணி நேரம் கூட சாலையில் ஒரே இடத்தில் காத்திருக்க வேண்டி வந்தது. இப்போது அப்படியில்லை. விபத்தின் காரணமாய் ஓர் இடத்தில் தடை ஏற்பட்டால் கூட அங்கு மறுபுறம் உள்ள இரு வழிச்சாலையில் போக்குவரத்தை மாற்றி காவலர்கள் சீர் செய்து விடுகிறார்கள். மற்ற நேரங்களில் அவர்கள் எப்படியோ போக்குவரத்தை சீர் செய்யும் நேரங்களில் அவர்கள் பாராட்டுகளுக்கு உரியவர்கள். வியப்பாகவும் இருக்கிறது.
தொண்ணூறுகளில் ஒரு மழை காலத்தில் திருச்சியில் முதல் நாள் இரவு பத்து மணிக்கு பேருந்தில் ஏறி இடையில் போக்குவரத்து தடைபட்டு சுமார் இருபது கிலோ மீட்டருக்கு வகன நெரிசல் ஏற்பட்டு சென்னைக்கு மறுநாள் பிற்பகல் இரண்டு மணிவாக்கில் சென்றடைந்தேன். பயணம் மேற்கொள்பவர்களுக்கும் போக்குவரத்தின் தேவை அறிந்தவர்களுக்குமே இது தெரியும். ஓட்டு வேட்டையாடும் அரசியல்வாதிகளுக்கும் குவாட்டர், கோழிப் பிரியாணி வாங்கி போராடுபவர்களுக்கும் புரிய நியாயமில்லை.
புரிந்தாலும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். சாலை போட விளை நிலங்களை பாழ் படுத்துவதாக நீலிக் கண்ணீர் வடிப்பார்கள். எங்கு பார்த்தாலும் விளை நிலங்கள் மனைகளாக மாற்றப்பட்டு கட்டடங்களும் வீடுகளும் முளைத்துள்ளது தெரியாதா? அதற்காக போராடமாட்டார்களா? மாட்டார்கள். தொழிற்சாலை அமைக்கக்கூடாது. ஆனால் எல்லோருக்கும் வேலை வேண்டும். மின்சாரம் நிலங்களின் வழியே எடுத்து செல்லக் கூடாது. ஆனால் பட்டி தொட்டியெல்லாம் ஒளி வெள்ளத்தில் மிதக்க வேண்டும். பகலில் கூட தெரு விளக்கை அணைக்க மாட்டார்கள்.
ஆறுகளை இணைக்க வேண்டுமென்று கொள்கையளவில் அறிவிக்கும் போதே, (இணைக்க நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் என்பது வேறு விஷயம்) சுற்றுச் சூழல் பாதிக்கும் இடையில் காடுகளை அழிக்க வேண்டும் மலைகளை உடைக்க வேண்டும். ஐயகோ இயற்கையை பாழ்படுத்தலாமா என ஒப்பாரி வைப்பார்கள். வழி நெடுக உள்ள பொட்டல் நிலங்கள் வானம் பார்த்த சீமைகள் பாசன வசதி பெற்று வளம் கொழிக்கும் என்பது புரிந்தாலும் வெளியே சொல்ல மாட்டார்கள். சொன்னால் சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் என்ற பட்டப் பெயர் கீரீடம் போய்விடாதா.
இன்னொரு ஹைலைட் என்னவெற்றால் மின் கம்பங்களை தங்களது வயலில் நடக்கக்கூடாதென போராடியவர்களிடம் தொலைக்காட்சி போட்டி எடுத்தபோது ‘பிற்காலத்தில் வீட்டு மனைகளாக மாற்றி விற்கும்போது உயர் அழுத்த மின்பாதைக்கு கீழ் யாரும் மனை வாங்க மாட்டார்கள். அதான்‘ என்றனர். உண்மை என்னவெனில் பெரிதாக விளை நிலங்கள் பாதிக்காது மனையாக மாற்றும்போது விலை நிலங்களாகாது என்பதே. மின்கம்பங்கள் நான்கு கால்களை கொண்டிருக்கும் அவை நடுவேகூட பயிர் செய்யலாம். இவ்வாறு கலகம் செய்தால் எப்படி மின்சாரத்தை மற்ற இடங்களுக்கு கடத்த இயலும். கொஞ்சமாவது யோசித்தால் நலம். அது கிடக்கட்டும் நாம் கதைக்கு வருவோம்.
கடைக்கு காய்கறி வாங்கப்போனபோது சின்ன அண்ணாச்சி இதை சொன்னார். வயதில் குறைவு என்றாலும் அவர் அண்ணாச்சிதான். அண்ணாச்சி என்பது ஒரு குழு பெயர் போல. சாலையை அகலப்படுத்த அந்த மரத்தை வெட்டப்போவதாகவும் அதில் ஒரு குருவிக்கூடும் இருக்கிறது என்றார்.
வெளியே வந்து இருவரும் பார்த்தோம். இலைகளெல்லாம் உதிர்ந்து பின் தளிர் விட்டு ஒரு வசந்தம் வந்து குடியிருந்தது போல காட்சி தந்தது மரம். பத்தடி உயரத்தில் இரு கிளைகள் வெளிக்கிளம்பும் இடைவெளியில் ஒரு குருவிக்கூடு இருந்தது. கடையில் கிடந்த உயரமான ஒரு ஸ்டூலை எடுத்து வந்து போட்டோம். அதை இங்கே கோக்காலி என்பார்கள். ஏறி பார்த்தபோது அந்த கூட்டில் பால் வண்ண நிறத்தில் வெளிர் நீலமும் கருநீல நிற புள்ளிகளும் தனித்தனியே கொண்ட மூன்று முட்டைகள் இருந்தன.
இறங்கி வந்ததும் ஒரு யோசனை தோன்றியது. கடையின் பின் புறத்தில் இலைகளை உதிர்த்த ஒதிய மரமும் காய்களற்ற ஒரு முருங்கை மரமும் நின்றன.
“கூட்டை பத்திரமாக எடுத்துக்கொண்டு போய் அந்த முருங்கை மரத்தில் வைத்திடலாம் “என்றேன்.
“அது தோது படுமா சார்” என்றார் சின்ன அண்ணாச்சி.
“பறவை பார்க்கும் போது அதை செய்யனும். அப்பதான் அதுவும் கூட்டுக்கு போகும்“
“எப்படி மாத்துறது? “
“சாயங்காலம் வற்றேன். எடுத்து கூட்ட அந்த மரத்தில் வச்சிடுவோம். அப்பதான பறவைகள் திரும்புற நேரம்“
“ஆறு மணிக்குதான் பறவைகள் வந்து கத்தும். அப்ப வாரிங்களா சார்.”
“சரி வந்துடுறேன்“
ஒவ்வொரு நகரத்திற்கு வெளியேயும் ஐம்பது அறுபது கிலோ மீட்டர் வரை வயல்கள் மனை பிரிவுகளாக்கப்பட்டு நெல்லுக்குப் பதில் கற்களை நடவு செய்து வைத்துள்ளார்கள் .ஐந்து சதவீதம் கூட வீடு கட்டப்படவில்லை. அவ்வளவு மனைகளை யாராவது முதலீட்டிற்காக வாங்கினாலும் எல்லா மனையிலும் வீடு கட்ட மாட்டார்கள். அவ்வளவு மக்கள் தொகை தற்போது இல்லை. நாம் இருவர் நமக்கு ஒருவர் என்றது போய் நாமே குழந்தை நமக்கு ஏன் குழந்தை என்ற காலம் வந்து விட்டது. வதவதவென குழந்தை பெற்ற காலம் மலையேறி உச்சியில் நிற்கிறது. ஏன் இவ்வளவு நிலங்களை மனைகளாக மாற்றுகிறார்கள். சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கே வெளிச்சம்.
மாலை ஐந்தரை மணிக்கே கடைக்கு போய் முருங்கை மரத்தில் கூட்டை வைப்பதற்கு வசதியாக சிறிய இரும்பு கம்பிகளைக் கொண்டு பிணைத்து தட்டுபோல செய்து முருங்கை மரத்தில் பொருத்தினோம். சரியாக ஆறு மணிக்கு இரு பறவைகள் கூட்டை அடைந்தன. அந்தப் பறவையின் பெயர் எங்களுக்கு தெரியவில்லை. மேலே ஏறியதும் பறவைகள் கத்திக்கொண்டு கூட்டிலிருந்து மேலெழுந்தது. கூட்டை முட்டைகளுடன் பத்திரமாக எடுத்து கீழே இறங்கினேன். பறவைகள் இரண்டும் அங்குமிங்கும் மரத்தின் மேற்பரப்பில் கத்திய வண்ணம் பறந்தன.
பின் மேலும் கீழுமாக பறந்து கூடு இருந்த இடம்வரை கீழே வந்து மெலெழுந்தது. கத்தல் ஓயவில்லை. அவற்றிற்கு தெரியுமாறு கூட்டை கொண்டுபோய் முருங்கை மரத்தில் இரும்பு கம்பிகளால் தயார் நிலையில் வைத்திருந்த இடத்தில் வைத்து ஒரு சணல் இழையால் விழாதவாறு கோர்த்து கட்டினோம். பறவைகள் இரண்டும் அங்கிருந்து இங்கு வந்து மேலே கத்திக் கொண்டு பறந்தன. பயமின்றி கூட்டுக்கு வரட்டுமென அங்கிருந்து வந்து ஒளிந்து கொண்டு கவனித்தோம். கூட்டின் மேல் பறந்தன ஒரு பறவை மட்டும் கூட்டில் வந்து அமர்ந்து பின் அதுவும் மேலே கிளம்பி அருகில் உள்ள ஒதிய மரத்தில் அமர்ந்து கொண்டு கத்தலை நிறுத்தின. காலையில் பார்த்துக் கொள்ளலாமென சொல்லிவிட்டு வீடு திரும்பினேன்.
இரவு தூக்கத்தில் அந்த இரு பறவைகளும் மூன்று மூட்டைகளும் என்னுள் வந்து வந்து போயின. நினைவுகளின் சிறடிப்பில் கண்ணிமைகள் மூட மறுத்தன.
காலை பத்து மணிக்கு கடை பக்கம் போய் கூட்டை பார்த்தோம். குருவிகளும் இல்லை முட்டைகளும் இல்லை.
“என்ன ஆனது “
“ராத்திரி பத்து மணி வாக்கில் குருவிகள் கூட்டுக்குள் போயின. ஒளிஞ்சிருந்து பாத்தேன் சார்” என்றார் சின்ன அண்ணாச்சி.
அப்படியானால் முட்டைகளை பாதுகாப்பான இடத்திற்கு எடுத்து சென்றிருக்கும் என்ற முடிவுக்கு வந்தோம். எங்களை நண்பர்கள் என கருதியிருக்குமா விரோதிகள் என திட்டியிருக்குமா? மரம் வெட்டப் போவது அதற்குத் தெரியாதே என நாங்களே விவாதித்துக் கொண்டோம்.
” மரத்தை வெட்டிய பிறகு இரண்டில் ஒரு பறவையாவது இந்த இடம் வழியாக பறந்து போனால் மரம் இல்லாதது கண்டு உங்களை நண்பன் என அதன் கூட்டில் பேசிக் கொள்ளும்” என்றார் பெரிய அண்ணாச்சி.
——-
அன்பழகன்ஜி