அக்காக்காரி
ஆடுகளைக் கவனமாக
அங்குமிங்கும் பார்த்து
மேய்த்துக் கொண்டிருக்கிறாள்
அக்காக்காரி.
அடிக்கடி ஆடுகளை
எண்ணிச் சரிபார்ப்பாள்.
ஆடொன்று காணோம்
என்று வீடு திரும்பினால்
அப்பா தோலை உரிப்பார்.
அதுவும் புல்லிருக்கும்
இடம்பார்த்து
ஆடுகளின் வயிறு நிறைய
மேய்க்க வேண்டும்.
வேப்பமர நிழலில்
தொங்கும் தூளியில்
தம்பிப் பாப்பாவையும்
ஒரு கண்ணால் கவனமாய்ப்
பார்த்துக் கொள்ள வேண்டும்.
சிணுங்கினால் ஆட்ட வேண்டும்.
அம்மா களைஎடுக்க
அவசராமாய்ப் போயிருக்கிறாள்.
அவள் வரும்வரையில் இவன்
அழாமல் இருக்க வேண்டும்.
ஏகப்பட்ட கவலைகள்.
இவற்றுக்கிடையே
ஒரே ஒரு மகிழ்ச்சி.
அதோ வருகிறதே
ரயில் வண்டி
அதைபார்த்துக்
கை ஆட்டுவதுதான்.
எப்படி
காலையில் பார்க்கும்
செய்திகளிலெல்லாம்
காட்சி தருவன
களவும் கற்பழிப்பும்தான்.
குளியலறையிலோ
புழுக்களும் பூச்சிகளும்
சிற்றுண்டி உண்ணும்
சிறிது நேரத்தில் கூட
சிணுங்கும் கைப்பேசியில்
மேலாளரின் கண்டிப்பு.
அலுவலகத்திலோ அன்றைய
மதிய உணவு நேரத்தில்
மாயக் குரல்களும்
மர்ம வலைகளும்.
வயலில் உழுது
களைத்த காளையாய்
இல்லம் திரும்புகையில்
இறுகிப் போகிறது
என் மனம்.
என் மழலைகளையும்
என்னவளையும்
எப்படி அணைத்து
இறும்பூதெய்துவேன்?
எப்பொழுது?
மொட்டை மாடிக்குச்
சென்று பார்த்தேன்.
நிலவு தனித்திருந்தது.
தோட்டத்துக்குப் போனால்
செம்பருத்தி சோகமுடன்
சிவந்திருந்தது.
தவிட்டுக்குருவிகள்
தாவித் தாவி தேடின.
அணில்களும் குறுகுறுவென்று
அங்குமிங்கும்
ஓடிக்கொண்டிருந்தன.
கன்றுக்குட்டியின்
கண்களில் ஏக்கம்
சொல் கண்ணே!
எப்பொழுது வரப் போகிறாய்?
காகம்
தாழ்ந்த மரக்கிளையில்
உட்கார்ந்துகொண்டு
வைத்த கண் வாங்காமல்
பார்த்துக் கொண்டிருக்கிறது
அந்தக் காகம்
சோற்றுருண்டையை.
அது கரையாமல்
கரைந்துண்ண விரும்புகிறது.
ஆனால்
வைத்தவனோ புரியாமல்
‘கா’ ’கா’ எனக் கரைந்து
அதைக் கலவரப்படுத்துகிறான்.
காகம் மனத்தில் அழுதுகொண்டே
ஓரக் கண்ணால்
முறைத்துப் பார்க்கிறது.