வளவ. துரையன் கவிதைகள்      

வளவ. துரையன் கவிதைகள்      

அச்சமும் ஆசையும்                                 

Tamil motivational poem | ஆசையும் அச்சமும்

கட்டிப்பிடித்துன்னை இறுக்கி

அணைக்கையிலே

“பீலிபெய் சாகாடும் அச்சிறும்”

என்று கைநழுவுகிறாய்

ஓடிப் பிடித்துன்னை

ஒய்யாரமாக் கைபோட்டு

ஆசை தீருமட்டும்

முயங்குகையில்

“நுனிக்கொம்பர் ஏறினால் அஃதிறந்தூக்கின்”

என மெதுவாக அடிக்கிறாய்

’சரி வேண்டாம் நாளை வருகிறேன்’

எனச் சொன்னால்

பொய்க்கோபத்துடன்

“கொக்கக் கூம்பும் பருவத்து” என்று

கூர்த்த மதியால் சொல்லி

வெட்கக் குறுநகை காட்டுகிறாய்.

’ஏன் எப்பொழுதும்

சண்டையிடுகிறாய் எனில்

“ஊடுதல் காமத்திற்கின்பம்”

என ஒரு சொல் பேசுகிறாய்

தமிழ் அதிகம் படித்தவளைக்

காதலித்தது தவறென்று

தலையலடித்துக் கொண்டால்

“தமிழைப் பழித்தவரை

என் தாய் தடுத்தாலும் விடேன்”

என்று கண்களை உருட்டி

ஒரு விரல் காட்டிச்

சிரிப்பு மிரட்டலைச்

சிந்த விடுகிறாய்.

அச்சத்துடனும்

ஆசையுடன்தான்

உன்னை அணுக வேண்டி உள்ளது

சரியான……………              

சரியான பார்வை... சரியான வழி... சரியான ...

கடல் குறித்து எழுதிய

கவிதையில் சற்றும்

உப்பில்லை என்றார்கள்

மல்லிகையைப் பற்றி

எழுதிய கவிதையில்

மலரின் மணமே

இல்லை என்றனர்

மழைபற்றி எழுதும்போது

மின்னல் இடி

தேடிச் சலித்தனர்

வெப்பம் பற்றி

எழுதும்போது

வியர்வை வரக் காணாமால்

வெகுண்டெழுந்தனர்

கடைசியில் சாக்கடைபற்றி

எழுதும்போதுதான்

மூக்கைப் பிடித்துக்கொண்டு

சரியான கவிதை என்றனர்

                வளவ. துரையன்

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *