வலி…ஒரு…வழி சிறுகதை – சக்தி ராணி 

வலி…ஒரு…வழி சிறுகதை – சக்தி ராணி 




“என்னங்க…கொஞ்சம் சீக்கிரம் வீட்டிற்கு வர முடியுமா…இப்போ…”

“என்னம்மா…ஆபீஸ் இப்போ தான் வந்தேன்…வேலை இருக்கு…போன்ல சொல்லு…”

“போன் ல சொல்ல முடியுற விஷயமா இருந்தா சொல்லியிருப்பேனே…எதுக்கு வீட்டுக்கு வாங்கனு கூப்பிடுறேன்…வர முடியுமா…முடியாதா…”

“வாரேன் மா..வாரேன்”

(போன் கால் துண்டிக்கப்பட்டது)

தவமாத் …தவமிருந்து…ஏறாத கோவில் ஏறி போதாத ஹாஸ்பிட்டல் போயி…பார்த்து பார்த்து பெத்த புள்ள…கண்கலங்கி நிக்குதே…இத எங்க போயி சொல்லுவேன்…”வா…செல்லம்…அப்பா இப்போ வந்துருவாரு…” என அணைத்துக் கொள்கிறாள்…

“என்னம்மா…என்ன ஆச்சு…வீட்டு சத்தம் ரோட்ல கேட்குது…” என வீட்டிற்குள் நுழைகிறான்ராம்.

“என்னங்க…நம்ம பிள்ளைய பாருங்க…இது கண்ணுல கண்ணீர் வரக்கூடாதுனு நாம் எம்புட்டு பார்த்து பார்த்து வைச்சிருந்தோம்…இப்போ பாருங்க…முகம் வீங்குற அளவு அழுது எப்படி இருக்கு பாருங்களேன்…”

“என்னடா…கண்ணம்மா…என்ன ஆச்சு…என் செல்லம்…அப்பா இருக்கும் போது நீ அழலாமா…”

“அதெல்லாம் ஒண்ணுமில்ல பா…”

“நிலா…அப்பாக்கு தெரியாத உன் முகம் எப்படி இருக்கும்னு..சொல்லுஎன்னவிஷயம்…பள்ளிக்கூடத்துல எதும் பிரச்சனையா… நண்பர்கள் எதும் கேலி செஞ்சாங்களா…வீட்டுப்பாடம் எழுதாம போனீயா…”

“என்னடீ…அப்பா இவ்வளோ கேள்வி கேட்குறாறு…வாயைத் தொறந்து சொல்லேன்…”

“மேரி டீச்சர் என்ன அடிச்சாங்க ப்பா…”

“என்னது டீச்சர் அடிச்சாங்களா…”

“இந்த ஊர்லயே பெரிய பண்ணை வூட்டுக்காரங்க நாம தான்…நம்ம வூட்டுப்புள்ளைய எப்படி அவுங்க அடிப்பாங்க…இரு…தலைமைக்கு போன் போடுவோம்…எடுடி அந்த போன…என்ன நினைச்சிட்டு இருக்காங்க…எம் புள்ள… என் தங்கத்தை …”

டிரிங்…டிரிங்…

“ஹலோ…யார் பேசுறீங்க…”

“நான் தான் பெரிய வீட்டு பண்ணையார் மகன் பேசுறேன்…”

“சொல்லுங்க சார்…என்ன விஷயமா கால் பண்ணீங்க?”

“என்ன விஷயமா…எல்லாம் தெரிஞ்சு பேசுறீங்களா…இல்ல தெரியாதது போல பேச நினைக்கிறீங்களா?”

“இல்லங்க…சார்.நீங்க என்ன சொல்ல வாறீங்கனு எனக்கு புரியலை…”

“ஓ புரியலையா…உங்க பள்ளிக்கூடத்துல மேரி டீச்சர் வேலை பார்க்குறாங்களா…”

“ஆமா சார்…இருக்காங்க?”

“அவங்கள கொஞ்சம் கூப்பிடுங்க…லைன்லேயேவெயிட்பண்றேன்..”

“ஹலோ…சொல்லுங்க சார்…”

“மேரி டீச்சரா?”

“ஆமா சொல்லுங்க…”

“இன்னிக்கு என் பொண்ண அடிச்சீங்களாமே ..உங்களுக்கு எவ்ளோ தைரியம் இருந்தா இப்படி அடிச்சிருப்பீங்க…உங்கள் வேலையை விட்டுத் தூக்கல…என் பேரு ராஜா சங்கர் இல்ல…”

“சார் கொஞ்சம் பொறுமையா பேசுங்க.என்ன நடந்ததுனு தெரியாம நீங்க பேசுறீங்க…”

“என்ன வேணா நடக்கட்டும் மேடம்.நீங்க எப்படி கை வைக்கலாம்…பிரச்சனை இருந்தா முதல்ல தலைமையாசிரியரிடம் சொல்லிருக்கலாம்.இல்ல எங்ககிட்ட சொல்லிருக்கலாம்.இதெல்லாம் பண்ணாம நீங்க என் மவ மேல கை வச்சிருக்கீங்க…உங்களுக்கு எவ்வளவு தைரியம்.?”

“ஐயோ…சார் என்னையும் கொஞ்சம் பேச விடுங்க…நீங்களே பேசி எல்லாம் முடிவு பண்ணாதீங்க”

“நீங்க ஒண்ணும் சொல்ல வேண்டாம்..நான் முடிவு பண்ணிட்டேன்.நீங்க இனி வேலை எப்படி பார்க்குறீங்க பார்ப்போம்.”

(போன் கால் துண்டிக்கப்பட்டது)

“என்ன மேரி இது புது பிரச்சனையா இருக்கு….இதெல்லாம் உங்களுக்கு தேவையா?”

“இல்லங்க மேடம்.நிலா பண்ணது பெரிய தப்பு…நிலா…செல்வி…பிரியா எல்லாரும் சேர்ந்து கைப் பேசியில் குழு ஆரம்பிச்சு பல வீடியோ அனுப்புறாங்க. அதுல தவறானதும் இருக்கு.விஜிசொல்லிதான்எனக்குஇதுதெரியும். நானும்நல்லவிதமாகபேசிஅறிவுரை சொல்லிஅனுப்பிடலாம்னுதான்வரசொன்னேன். ஆனா,  நிலா ரொம்ப திமிரா பேசுனா.  அதான் கோபம் வந்து அடிச்சுட்டேன் மேடம்…

“என்னமோ போங்க…பெரிய இடம். அவங்களே இதெல்லாம் பாத்துக்க மாட்டாங்களா…நீங்க ஏன் உள்ள போறீங்க…டென்ஷன் தான் உங்களாலும்…”

‘எல்லாம் வல்ல இறைவனே உன்னை ஆசிர்வதிப்பார்’ என்ற‌குரலில் பாதிரியார்…ஆசீர்வதிக்க ராஜா சங்கர் எதிரே வந்து நின்றார்.

“இங்க பாருங்க ஃபாதர்….நான்‌ உங்க மேல உள்ள மரியாதைல தான் இப்படி நின்று பேசிட்டு இருக்கேன். இல்லைனா…உங்க பள்ளிக்கூடத்துல வேலை பார்க்குற மேரி டீச்சர் கதியே வேற” என கத்தினான்.

“பொறுமையா இரு ராஜா…என்ன‌பிரச்சனை?” என கேட்டுக்கொண்டிருக்கும் போதே பாதிரியாரின் கைப் பேசி ஒலிக்க…ஒரு நிமிஷம்..என சற்றே நகர்ந்து பேசத் துவங்கினார்.

“ஃபாதர், நான் தலைமையாசிரியை  பேசுறேன்”.என்று கனிவான குரலில் நடந்ததையெல்லாம் முன்வைத்தார்.

“சரி, நான் என்னனு பார்க்குறேன்…மேடம்”

(போன் கால் துண்டிக்கப்பட்டது)

“சொல்லு ராஜா சங்கர், நானும் இப்போ தான் எல்லாம் கேள்விப்பட்டேன்….மேரி டீச்சரை வேலையை விட்டு தூக்கிட்டா சரிக்கு சரியாய் போயிடும்னு  நினைக்குறீயா…”

“இல்ல ஃபாதர்…சரியாகாது! .இருந்தாலும் என் மனசு அவ்ளோ வலிக்குது…உங்களுக்கே தெரியும் எம்புள்ளைய எவ்ளோ ஆசையா வளக்குறேனு…அவ மேல கை வைக்க இவங்களுக்கு எப்படி மனசு வந்தது?”

“புரியுது ராஜா சூழ்நிலைனு ஒண்ணு இருக்குல.அதையும் நாம் விசாரிக்கணும்ல…”

“அதெல்லாம் எனக்கு வேண்டாம்..அவங்க இந்த பள்ளிக்கூடத்துல இருந்து போகனும் அவ்ளோ தான் என் முறையீடு உங்கட்ட”

“ம்ம்…சரி…மேரி சர்ச்ல வளர்ந்த பொண்ணு.நான் சொன்னா புரிஞ்சுப்பா…நீ கிளம்பு…நான் பார்த்துக்குறேன்”.

“பார்த்துக்குறேன்னு  சொல்லாதீங்க! நான் சொல்றதைப் பண்ணுங்க.அதுதான் எனக்கு சந்தோஷம்” எனக்கூறி விடைபெற்றார்.

“மே ஐ கமீன்… சார்?”

“வாங்க மேரி. உட்காருங்க…”

“நடந்த பிரச்சனை எல்லாம் கேள்விப்பட்டேன். எதுவுமே செய்யறதுக்கு முன்ன ஆயிரம் முறை யோசிக்கணும். அதும் ஆசிரியர் வேலை, இப்போ ரொம்ப யோசிக்கணும்”

“ம்ம்…புரியுது ஃபாதர். .நான் பண்ணது தப்பு இல்ல.இருந்தாலும் சூழ்நிலைக் கைதி தான் நான் இப்போ…”

“நீங்க கொஞ்ச நாள் ஸ்கூல் வராம…சர்ச்ல உள்ள கணக்கு வழக்குலாம் பாருங்க.  விஷயம் கொஞ்ச நாள்ல மறந்து போகும்.அப்புறம் என்ன பண்ணலாம்னு  பார்க்கலாம்”

“சரிங்க ஃபாதர்…ஆனாலும் என் மனசு இது ஒத்துக்கல…தப்பே பண்ணாம…தண்டனை…கர்த்தர்  பார்த்துட்டு தான் இருப்பார்” என்றே நகர்ந்தாள்.

ஆறு மாத குழந்தையாக…அம்மா அப்பா…யாரு தெரியாம அனாதையா சர்ச் வாசல் தொட்டில்ல கிடந்தாள். தூக்கி வளர்த்து… படிப்பு கொடுத்து எல்லாம் பண்ணாலும் இந்த சமூகத்தில் வாழ இவங்க இன்னும் போராட வேண்டிருக்கு…கெட்டிக்காரி இந்த மேரி பள்ளியில் படிக்கும் போது…படிப்பும் சரி…விளையாட்டும் சரி நம்பர் ஒன் தான்.  வாலிபால் சாம்பியன் பரிசு பெற்றவள்.விளையாட்டுத்துறை எவ்ளோ வசதி வாய்ப்போடு அழைச்ச போதும் போகாம…ஆசிரியரா வருவேன்.என்னைப்போல பல குழந்தைகளுக்கு கல்வி கற்றுக்கொடுப்பேன் என்ற வைராக்கியத்தில் வாழ்பவள் என்றே பழைய விஷயங்களை  அசைபோட்டுக்கொண்டிருந்தார் பாதிரியார்.

ஃபோன் ஒலித்தது…

“ஃபாதர்…நான் சங்கர் பேசுறேன்.நான் சொன்னது போல செஞ்சுடீங்க.சந்தோஷம்.இப்போ தான் என் மகளுக்கு நல்ல அப்பாவா என்ன உணர முடியுது” என்று நன்றி கூறினார். நாட்கள் நகர்ந்து செல்ல விஷயமும் மறைந்தது.

ஃபாதர் மேரியிடம், “நம்ம ஸ்கூல்ல பனிரெண்டாம் வகுப்பு எடுக்க ஆசிரியர் வேணும்.நீ வந்திரு” என அழைக்க…மேரி சற்று தயக்கத்துடன் “ம்ம்…ஃபாதர்” என்றாள்.

கெட்ட பெயரெடுத்து வெளியில் வந்தேன்.மீண்டும் அதே மாணவர்கள்.என்ன…பெரியவர்களாக வளர்ந்து நிற்கிறார்கள் என்ற பயமும் மேலோங்கியது.   பார்ப்போம்…என்னதான் நடக்குதுன்னு பள்ளி சென்றாள் மேரி.

“குட்மார்னிங்…டீச்சர்…”

“வெரி குட்மார்னிங்…எல்லாரும் எப்படி இருக்கீங்க?”

“நாங்க..நல்லா இருக்கோம்.நீங்க டீச்சர்?”

“நானும் ஃபைன்.  சரி பாடத்துக்கு போகலாம்…” என ஒவ்வொரு முகமாய் கண்கள் விரிய பார்த்துக்கொண்டே கடக்கையில் நிலாவும் அங்கே அமர்ந்திருந்தாள் புன்னகையுடன். குழந்தைகள் எல்லாத்தையும் மறந்துடுவாங்க.பெரியவங்க தான் பெரிய பிரச்சனை பண்ணி…என்று தனக்குள்ளே முணுமுணுத்துக்கொண்டாள். பாடம் நடத்த நடத்த மாணவர்களும் தலையாட்டிகொண்டே கவனித்து எழுதிக்கொண்டிருந்தனர்.

மறுநாள்…’டீச்சர் வாராங்க…வாராங்க…’என்ற ஒலி அதிகமா எழும்ப…

“என்னாச்சி பிள்ளைங்களா…இவ்வளோ பரபரப்பு.அதும் காலையிலே?”

“ஒண்ணுமில்ல டீச்சர்…சும்மா பேசிக்கிட்டு இருந்தோம்”

“அப்படியா…அப்போ சரி…வீட்டுப்பாடம் லாம் பண்ணீட்டீஙகளா…பண்ணிட்டோம் டீச்சர்…

“நிலா பண்ணல டீச்சர்” என்றது ஒரு குரல்.

“ஏன் பண்ணல…புரியலையா நிலா?”

“இல்ல டீச்சர் புரிஞ்சது…ஆனா…ஆனா…”

“சரி உட்காரு.நாளைக்கு சேர்த்து பண்ணிடு”.

“சரிங்க டீச்சர்…”

பாடம் சுவாரசியமான நிலையில் இன்றும் செல்ல…நிலா மட்டும் பாடம் மீது கவனமில்லாமல் இருப்பதைப் பார்த்தாள்
நிலாவை அழைத்துப்  பேசினாள்.

“என்ன ஆச்சு நிலா…இவ்வளோ சோகம்?”

“ஒண்ணுமில்ல டீச்சர்.நல்லாத் தான் இருக்கேன்”

“உன் குரலே சரியில்லே.. நான் உன் சகோதரி போல.சும்மா சொல்லு டா”

என தோள் மீது கை வைக்க பொழ பொழவென கண்ணீர் சிந்தினாள்.

“என்னம்மா…இப்படி அழுகுற…ஒண்ணுமில்லை.நான் இருக்கிறேன்” என்று அறையைத் தாழிட்டுப் பேசத் துவங்கினாள்.

“நம்ம ஸ்கூல்ல முன்ன வேலை பார்க்கும் போது சில விஷயங்கள் ல என்னை கண்டீச்சீங்க…நான் கேட்கலை. இது எங்க  அப்பா பண்ண பிரச்சனைல வெளில எல்லாருக்கும் தெரிஞ்சது. இத பயன்படுத்தி குமார் வாத்தியார் எங்கிட்ட பல முறை தப்பா நடக்க முயற்சித்தார்.  உனக்கு தான் எல்லாம் தெரியுமே அப்புறம் ஏன் தயங்குறனு அசிங்கமா பேசுறாரு…இத யார்கிட்ட சொல்ல தெரியலை…வீட்ல சொன்னா எங்க அப்பா முன்ன செஞ்சது போல எல்லாருக்கும் விஷயம் தெரிஞ்சி மோசமாயிரும் டீச்சர்…”

“சரி…அழாதே.. நான்பாத்துக்கறேன்…உனக்குஎதுவும்பிரச்சனைவராது”.

“ம்ம்…எனக்கு பயமா இருக்கு மிஸ்..”

” ஒண்ணும் கவலைப்படாதே…நீ வீட்டுக்குப் போ…நாளைக்கு எல்லாம் சரியாயிடும்” என்றே அனுப்பி வைத்தார்.

“குமார் சார்…கொஞ்சம் நில்லுங்க”

“என்ன மேரி மேடம்…சொல்லுங்க…நீங்க எங்கிட்ட பேசுறீங்க…என்ன ஒரு நல்ல நேரம் எனக்கு…சரி சரி சொல்லுங்க”

“நிலா…எங்கிட்ட பேசுனா…நீங்க ஏதோ தவறா பேசுறீங்கன்னு”

“ஓ….சொல்லிடாளா….அதனால நீ என்ன பண்ணப் போற?”

“இங்க பாரு குமார் நாம அவுங்களுக்கு குரு.   இதெல்லாம்நினைச்சுப்பாக்கறதேபெரியதப்பு…எச்சரிக்கையாஇருந்துக்குங்க…”.

“சரீங்க…அட்வைஸ் போதும்…கிளம்புங்க.”

” அட்வைஸ் இல்ல… பிரச்சனை ஆயிரும்…பாத்துக்குங்க..சொல்லிட்டேன். புரியும்னு நினைக்கிறேன்”.

கைப் பேசி அழைப்பு மேரியை அழைத்தது.

“ஹலோ மேரி டீச்சர் நான் ராஜா சங்கர் பேசுறேன்”

“சொல்லுங்க சார்.என்ன விஷயம்…உங்க வீட்டு வாசல்ல தான் நிக்குறேன்…உங்களை பார்க்கலாமா?”

“என்ன சார்…இப்படி கேட்குறீங்க…இதோ” என கதவைத் திறந்தாள்..

நிலா…ராஜா சங்கர்…மல்லி…என குடும்பத்தோடு நின்றனர்.

“வாங்க…உள்ள வாங்க” என அழைத்தாள்.

“என்னை மன்னிச்சிடுங்க மேரி மேடம்”

“என்ன சார்.நீங்க போயி ..பெரிய பெரிய வார்த்தையெல்லாம் சொல்றீங்க…”

“நிலா எங்கிட்ட எல்லாமே சொன்னாள்.எம்புள்ள சொல்றதை முழுசா கேட்காம எடுத்தோம்….கவுத்தோம்னு பல விஷயங்கள் செஞ்சிடறேன்… ஏன்உங்கவிஷயம்கூடஅப்படிதான்பண்ணேன்”

“அதெல்லாம் பழசு சார்.விடுங்க. சாப்பிட ஏதாவது எடுத்து வாரேன்” என்று  உள்ளே சென்றாள்.

“நான் உங்களுக்கு வலி தந்த போதும் ….நீங்க என் பொண்ணு வாழ்க்கைக்கு வழி தந்துட்டீங்க” என்றே கரம் கூப்பி நன்றி தெரிவித்தான்

மூவரும்பேசிவிட்டுமகிழ்ச்சியுடன்வீட்டைவிட்டுவெளியேறினர்.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *