ராகுல் சாங்கிருத்தியாயன் (Rahul Sankrityayan) எழுதிய வால்காவிலிருந்து கங்கை வரை (valkavilirunthu kangai varai) volka to Ganges - நூல் அறிமுகம் - https://bookday.in/

வால்காவிலிருந்து கங்கை வரை (valkavilirunthu kangai varai) – நூல் அறிமுகம்

வால்காவிலிருந்து கங்கை வரை (valkavilirunthu kangai varai) – நூல் அறிமுகம்

 

1893ல் பிறந்தவரால் இந்நூல் எழுதி, 1942 இல் வெளியாகி உள்ளது. இப்போது இதுவே இந்நூலினுள் செல்ல எனக்கு ஆர்வத்தைத் தூண்டிகிறது. கதை தொடங்குகிற காலம் மேலும் என்னை வியப்படையச் செய்தது. கி.மு. 6000.

டைம் மிஷினில் அழைத்துச் செல்வது போல, கி.மு. ஆறாயிரத்திற்கு அழைத்துச் செல்கிறார். வால்கா நதியின் மேற்கு கரை, அங்கே நிஷா, அவளின் சிறிய குடும்பம் எருதின் தோலை ஆடையாக அணிந்து கொண்டு, கற் கோடாரிகளை கையில் தாங்கியபடி வேட்டைக்குப் புறப்படுகிறது.

வேட்டையில், மனிதர்களை மிருகமும், மிருகங்களை மனிதர்களும் உண்ணுகிறார்கள். சில நேரங்களில் மனிதர்களும், சில நேரங்களில் மிருகங்களும் வெற்றி கொள்கின்றனர்.

கி.மு. ஆறாயிரத்தில் வால்கா நதிக்கரையில் நமக்கு காட்டுகின்ற நிஷாவின் குடும்பம் ஓர் ஆரியக் குடும்பம், சில நபர்களைக் கொண்டு தொடங்கும் இந்த ஆரியக் குடும்பம், குடும்பம்..குடும்பங்களாகப் பெருகி குழுக்களாக மாறுகிறது. இந்தக் குழக்கள் நகர்ந்து.. நகர்ந்து வால்காவிலிருந்து கங்கை வரை வந்துவிடுகிறது. இடையில் ஏற்படும் காதல் மோதலென்று, ஆரிய வரலாற்றையும், வேத காலத்தோடு உலக வரலாற்றையும், அந்த.. அந்தக் காலத்தில் நடந்த நாட்டு நடப்பையும் தெளிவாக வரைந்து காட்டுகிறது இந் நாவல்.

நூலாசிரியர்: இந்நூலுக்கான கச்சாப் பொருளை எங்கிருந்து எடுத்திருப்பார் என்று நான் யோசிக்கிறேன். பல கலைகள் அறிந்தவர் என்பதோடு பல மொழிகளையும் அறிந்தவர் ராகுல சாங்கிருத்தியாயன் என்று சொல்லப்படுகிறது. எனவே இவர் ஆரிய மொழியை அறிந்தவராக, ஏன் இவர் ஆரியராகவே கூட இருக்கலாம். நான்கு வேதங்களில் தலையானதான ரிக் வேதத்தை இவர் பழுதற கற்றிருப்பாரென்றே கருதுகிறேன். வேதங்களில் சொல்லப்பட்டுள்ள சம்பவங்களையே கற்பனை கலந்து நாவலாக வடித்திருப்பதாகத் தெரிகிறது.

அந்த வேதங்களில் ஆரியர்கள் நாடோடியாக வாழ்ந்த கதை, ஆரியர்கள் இந்தியாவுக்குள் வந்த கதை, வேதங்கள் உருவான கதை என இதுவரை யாரும் தொடாத பல கதைகளை தொட்டிருக்கிறார்.

வேதங்களில் கடவுளோ, கடவுளைக் காணுகின்ற மந்திரங்களோ ஏதுமில்லை என்பதை புரிய வைக்கிறார். பிரம்மம், வேதம், யாகம் அனைத்தும் மக்களை ஏமாற்றி பிழைப்பதற்காக ஆரியர்கள் உருவாக்கிய கட்டுக் கதைகள் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது.

காலங்களிலும் பல தேசங்களிலும் பயணிக்க வைக்கிறார். பலவிதமான நிலப்பரப்புகளை அவரின் தூரிகை நமக்கு வரைந்து காட்டுகிறது. புத்தர், சாணக்கியன், மார்க்ஸ் என ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்களோடும் நம்மை உரையாட வைக்கிறார், தத்துவ விவாதம் நடத்துகிறார். அந்த விவாதம் நமக்கு பல விஷயங்களைத் திறந்து காட்டுகிறது. உதாரணமாக 146 ஆம் பக்கம். காலம் கி.பி. 700. நிலம் பாஞ்சாலம்.

லோபா, பிராமண குருவின் மகள், அவளின் காதலன் இளவரசன் பிரவாஹன். அவன் அவளின் தந்தையிடம் மூன்று வேதங்களையும் படித்துத் தேர்ந்தவன். அவனிடம் கேட்கிறாள்,

“நம்முடைய குருகுலங்களில் இத்தனை கடுமையான விதிகள் தேவையா? “

“இப்படி இருக்க வேண்டும் என்பது கட்டாயமாகிவிட்டது. இதெல்லாம் ஒரு பெருமைக்கும், பிரபல்யத்துக்கும் தான். பிராமண இளைஞர்கள் தன்னொழுக்க நெறிகளில் கண்டிப்பானவர்கள் என்று மக்கள் நம்ப வேண்டும்தானே”

“குருவம்ச அரசர் என்னுடைய அப்பாவுக்கு தங்கம் வெள்ளி குதிரைகள் பூட்டிய ரதமும் குற்றேவலுக்கு அடிமைகள் என்று கொடுத்துக்கொண்டே இருக்கிறார். முன்பே வீட்டில் போதுமென்ற அளவுக்கு அடிமைகள் இருந்தாலும், இப்போதும் இன்னமும் மூன்று அடிமைகளை அவர் அனுப்பி இருக்கிறார். அவர்கள் வேலை வெட்டி இல்லாமல் இருக்கிறார்கள். வேலை இருந்தால் தானே நான் கொடுக்க முடியும் “

“பேசாமல் விற்று விடு, ஒரு அடிமையை விற்றால் 30 காசுகள் கிடைக்கும் “

“ஓ,அதெல்லாம் கூடாது. நம் பிராமணர்கள் மற்ற ஜனங்களை விட அதிகம் படித்திருக்கிறோம். நமக்கு கல்வி கற்க அதிக நேரம் இருக்கிறது. ஆனால், அடிமைகளின் வாழ்க்கையை நினைத்தால், வசிஷ்டர், பரத்வாஜர், ப்ருகு அங்கீகிரர் போன்ற முனிவர்கள் மீதும் பிரம்மா இந்திரன் வருணன் போன்ற தேவர்கள் மீதும் என் அப்பாவைப் போன்ற பணக்கார பிராமணர்கள் மீதும் எனக்கு வெறுப்பு தான் வருகிறது. எங்கே பார்த்தாலும் எதிலும் வியாபாரத்தனம், பேரம், ஆதாயம் பேராசை….

ஒரு நாள் என் அப்பா கருப்பு அடிமைப்பெண் ஒருத்தியின் கணவனை கோசல நாட்டு வியாபாரியிடம் 50 பொற்காசுகளுக்கு விற்று விட்டார். அவள் என் கையை பற்றிக் கொண்டு அழுது கெஞ்சினாள் என் அப்பாவிடம் மன்றாடினேன். ஆனால், அவரோ இத்தனை அடிமைகளை வைத்துக் கொள்ள வீட்டில் இடமில்லை. இவன் இங்கே இருப்பதால் நமக்கு என்ன பிரயோஜனம். என்று சொல்லிவிட்டார். அவர்கள் இருவரும் அன்று ராத்திரி முழுக்க ஹோவென்று அழுது கலங்கியதை நினைத்தால் இப்பவும் பயமாக இருக்கிறது. அவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு சின்ன பெண் அந்தக் குழந்தை பார்ப்பதற்கு அச்சு அசல் அவன் அப்பா மாதிரியே இருந்தது……காலையில் குழந்தை கண்விழித்ததில் இருந்து அழுகையை நிறுத்தவே இல்லை ஆனால் அந்தக் கணவனை ஒரு மனிதனாக மதிக்கப்படாமல் விலங்கைப்போல் விற்கப்பட்டு விட்டான்…. பிரம்மா அவனையும், அவனைப் போன்ற அடிமைகளையும் சந்தைப் பொருளாக விற்பதற்குத் தான் படைத்தாரா, என்று கேட்கத் தோன்றுகிற…பிரவாக என்னால் நம்பவே முடியவில்லை. உன்னைப் போல் மூன்று வேதங்களையும் நான் படித்திருக்கவில்லை. ஆனால், கேட்டிருக்கிறேன் கேட்டதை புரிந்து கொண்டிருக்கிறேன். உலகங்கள், சக்திகள் அவற்றின் வசீகரம் அல்லது பயங்கரம் இவ்வற்றை தவிர்த்து பொருற்படுத்தும் படியாக எதுவும் அவற்றில் இருக்கவில்லை “

வேதமும் பிரம்மமும் ஒன்றுமில்லாத குப்பை என்றும். அது ஊர் உலகத்தை ஏமாற்ற மட்டுமே என்பதை. தெளிவாக புரிய வைக்கிறது இந்த சிறிய உரையாடல்.

414 பக்கங்கள் கொண்ட இந்த நாவலில் நான் ஒரே ஒரு பக்கத்தை மட்டும் தான் உதாரணத்திற்கு வைத்திருக்கிறேன். ஒரு பானை சோற்றுக்கும் ஒரு சோறே பதம் என்பதைப் போல. இந்த ஒரு பக்கத்தை ஆய்வு செய்தாலே நமக்கு ஏராளமான புரிதல் ஏற்படுகிறது.

ஒரு கணவன்மனைவி குழந்தை உள்ள மூன்று அடிமைகளை பணக்கார பிராமணருக்கு இலவசமாக மன்னர் கொடுக்கிறார். அடிமைகள் தேவையில்லை என்றால் அவர்களுக்கு விடுதலை கொடுத்திருக்கலாம். ஆனால், அந்தப் பிராமணர் 50 பொற்காசுகளுக்கு விற்கிறார். விற்பவர், கணவன் மனைவி பிள்ளை மூன்று பேரையும் சேர்த்து விற்றிருக்கலாம். ஆனால், கணவனை மட்டும் விற்கிறார். 2700 வருடங்களுக்கு முன் நடந்தது என்று சித்தரித்தாலும், இப்போது நினைத்துப் பார்த்தாலும். நெஞ்சைப் பிசையத் தான் செய்கிறது.

இந்த நூல் எப்படிப்பட்டது, இதை ஏன் வாசிக்க வேண்டும் என்பதை இளைய தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்பதற்காகவே. என் நூல் வெளிவந்து எத்தனை ஆண்டுகளுக்கு பிறகும் இது வாசிக்க வேண்டிய அவசியத்தை புரிந்து கொண்டதாலும் இந்நூலின் அறிமுகத்தை நான் எழுதுகிறேன். நண்பர்கள் தோழர்கள், முக்கியமாக கம்யூனிஸ்டுகள் தீக, திமுகவினர் அவசியம் வாங்கி வாசித்து புரிந்து கொள்ள வேண்டும். வேண்டும் என்கிற, பேராவலுடன் எழத்தாளர் பொன் விக்ரம்

நூலின் தகவல்கள் : 

நூல் : வால்காவிலிருந்து கங்கை வரை
ஆசிரியர் : இராகுல சாங்கிருத்தியாயன்
தமிழில் : C.S.தேவநாதன்
விலை : ரூ . 450
வெளியீடு : நற்றிணை பதிப்பகம்
நூலைப் பெற : https://thamizhbooks.com/product/valkavilirunthu-kangai-varai/

நூல் அறிமுகம் எழுதியவர் : 


பொன் விக்ரம்

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *