கிரகங்களின் பள்ளத்தாக்கு (Valley of the Planets)
– ஏற்காடு இளங்கோ
லிபியா நாட்டின் தென்மேற்குப் பகுதியில் டாட்ராட் அகாகஸ் பாலைவனம் (Tadrart Acacus Desert) உள்ளது. இது லிபிய பாலைவனம் எனவும் அழைக்கப்படுகிறது. இது சுமார் 13,00,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இந்தப் பாலைவனத்தில் வான் டகுஃபி (Van Tkufi) என்று அழைக்கப்படும் பள்ளத்தாக்கு உள்ளது. இது காட் (Ghat) நகருக்கு அருகில் இடம் பெற்றுள்ளது.
பாலைவனம் என்றாலே முடிவில்லாத மணல், அதிக வெப்பம் என மக்கள் நினைப்பார்கள். ஆனால் லிபிய பாலைவனத்தில் காணப்படும் இயற்கை நிலப்பரப்பு பலரை வியக்க வைக்கிறது. இங்குள்ள வான் டகுஃபி பள்ளத்தாக்கில் கோள்கள் (Planets) மற்றும் வான் உடல்கள் (Celestial bodies) போன்ற அமைப்பு காணப்படுகிறது. ஆகவே இது கிரகங்களின் பள்ளத்தாக்கு (Valley of the Planets) என அழைக்கப்படுகிறது. இது லிபியாவின் பொக்கிஷங்களில் ஒன்றாக புகழப்படுகிறது.
இந்தப் பள்ளத்தாக்கு தண்ணீரோ, விவசாயமோ இல்லாத திடமானப் பாறை நிலத்தைக் கொண்டுள்ளது. இங்கு பெரிய பாறைகள் கிரகங்களின் வடிவத்தைப் பெற்றுள்ளன. ஒவ்வொரு பாறையின் சராசரி விட்டம் சுமார் 10 மீட்டராகும். ஒவ்வொரு பாறையும் உருண்டை வடிவமாக காணப்படுகிறது. சில பாறைகள் பெரிய வட்டு வடிவிலும் இருக்கிறது. இது சனிக் கிரகம் போலவும், சூரியனைச் சுற்றும் கிரகங்கள் போலவும் தெரிகிறது.
இந்தக் கோள்கள் போன்ற பாறைகள் சுமார் 30 கிலோமீட்டர் தூரத்திற்கு அருகருகே அடுக்கி வைக்கப்பட்டது போல் காணப்படுகின்றன. இவை அனைத்தும் மணலுடன் விண்வெளி மற்றும் அதன் பின்னணியைப் போலவே காட்சி தருகின்றன. இந்த இடத்தைப் பார்வையிடுபவர்களுக்கு விண்வெளியில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. மேலும் தாங்கள் வேறு ஒரு உலகத்திற்கு அடியெடுத்து வைத்தது போல் உணர்கிறார்கள்.
இந்தக் கோள வடிவங்கள் காற்று அரிப்புகளால் மில்லியன் கணக்கான ஆண்டுகளில் வடிவமைக்கப்பட்டவை ஆகும். இந்த இடம் விண்வெளியில் உள்ள கிரகங்களை ஒத்திருப்பதால் நாசா இந்த தளத்திற்கு அதன் வான் பொருள் (Celestial Name) பெயரையும் வழங்கியுள்ளது. இது போன்ற ஒரு அமைப்பு உலகில் வேறு எந்தப் பகுதியிலும் இல்லை. ஆகவே இது உலகின் மிகவும் விசித்திரமான அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
கட்டுரையாளர் :
– ஏற்காடு இளங்கோ
அறிவியல் எழுத்தாளர்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.