Valliyappan Messum Margareeta Pissavum Book By M. Ikbal Ahmad Bookreview By K. Ramesh. நூல் அறிமுகம்: மு. இக்பால் அகமதுவின் வள்ளியப்பன் மெஸ்ஸூம் மார்கரீட்டா பிஸ்ஸாவும் – கி. ரமேஷ்

பெயரே வித்தியாசமாக இருக்கிறது, இல்லையா?

நேற்றுதான் புத்தகத்தை வாங்கிக் கொண்டு வந்தேன். இதோ இன்று மதியம் முடித்தாகிவிட்டது. என்ன ஒரு ஓட்டம், என்ன ஒரு எழுத்து, என்ன கருத்துக்கள்! அசத்திவிட்டார் தோழர் இக்பால் அகமது. பல வருடங்களுக்கு முன்னாலேயே அவருடைய விசிறியாக அவர் யாரென்று தெரியாமலேயே மாறி விட்டவன் நான். அவர் எழுதிய ஒரு கட்டுரையைப் படித்து விட்டு, அதனால் தாக்கம் பெற்று அதைப் பல படிகள் எடுத்து விநியோகித்தேன்.  அவரது அனுமதி இல்லாமலேயே!  பினனால் ஒருமுறை பேசியபோது இதை அவர் நினைவு கூர்ந்து என்னிடம் சொன்னார்.  இப்போது இந்தப் புத்தகத்துக்காகக் காத்துக் கொண்டிருந்தேன்.  வாங்கினேன், படித்து முடித்தே விட்டேன்.

பல வண்ண மலர்கள்  ஒரே தோட்டத்தில் பூத்துக் குலுங்கினால் எப்படி நம்மை மறந்து அனுபவிப்போமோ, அப்படி அனுபவிக்க வைத்திருக்கும் கட்டுரைத் தொகுப்பு இந்தப் புத்தகம்.  இதைப் பூவானம் பூத்துலங்ஙே என்று முன்னுரையிலேயே தோழர் சுப்பாராவ் சுட்டிக் காட்டுகிறார்.  மதுரையைக் கலக்கிய அவரது முன்னுரையுடன் உள்ளே நுழைய, மேலும் மேலும் கலக்குகிறார் இக்பால்.

கங்கை நீராடலும் மானஸிதேவி கோவிலில் வேண்டுதலும் செய்து கட்டுரைத் தொகுப்பைத் தொடங்கும் இந்த ‘மனிதர்’, இமயமலைச் சாரலில் நம்மை மயக்கி விடுகிறார்.  ஹரித்வாரின் புராணம் தெரிய வேண்டுமா, இக்பாலின் கட்டுரையைப் படிக்கவும்!.  அவரது இந்தப் பயணத்தில் கூடவே எஸ்.பி.பி.யும், ஜேசுதாசும் பாடிக் கொண்டே செல்கிறார்கள். இந்தியாவைக் காப்பாற்று என்று மானசிதேவியிடம் மானசீகமாக வேண்டுகிறார் இந்த மனிதர்.

மனுஷன் அடுத்ததாக மதுரைக்காரர்களை ஏங்க வைக்கும் வேலையில் இறங்கி விடுகிறார்.  மதுரையின் ஒவ்வொரு தியேட்டராகச் சொல்லிக் கொண்டே வர, நான் அங்கு சிறு வயதில் பார்த்த படங்கள் நினைவுக்கு வந்து தொலைக்கின்றன.  தங்கம் தியேட்டரைப் பற்றிச் சொல்லும்போது, அங்கு மூன் ரேக்கருக்கு டிக்கெட் கிடைக்காமல் திரைக்கு அருகில் நின்று கொண்டே படம் பார்த்ததும், துரதிர்ஷ்டவசமாக, டைரக்டர் பீம்சிங்கின் கடைசிப் படத்துக்குப் போய்விட்டு அதில் மனம் லயிக்காமல் பாதியில் வெளியேறியதும் நினைவுக்கு வந்தது.  இன்னும் பல தியேட்டர்களை அவர் குறிப்பிடவில்லை.  விளாங்குடி டூரிங் தியேட்டரில் பார்த்த ‘அஞ்சல்பெட்டி 520’ஐ இன்னும் மறக்க முடியவில்லை.  எங்கள் பள்ளி மதுரைக்கல்லூரி மேல்நிலைப்பள்ளியின் சுவரை எகிறிக் குதித்தால் ரீகல் தியேட்டர்.

சொல்வது புரிகிறதா? அப்படியானால் சரி!  அங்கேதான் இ.எம்.எஸ்.சின் உரையைக் கூடக் கேட்டிருக்கிறேன்.  மொழிபெயர்ப்பவர் சொதப்ப, இ.எம்.எஸ். அதைப் புரிந்து கொண்டு மலையாளத்திலேயே பேச, எங்களுக்கு அனைவருக்கும் புரிந்து ரசித்தது நினைவுக்கு வருகிறது. மினிபிரியாவில்  என் பாட்டியுடன் போய் 16 வயதினிலே பார்த்ததும் நினைவுக்கு வருகிறது. அந்தத் தியேட்டர்கள் ஒவ்வொன்றாக மூடப்பட்டு திருமண மண்டபங்களாகவோ, குடியிருப்பகளாகவோ மாற்றப்படுவதை வருத்தத்துடன் பதிவு செய்கிறார்.

யேசுதாசின் குரல் என்று ஒரு கட்டுரை.  அதைத் தொடர்ந்து பறவைகள் குறித்து ஒன்று. அதில் இக்பாலின் கவிதை நுட்பம் வெளிவருகிறது. அடுத்து மணிப்பூரின் மக்களுக்காகக் குரல் கொடுக்கிறது ஒரு கட்டுரை.  

இன்று சிசி டிவியில் பார்த்து விரட்டி வேலை வாம்குவதை நூறாண்டுகளுக்கு முன்பாகவே கணித்து மாடர்ன் டைம்ஸ் என்ற படத்தை எடுத்த பெரும் கலைஞன் சார்லி சாப்ளின் பற்றியும், கார்க்கியின் தாய் என்ற காவியம் பற்றியும் ஒரு கட்டுரை.  அந்தப் படமும், தாய் நாவலும் இன்றும் பொருந்துபவையாக உள்ளன என்பது எவ்வளவு பெரிய தொலைநோக்கு!

ரயில் பயணம்?  அதில் கடந்து செல்லும் இயற்கைக் காட்சிகள்?  அதை ஒட்டிய கவிதை?  பயணம் செய்ய அழைக்கிறார் இக்பால்.

ரஷ்கின் பாண்ட் குறித்தும், அவரது ஊரான மிசோரி குறித்தும் எழுதும் போது அடடா, அப்படியே நம்முன் இமாச்சல பிரதேசம் விரிகிறது.  ரஷ்கின் பாண்ட் அவரது புத்தகத்தில் இதை விவரித்திருப்பதாக இக்பால் எழுதியதைப் பார்த்ததும் அதை எடுத்துப் படிக்க வைத்துக் கொண்டேன்.  இக்பாலின் வரிகளைப் பார்ப்போமே:

“மசூரி வாழ்க்கையுடன் பிணைந்த மலைகள், நதிகள், புற்கள், இமயமலைத் தொடர்களுக்கே சொந்தமான பெயர் தெரிந்த, தெரியாத மரங்கள், வண்ணமயமான மலர்கள், காற்றின் ஓசையை உணர முடியாத மலைவெளிகளில் ரகசியமாய் சலசலத்து ஓடும் நீரோடைகளின் மொழி, மழை, பனி, இளங்காலை இமயத்தின் வெயில், அணில்கள், லாங்கூர் குரங்குகள், எப்போதாவது யார் கண்ணிலும் பட்டும் படாமலும் மின்னல் போல் பாய்ந்து எதையாவது கவ்விக் கொண்டு ஓடிவிடும் சிறுத்தைகள், சடை வளர்த்து சோம்பித் திரியும் நாய்கள், லாண்டூரின் வளைந்து செல்லும் குறுகலான தெருக்கள், நூறாண்டுகளுக்கும் அதிகமான வயதுடைய கடைகள், அவ்வூரின் மக்கள், மால் ரோட்டின் வணிகம், வணிகர்கள், சுற்றுலாப் பயணிகள், தான் சந்தித்த, கடந்து செல்கின்ற மனிதர்களின் குணங்கள், மனங்கள் என மலை வாழ்க்கையின் ஒவ்வொரு நொடியையும் பூ மலரும் கவனத்துடன்’ ரஷ்கின் பதிவு செய்ததாக எழுதுகிறார் இக்பால்.  அட, இமயமலைக்கே போய் விட்டீர்களா?  கனவிலிருந்து விடுபடுங்கள்.

ரொட்டியின் கதையும் ரொட்டியை திருடுபவன் கதையும் என்ற தலைப்பில் ஒருபுறம் மேலும் மேலும் தொழிலாளர் நிலை தாழ, அம்பானியும் அதானியும் வளர்ந்த கதை விரிகிறது.  “ரொட்டிகளை பசிக்கென திருடுபவர்கள் உலகின் மரியாதைக்கு உரியவர்கள்” என்ற கவிதையுடன் கட்டுரை முடிகிறது.

இன்னும் பல கட்டுரைகள் என் மனதில் தைத்து அப்படியே ஒட்டிக் கொண்டு விட்டன.  இரண்டே நாளில் ஒரு புத்தகத்தை முடிக்க முடிகிறது என்றால் அது நம்மை ஈர்த்தால் மட்டுமே முடியும்.  என் மனதில் ஒட்டிக் கொண்டு என்னுள் இருக்கும் வாசகனை மயக்கித் தாலாட்டிய “வள்ளியப்பன் மெஸ்ஸூம், மார்கரீட்டா பிஸ்ஸாவும்” உங்களுக்காகவும் காத்திருக்கின்றன.  சமைத்த மு.இக்பால் அகமதுக்கு நன்றியும், வாழ்த்தும்.

நூல்: வள்ளியப்பன் மெஸ்ஸூம் மார்கரீட்டா பிஸ்ஸாவும்
ஆசிரியர்: மு. இக்பால் அகமது
வெளியீடு:  நோஷன் பிரஸ்
பக்கங்கள்: 186
அமேசானில் கிடைக்கிறது.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *