பெரியவர் வ.உ.சிதம்பரனார் முதன்மையாக நாட்டுப்பற்றில் முனைந்து செயல்பட்டு பிற்காலத்தில் மொழிப்பற்றில் சங்கமமாகி ஆறுதலடைந்தவர். அவர் வாழ்ந்த காலத்தில் தமிழ்நூல்கள் பதிப்பிக்கப் பெற்று தொடங்கி வளர்ந்து வந்த காலம். அந்த வகையில் வ.உ.சி.யும் சில நூல்களினை பதிப்பிக்க முயற்சிக்கிறார். தமிழ்ப்பதிப்பு வரலாற்றில் முதற் பதிப்பாளர் என்ற தகுதியையும் அடைகிறார். ஆம் திருக்குறளுக்கு மணக்குடவார் எழுதிய அறப்பால் உரையை 1917 ம் ஆண்டு முதண்மையாக பதிப்பித்த பெருமை இவரைச் சாரும். இந்த நூலின் பதிப்புரையில் பின்வருமாறு கூறுகிறார்.
”அப்பதின்மர் உரைகளில் தமிழ்நாட்டில் பயின்று வழங்குவது பரிமேலழகருரை ஒன்றே. அவ்வுரையைச் சில வருடங்களுக்கு முன்னர் யான் படிக்க தொடங்கினேன்.அப்பொழுது ஒன்பதின்மர் உரைகளையும் பார்க்க வேண்டுமென்னும் அவா எனக்கு உண்டாயிற்று. அது முதல் தமிழ் நூல்கள் இருக்கும் இடங்களில் அவற்றைத் தேடவும் தேடுவிக்கவும் முயன்றேன். அம்முயற்சியின் பயனாக எனக்கு கிடைத்தவற்றில் மணக்குடவருரைப் பிரதி ஒன்று.வள்ளுவர் கருத்துக்களைத் தெள்ளென விளக்குவதாகவும் இனிய செந்தமிழ் நடையில் எழுதப்பெற்றதாகவும் தோன்றிற்று. அது பற்றி யான் அச்சிட்டு வெளிப்படுத்தக் கருதி… எனது பிரதியில் ஸ்ருஷ்டி, ஸ்திதி ஸம்காரம் என்னும் மூன்றையும் புரிந்து மணக்குடவர் உரையை ஒருவாறு பூரணமாக்கி அச்சிற்கு கொடுத்தேன்”( வ.உ.சி. திருக்குறள் – மணக்குடவருரை – அறத்துப்பால், பதிப்புரை).
இந்தப் பதிப்பில் காகிதம் , மை, கட்டுநூல் முதலியனவெல்லாம் சுதேசியம் என்று குறிப்பிட்டார். இதுவும் பதிப்பில் செய்த முன்னோடி என குறிப்பிடலாம்.
திருக்குறள் அரங்கேற்றம்:
1935 ல் திருச்செந்தூர் திருக்குறள் மணக்குடவார் உரை வெளியீட்டு விழாவில் பல தமிழறிஞர்கள் கூடிய சபையில் அறுபத்து மூன்று வயதை தொட்ட வ.உ.சி. தம் ஆராய்ச்சியை ஆதாரங்களுடன் தெளிவாக விளக்கி கொண்டிருந்தார். மணக்குடவரே திருக்குறளின் முதல் உரையாசிரியர் என்றும், அவர் உரை பரிமேழகர் உரையினின்றும் எந்தெந்த இடங்களில் வேறுபட்டுள்ளன என்று எடுத்துக் காட்டினார்.
அறத்துப்பாலில் 74 இடங்களில் வேறுபட்டுள்ளது எனவும், அவற்றுள் தம் நூலில் 30 இடங்களில் முன் ஆசிரியர்கள் உரையை ஏற்று விளக்கியுள்ளதாகவும், எஞ்சிய 44 இடங்களில் தாம் கொண்ட கருத்தை விளக்கியுள்ளதாகவும் கூறினார். அவையோர் அனைவரும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த சூழலில் ஒரு வித்வான் திடீர் என எழுந்து பிள்ளையவர்களிடம் ஒரு வேண்டுகோள். தாங்கள் கூறிய விளக்கங்களுக்கு ஏதேனும் முன் ஆசிரியர்கள் ஆதாரம் உண்டா? இல்லையாயின் அவற்றை நாங்கள் எவ்வாறு ஏற்றுக் கொள்ளமுடியும்? என வினவினார். அதனை செவியுற்ற வ.உ.சி.யின் கண்களில் தீப்பொறி பறந்தன.அதனைக் கண்டு என்ன நடக்குமோ என்று அவையோர் அஞ்சினர். அவை எங்கும் அமைதி சூழ்ந்திருந்தது.
பெரியவர் வ.உ.சி. தனது கம்பீரமான குரலை உயர்த்தி “திருவள்ளுவர் யார் என்று உமக்குத் தெரியுமா? அவர் என் பாட்டனுக்கு பாட்டனார். அதனால் அவர் உணர்வை பெற்றுள்ளேன். அவர் உணர்வை நான் அறிவேன். அவர் உணர்வுக்கு மாறான கருத்துக்களை மாற்ற எனக்கு உரிமையுண்டு. அதற்கு ஓர் ஏட்டுப் பிரதி ஆதாரம் தேவையில்லை. உமக்கு அத்தகைய உரிமை கிடையாது அமரும்”. என்றார்.
அவையில் ஒரே மகிழ்ச்சி ஆரவாரம். கேள்வி கேட்டவர் குன்றிப் போய் இருந்த இடம் தெரியாது அமர்ந்து விட்டார். இந்த அரங்கேற்ற நிகழ்வை நேரில் கண்டவர் வ.உ.சி. உடன் இருந்த திருக்குறள் அட்டாவதானம் தி.ப. சுப்பிரமணியதாஸ்.
தம்பியுடையான் படைக்கஞ்சான்:
சந்திரசேகர பாவலர் என்ற புனைபெயரில் இராமாயணத்தின் ஆபாசம் என்ற தொடர் கட்டுரையை பெரியார் ஈ.வே.ரா நடத்திய குடியரசு இதழில் எழுதி வந்த்வர் இ.மு.சுப்பிரமணிய பிள்ளை. வ.உ.சி. திருக்குறள் பதிப்பிக்கும் பணியில் ஈடுபட்ட போது அச்சுப் பிழை திருத்திக் கொடுத்து உதவியவர் இவரே. வ.உ.சி. அவருக்கு எழுதிய கடிதத்தில் “திருக்குறள் சம்பந்தமான சில குறிப்புகளும் வினாக்களும் எழுதியிருந்தத திருத்தப்பட்ட புரூப்களைப் பார்த்து பேரானந்தம் அடைந்து “அறிவுடைய தம்பியுடையான் யார்க்கும் அஞ்சான் “ என்று உணர்கிறேன். இனித் திருக்குறளைப் பற்றி எப்புலவரும் எவ்வகையான குற்றங்களும் சொல்ல முடியாது என்று உணர்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
சுவாமி சகஜானந்தர் வ.உ.சி. அவர்களிடம் திருக்குறள் பயின்றவர். ராஜாஜியும் பயின்றார். ஆனால் வ.உ.சியிடம் ஒரு குணம் இருந்தது. ஒரு அதிகாரம் சொல்லிக் கொடுத்தப் பிறகு முழுமையாக மனனம் செய்து ஒப்புவித்தால் மட்டுமே அடுத்த பாடத்திற்கு செல்வார். ராஜாஜி குறள் பயின்ற போது இந்த நிபந்தனைக்கு உட்படாமல் இருந்ததால் வ.உ.சி உனக்குச் சொல்லி கொடுக்கும் அளவுக்கு எனக்கு பொறுமையும் இல்லை என்று மறுத்து விட்டார்.

திருக்குறள் ஏற்படுத்திய நட்பு:
1926 ம் ஆண்டு டி.கே.சிதம்பரநாத முதலியார் வீட்டில் வ.உ.சி. தனக்கே உரிய ஆவேச பேச்சினிடையே பரிமேலழகர் உரையில் பல இடங்களில் பிழை உள்ளது எனவும், முதல் நான்கு அதிகாரங்கள் வள்ளுவர் இயற்றியது அல்ல எனவும் கூறிய வேளையில் வையாபுரி பிள்ளை இடையே குறுக்கிட்டு உணர்ச்சிக்கு இடங் கொடாத படி பரிமேலழக்ர் உரையின் போக்கையும் சிறப்பையும் வலியுறுத்தி பேச, அந்த அணுகுமுறை வ.உ.சி.க்கு பிடித்துப் போய் அன்று முதல் வ.உ.சியின் பதிப்புப் பணியில் வையாபுரி பிள்ளையின் பங்களிப்புக்கும் காரணமாக இருந்தது.
காலத்திற்கேற்ற கருத்து மாற்றம்:
திருவள்ளுவர் ஒரு ஒப்பற்ற அறிஞர். நானும் அவரை கடவுள் என்றே போற்றுகிறேன். அவர் நூலில் வாளென்றும், வேல் என்றும் இருக்கிறதேயன்றி துப்பாக்கி என்றாவது பீரங்கி என்றாவது இல்லை. இப்பொழுது யுத்தத்திற்கு சாதனங்களாக துப்பாக்கியும் பீரங்கியும் இருக்கின்றன. யுத்தத்திற்கு செல்ல நேரிடின் என் செய்வது?. வள்ளுவர் துப்பாக்கி பீரங்கி குறித்து ஒன்றும் சொல்லவில்லையே என்று அச்சாதனங்களைக் கொண்டு போர் புரியாமல் இருப்பது எவ்வளவு மூடத்தனம். காலத்திற்கேற்ற மாற்றம் வேண்டும் எனப்திலும் கருத்து கொண்டிருந்தார் பெரியவர் வ.உ.சி.
புரட்சிகர புத்துரை:
தென்புலத்தார் என்பதற்கு ஏன் பிதுர்கள் என்று பொருள் கூற வேண்டும். வள்ளுவர் அவ்வாறு கூறினாரா? தென் – அழகிய புலத்தார் – அறிஞர்கள் அதவது தென்புலத்தார் கடன் எனபது ஞானிகள் விட்டுச் சென்ற வேலைகளை முடிக்க வேண்டும் எனப்து பொருளாகும் என புத்துரை அளிக்கிறார் வ.உ.சி. தென்புலத்தார் கடன் என்றாலே பிதுர்கடன் என்ற பெயரில் சிரார்த்தம் செய்து பிராமணர்களுக்கு அளிக்கப்படும் அரிசி, காய்கறி முதலியன வழங்குவது முன்னோர்களுக்குப் போய்ச் சேர்வது கிடையாது. அப்படியே முன்னோர்கள் (பிதுர்கள்) தங்கள் பிள்ளைகள் மூலம் வாங்கப் பிரியப்படுவார்களேயன்றி பிறர் மூலம் வாங்கமாட்டார்கள் என்று செட்டி நாட்டு சொற்பொழிவில் கூறுகிறார். இவரது திருக்குறள் உரையில் பல புரட்சிகரமான கருத்துக்களுடன் தனித்துவப்படுத்தி பார்க்கிறார்.
சுயசரிதையில் திருக்குறள்
பெரியவர் வ.உ.சி. சுயசரிதையில் கூறுகையில் “திருவள்ளுவரின் தெய்வமா மறையின் பெருவளக் குறள் சில பேணிப் படித்தேன்.
சிறையில் அனுமதி பெற்று கரும்பொருள்கொண்ட நம் வள்ளுவர் மறையும் மாண்புயர் நல்லாப்பிள்ளை பாரதமும் படித்தேன் என்கிறார்.
பெரியவர் வ.உ.சி. வாழ்வின் முதல் இலக்கிய சொற்பொழிவே தூத்துக்குடி சைவசித்தாந்த சபையில் 1904 ம் ஆண்டு திருக்குறளின் ஒழுக்கமுடைமை தலைப்பில் பேசியவர்.
பாடற்றிரட்டில் திருக்குறள்
தனது பாடல் திரட்டில் வள்ளுவன் வாக்கின்படி வாழ்வதை சத்தியப்பிரமாணம் எடுக்கும் பாடல் ஓட்டப்பிடாரம் அருகே குறுக்குசாலையிற் பாடிய பாடல் ஒன்றைக் காணமுடிகிறது.
“திருவள் ளுவனென்னுந் தெய்வீக வாசா
னருளுள்ளி யென்றென்று மன்பை – யொருநற்
பொருளென்னக் கொண்டு பொருளுண்மை கண்டு
தெருளுன்னி வாழ்வேன் றினம்.
இதன்படி அவர் வாழ்நாள் முழுமையிலும் வாழ்ந்து காட்டியதற்கான பல்வேறு குறட்கவிகள் அவர் வாழ்வில் பொருந்திப் போகிறது.
சிறையில் இருந்த போது தனது அன்னை, தந்தை, மனைவி அனைவருக்கும் அவர் எழுதிய கடிதங்களில் பாடல் வடிவில் ஊழ் மற்றும் விதி குறித்தும் திருக்குறள் பாடலை மேற்கோள் காட்டியுள்ளார்.
கோயமுத்தூர் சென்ட்ரல் ஜெயிலில் வ.உ.சி. சிறைவாசம் அனுபவித்த போது மனைவி மீனாட்சி அம்மாளும் , வ.உ.சி.யின் வேதாந்த நண்பரான வள்ளிநாயக சுவாமிகளும் சிறையில் சந்திக்கின்றனர். குடும்ப குசலங்கள் விசாரித்து விட்டு அச் சமயம் நடந்த சம்பாசணையின் போது வ.உ.சி. திருக்குறள் மேன்மை குறித்து கூறுகிறார்.
“ தமிழர்களெல்லாரும் வள்ளுவர் குறளை உரையுடன் அறிந்து பாராயணம் செய்தல் வேண்டும். 1330 குறளையும் பொருளுடன் உணர்ந்திலாத தமிழர் முற்றுந் துறந்த முனிவரேயாயினும்,என்னைப் பெற்ற தந்தையேயாயினும், யான் பெற்ற மக்களே யாயினும் யான் அவரைப் பூர்த்தியாக மதிப்பதுமில்லை;நேசிப்பதுமில்லை என்று குறிப்பிடுகிறார். இக் கூற்று 1910ல் கர்மயோகி இதழில் வெளியானது.
கோவையில் வசித்த காலத்தில் தியாசபிகல் மன்றத்தில் ஞாயிறு தோறும் திருக்குறள் வகுப்பு சொற்பொழிவை நிகழ்த்தியவர்.
கரிசல்காட்டு திருக்குறட் ஆய்வாளர்கள்
திருக்குறள் படி நடந்து ஆய்வு செய்து சதா திருக்குறள் இன்பத்தை முகர்ந்து முடிந்த வரை அதன்படி நடக்க முயற்சித்த கரிசல் காட்டு திருக்குறட் ஆய்வாளர்கள் இருவர் . ஒருவர் பெரியவர் வ.உ.சிதம்பரனார். மற்றொருவர் கவிராயர் செகவீரபாண்டியனார். வ.உ.சிதம்பரனார் உடல் நலிந்து இறப்பதற்கு முன்பாக செகவீரபாண்டியனார் தனது நண்பர் வ.உ.சிதம்பரனாரைச் சந்திக்கிறார்.
மரணப்படுக்கையில் கிடந்த வ.உ.சிதம்பரனார் செகவீரபாண்டியனாரை நோக்கி தளுதளுத்த குரலில் இவ்வூரில் இருவர் இருந்தோம். ஒருவன் செல்கிறேன் என்றார். அதாவது திருக்குறள் ஆராய்ச்சியில் வ.உ.சிதம்பரனாரும் கவிராயர் செகவீரபாண்டியனாரும் பரஸ்பர ஆராய்ச்சி நோக்கில் விவாதிப்பதும் அதன்படி வாழவும் முயற்சித்தவர்கள். திருக்குறள் மூலம் கதியின்பம் அடைந்தவர்கள் பெரியவர் வ.உ.சிதம்பரனார் மற்றும் கவிராயர் செகவீரபாண்டியனார்.

வள்ளுவமாய் வாழ்ந்த பெரியவர் வ.உ.சி.:
தனது குழந்தைகளினை காலையில் எழுப்ப “ மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்” என்ற குறளை ராகத்துடன் படிக்க உடனே தூக்கத்தில் இருக்கும் அனைத்துக் குழந்தைகளும் எழுந்து விடுவார்கள் என்று அவரது மகன் தனது அப்பா குறித்த நினைவலைகளில் பதிவு செய்துள்ளார். அவரது வீட்டில் எப்பொழுதும் திருக்குறள் வகுப்பு நடத்தி விட்டு சுண்டல் கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார். பெருமுயற்சியின் விளைவாக ஆங்கிலேயர்களை அடக்க வேண்டுமெனில் சொந்தமாக கப்பல் வாங்க முயற்சி செய்த போது மும்பைக்குச் செல்கிறார். மும்பைக்கு புறப்ப்டும் முனபு கப்பலுடன் திரும்புவேன் அல்லது கடலில் வீழ்ந்து மாய்வேன் என்று சூளுரைத்து விட்டுச் சென்றார்.
“கப்பலுடன் வாரேனேல் காண்பீர்கள் என்பிணத்தை
இப்படியோர் சூளுரைத்த தேனோ சிதம்பரனார்?
”எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியர்
திண்ணியர் ஆகப் பெறின்” என்ற குறள் வரி அப்படியே பொருந்துகிறது.
ஒருவன் துன்பத்தையே இன்பமாக கொள்வானாயின் பகைவர்களும் அவனை மதிப்பர் என்பது வள்ளுவரின் வாக்கு. வெஞ்சிறையில் ஏனோ விலங்கு போல செக்கிழுத்தார் நெஞ்சுரத்தில் இவருக்கு நிகர் யார்?
இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகும்தன்
ஒன்னார் விழையும் சிறப்பு.
அதே போன்று வ.உ.சி.யின் முதல் மனைவி வள்ளியம்மையை குறிப்பிடும் போது வள்ளுவர் குறளை வளனுறப் படித்துக் கொள்ளும் விதத்தில் கூறுவள் உரையுடன்” என்று பதிவிடுகிறார். இதன் மூலம் தனது மனைவிக்கும் திருக்குறள் மீதான ஈடுபாட்டை தெள்ளென விளக்குகிறார்.
செய்நன்றி அறிதல் குறளுக்கு தம் வாழ்விலும், இல்வாழ்க்கையிலும் எந்தெந்த சமயத்தில் யாரெல்லாம் உதவி செய்தார்களோ அவர்களை மறக்காமல் நன்றியறிதலை காட்டி நமக்கு முன்னோடியாக வாழ்ந்து காட்டினார் வ.உ.சி. கப்பல் கம்பெனிக்கு தொண்டாற்றிய சி.த. ஆறுமுகம் பிள்ளை, கோவைச் சிறையில் பல உதவிகளைச் செய்த சி.கே.சுப்பிரமணிய முதலியார், தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்த தில்லையாடி வேதியன்பிள்ளை செய்த தக்க உதவிகள், சிறைத் தண்டனையால் தனது வழக்கறிஞர் சன்னத் திரும்ப கிடைக்க வழி செய்திட்ட வாலஸ் என்னும் ஆங்கிலேயர் எல்லோரயும் ஞாபகப்படுத்தும் விதமாக தனது குழந்தைச் செல்வங்களுக்கு பெயரிட்டு தனது நன்றி உணர்ச்சியைக் காட்டி வள்ளுவ்னின் வாய்மையை வேதமெனக் கொண்டு வாழ்ந்து காட்டினார்.
அவருடைய அரசியல் குருநாதர் திலகர் பகவத் கீதைக்கு உரை எழுதியவர். திலகரின் சீடரோ இவர் திருக்குறளுக்கு உரை கண்டார்.
சிறையில் இருந்தபோது பாமரர்களான சாமான்ய கைதிகளும் புரியும்படியாக திருக்குறள் சாராம்சத்தை ஆத்திசூடி பாணியில் மெய்யறம் படைத்து திருக்குறளுக்கு வழிநூலாக தமிழுலகத்திற்கு கொடையளித்தார்.
1927 ல் சேலம் மாநாட்டில் பெரியவர் வ.உ.சி. வழங்கிய ”அரசியல் பெருஞ்சொல்” சொற்பொழிவு முழுமையும் நெல்மணிகளைப் போல் திருக்குறளை மிகவும் ஆழமாகவும், பரவலாக பயன்படுத்தியிருப்பார். வ.உ.சி.க்கு மிகவும் பிடித்த குறளும் அடிக்கடி பயன்படுத்தும் குறள் “ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவி இன்றித் தாழாது உஞற்றுபவர்” என்ற குறள்.
செல்வம் நிலையாமை குறளுக்கு தன் வாழ்வின் அனுபவத்திலிருந்து கூறல்:
தூத்துக்குடி வீட்டில் வசித்திருந்த சூழலில் சில மாணவர்களுக்கு திருக்குறள் வகுப்பினை எடுத்து வந்தார். செல்வம் நிலையாமை அதிகாரம் சொல்லி கொடுத்து வரும் வேளையில் பல்வேறு உரை மூலமாக அர்த்தப்படுத்திக் கொண்டிருந்தார். ” ஒரு மாணவன் எழுந்து செல்வம் நிலையாமை குறித்து தங்களது சொந்த கருத்து என்ன எனக் கேட்கிறான்”.
வசதி மிக்க வக்கீல் பரம்பரை குடும்பம். கப்பலை விட்டு ஆங்கிலேயர்களுடைய அடிவயிற்றை கலக்கியவர். கோரல் மில் போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர் குடும்பங்களுக்கு போராட்டக் காலங்களில் அன்னமிட்டு தனது சொத்துக்களை இழந்தவர்.
அவர் கொண்ட சுதேசிய கொள்கை பிடிப்பால் வருமானமிழந்து வறுமையான சூழலில் கேட்கப்படும் கேள்வி இது. அந்த நேரம் வ.உ.சி. சன்னல் வெளியே பார்க்கிறார். தனது மனைவி வீட்டின் சுற்றுச் சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த எரு வரட்டிகளைப் பிய்த்து கொண்டிருப்பதை காண்கிறார்..
கேள்வி கேட்ட மாணவனைப் பார்த்து “அம்மா என்ன செய்கிறார் என்று தெரிகிறதா?” என வ.உ.சி. கேட்கிறார். மாணவருக்கு அவர் எரு வரட்டியை பிய்த்து எடுத்துக் கொண்டிருப்பதை தவிர வேறொன்றும் தெரியவில்லை என்கிறான். அச்சமயம் வ.உ.சி. அந்த மாணவனிடம் கூறியதாவது
“இன்றைய வீட்டுச் சாப்பாட்டிற்கான பணத்தேவைக்கு விற்பனை செய்வதற்காக அம்மா வரட்டியை எடுத்துக் கொண்டிருக்கிறாள்” என்கிறார். மாணவன் கலங்கிப் போய் வ.உ.சி.யின் முகத்தைப் பார்க்கிறான். பின்பு தொடர்கிறார். “ இதுதானப்பா நீ கேட்ட செல்வம் நிலையாமை” குறித்த எனது சொந்த கருத்து என்றாராம். (கள ஆய்வு தகவல் – குருசாமி மயில்வாகனன்)
முடிந்த வரை திருக்குறள் படி நடக்க முயற்சித்தவர். அவரது வாழ்வில் மேற்குறித்த செல்வம் நிலையாமையைக் குறிக்க எப்படி தனது வாழ்க்கையையே விளக்கமளித்தாரோ அப்படித்தான் திருக்குறள் படி வாழ்ந்த ஆளுமை இவர்.

தமிழ்ப் பணிக்காக வ.உ.சி. பெயரில் விருது பரிந்துரைக்கலாமே?
தமிழக அரசு திருவள்ளுவர் திருநாள் விருதுகளாக திருவள்ளுவர் முதல் பாரதி, பாரதிதாசன்,திரு.வி.க.,காமராசர், பெரியார், அண்ணா, கி.ஆ.பெ., சித்திரை புத்தாண்டு விருதுகளாக கபிலர், தொல்காப்பியர், உ.வே.சா, கம்பர், சொல்லின் செல்வர், உமறுப்புலவர், ஜி.யூ.போப், இளங்கோவடிகள், சிங்காரவேலர்,மறைமலையடிகள், அயோத்திதாசர், வள்ளலார், காரைக்கால் அம்மையார், சி.பா. ஆதித்த்னார், அம்மா விருது இது போன்ற பல்வேறு ஆளுமைகளின் பெயரில் விருது வழங்கும் தமிழக அரசு பட்டியலில் தன் வாழ்நாள் முழுவதும் திருக்குறளையும், தொல்காப்பியத்தையும் இரண்டு கண்களாக போற்றி அழகுற பதிப்பிக்கச் செய்த பெரியவர் வ.உ.சி. பெயரில் தமிழக அரசு விருது பட்டியலை ஒன்று உருவாக்கி வரும் 150 ஆம் ஆண்டை வ.உ.சிதம்பரனாரைச் சிறப்பிக்கச் செய்யலாம். வீராவேசமாக பேசலாம். வாய்க்கு வந்தபடி எழுதிவிடலாம். ஆனால் சொல்லியபடி செயல்படுத்தியும், திருக்குறள்படி வாழ்ந்து காட்டியும் வாய்மை நிறைந்த கர்ம வீரரை திருவள்ளுவர் தினத்தில் நினைவு கொள்வோம்.
கட்டுரையாளர் குறிப்பு: ரெங்கையா முருகன்
19ஆம் நூற்றாண்டு தமிழ் ஆளுமைகள், அச்சு ஊடகப் பண்பாடு, பழங்குடிகள் மற்றும் வெகுசன கலாச்சாரம் குறித்து ஆய்வு செய்து வருகிறவர். ‘அனுபவங்களின் நிழல் பாதை’ எனும் நூலின் ஆசிரியரான இவர், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் இணை நூலகராகப் பணிபுரிந்து வருகிறார்.
நன்றி: மின்னம்பலம் இணைய இதழ்
Leave a Reply
View Comments