வான் நிலா தான் தேயும்…… – ஆதி சக்திவேல்

வான் நிலா தான் தேயும்…… – ஆதி சக்திவேல்

 

உன் பாடல்கள்  

தன்னில் மிதந்து பரவியதில்

கவுரவப்பட்ட காற்று- இன்று

கவலைப்பட்டு கலங்கி நிற்கிறது

உன் மறைவுச் செய்தி

அதனில் பரவியதை எண்ணி

 

இசை

தன் சுரம் இழந்து அழுகிறது -தமிழகமோ

தன் இசைக்கரம் இழந்து துடிக்கிறது

 

வான் நிலா தான் தேயும் – எங்கள்

பாடும் நிலா அல்ல என்றிருந்தோம்  

வாடும்  எங்களை யார் தேற்றுவர் -மொத்த

நாடும்  உனைப் பறி கொடுத்துப் பதறும்

இவ்வேளையில்    

 

ஒளி மறையத்தான் 

இருளில் மூழ்கிடும் உலகம்

ஒலி மறைய – உன் பாடல் 

ஒலி மறைய

காரிருளில் மூழ்கியதே அது இன்று

 

இன்று

இசை அரசி

கருப்புச் சேலையை

உடுத்துக் கொண்டிருப்பாள்

உனை  இழந்த பெருஞ்சோகத்தில்

 

திரையில்

காதல் காட்சிகளில்   

நீ பாடிய பாடல்களே

காதலிக்கக் கற்றுக் கொடுத்தன    

 

சோகக் காட்சிகளில் 

நீ பாடிய பாடல்களே

கண்ணீர் வடித்து அழ வைத்தன

 

கோப பாவத்துடன்

நீ பாடிய பாடல்கள்

தீ சிந்தின

 

கொஞ்சிக் கொஞ்சி

நீ பாடிய பாடல்கள்

தேன் சிந்தின

 

இரக்கமற்ற

உறக்க தேவதையை

படுக்கையறைக்கு

கைப் பிடித்து அழைத்து வந்த 

உன் பாடல்களில்

அத்தேவதையோடு

உறங்கியோர் ஒரு கோடி- மனம் கிறங்கியோர்  பல கோடி

தினம் தினம் 

 

வந்தோரை வாழ வைக்கும்

தமிழகத்தில்

தமிழ்த் திரைப் பாடலை

இங்கு  வந்த நீ வாழ வைக்க

நின்றது அத்தமிழகமே சொக்கிப்போய்

உன் பின்னால்

இன்றும்

தமிழகம் உன் பின்னால்…….

கையில் இரங்கல் மலர் வளையங்கள்  ஏந்தி 

கண்ணில் மாலையாய்  மாலையாய் நீர் கோத்து

மண்ணில் இசைப் பேழையைப்

புதைத்து வர 

 

ஏழு சுரங்களில் வாழ்ந்த நீ

உன் பாடல்களில்

ஈரேழு தலைமுறைகள் வாழ்வாய்

 

“இறுதி விருப்பம் – உன்

இறுதி விருப்பம் எது?”என

யாரும் எனைக் கேட்டிடின்

“என் தலைமாட்டில்

உன் பாடல்களை

ஒலிக்க விடுங்கள்” என்றிடுவேன்

காற்றினில் உன் பாடல்கள்

கரைவதுபோல்

உன் பாடல்களில்

என் உயிர் கரையட்டுமே

என்ற ஆசையில்

 

ஆதி சக்திவேல்

Show 1 Comment

1 Comment

  1. பா.அசோக்குமார்

    அருமை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *