vana paadhukaapu sattamum thiruththa masodha 2023-m vanagalai paadhukaakuma? - r.paari வன பாதுகாப்புச் சட்டமும், திருத்த மசோதா 2023-ம் வனங்களை பாதுகாக்குமா? - இரா.பாரி
vana paadhukaapu sattamum thiruththa masodha 2023-m vanagalai paadhukaakuma? - r.paari வன பாதுகாப்புச் சட்டமும், திருத்த மசோதா 2023-ம் வனங்களை பாதுகாக்குமா? - இரா.பாரி

வன பாதுகாப்புச் சட்டமும், திருத்த மசோதா 2023-ம் வனங்களை பாதுகாக்குமா? – இரா.பாரி

இந்தியாவில் வனங்கள், வனவிலங்குகள், பறவைகள், அவைகளின் வாழிடங்களை பாதுகாக்கும் நோக்கத்திற்காக வனப் பாதுகாப்புச் சட்டம் 1972ல் நிறைவேற்றப்பட்டது. வனப் பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதா 2023, அறிவியல், வனம், தொழில் நுட்ப நிலைக் குழுவிற்கு அரசியல் காரணங்களால் அனுப்பாமல், நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு அனுப்பப்பட்டது. தற்போது மக்கள் கருத்துக் கேட்புக்கும் முன்வைக்கப்பட்டுள்ளது, 2021 இல் மாநில அரசுகளின் கருத்துக்கும் பகிரப்பட்டது.

இம்மசோதா, முன்னுரையில் தேசிய இலக்கான 2070 – ம் ஆண்டில் கரிம வாயுக்கள் நிகர பூஜ்ஜிய உமிழ்வு அடைதல், சுற்றுச்சூழல் சமநிலை அடைதல், வனக்கலாச்சாரப் பாரம்பரியத்தை மேம்படுத்தல், பொருளாதாரத் தேவைகளை நிறைவு செய்வதை இலக்குகளாக முன்மொழிந்துள்ளன.

புலிகள் திட்டம் ( ப்ராஜெக்ட் டைகர்) 1973 இல் துவங்கி ஐம்பதாம் ஆண்டு நிறைவில் திருத்த மசோதா முன்வைக்கப்பட்டுள்ளது.

வனப்பாதுகாப்புச் சட்டத்தின் வெற்றியாகப் பாதுகாக்கப்பட்ட வனப்பரப்பு அதிகரித்தது அங்கீகரிக்கப்படுகிறது .1972 ஆண்டில்10 லட்சம் ஹெக்டர் பரப்பளவு வனப் பாதுகாப்புப் பகுதிகள் எண்ணிக்கை 65 யில் இருந்து 1.74 கோடி ஹெக்டர் பரப்பளவில் 998ஆக அதிகரித்தன. புலிகள் காப்பிடங்கள் 9 லிருந்து 54 ஆக அதிகரித்தன. இது புலிகளையும், அதன் இரைகளையும் அதிகரிக்கச் செய்தன. 1973 இல் புலிகள் எண்ணிக்கை 2000 இருந்து 2023 ஆண்டில் 3167 ஆக அதிகரித்தன. பெருமளவிலான நிதிசார்ந்த நடவடிக்கைகள், வனம் சார் தொழில் இழப்புகள், உற்பத்தி நிலம் இழப்புகள் திட்டத்தின் வெற்றியைக் கேள்விக்குள்ளாக்குகின்றன. எழுந்துள்ள உரிமை மீறல்கள், அடிப்படைப் பிரச்சினைகள் இவ்வெற்றியின் மூலம் மூடி மறைக்கப்படுகின்றன.

வனப் பாதுகாப்புச் சட்டம், அட்டவணை 1-ல் அழிவின் விளிம்பில் உள்ள உயிரினங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இவ்வினங்கள் குறித்தான 2019ம் ஆண்டு ஆய்வு முடிவுகள் இரு கேள்விக்குப் பதில் அளித்துள்ளன. ஒன்று, அட்டவணையில் உயிரினங்களை இணைத்ததால் அதன் அழிவு (சிவப்பு) பட்டியலில் மாற்றம் ஏற்பட்டதா? இரண்டு, நீண்டக்கால இனங்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட மாற்றம் என்ன? 43 பாலூட்டி இனங்களில் 37 அபாய நிலையிலும் 32 இனங்கள் குறைந்தும், 6 இனங்கள் மட்டுமே நிலையாக உள்ளன. இணைத்துள்ள 22 பறவை இனங்களும் நல்ல நிலையிலோ, முன்னேற்றமோ ஏற்படவில்லை. புலிக் காப்பகங்கள் 13ல் 50 சதம் வாழிடம் குறைந்துள்ளன, காப்பகங்களின் நீண்டக்கால உயிராற்றல் நிலைத்தன்மை, செடி, கொடிகள் வளரும் சூழல் இழந்த நிலைமைகள் புலிக் காப்பகங்கள் உருவாக்குவதை முடிவுக்கு கொண்டு வருகின்றன.

மசோதாவின் விலகல்கள் :

இம்மசோதா காட்டுப்பகுதியில் ஆய்வுகள் மேற்கொள்ளுதல், பாதுகாப்பு திட்டங்கள், சாலைகள்- ரயில்பாதைக் கட்டமைப்புகள், வேவுப் பணிகள் வனம் சாரா நடவடிக்கை அல்ல என்கிறது. இதனால், வனத் திட்டங்களுக்குத் தாக்க மதிப்பாய்வு (Impact Assessment) தேவையற்றதாகிறது. மாநில வாரியத் தலையீட்டைத் தடுக்கின்றன.

இச்செயல் வனம்சாராத் திட்டங்களுக்கும், சுரங்கங்களுக்கும், அனுமதிக்கும் விதிகளை நிபந்தனைகளைப் பரிந்துரைக்கும் அதீத அதிகாரத்தை மத்திய அரசுக்கு அளிக்கிறது. வனப்பாதுகாப்புச் சட்டம் 1980 இல் செயல்பாட்டுக்கு வந்ததிலிருந்து வனங்களில் வனம் சாராப் பயன்பாட்டிற்கு மத்திய அரசிடம் ஒப்புதல் பெறவேண்டும் என்றானது. 1976 ஆண்டு இந்திய அரசமைப்பின் 42வது திருத்தம் காட்டின் பொறுப்பு மாநிலத்திடம் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றியது.

காடுகளில் செல்லும் ரயில்பாதைகள் – சாலைகள் ஒட்டி 0.10 ha(10000 சதுர அடிக்கு மேல்)ஹெக்டர் நிலமும், சர்வதேச எல்லை, கட்டுப்பாட்டு கோட்டுப் LCO பகுதியில் 100 ha ஹெக்டர் காட்டுப் பகுதியும், பாதுகாப்பு மேம்பாட்டிற்கு 10 ஹெக்டர் வனநிலமும் அனுமதிக்கப்படுகிறது. சாலை,ரயில் பாதை ஒட்டி 0.10 ஹெக்டர் அளவிடும் முறையைப் பற்றிச் சட்டம் குறிப்பிடவில்லை. இது வனங்கள் துண்டாடுவது அதிகரிக்கும், விலங்குகள் நகர்வைத் தடுக்கும், வனஉயிர் வாழிடங்களில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும், மொத்த உயிர் பன்மயமும் பாதிக்கும்.

மசோதா பிரிவு 2, காடுவளர்ப்பு, காட்டுப் பயணம், சூழலியல் சுற்றுலாக்கள் அமைக்க மத்திய அரசிடமிருந்து அனுமதி பெற விலக்களிக்கின்றன. சூழல்சுற்றுலா என்ற வார்த்தையை வரையறுப்பது கடினமானது. இது, காட்டுப்பகுதியில் வணிக நடவடிக்கைகளைக் கொண்டு வரும், காட்டின் நில அமைப்பில், காட்டுச்சூழல் அமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்தும், சிடூர் போன்ற இடங்களில் யானைகளின் வழித்தடங்களை பாதிக்கும், 18,000 ம் அதிகமான பழங்குடி குடும்பங்களை வெளியேற்றி எக்கோ டூரிசம் சுற்றுலாப் பயணிகளை அனுமதிப்பதை எவ்வாறு வனப்பாதுகாப்பை அதிகரிக்க உதவும். பழங்குடிகளையும், வனஉயிர்களையும், காட்டையும் ஒருங்கிணைந்த தன்மையிலிருந்து அந்நியப்படுத்துவது அறிவியலுக்கு புறம்பானதாகும்.

2021 ஆம் ஆண்டு, வனவிலங்குகள் தேசிய ஆணையம் 14 ஆயிரம் ஹெக்டர் பரப்புள்ள 4 வனஉயிர் சரணாலயங்களுக்குப் பாதுகாக்கப்பட்ட பகுதியில் இருந்து விலக்கு அளித்தன. கலாத்தி வளைகுடா,அந்தமான் நிக்கோபார் தீவின் மெகபொடி சரணாலயங்களுக்கு முழு விலக்கு அளிக்கப்பட்டன. உச்சநீதிமன்றம் 2000ம் ஆண்டு சூழல் சாராத் திட்டங்களுக்கு வனநிலங்களை மாற்றுவது குற்றம் என ஆணையிட்டு பாதுகாக்கப்பட்ட நிலங்களை விலக்களிப்பிலிருந்து தடுத்தது. இந்தியாவில் காடுகள், இயற்கைச் சூழல் அமைப்புகள், தொடர்ச்சியாத் துண்டாடப்பட்டுத் தரம் இழக்கிறது. வனஉயிரிகளுக்குப் புதிய இடங்கள் தேடுவது அவசியமாகின்றன. இது மனிதனுக்கும், விலங்குகளுக்குமான முரணை அதிகரிக்கிறது.

சட்டத் திருத்தம் வனப்பகுதிகளை அழித்து மரங்கள் நடுதல்,தேயிலை, ரப்பர், காபி மூலிகைச் செடிகள், கிராம்பு, ஏலம் பயிரிட வகைமாற்றம் செய்கிறது. வனங்களை, பசுமை வெளிகளிலிருந்து வேறுபடுத்திப் பார்க்கத் தவறுகிறது. நீலகிரியின் சோலா புல்வெளி, சதுப்பு நிலங்கள், பாலைவனங்கள் சுழல் அமைப்புகளில் மரங்கள் நடுவதின் மூலம் கடுமையாகப் பாதிக்கச் செய்யும். நீலகிரி உயிர் பன்மையத்தில் கண்டறியப்பட்ட வகையில் 3300 பூக்கும்தாவர இனங்கள் உள்ளன. 132 உயிரினங்களுக்கு இப்பகுதி மட்டும் (endemic) உலக வாழிடமாக உள்ளன.ஒவ்வொரு நில அமைப்பும் தனித்துவமானது, இப்பகுதிகளை உயிர் வாழிடங்களாகக் கொண்ட இனங்கள் முற்றிலும் அழியும், பல்லுயிர் தன்மைக் குலையும்.

மேலும், நவீன தொழில்நுட்பத்தினால் வனங்களுக்கு வெளியே
ஆழ்துளையிட்டு வனங்கள் அடியில் உள்ள எண்ணை, வாயுக்கள், கனிமங்கள், தாதுக்கள், மண்ணையும், நீரையும் பாதிக்காது, வனத்தை, வனநிலத்தைச் சார்ந்து எடுக்க அனுமதிக்கிறது. கனிமங்கள், தாதுக்கள் எடுக்க வனங்கள் துளையிடுவதை எவ்வாறு வனம்சார், வனப்பாதுகாப்பு நடவடிக்கையாகும். தமிழ்நாட்டில் சேலம் கல்வராயன் மலை, மேற்கு மலைத்தொடர், கன்னியாகுமரி மாவட்ட வனங்கள் தவறாகப் பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளது. இத்தகைய தொழில்நுட்பங்கள் குறித்துச் சட்டம் மவுனம் சாதிக்கிறது.

வன உரிமைச் சட்டம் 2006 கிராம சபைக்கும், உள்ளூர் மக்களுக்கும் வனங்கள், வனஉயிரிகள், பல்லுயிர்கள் பாதுகாக்கும் அதிகாரம் அளித்தது. திட்டங்களுக்கு வனத்துறை அனுமதியும், கிராம சபை ஒப்புதல் பெறுவதும் கட்டாயமானது. திருத்த மசோதா பழங்குடிகளின் உரிமையை, ஒப்புதல் பெரும் தேவையை நீக்குகிறது. இச்செயல் காடுகளின் பாதுகாப்பையும், பாரம்பரிய மதிப்பீடுகளையும் உயர்த்துவதற்கு எவ்வாறு உதவும். உள்ளூர் மக்களை அதிகாரப்படுத்துவதாலே மீதமுள்ள வனங்களை தக்கவைத்து, பாதுகாக்க முடியும்.

பெரும் தொழில் முதலீட்டின் விழைவுகளைப் பூர்த்திச் செய்யும் பொருளாதாரம் சார்ந்த சட்டத்திருத்தங்களாகவே மசோதா உள்ளது. இச்சட்டம் நடைமுறைக்கு வருகையில் இந்திய வனங்களின் ஒருமைப்பாட்டை வலுப்படுத்துமா என்ற கேள்வி தொக்கி நிற்கிறது.

வனப் பாதுகாப்புச் சட்டத்தின் போதாமைகள் :

இந்திய வனப் பாதுகாப்பின் மையத்திட்டம் கவர்ச்சியான பெரிய விலங்குகளுக்கு முன்னுரிமை அளிக்கின்றன. இயற்கையின் பலன்கள், சேவைகள் மனிதனுக்குக் கிடைப்பதில் முக்கியப் பங்களிக்கும் பிற இனங்களை ஒதுக்குகின்றன. சூழல் பாதுகாப்பு விளைவானது அரிதானவைகளில் இருந்து அதிகம் நிறைந்துள்ள இனங்களை கவனப்படுத்துவது மனித வாழ்விற்கு முக்கியமானதாகும். குறிப்பாக, கிராம ஏழைகள், விளிம்பு நிலை மக்கள் உயிர் பன்மயத்தில் அதிகளவு உள்ள மரங்கள், நத்தைகள், மீன்கள், பூச்சிகள், பாம்புகள், தவளைகள் சார்ந்திருக்க வாய்ப்பளிக்கின்றன. இத்தகைய இனங்களால் மனிதனின் வாழ்க்கைக்கும்,தொழிலுக்குமான உயிர் ஆதாரங்களையும், உணவு, வருவாய், மகரந்தச் சேர்க்கைக்கும், கரிமவாய்வு பிடித்து வைக்க, நீரைப் பாதுகாக்க, அழகை, புத்துணர்ச்சியை, மகிழ்ச்சியை வழங்குகின்றன.

வனப் பாதுகாப்பின் மைய அணுகுமுறை மரங்களைப் பாதுகாப்பதாக உள்ளது. மரங்கள் பாதுகாக்கும் நோக்கத்திற்காக, சூழலியலாளர்களால்
வனச்சட்டம் விமர்சிக்கப்படுகிறது. இது மனிதனுக்கும், இயற்கைக்கும் உண்மையான, கற்பனையான தடுப்புகளைத் திணிக்கின்றன.
தரம் குறைவானது என மதிப்பிடப்படும் மரங்களற்ற தரிசுநிலப் பகுதிகளை நிலைத்திருக்கச் செய்வதினால் குறைப்பாட்டைச் சரிச் செய்யலாம். சிறப்பான பல உயிரினங்களின் வாழிடங்களாக இந்தத் தரிசுநிலங்கள் உள்ளன. இவ் உயிரினங்கள் அரிதானவைகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

வனச் சட்டமும், வனத்துறையும் இடங்களையும், உயிரினங்களையும், இணைத்தே பார்க்கின்றன. வாழிடங்களைப் பாதுகாப்பது அவ்விடத்தில் வாழும் உயிரிகளையும் பாதுகாப்பதாகக் கருதுகிறது. இது காட்டுச் சார்ந்து வாழும் உயிரினங்களுக்குப் பொருந்துகின்றன. இத்தன்மை நூறு சதுர கிலோமீட்டர் பரப்பளவையே பாதுகாக்கின்றன. ஆயிரம் சதுர கிலோமீட்டர் எல்லைத் தேவைப்படும் இனங்களுக்கு இது பொருந்துவது இல்லை. ஓநாய்கள், சிறுத்தைகள், பறவைகள் பரந்த திறந்தவெளிகளையும், காடுகளையும் அதன் செயல் எல்லைகளாகக் கொண்டு வாழ்கின்றன. வாழிடங்கள் பாதுகாப்பில் ஏற்பட்ட இத்தகையக் குறைப்பாட்டால் புல்வெளி வாழிட இனங்கள் பலவற்றின் இருத்தல் சிக்கலானதாக மாறி உள்ளன.

வனச் சட்டத்தின் அட்டவணை-1ல் உயிரினங்களை இயந்திரத்தனமாக, விஞ்ஞானப் பூர்வமற்று வகைப்படுத்துவது பலவகையானப் பாதுகாப்பு நிலைகளைக் குறிக்கவில்லை. இது, சிறிதளவே சூழல் பாதுகாப்பை முன்னெடுக்கிறது. ஒருங்கிணைந்த சூழல்பாதுகாப்பிற்கோ, உயிரினங்களை அழிவிலிருந்து உடனடியாக மீட்கவோ வனச் சட்டத்தில் போதுமான செயல்முறைகள் இல்லை.

தேவையான அடிப்படை மாற்றங்கள்:

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் வாழிடங்களின் தரம் உயர்த்தி, அனைத்து வகையான வாழ்விடங்கள் பாதுகாக்க வேண்டும். காடுகளில் புலிகள் சுதந்திரமாக நடமாடுவதற்கும், அனைத்து உயிரினங்களுக்கும் போதுமான இடத்தையும், மரபியல் பன்மையம் பராமரிப்பதையும் உறுதிச்செய்ய வேண்டும், தேர்ந்தெடுக்கப்பட்டச் சில உயிரினங்கள் பாதுகாப்பிலிருந்து ஒருங்கிணைந்த பல்லுயிர் சூழல்பாதுகாப்பை, உள்ளூர் மக்களை, பழங்குடிகளை இணைத்துக் கொண்டு நம்பிக்கையுடன் முன்னெடுக்க வேண்டும்.

எதிர்காலத் திட்டங்களில் காலநிலை பாதிப்புகளால், சூழல் பாதுகாப்பில் ஏற்படும் சிக்கல்களைச் சமாளிக்கத் தலையீட்டுச் செயல்முறைகள் இருக்க வேண்டும்.

பூமியின் பல்லுயிர் பெருக்கத்தில் தொடர்ந்து முன்னேற்றம் வேண்டும். இச்செயல் முறை, பல்லுயிர் பெருக்கத்திற்கும் அதைச் சார்ந்த கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையை, வாழ்வாதாரங்களை பாதுகாக்கும் நிலையான சமமான உலகத்தை உறுதிச்செய்ய முடியும்.

இரா.பாரி
மாவட்டச்செயலாளர்.சிஐடியு
திருவண்ணாமலை
7200939131

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *