ச. சுப்பாராவ்(S.Subbarao) எழுதிய வனபுத்திரி : நூல் அறிமுகம்(Vanapuththiri), பாரதி புத்தகாலயம்(Bharathiputhakalayam) - https://bookday.in/

வனபுத்திரி (Vanapuththiri) : நூல் அறிமுகம்

வனபுத்திரி (Vanapuththiri): நூல் அறிமுகம்

ஒரு படைப்பாளனின் மிகப்பெரிய காவியத்தில் இடம்பெற்றிருக்கும் கதாபாத்திரங்களில் ஒரு சிலர் உடனிருந்து நூலினைப் படைத்த ஆசிரியனோடும் நூல் உருவாகக் காரணமாக இருந்த கிரியா ஊக்கிகளோடும் விடுபட்டுப் போன பக்கங்களைக் குறித்து உரையாடலை நடத்தினால் எப்படி இருக்குமோ அந்த கற்பனையே வனபுத்திரி (Vanapuththiri) எனும் நூலில் காவியமாகி இருக்கிறது. தமிழின் இருபெரும் காப்பியங்களில் ஒன்றான இராமாயண காவியத்தினை முதன் முதலில் வடமொழியில் எழுதியிருந்த வால்மீகியோடு நடக்கின்ற உரையாடல்களே அவை. இராமகாவியம்  உருவாகியபோது அந்த காலகட்டத்தில் உயிரோடு இருந்த கதாபாத்திரங்களோடு கலந்துரையாடி, தனது சீடர்களின் உதவி கொண்டு தரவுகளை சேகரித்து எவ்வாறெல்லாம் முயன்றிருக்கக் கூடும் என்கிற கற்பனையும், தான் எழுதியதை சரி பார்ப்பதற்கு, கதையின் நாயகி தனது ஆசிரமத்தில் தங்கியிருந்த  வாய்ப்பினைப் பயன்படுத்தி வால்மீகி முனிவர் கருத்தினைக் கேட்டறிந்த போது வெளிப்படுத்திய சீதையின் மன உணர்வுகளும் கதைகளாகி இருக்கின்றன.

பெருங்குணம் கொண்டவனாக சித்தரிக்கப்பட்டிருக்கும் ராமனுக்கு மனைவியான சீதையானவள், தான் பெண் என்பதால் கதையின் போக்கில் பல்வேறு சந்தர்ப்பங்களில் அவள் பெற்றிருந்த அவஸ்தைகளை அவளது கண் கொண்டு கண்டடைந்து மற்றுமொரு சீதாயணத்தை உருவாக்குவதற்கு புள்ளிகளை அமைத்துக் கொடுத்தது போன்ற புடைப்புகளைக் கொண்ட நாவலாக வனபுத்திரி (Vanapuththiri) அமைந்திருக்கிறது. மிதிலையின் மைதிலியான சீதை, வனத்தில் ராமனோடு வாழ்ந்த போதும் சரி, காவியத்தின் இறுதியில் ராமனை விட்டுப் பிரிந்து தனியாக வாழ்ந்த போதும் சரி, அவளைக் குறித்து அவளது பெற்றோர்கள் கண்டுகொண்டதாக இடம்பெறாத பக்கங்களை அப்பெருங்காப்பியம் கொண்டிருக்கும்போது, ஒரு மகளின் தந்தையாக கனிவான கண்களைக் கொண்டு அக்கறையோடு சிந்தித்த வனபுத்திரி (Vanapuththiri) நூல் ஆசிரியரின் கோணங்களே, விடுபட்டுப் போன பக்கங்களைக் கோர்க்க வைத்து சீதையின் காவியத்திற்கு சிறு புள்ளிகளைக் கொடுத்த  தனியானதொரு நூலாகியிருக்கிறது.

கதைகள் உருவாவதற்கு முன்பு கதைக் களங்கள் உருவாக வேண்டும். அதற்கும் முன்பு கதாசிரியன் கதைக்கான தரவுகளை சேகரித்து, தயாராக வேண்டும். அன்றைய காலத்திலும் அது இருந்திருக்கும் அல்லவா? புதிய மனிதர்களை சந்திப்பது நட்பினை உருவாகச் செய்தோ  அல்லது மோதலை ஏற்படுத்தியோ முறையே வளர்ச்சியடைந்தோ அல்லது வீழ்ச்சியடைந்தோ அதிலிருந்து எழுந்து நாகரிகத்தை வளர்த்திருக்கிறது. இராமாயண காவியத்தை வரைவதற்கு முன்பு கானகத்தில் வாழ்கின்ற வால்மீகிக்கு நாரதரின் சந்திப்பால் ஏற்பட்ட மனமாற்றத்தையும் பெற்ற ஞானத்தையும் விளக்கும் பொழுது அவரது காட்டு வாழ்க்கையே பிறகு கவித்துவமாக மாறி புதிய பார்வையைப் பெற்று காவியத்தை உருவாக்கும் தேடலில் இறங்கியதை இந்த நூலின் ஆசிரியர் மிக அழகாக விளக்கியிருக்கிறார். முனிவர்கள் பிறப்பதில்லை உருவாகிறார்கள் என்பதையும் நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.

நூலில் அமைந்திருக்கும் இயற்கை மீதான வர்ணனைகள் கவித்துவமாக அமைந்து ஆங்காங்கே அறிவியலையும் பேசியிருக்கின்றன. காடுகளில் விலங்குகளுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதன் தன்னை துரத்தும் உயிர்களிடமிருந்து தப்பித்து உயிர் வாழ, விரைந்து ஓடுவதற்கு ஏற்றபடி அவனது கால்கள் அமைந்திருப்பதும், அதிர்ச்சியில் மலம் கழிக்கும் உணர்வு ஏற்படுவதற்கு காரணமாக, விரைந்து இடம்பெயர்வதற்கு ஏற்ப உடல் எளிதாக இருக்க வேண்டும் என்பதற்கான மெய் மொழியாகவும் இந்நூலில் ஆசிரியர் விளக்குகிறார்.

அரண்மனையின் பஞ்சணையை விட அடர்ந்த கானகத்தில் கீழாநெல்லி, புன்னை, ஸ்தகரம், பூர்ஜம், ஆகியவற்றின் இலைகளை விரித்து அதன் மீது தாமரை இதழ்களைத் தூவி உருவாக்கிய படுக்கையானது அத்தனை மென்மையாக குளிர்ச்சியாக அமைந்து தம்பதிகளுக்கு ஏற்றவாறு இருக்கும் என்ற விளக்கத்தினையும், அதன் அருகே உள்ள மந்தாகினி நதியில் மரங்களிலிருந்து உதிர்ந்த மலர்கள் மலர்ச்சியாக மிதந்து செல்லும் காட்சிகளையும், நதிநீரில் குட்டி யானைகளும் குரங்குகளும் தண்ணீர் அருந்திவிட்டு விளையாடுவதையும், குறிப்பிட்டு அறிவியலோடு அழகையும் வர்ணித்திருக்கிறார்.

வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் சுயசரிதையை நெருங்கியவர்கள் எழுதினாலும் அனுமதி பெற்றே எழுத முடியும் எனும் இன்றைய சட்டத்திற்கு மாறாக அன்றைய கதாபாத்திரங்களின் அனுமதியின்றி எழுதிய காவியத்தை சீதையிடம் முதன் முதலாக காண்பித்து, அவளது வியப்பை ரசித்தவராக வாசித்து விட்டு கருத்துகளைப் பகிரும்படி கேட்கும்போது ஒரு எழுத்தாளனின் எதிர்பார்ப்பை வால்மீகியிடம் காண முடிகிறது. தனது படைப்பின் நாயகிக்கு தனது ஆசிரமமே இருப்பிடமாக அமைந்து கர்ப்பிணியான அவள் பிரசவிக்கும் காலம் வரை உரையாடல் நிகழ்த்தும் வாய்ப்பு அமையப்பெற்ற அற்புதமான கற்பனையே கதையாகி இருக்கிறது. காவியத்தின் இடைவெளியை இட்டு நிரப்ப வேண்டிய விடுபட்டு போனவையான சீதையின் உணர்வுகளை இந்த கால இடைவெளியிலேயே நூல் ஆசிரியர் விவாதித்திருக்கிறார்.

ஒரு பெண்ணிற்கு திருமணமாகி விட்டால் அவள் தனது பிறந்த வீட்டிற்கே விருந்தாளியாகி விடுகிறாள் எனும் இந்திய கலாச்சாரமானது இராம காவியத்திலும் இருந்திருக்கிறது. ஒரு முறை கூட தன் தாய் வீட்டிற்குச் சென்றதாக இடம் பெறாத பக்கங்களை ஆசிரியர் இந்த நூலில் சுட்டிக்காட்டி இருக்கிறார். அரச குலத்தின் வாரிசுகள் அரண்மனையில் பிறக்க வேண்டும் என்னும் வைராக்கியத்தில் ராமனோடு 14 ஆண்டுகள் காட்டில் வாழ்ந்த சீதையானவள் வைத்தியர்களின் உதவியோடு மூலிகைகளைப் பயன்படுத்தி கருவினை வளர விடாமல் தடுத்திருக்கலாம். வனவாசம் முடிந்த பிறகு அரியாசனம் ஏறிய கணவன் ராமனோடு அரண்மனையில் வாழும் சீதைக்கு பரிசாக ஊராரின் கேள்விக்கு அவளை பலியாக்குகிறான். கர்ப்பிணியான சீதை தன்னை நிரூபித்து தலைநிமிர்ந்தவளாக பயணிப்பவளுக்கு  தஞ்சம் புகும் இடமாக மீண்டும் காட்டு வாழ்க்கையே அடைக்கலம் கொடுக்கிறது. நீண்ட காலம் காத்திருந்த அவளது சிறு ஆசையும் நிறைவேறாமல் ரகு வம்சத்து வாரிசுகள் அரண்மனையிலன்றி வனத்திலேயே பிறக்கிறார்கள்.

ஒரு பெண்ணின் வாழ்க்கையாக மண்டோதரியின் நிலையும் கற்பனையாக இந்த நூலில் இடம் பெற்றிருக்கிறது. இரு சாம்ராஜ்யங்களுக்கு இடையே போர் மூண்டு ஒரு மன்னன் மாண்ட பிறகு, நிற்கதியாக நிற்கும் பெண்களின் நிலை மண்டோதரிக்கும் இருந்திருக்கும் அல்லவா? இதனை ராவணன் உயிரோடு இருக்கும் பொழுது நடந்த வேறொரு சந்தர்ப்பத்தில் ஆசிரியர் வெளிப்படுத்தி இருக்கிறார். போரில் காயமடைந்து ராமன் மயக்கமடைந்த பொழுது மருந்தினைத் தேடி சஞ்சீவி மலைக்கு அனுமன் பறந்து சென்றதும், வானரக் கூட்டங்கள் இராவணனின் அரண்மனையை சூறையாடி மண்டோதரியை மான பங்கப்படுத்துவதாக ஒரு கற்பனைக் காட்சி இந்த நூலில் இடம் பெற்றிருக்கிறது. ஆசிரியரின் எதிர்பார்ப்பாக இலங்கை அரசன் ராவணன் ஊராரை எதிர்த்து அவர்களை தாக்கி விட்டு, இல்லாளுக்கு அரவணைப்பாக இருந்து அவளைத் தாங்குவதாக ஒரு காட்சி கொடுக்கப்பட்டிருக்கிறது. புலம்பெயரும் பொழுதும் போரின் பொழுதும் இன்றளவும் பெண்களுக்கு நடந்து கொண்டிருக்கின்ற இவ்வகையான அத்துமீறல்கள் கண்டிக்கத்தக்கது எனும் நிலையில், தண்டனையை பாதிக்கப்பட்டவர்களுக்குக் கொடுக்காமல் நடந்ததை மறக்க வைத்து அவளை அரவணைத்து மணம் முடித்துக் கொள்ளும் இளைஞர்களை நான் தேசபக்தியின் ஒரு அங்கமாகப் பார்க்கிறேன் எனும் காந்தியின் கருத்தும் இங்கு நினைவிற்கு வருகிறது.

அம்மாபெரும் காவியத்தின் இருமுனைகளையும் மீண்டும் மீண்டும் தொட்டுப் பார்க்கும்படி பலமுறை பயணித்திருந்தால் மட்டுமே இவ்வகையில் சிந்தித்து, விடுபட்ட இடங்களைக் கண்டடைந்து கருத்துகளை நிரப்பியிருக்க முடியும். நூல் ஆசிரியரின் உழைப்பு அபாரமானது. பெண்களின் களையப்படாத துன்பங்கள் இன்று வரை முற்று பெறாத நிலையில் இந்நூலினைத் தொடர்ந்து மற்றுமொரு மாபெரும் காவியமானது, “சீதா புராணம்” ஆக  உருவாவதே இதன் வெற்றியாக இருக்க முடியும். நூலின் ஓட்டத்தில் ஆங்காங்கே நூல் ஆசிரியரது எண்ணங்களும் வெளிப்படுகின்றன. பெருங்காவியத்தின் படைப்பாளி வால்மீகியின் எண்ணமாக அவை இடம்பெற்றிருந்தாலும், பல நூல்களின் தொடர் வாசிப்பில் நன்கு கற்றறியும் படிப்பாளியான இந்த நூலின் படைப்பாளி ஆசிரியர் சுப்பாராவ் அவர்களது எண்ணமாகவே நம்முள் பதிகிறது. வனப்புத்திரி புத்தகத்தின் இறுதிப் பக்கங்களில் புதிய படைப்பாளர்களுக்காக நிறைய பேசியிருக்கிறார்.

இராமாயண காவியத்தை எழுதிய வால்மீகியின் எழுத்து வன்மையையும் கவித்திறத்தையும் நிரூபித்து, காவிய நாயகனின் குண நலன்களை பெருமைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அத்தோடு நின்று விடட்டும். இடைச்செருகல்கள் வேண்டாம்.

ராமனின் பெருமைக்கு இழுக்கு சேர்ப்பது இந்த நூலின் நோக்கமல்ல எனும் எண்ணத்தில், விடுபட்டுப் போனவையாகக் கருதி அதுவரை எழுதிய பக்கங்களை கதையின் இறுதியில் எரிக்கும் பொழுது, சீதை மீண்டுமொரு முறை அக்னி குண்டத்தில் இறங்குவதாகவே எண்ண வைக்கிறது. அன்று உயிர்த்தெழுந்தவளின் புழுக்கங்களானது இராமாயணத்தில் இடைச் செருகளிலும் இடம்பெற இயலாமல் சுவடியோடு நெருப்புக்கு இறையாகி சாம்பலாகின்றன என்றாலும் அவளது ஆற்றாமைகளும் ஏக்கங்களும் எதிர்பார்ப்புகளும் உணர்வுகளாக ஒன்று சேர்ந்து வாசகர்களின் எண்ணங்களோடு கலந்து எல்லாவற்றையும் கடந்து விஞ்சி நிற்கின்றன.

நூலின்  தகவல்கள் :

நூலின் பெயர் : வனபுத்திரி (Vanapuththiri)
நூல் ஆசிரியர் : ச. சுப்பாராவ்
பதிப்பகம்         : பாரதி புத்தகாலயம்
முதல் பதிப்பு   : 2015
பக்கங்கள்        : 112
விலை               :₹ 110

நூல் அறிமுகம் எழுதியவர் : 

பிரேமா இரவிச்சந்திரன்
சென்னை

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *